சமகால நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்கான மூலோபாயங்கள்

 

ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் கடந்த 23.03.2018 அன்று ஜாவத்தை ஜுமுஆப் பள்ளிவாசலில் நிகழ்த்திய குத்பா பிரசங்கத்தின் சாராம்சத்தை அல்ஹஸனாத் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

நன்றி: அல்ஹஸனாத் ஏப்ரல் மாத இதழ்- 2018

தொகுப்பு: வ. முஹம்மத் நபீல்

----------

இன்று முஸ்லிம் உம்மத் உலகளாவிய ரீதியிலும் உள்நாட்டு மட்டங்களிலும் நெருக்கடியானதொரு கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இஸ்லாம் பற்றிய பீதியும் அச்சமும் முஸ்லிம்கள் குறித்த வெறுப்பும் காழ்ப்புணர்வும் உலகளாவிய ரீதியில் விதைக்கப்பட்டதன் விளைவுகளை முஸ்லிம் உம்மத் கோரமாக அனுபவித்து வருகின்ற காலம் இது. இன்று இஸ்லாமோபோபியா ஒரு தனியான துறையாக மாறியிருக்கிறது. இதற்கென்று கோடிக்கணக்கான டொலர்கள் ஒதுக்கப்பட்டு, இதற்கென்றே வளவாளர்கள் நியமிக்கப்பட்டு சர்வதேச மட்டங்களிலும் பிராந்திய மட்டங்களிலும் தேசிய மட்டங்களிலும் திட்டமிட்ட அடிப்படையில் இந்தத் துறை வளர்க்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். அவ்வாறே இராணுவ ரீதியாகவும் சிந்தனா ரீதியாகவும் திட்டமிட்ட படையெடுப்புகளுக்கு முகம்கொடுத்திருக்கும் சர்வதேச இஸ்லாமிய உம்மத் உளவியல் ரீதியான படையெடுப்புக்கும் முகம்கொடுத்திருக்கின்றது. முஸ்லிம்களை உளவியல் ரீதியாக பலவீனப்படுத்தி தோல்வி மனப்பான்மையை (Defeated Mentality) உருவாக்கும் நோக்குடன் உளவியல் ரீதியான ஆக்கிரமிப்பு முடுக்கி விடப்பட்டிருக்கிறது.

இன்று முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற இலங்கை போன்ற நாடுகளில் உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சிநிரல், பிராந்திய அரசியல் நிகழ்ச்சிநிரல், சர்வதேச அரசியல் நிகழ்ச்சிநிரல்களுக்கூடாக இனவாத, மதவாத மோதல்களை உருவாக்குகின்ற ஓர் அபாயகரமான சூழல் தயார்படுத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம்.

பிரச்சினைகளைப் பற்றி பேசுகின்ற அதேநேரம் அவற்றுக்கான காத்திரமான தீர்வுகளைப் பற்றி அதிகமதிகம் பேச வேண்டியிருக்கிறது. அவை நடைமுறைச் சாத்தியமான, யதார்த்தமான தீர்வுகளாகவும் அமைய வேண்டும். நாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு துப்பாக்கிகளும் தோட்டாக்களும் குண்டுகளுமே பதில் சொல்லும் என்ற பார்வை யதார்த்தமானதல்ல. நடைமுறைச் சாத்தியமானதுமல்ல. நாம் எதிர்பார்க்கின்ற நல்ல விளைவுகளைத் தருகின்ற வழிமுறையுமல்ல. அந்த வகையில் இத்தகையதொரு நெருக்கடியான சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்கொண்டு அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டு அவற்றினடியாக செயற்பட வேண்டிய தேவையும் கடப்பாடும் இருக்கிறது.


