அல்ஹாஜ் நளீம்

நளீம் ஹாஜியார் பற்றி ஷேய்க் அகார் அவர்களுடனான அல்ஹஸனாதின் பேட்டிஅல்ஹஸனாத்: நளீம் ஹாஜியாருடன் நெருங்கிய உறவைக் கொண்டவர்களுள் ஒருவர் என்ற வகையில் உங்களுக்கும் அவருக்குமிடையிலான உறவு குறித்து சற்று விளக்குவீர்களா?

பதில் : நான் ஜாமியா நளீமிய்யாவுக்கு மாணவனாக நுழைந்த நாள் முதல் அவருட னான உறவு ஆரம்பித்தது. நளீமிய்யா பட்டப்படிப்பை முடித்துவிட்டு நளீமிய்யா விரிவுரையாளர் குழாத்தில் இணைந்தபோது ஹாஜியாருடனான எனது உறவு அதிகரித்தது. நளீமிய்யாவின் உத்தியோகத்தர் என்பதற்கு அப்பாலும் நெருக்கமான உறவும் தொடர்பும் இருந்தது. அவர் என்னுடன் அதிக அன்பு வைத்திருந்தார். அடிக்கடி என்னோடு தொலை பேசியில் உரையாடுவார். எனது வீட்டிற்கு வருவார். எந்நிலையிலும் அவருடைய வீட்டுக்குச் சென்று அவரைச் சந்திக்கும் அனுமதியை எனக்குத் தந்திருந்தார். கடைசி நிமிடம் வரை ஹாஜியாருடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தேன். ஹாஜியாரின் ரூஹ் பிரிந்தபோதும் அவ்விடத்தில் நானும் கலாதிநி எம்.ஏ.எம். சுக்ரியும் கூடவே இருந்தோம்.

அல்ஹஸனாத் : இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் வெளியீடான அல்ஹஸனாத்தில் நளீம் ஹாஜியார் தொடர்பாக விஷேட இதழ் வெளியிடும் அளவுக்கு ஜமாஅத்திற்கு நளீம் ஹாஜியார் மீதான கடமைப்பாடுகள் உண்டா?


பதில் : நளீம் ஹாஜியார் தொடர்பாக அல்ஹஸனாத் விஷேட இதழ் வெளியிடுவதை முன்னிட்டு சம்பந்தப்பட்ட நிருவாகிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறானதொரு விஷேட இதழை வெளியிடுமளவுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி நளீம் ஹாஜியார் என்ற இலட்சிய புருஷருக்கு கடமைப்பட்டிருக்கிறது என்றே கருத வேண்டும். இன்று தெமடகொட வீதி இலக்கம் 204ஃ1 இல் அமைந்திருக்கின்ற ஜமாஅத்தே இஸ்லாமியின் ஆரம்பகால தலைமைக் காரியாலயமான தாருல் அர்கம் கட்டிடத்தை வாங்குவதற்கு முயற்சித்தபோது பொருளாதார நெருக்கடியை ஜமாஅத் சந்தித்தது. அப்போது அதனை வாங்குவதற்கு ஹாஜியார் நிதியுதவியினை செய்தார். இது ஜமாஅத்தின் ஆரம்ப கால வளர்ச்சியில் ஹாஜியார் வழங்கிய முக்கிய ஒத்துழைப்பாகும். அத்தோடு ஜமாஅத்தே இஸ்லாமியின் எல்லா வகையான வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் மாற்றங்களை ஏற்படுத்துவதிலும் ஜாமிஆ நளீமிய்யாவின் பட்டதாரிகளின் பங்கு முக்கியமானதாகும். இன்று ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர் உட்பட முக்கிய பணிகளில் பல நளீமிக்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். இவ்வாறானதொரு மாற்றத்திற்கு ஹாஜியாரின் இலட்சிய இல்லமாகிய நளீமியா துணை நின்றிருக்கிறது என்ற பெருமை ஹாஜியாருக்கு கிடைத்த வெற்றி என்பதில் சந்தேகமில்லை. இதனை மற்றொரு கோணத்தில் சொல்லுவதாயின் ஜமாஅத்தே இஸ்லாமியின் தஃவா, சிந்தனை, வழிமுறைகள் என்பவற்றோடு ஒன்றித்துச் செல்கின்ற, எமது நாட்டில் இஸ்லாத்திற்காக உழைக்கின்ற இன்னும் பல அமைப்புக்களிலும் நிறுவனங்களிலும் நளீமிக்களின் காத்திரமான பங்களிப்புகள் இருக்கின்றன. இவற்றின் உருவாக்கத்திற்கும் ஹாஜியாரின் சிந்தனைகள் ஆரம்பமாய் அமைந்திருக்கின்றன. எனவே இந்த வகையான அடைவுகளுக்கு காரணமாய் அமைந்தவரை நினைவுபடுத்துவதை ஜமாஅத்தின் கடப்பாடாக் கொள்வதில் தவறில்லை.

அல்ஹஸனாத் : ஹாஜியாரின் விஷேட குணாம்சங்கள் என்ன?

பதில்: அவருடைய குணங்கள், இயல்புகள், நடத்தைகள் என்பவற்றைப் பார்க்கின்ற போது ஒவ்வொருவரும் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய பல குணங்கள், நடத்தைகள் அவரிடம் இருக்கின்றன.

ஆழமான இறை நம்பிக்கை.

நளீம் ஹாஜியாரைப் பொறுத்தவரையில் அவர் எந்த ஒரு விடயத்தையும் இம்மை, மறுமை என்று நோக்குவதில்லை. அனைத்தையும் ஆழமான இஸ்லாமிய நோக்குடனேயே பார்ப்பார். அவருடன் எந்தவொரு அமர்வில் இருந்தாலும் அதில் ஆன்மிகம் தொடர்பான வார்த்தைகள்தான் அதிகமாக இருக்கும். நிருவாகத்துறையோடு சம்பந்தப்பட்ட, பொருளாதார விடயங்களோடு தொடர்பான அனைத்திலும் ஆழமான இறை நம்பிக்கையும் இறையச்சமும் கலந்திருக்கும். அவருடைய அசாதாரண வெற்றிக்கு இதுதான் அடிப்படை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

நேரம் தவறாத பழக்கம்

ஹாஜியாரைப் பொறுத்தவரையில் எந்தவொரு விவகாரத்திலும் நேரம் தவறாமல் உரிய நேரத்தில் மேற்கொள்கின்ற அழகிய முன்மாதிரி அவருக்கு இருந்தது. இன்று எம்முடைய சமூகத்தில் புத்திஜீவிகளிடம் கூட குறைந்திருக்கின்ற இந்தப் பண்பு ஹாஜியாரிடம் நிறையவே இருந்தது. அதேநேரம் ஏதாவது கூட்டங்கள் அமர்வுகளுக்கு ஏனையவர்கள் தாமதித்து வருவதைக் கூட அவர் விரும்பமாட்டார். சிலபோது அவர்களை அவ்விடத்திலேயே கண்டிப்பவராகவும் இருந்தார். இதுவும் அவரிடம் நாம் கற்றுக்;;கொள்ள வேண்டிய முக்கிய முன்மாதிரிதான்.