1. பலமிக்க ஓர் அரசியல் கட்டமைப்பு

இன்று பலமிக்க ஓர் அரசியல் கட்டமைப்பை சமூகம் வேண்டி நிற்கிறது. அரசியல்தான் இன்றைய உலகின் மிகப் பெரிய சக்தி என்ற யதார்த்தத்தை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இருக்கின்ற அரசியல் தலைமைகளை வழிப்படுத்தி, நெறிப்படுத்தி, வலுப்படுத்தி அனைவரையும் அரவணைத்தவாறு பயணிக்கின்ற ஒரு கலாசாரம் முன்னெடுக்கப்படல் வேண்டும். அரசியல் தலைமைகளை கொச்சைப்படுத்தி, விமர்சனம் என்ற பெயரில் அவர்களை அவமானப்படுத்தி உள ரீதியாக பலவீனப்படுத்துவதால் விளைவுகள் இன்னும் மோசமடையுமே தவிர நன்மைகள் ஏற்படப் போவதில்லை.

இன்று தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. எமது இருப்பையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தக்கூடிய முதிர்ச்சியான அரசியல் நகர்வு அவசியப்படுகின்றது. இதற்காக, அரசியல் தலைமைகளை நாம் அனைவரும் இணைந்து வழிநடத்த வேண்டிய கடப்பாடு இருக்கிறது.


2. மிகப் பெரிய ஆயுதம் ஊடகம்

ஊடகம்தான் இன்றைய உலகின் மிகப் பெரிய ஆயுதம். அரசியல் பலம் ஒரு பக்கம் என்றால் ஊடக பலம் (Media) மறுபக்கம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஊடக பலத்தை குறைமதிப்பீடு செய்கின்ற சமூகம் தலைதூக்க முடியாது. கப்பற் படையை வைத்திருந்தவர்கள் 19ஆம் நூற்றாண்டின் ஜாம்பவான்கள். விமானப் படையை வைத்திருந்தவர்கள் 20ஆம் நூற்றாண்டின் ஜாம்டபவான்கள். யாரின் கைகளில் ஊடகம் இருக்கின்றதோ அவர்கள்தான் 21ஆம் நூற்றாண்டின் பலமிக்க சக்திகளாக திகழ்வார்கள்" என்று மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதிர் முஹம்மத் குறிப்பிட்ட கருத்து இங்கு நினைவுகூரத்தக்கது.

மியன்மாரில் ஏற்பட்ட பேரவலத்திற்கு சமூக ஊடகங்களே மிகப் பிரதான பங்கு வகித்ததை ஐ.நா. ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது. நமது நாட்டில் இடம்பெற்ற வன்முறைக்குப் பின்னாலும் சமூக ஊடகங்களின் வகிபாகம் கூடுதலாக இருந்ததை நாம் அறிவோம். அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் தாக்கம் ஙெ்லுத்துகின்ற அளவுக்கு ங்மூக ஊடகங்கள் கையாளப்படுகின்றன. ஆகவே, ஊடகத்தை எவ்வகையிலும் நாம் குறைமதிப்பீடு செய்யலாகாது. அதுதான் இன்றைய சக்தியும் பலமும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, எமக்கெதிரான சவால்களை முறியடிக்க பலமான அரசியல் கட்டமைப்பும் வினைத்திறனான ஊடகமும் அவசியம். இதன்பால் எமது கவனத்தை குவிக்க வேண்டியிருக்கிறது.


3. சமூக ஒற்றுமையும் ஐக்கியமும்

சமூக ஒற்றுமையும் ஐக்கியமும் இன்றியமையாத தேவை. காலங்காலமாக நிலவிவரும் பாரம்பரிய முரண்பாடுகளை மூட்டை கட்டிவிட்டு, ஐக்கியப்பட வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது கரங்களில் அரசியல் பலமும் ஊடக பலமும் இருந்தாலும் எமது சமூகத்தின் ஐக்கியம் சீர்குலைந்து விட்டால் எம்மால் எதனையும் சாதிக்க முடியாது.

சண்டையும் சர்ச்சையும், வேற்றுமையும் முரண்பாடுகளும், பிளவும் பிரிவினையும் இருக்குமிடங்களில் வெற்றி கிடையாது. வெறும் 14 மில்லியன்களைக் கொண்டிருக்கும் யூத சமூகத்தினர் இன்று உலகின் மிகப் பெரும் சக்தியாக விளங்குகிறார்கள். இதற்கான காரணம் என்ன? அறிவு (Knowledge), விஞ்ஞானம் (Science), தொழில்நுட்பம் (Technology), பொருளாதாரம் (Finance), உலக சந்தை (World Trade) என சகல வளங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் அந்த சமூகத்திற்கு மத்தியில் நெருக்கமான, இறுக்கமான கட்டமைப்பும் சமூக ஐக்கியமும் காணப்படுகிறது. அந்த சமூகத்திடமிருந்து இலங்கை முஸ்லிம் சமூகம் பாடம் படிக்க வேண்டும்.