நம்பிக்கையும் நாணயமும்

ஐந்தாம் வகுப்புவரை படித்தவர் பொருளாதாரத்துறையில் புகழ்பெற அடிப்படையாய் இருந்த பண்புகளில் இதுவும் ஒன்று. நிறைய பொருளாதார வளம் படைத்தவர்களிடம் குறைவாகவே இருக்கும் இப்பண்புகள் ஹாஜியாரிடம் நிறையவே இருந்தன. 1960 ஆம் ஆண்டு தனது வாழ்வில் திருப்பம் ஏற்பட்ட ஆண்டு எனக் கூறும் ஹாஜியார், அவ்வாண்டில் ஹஜ்ஜை நிறைவேற்றினார். அன்று முதல் ஒரு தூய்மையான வாழ்வை தான் ஆரம்பித்ததாக சொல்வார். அவர் யாருக்கும் உபதேசிக்கும் போதும் பின்வரும் வார்த்தையைத்தான் சொல்வார். 'எனது வியாபாரத்தில் நான் பத்து ரூபாவைக் கூட பொய் சொல்லி சம்பாதித்ததில்லை. இதனையே நீங்களும் கடைப்பிடியுங்கள்'|உண்மையில் இந்த வார்த்தைக்குப் பின்னால் இஸ்லாமிய நோக்கிலான பொருளாதாரச் சிந்தனையின் அடிப்படைகள் இருப்பதை எங்களால் காண முடியும். மாணிக்கக் கல் வியாபாரம் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் கொடுக்கல், வாங்கல்களை செய்ய வேண்டிய வியாபார நடவடிக்கை. எனினும் அதனை இத்தனை நேர்மைக்கு மத்தியில் செய்திருக்கிறார் என்;றால் அதனை நாம் எவ்வளவு மெச்ச வேண்டும்!

துணிச்சல்

மிகவும் துணிச்சல் நிறைந்தவர் நளீம் ஹாஜியார். எந்த ஒரு விடயத்தையும் செய்வதற்கு முன்பும் நன்கு சிந்திப்பார், கலந்தா லோசிப்பார். முடிவெடுத்தால் துணிச்சலாக நிறைவேற்றுவார். அல்குர்ஆனின் வார்த்தைகளும் 'நீங்கள் ஒரு விடயத்தில் உறுதி பூண்டால் அல்லாஹ் மீது பூரணமான நம்பிக்கை வையுங்கள்' என்றே கூறுகிறது. இவ் அல்குர்ஆனிய வார்த்தைகளை நளீம் ஹாஜியார் நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கிறார்.

எளிமையான வாழ்க்கை

நளீம் ஹாஜியாரின் இளமை வாழ்வு மிகவும் வறுமைமிக்கதாக இருந்தது. பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்வினை நடத்திச் சென்றிருக்கிறார். எனினும் அவர் பிற்காலத்தில் பெரிய கொடையாளியாகவும் தேசிய, சர்வதேச மட்டத்தில் புகழ் பெற்ற போதும் எளிமையான மனோநிலையுடனேயே இருந்தார். அவரைப் பற்றி யாரும் புகழ்ந்து பேசினால் அல்லது பாராட்டினால் அவர் கூறும் வார்த்தை இதுதான் 'என்னைப் போன்ற ஆற்றலிலும் அறிவிலும் குறைந்த ஒருவனைக் கொண்டு அல்லாஹ் எப்படி வேலைகளைச் செய்ய வைத்திருக்கிறான். இவ்வாறான சக்தி படைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்'என்று சாதாரணமாக கூறிவிடுவார். பெருமையோ, கர்வமோ அவருக்கு ஏற்பட்டதில்லை. இப்பண்பினை எமது சமூகத்தில் பணம்படைத்த, அறிவு ஆற்றல் மிக்க எல்லோரிடமும் காணமுடியாது.

ஆரம்பகால வாழ்க்கையை மீட்டுதல்
புகழ்பெற்றவர் பலர் தங்களது ஆரம்பகால வாழ்க்கை மீட்டப்படுவதை பொதுவாக விரும்புவதில்லை. ஆனால் நளீம் ஹாஜியார் பெரிய மேடைகளிலும் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை சொல்லுவதற்கு வெட்கப்படுவதில்லை. விஷேட வைபவங்களிலும் புகழ்பெற்ற அறிஞர்கள் மத்தியிலும் இப்படித்தான் அவருடைய வார்த்தைகள் இருக்கும்: 'இந்த நளீம் யார் தெரியுமா? மிகவும் வறுமைமிக்க சிறுவனாயிருந்தவர். என்னுடைய உம்மா இரவு பகலாக கண் விழித்து திரிக்கின்ற ஓரிரு கயிற்று முடிகளை விற்றுத்தான் ஒரு அப்பமும் கால் இறாத்தல் பாணும் வாங்கி காலை நேர சாப்பாடுகளை எனது குடும்பம் சாப்பிடும். பாணுக்கு கறியில்லா விட்டால் அதனை அம்மியில் தேய்த்து நான் சாப்பிடுவேன். இரவு வேளைகளில் என்னுடைய உம்மா நீண்ட நேரம் விழித்திருப்பார். தூங்கினால் கவனமாகத் தூங்குவார். காரணம் எங்களுடைய வீட்டுக்குப் பக்கத்தில் ஈரப் பலாமரம் ஒன்று இருந்தது. அதில் இரவு நேரத்தில் ஈரப்பலா விழுந்தால் பக்கத்தில் இருக்கின்ற மாடொன்று உடனே சாப்பிட்டு விடும். எனவே மாடு சாப்பிட்டு விடாமல் ஈரப்பலாவை எடுத்து காலை நேர, பகல் நேர சாப்பாட்டுக்காக அதனை பொறுக்கி வருவார். இவ்வாறுதான் இந்த நளீமுடைய வாழ்க்கை கழிந்திருக்கிறது.'

தூரநோக்குடன் சிந்திப்பவர்
இது நளீம் ஹாஜியாருக்கே உரிய விஷேட பண்பு, எந்த ஒரு விடயத்திலும் தூர நோக்குடனேயே அவர் சிந்திப்பார். 1973 ஆம் ஆண்டு நளீமிய்யா உருவாக்கப்பட்ட போது அதனை இருபதுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் உருவாக்கத் திட்டமிட்டார். அப்போது பிரதேச மக்களும் புத்திஜீவிகளும் கூட ஒரு அரபு மத்ரஸாவுக்காக ஏன் இவ்வாறு நிலத்தையும் பணத்தையும் செலவு செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனாலும் ஹாஜியார் அதனை தன்னுடைய சிந்தனையில் வெறும் மத்ரஸா என்ற நிலையில் இல்லாமல் முன்னோடிப் பல்கலைக்கழகமாக நினைத்து நீண்டகால திட்டத்தின் அடிப்படை யிலேயே உருவாக்கினார். மேற்சொன்ன பண்புகள் நளீம் ஹாஜியாரின் வாழ்வில் நான் கண்ட, அவருடைய வெற்றிக்கு காரணமாய் அமைந்தவையாகச் சொல்ல முடியும்.

அல்ஹஸனாத்: உங்களுடன் ஹாஜியார் கலந்துரையாடும்போது அதிகமாக எவ்வாறான விடயங்களைப் பேசுவார்?


பதில் : நளீம் ஹாஜியாரைப் பொறுத்த வரையில் எந்நேரமும் எக்கட்டத்திலும் முக்கியமான இரண்டு விடயங்களைத்தான் அதிகமதி கமாக பேசுபவராக இருந்தார். ஒன்று நளீமியாவைப் பற்றியது. நளீமிய்யாவின் எதிர்காலம் ஒளிமயமானதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைய வேண்டும் என்பதற்காகவே அவர் அதிகமதிகம் சிந்திப்பவராகவும் செயற்படுபவராகவும் இருந்தார். மற்றையது ஆன்மிகம் பற்றியது. நளீம் ஹாஜியார் எப்போதும் கப்றுடைய வாழ்க்கை, மறுமை வாழ்க்கை சுவனம் நரகத்தின் நிலை போன்ற விடயங்களை அடிக்கடி ஞாபகப்படுத்துவார். தனக்கு அருளாகக் கிடைக்கப் பெற்ற சொத்துக் களைக் கொண்டு தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றிவிட்டேனா என்று அடிக்கடி தன்னைத்தானே கேட்டுக் கொள்பவராகவும் இருந்தார். தவிரவும் மார்க்கப் பிரச்சினைகளோடு சம்பந்தப்பட்ட விவகாரங்களையும் இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகத்தையும் பெற்றுக் கொள்வதற்கு தேடலும் விருப்பமும் உடையவராகவும் இருந்தார்.