இயல்பிலேயே சிறுபான்மை சமூகம் பலவீனமானது. அது தனக்குள் பிளவுபட்டால் இன்னும் பலவீனமடையும். அது ஐக்கியப்பட்டு ஒன்றுபட்டால் பிளவுபட்டிருக்கும் பெரும்பான்மையின சமூகத்துக்கு முன்னால் அதனால் பலமிக்க சக்தியாக நிமிர்ந்து நிற்க முடியும் என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பதியுதீன் மஹ்மூத் அவர்களும் ஏ.ஸி.எஸ். ஹமீத் அவர்களும் வெவ்வேறு பிரதான அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தவர்கள். ஒரு தடவை தனது கட்சி செயற்பாடுகளால் அதிருப்தியுற்ற ஏ.ஸி.எஸ். ஹமீத் அவர்கள் தனது கட்சியிலிருந்து விலகி மற்றொரு பிரதான கட்சியில் இணைய விரும்புகிறார். இதனை அறிந்த பதியுதீன் மஹ்மூத் அவர்கள் ஏ.ஸி.எஸ். ஹமீத் அவர்களை அழைத்து நீங்கள் அந்தக் கட்சியிலேயே தொடர்ந்தும் இருந்து பணியாற்ற வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். நீங்கள் அதிலிருந்து விலகி, இந்தக் கட்சிக்கு வந்தால் நான் இதிலிருந்து விலகி உங்கள் கட்சியில் இணைந்து விடுவேன். நமது சமூகத்தின் பிரதிநிதித்துவம் எல்லா கட்சிகளிலும் அனைத்து மட்டங்களிலும் இருக்க வேண்டும்"

எனக் கூறினார்கள். எமது முன்னோர்கள் எந்தளவு தூரம் தூரநோக்கோடு, சாணக்கியத்தோடு செயற்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு இது நல்ல சான்று.

இயக்கவாதம், தரீக்காவாதம், கட்சிவாதம், பிரதேசவாதம், ஊர்வாதம் என்று எல்லா ஜாஹிலிய்யத்துக்களிலிருந்தும் எமது சமூகம் விடுபட வேண்டும். இனியும் இப்படி காலம் கடத்தலாகாது. ஆபத்துக்கள் வந்து விட்டன. பேரனர்த்தம் நடந்து முடிந்து விட்டது. இனியும் இத்தகைய வன்முறைகள் நடக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்ற நிலையில் அல்லாஹ் எம்மைப் பாதுகாக்க வேண்டுமானால் பௌதிகக் காரணிகள் உச்ச நிலையில் செயற்படுத்தப்பட வேண்டும். இன்று சாத்தான்கள் வேதம் ஓதும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. முஸ்லிம் சமூகத்தைப் பார்த்து, தலைமைத்துவம் ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு மத்தியில் ஒற்றுமை இல்லை. அதன் விளைவுதான் இது" என்று மற்றவர்கள் விரல் நீட்டும் அளவுக்கு எமது நிலைமை மோசமடைந்திருக்கின்றது. எனவே, எமது சமூகத்தின் கட்டுக்கோப்பை பாதுகாக்கின்ற கடப்பாடு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கிறது.

இன்று மார்க்க, அரசியல் மற்றும் சிவில் தலைமைத்துவங்கள் வகைதொகையின்றி மட்டரகமாக விமர்சிக்கப்படும் நிலை உருவாகியிருக்கின்றது. ஆனால், மார்க்கம் என்பது உபதேசமாகும் என்ற அடிப்படையில் உபதேசங்கள் மூலமும் அழகான அறிவுரைகள் மூலமும் தலைவர்களை வழிப்படுத்த வேண்டும் இல்லா விட்டால் காலப்போக்கில் தலைமைத்துவம் இல்லாத சமூகமாக, மாலுமி இல்லாத கப்பலில் பயணிக்கின்ற சமூகமாக மாறும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம்.