அல்ஹஸனாத்: ஹாஜியார் சொல்கின்ற கருத்துக்களில் உங்கள் மனதில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்திய அல்லது சிந்திக்கத் தூண்டிய கருத்தாக ஏதும் இருக்கிறதா?

பதில்: ஹாஜியாருடனான எனது அனுபவத்தில் ஏராளமான கருத்துக்கள் என்னை சிந்திக்கத் தூண்டியிருக்கின்றன. சிலபோது ஹாஜியார் அவருடைய வாழ்க்கையில் பல கோட்பாடுகளை வைத்து அதன் பிரகாரம்தான் எந்தவொரு விடயத்தையும் சிந்திப்பவராகவும் முடிவுகளை எடுப்பவராகவும் இருந்திருக்கிறார். இது பலரும் சிந்திக்க வேண்டியதொரு முன்மாதிரி. அவற்றுள் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டலாம். முதலாவது, செல்வம் என்பது அல்லாஹ்வின் அருள் அல்ல, அது ஒரு சோதனைப் பொருள். எனினும் அதனைப் பெற்றவர்தான் அதனை அருளாக மாற்றிக் கொள்ள வேண்டும். அடுத்து, ஒவ்வொரு மனிதருக்கும் இரு கண்கள் இருக்கின்றன. அதில் ஒன்று இம்மையை பார்ப்பதற்கு மற்றையது மறுமையைப் பார்ப்பதற்கு. இக்கருத்துக்களின் பின்னணியில் இருக்கும் தத்துவங்களும் தாத்பரியங்களும் உண்மையில் சிந்திக்கப்பட வேண்டியவையே.

அல்ஹஸனாத்: நளீம் ஹாஜியாருடைய பணிகளில் முதன்மையானதாக எதனைக் கருதுகிறீர்கள்?


பதில் : நளீம் ஹாஜியார் வார்த்தைகளால் சொல்ல முடியாதளவு பல பணிகளை செய்திருக்கிறார். அவற்றுள். கல்வித்துறைக்கு செய்த பணியை முதன்மையானதாகக் கருத முடியும். இலங்கை முஸ்லிம்களுடைய கல்வி வளர்ச்சி பின்தங்கியிருந்த நிலையில் மாணவர்களுக்கும் பாடசாலைகளுக்கும் உதவுவதற்காக மறுமலர்ச்சி இயக்கத்தை உருவாக்கினார். அதேபோன்று மாணவர்களின் தொழிநுட்பக் கல்வியினை விருத்தி செய்து அதனூடாக தொழில்வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இக்ரஃ தொழில்நுட்பக் கல்லூரி உருவாக்கப்பட்டது. இவை அனைத்தையும் விடவும் இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியிலும் சிந்தனை மாற்றத்திலும் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய ஜாமிஆ நளீமிய்யாவின் உருவாக்கம் ஒரு சாதனை!

அல்ஹஸனாத்: ஹாஜியாரின் இறுதி நாட்களில் ஞாபக மறதி, நினைவு தடுமாற்ற நிலையில் இருந்தபோதும் நளீமிய்யாவுடனான தொடர்பில் பாதிப்புக்கள் இருந்ததா?

பதில்: அவருடைய இறுதிக் காலம் நினைவு தடுமாற்றம் மிக்கதாகவும் ஞாபக மறதி மிக்கதாகவும் இருந்தது உண்மை. அவர் பலவற்றை மறந்திருந்தார். எனினும் நளீமிய்யாவை மாத்திரம் அவர் தன்னுடைய இறுதி மூச்சுவரை மறக்கவில்லை. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு நளீமிய்யாவின் பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாக மகன் யாக்கூத் நளீமிடம் ஒப்படைத்திருந்தாலும் நளீமிய்யாவின் அனைத்து விடயங்களிலும் ஹாஜியார் கலந்து கொண்டார். எந்தப் பயணத்திற்கும் போகாதவர், எந்த வைபவத்திலும் கலந்து கொள்ளாதவர் நளீமிய்யா விடயங்களில் கலந்து கொள்பவராக இருந்தார். அதேபோன்று அவர் பின்வருமாறு சொல்;லி வந்திருக்கிறார். 'நான் என்னுடைய இறுதிக் காலத்தில் படுக்கையிலிருந்தாலும் நளீமிய்யாவின் விடயங்கள் என்று சொன்னால் சக்கர நாற்காலியில் வைத்தாவது என்னை அழைத்துச் செல்ல வேண்டும்' எனவேதான், அவருடைய வபாத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பும் நளீமிய்யாவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்ற தஃவா அகடமிக்கான கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக ஹாஜியார் அழைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது அவர் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். உடல் நிலை மிகவும் பலவீனப் பட்டிருந்தது. எனினும் கூட காரில் அழைத்து வரப்பட்டு அக்கட்டடத்துக்கான அடிக்கல்லை அவர் தன் கையால் தடவிக் கொடுத்தார். இவ்வாறு இறுதிக் காலத்திலும் நளீமிய்யாவுடன் தொடர்பட்டவராக ஹாஜியார் இருந்தார். வபாத்தாகுவதற்கு ஓரிரு மாதங்கள் இருக்கின்ற நிலையில் கொழும்பு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது நான் அங்கு சென்றிருந்தேன். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அப்போதும் என்னிடம் தனக்கு காசு வேண்டும் என்றார். நான் ஏன் என்று வினவினேன். நளீமிய்யாவுக்காக கொழும்பில் இன்னுமொரு கட்டடம் வாங்கிப் போட வேண்டும் என்று குறிப்பிட்டார். நளீம் ஹாஜியாருடைய ஒவ்வொரு நிமிட நினைவுகளிலும்; நளீமிய்யா என்ற சிந்தனையோடுதான் வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு இதுவொன்றே போதுமான சான்றாக சொல்லலாம். இவ்வாறானதோர் உயர்ந்த இலட்சியத்தோடுதான் ஹாஜியார் வாழ்ந்து விட்டுச் சென்றார். எனவேதான் அவருடைய ஆசையின் பிரகாரம் நளீமிய்யாவிலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார். அது மட்டுமன்றி கொழும்பில் பெஷன் பக் என்ற ஆடை நிறுவனம் அமைந்திருக்கின்ற கட்டடத் தொகுதியினை தனக்குப் பின்னால் தன் மனைவிக்கும் மனைவியின் மறைவிற்குப் பின்பு அதனை நளீமிய்யாவிற்கும் வழங்க வேண்டும் எனவும் வஸிய்யத் செய்திருக்கிறார்.

அல்ஹஸனாத்: நளீம் ஹாஜியார் நளீமிய்யா வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது தொடர்பாக அபிப்பிராய பேதங்கள் வெளியிடப்பட்டிருக்கிறதே?


பதில் : உண்மைதான். நளீம் ஹாஜியார் தான் நளீமிய்யா வளாகத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று வஸிய்யத் செய்தது இன்று நேற்றல்ல. 1986 இல் 'இலங்கை முஸ்லிம்களின் வரலாறு' என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கொன்று நடைபெற்றபோது, அவ்விடத்தில் வைத்து என்னிடம் நான் மௌத்தாகியதும் என்னை நளீமிய்யாவில் தான் அடக்கம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார். அதற்கு அவர் இரண்டு காரணங்களையும் சொன்னார். முதலாவது நளீமிய்யா வளாகம் அமைந்திருக்கும் பூமி பரக்கத் நிறைந்தது. அல்லாஹ்வின் அருள் எப்போதும் அதற்கு இருக்கிறது. எனவே அவ்வாறானதொரு பூமியில் நான் அடக்கம் செய்யப்படுவதற்கு விரும்புகிறேன்.
அடுத்தது வளாகத்தில் என்னை அடக்கம் செய்தால் கற்கின்ற மாணவர்கள், கற்ற மாணவர்கள் மற்றும் வருபவர்கள் அனைவரும் எனக்காக பிரார்த்தனை புரிவார்கள். இதற்காகத்தான் நான் நளீமிய்யாவில் அடக்கம் செய்யப்படுவதை வஸிய்யத்தாக சொல்கிறேன் என ஹாஜியார் குறிப்பிட்டார். இது அவருடைய மனைவி, பிள்ளைகள் உட்பட குடும்பத்திலும் பலருக்கும் தெரிந்த விடயம். நளீமிய்யா நிருவாகம், விரிவுரையாளர்கள் ஆகியோரும் இதனை அறிந்திருக்கிறார்கள். எனவேதான், ஹாஜியாரின் வஸிய்யத்தின்படி நளீமிய்யா வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