4. ஒவ்வொரு முஸ்லிமும் ஓர் அழைப்பாளனாக...

இஸ்லாத்தை எத்திவைத்த காரணத்தால் நாம் இன்று தாக்கப்படவில்லை. இஸ்லாத்தை எடுத்துச் சொல்லாத  காரணத்தினால்தான் தாக்கப்படுகிறோம். இஸ்லாமிய முறைப்படி வாழவில்லை; இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை; இஸ்லாத்தை எடுத்துக்காட்டவில்லை; எமது மார்க்கத்தை சொல்ல வேண்டிய ஒழுங்கில் சொல்லவில்லை. இதனால்தான் இந்த அவல நிலை. இஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோது நாம் அவற்றுக்கு தெளிவான பதில்களை முன்வைக்க தவறினோம். அவர்களை அறிவூட்ட தவறினோம். குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டும் வேலையைச் செய்து கொண்டிருந்தோம். எமக்கு மத்தியிலுள்ள பிளவையும் பிரிவினையையும் வளர்க்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். விளைவாக, அவற்றின் அறுவடையை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இஸ்லாத்தை ஆழமாகக் கற்று இஸ்லாம் குறித்த கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் அழகிய முறையில் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம். அலுவலகங்களிலும் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வீதிகளிலும் பயணங்களிலும் இஸ்லாம் பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்வதில் பங்காளர்களாக நாம் மாற வேண்டும். உணவில் கருத்தடை மாத்திரை கலப்பது பற்றிய புரளிக்கான விளக்கத்தைக்கூட உரிய காலத்தில் முன்வைக்க தவறிவிட்டோம். காலங்கடந்த பின்னர்தான் விளக்கம் சொல்லியிருக்கின்றோம். இந்த நாட்டில் ஆயிரம் ஆயிரம் அபூபக்கர்களையும் அஸ்மாக்களையும் உருவாக்கியிருக்க வேண்டும்.

அதனைச் செய்ய தவறினோம். குறைந்தபட்சம், பல்லாயிரம் அபூதாலிப்களையாவது நாம் உருவாக்கியிருக்க வேண்டும். அதனையும் செய்யத் தவறி விட்டோம். மாறாக, அபூஜஹ்ல்களைத்தான் உருவாக்கியிருக்கிறோம். நாளுக்கு நாள் அபூதாலிப்களை இழந்து வருகிறோம். அபூஜஹ்ல்களை சம்பாதித்து வருகிறோம் என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணி புரியும் எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகின்றேன். நீங்கள் அங்கு வெறுமனே பொருள்களை மாத்திரம் தேடுவதுடன் நின்றுவிடாது அல்லாஹ்வின் அருள்களையும் தேட வேண்டும். அங்குள்ள ஆரோக்கியமான சூழலைப் பயன்படுத்தி அங்கு தொழில் புரியும் எமது நாட்டின் பல்லாயிரக் கணக்கான பெரும்பான்மையின சகோதரர்களுக்கு இஸ்லாம் பற்றிய புரிதல்களை முன்வைக்க வேண்டும். அது குறித்த கலந்துரையாடல்களை நடத்த வேண்டும். இனவாத செயற்பாடுகள் எமது நாட்டில் தொடர்ந்தால் நாடு எதிர்நோக்கும் பாதிப்புக்கள் குறித்து அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். முஸ்லிம்கள் குறித்த தப்பபிப்பிராயங்களை களையும் வகையில் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வேண்டும். கலந்துரையாடல்கள், அமர்வுகள், மாநாடுகள் மூலமாக இப்பணியை அழகாக முன்னெடுக்கலாம். அவ்வாறே மேற்குலக நாடுகளில் வாழும் எமது சகோதரர்கள் அங்கு வாழும் பெரும்பான்மையின சகோதரர்களோடு மனம் திறந்த கலந்துரையாடல்களை நடத்த வேண்டும். அங்கும் உள்நாட்டு சர்ச்சைகளை மையப்படுத்தி பிரிந்து நின்று செயற்படுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் ஓர் உலகளாவிய வலைப்பின்னலை உருவாக்கி சரியான செய்தியை சொல்லுகின்ற முயற்சியையும் முன்னெடுக்க வேண்டும்.