அல்ஹஸனாத்: நளீம் ஹாஜியாரின் இழப்பு நளீமிய்யாவின் எதிர்காலத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தாதா?

பதில்: இக்கேள்வியினை பலரும் கேட்கின்றனர்;. அல்லாஹ்வின் கிருபையால் அவ்வாறானதொரு நிலை ஏற்படாது. ஏனெனில் நளீமிய்யாவின் உருவாக்கம் நளீம் ஹாஜியாரின் தூய்மையான சிந்தனைக்கு கிடைத்த அறுவடைதான். அதில் தூய நோக்கத்தை தவிர வேறு எந்த நோக்கமும் கடுகளவேனும் இல்லை. அவருடைய தூய்மையான எண்ணமும் துஆக்களும் நிச்சயமாக அல்லாஹ்வினால்

Yakooth Haji அங்கீகரிக்கப்பட்டு எதிர்காலத்திலும் தொடரும் என்பதுதான் உண்மை. அதேநேரம் நளீமிய்யாவின் எதிர்காலம் ஒழுங்காக முன்னெடுத்துச் செல்லப்பட அல்லாஹ் சிலகாரணிகளையும் அதற்காக உருவாக்கித் தந்திருக்கிறான். அதில் முதலாவது நளீமிய்யாவின் தலைமைப் பொறுப்பு தற்பொழுது யாக்கூத்நளீமிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஹாஜியாரின் தூய்மையான சிந்தனைக்கும் பிரார்த்தனைக்கும் ஏற்ற வாரிசாக இவர் இருக்கிறார். தொடர்ந்தும் நிருவாகத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லக் கூடிய அறிவும் ஆற்றலும் துணிவும் இவருக்கு இருக்கிறது. அதேநேரம் ஹாஜியாரின் மற்றைய பிள்ளைகளின் ஒத்துழைப்பும் நளீமிய்யாவின் வளர்ச்சிக்கு பூரணமாக கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

நளீமிய்யாவை வழிநடத்தக் கூடிய அறிவும் ஆற்றலும் அதிக அனுபவங்களையும் கொண்ட பணிப்பாளராக கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி இருக்கிறார். இவருக்கு நளீம் ஹாஜியாருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. நளீமிய்யாவின் உருவாக்கத்திலும் தொடர்ந்தேச்சையான வளர்ச்சியிலும் 25 வருடங்களுக்கு மேலாக அதிகமான பங்களிப்புகளை செய்தவர் அவர். இதுவும் நளீமிய்யாவின் எதிர்காலத்தில் நம்பிக்கையான அடையாளம்தான். மற்றும் நளீமிய்யாவின் அனைத்து விவகாரங்களிலும் ஒத்துழைப்பு வழங்கக் கூடிய உதவி செய்யக் கூடிய பரிபாலன சபை இருக்கிறது. அதேபோன்று நளீமிய்யாவின் பட்டதாரிகளே இங்கு விரிவுரையாளர்களாகவும் சேவையாற்றி வருகிறார்கள். இன்னும், இவர்கள் நிருவாக விடயங்களிலும் பங்கெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். இது நளீமிய்யாவுக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகவே கருதவேண்டும். இவர்களில் அறிவு முதிர்ச்சியும் பக்குவமும் நளீமிய்யாவின் வளர்ச்சிக்கு பெரும் துணையாய் அமையும். இன்னும், நளீமிய்யாவின் ஒத்துழைப்பில் வெற்றிகரமான பயணத்தில் நளீமிய்யாவின் பழைய மாணவர்களின் உதவி தற்போது போன்றே எதிர்காலத்திலும் தொடர்ந்தும் இருக்கும் என்ற ஆழமான நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

நளீமிய்யாவின் முக்கியத்துவத்தையும் அவசியப்பாட்டையும் சீனன்கோட்டை மக்கள் புரிந்திருக்கிறார்கள். அதேபோன்று ஊர் தலைமைத்துவமும் புரிந்திருக்கிறது. இதுவும் நளீமிய்;யாவை வெற்றிகரமாக முன்னெடுப்பதில் ஒத்துழைப்பாக அமையும் என எமது பிரார்த்தனையாகவும் இருக்கிறது. நளீம் ஹாஜியாரின் இலட்சியத்தை சிந்தனையை வாழவைப்பதில் இவர்கள் அனைவரும் தொடந்தும் ஒத்துழைப்பார்கள் என்ற ஆழமான நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக நளீமிய்யாவின் எதிர்காலம் ஒளிமயமாய் அமையும் என்று பூரணமாக நம்புகிறோம்.

அல்ஹஸனாத்: தற்பொழுது நளீமிய்யாவின் தலைமைப் பொறுப்பை யாக்கூத் நளீம் ஏற்றிருக்கிறார். நளீம் ஹாஜியாரைப் போன்றே இவருடைய பணியும் காத்திரமாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

பதில்: நளீம் ஹாஜியாரின் தூய்மையான எண்ணத்துக்கும் பிரார்த்தனைக்கும் கிடைத்த வாரிசுதான் இவர். இளமைத் துடிப்பும், மார்க்கப் பற்றும், சமூக உணர்வும், பேணுதலான செயற்பாட்டையும் கொண்ட யாக்கூத் நளீம் அவருடைய பணிகளை ஆரோக்கியமாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே நளீமிய்யாவின் பிரதித் தலைவர் என்ற பொறுப்பினை வகித்த இவர் அக்காலத்தில் செய்த பணிகள் காத்திரமாக அமைந்திருந்தன. எதிர்காலத்திலும் அவருடைய பணி ஆரோக்கியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அல்ஹஸனாத் : ஹாஜியாரின் மறைவிற்குப் பின்னர் நளீமிய்யாவுடனான ஊர் மக்களுடைய ஒத்துழைப்பு தொடர்பில் ஏதும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?


பதில் : நளீமிய்யா உருவாக்கப்பட்டபோது அதனுடைய இலட்சியத்தையும் போக்கையும் எமது சமூகத்தில் பலர் சரியாக உணரவில்லை. ஊர் மக்களும் அவ்வாறுதான் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். எனினும் இப்பொழுது இந்நிலை மாறியிருக்கிறது. நளீமிய்யாவின் தேவையையும் அவசியத்தையும் சமூகத்தைப் போன்றே ஊர் மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். பள்ளிவாயல் பரிபாலன சபைகூட நளீமிக்களுக்கு தங்களுடைய கருத்துக்களைச் சொல்வதற்காகவும் பள்ளிவாயில்களில் இடம் கொடுத்திருக்கிறார்கள். இதுவோர் ஆரோக்கியமான நிலைதானே!


அல்ஹஸனாத் : இறுதியாக ஏதும் சொல்வதாயின்?

Jamiah Naleemiahயார் நளீம் ஹாஜியாரின் அபிமானிகள் என்றும் அவரின் நேசத்துக்குரியவர் என்றும் கருதுகின்றாரோ அவர்கள் நளீம் ஹாஜியாருடைய கனவாகவும் இலட்சியமாகவும் இருந்த நளீமிய்யாவின் எதிர்காலத்துக்காக ஒத்துழைப்புக்களை வழங்குவது மிகவும் ஏற்புடையதாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

We have 20 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player