5. சிங்கள மொழிப் புலமையுள்ள ஆளுமைகளின் அவசியம்

சிங்கள மொழியில் உரையாற்றுகின்ற, எழுதுகின்ற, கலந்துரையாடல்களை நடத்துகின்ற, ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கின்ற வளவாளர்கள் உருவாக்கப்படல் வேண்டும். எமது அழைப்பாளர்களும் பிரசாரகர்களும் தமது கருத்துக்களை முன்வைக்கும் பாரம்பரிய முறைகளை மாற்றி சிங்கள மொழியில் இஸ்லாத்தின் தூதை, முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடுகளை முன்வைக்கின்ற தார்மிகக் கடப்பாடு இருக்கிறது.


6. பண்பாட்டில் மாற்றம் தேவை

தவிரவும் எமது பண்பாடுகளிலும் நடத்தைகளிலும் மாற்றம் தேவை. தனிப்பட்ட அன்றாட வாழ்வில், கொடுக்கல்- வாங்கலில், தொழில் நடவடிக்கையில், மக்களுடனான உறவில் மாற்றம் தேவைப்படுகிறது. இன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் என்றால் அரசியல் வியாபாரிகள்" என்ற மனப்பதிவு சமூகத்தில் உருவாகியிருக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பேரம் பேசி அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்பவர்கள்தான் முஸ்லிம் அரசியல்வாதிகள்; அவர்களுக்கென்று ஒரு கொள்கை கிடையாது" என்ற மனப்பதிவு பல மட்டங்களில் இருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த மனப்பதிவுகள் மாற்றப்படல் வேண்டும். முஸ்லிம்கள் என்றால் அவர்கள் கொள்கைவாதிகள், நீதியானவர்கள், நேர்மையானவர்கள், நீதிக்காக குரல் எழுப்புபவர்கள் என்ற நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்.

எமது நாட்டில் நல்லவர்கள் இன்னும் இருக்கிறார்கள். முற்போக்கு சிந்தனையுடையவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நாட்டிலுள்ள Key Opinion Leaders களையெல்லாம் ஒன்றுதிரட்டி எமது நாட்டையும் சமூகத்தையும் காப்பாற்றுகின்ற வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படல் வேண்டும். அண்மைக் காலமாக இது போன்ற காத்திரமான சில பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

நாம் இன்று ‘தனித்துவம்’ பேணுதல் எனும் பெயரில் தனித்து வாழ்கின்றோம். இது தவறு. தனித்து வாழ்வதற்கும் கரைந்து வாழ்வதற்குமிடையில் கலந்து வாழ்கின்ற கலையை நாம் கற்க வேண்டும். அதற்கான வழிகாட்டல் சமூகத்திற்கு வழங்கப்படல் வேண்டும்.

இவை அனைத்துக்கும் மேலாக அல்லாஹ்வின் உதவி அவசியம். அவனுடனான தொடர்பை நெருக்கமாக்கிக் கொள்ள வேண்டும். பாவங்களிலிருந்து விடுபட வேண்டும். பாவங்கள் சாபங்களாகும். நன்மையான காரியங்களில் அதிகமதிகம் ஈடுபட வேண்டும். இஸ்திஃபார், தவ்பா மூலமாக அல்லாஹ்வை நெருங்குவோம். துஆவை ஆயுதமாகக் கொள்வோம். அல்லாஹ்வுடனான உறவை சீர்செய்து கொள்வோம். பௌதிகக் காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னேறிச் செல்வோம். விளைவாக ஆரோக்கியமானதொரு சுழல் ஏற்படும், இன்ஷா அல்லாஹ்.

ஒப்பீட்டளவில் இலங்கை முஸ்லிம் சமூகம் முதிர்ச்சியானதொரு சமூகம். இன்னும் ஆரோக்கியமான நிலையை நோக்கி நகர வேண்டும். பள்ளிவாசல்களின் பணி மகத்தானது. அவற்றில் பாரம்பரிய பணிகள் மாத்திரம் போதாது. நாட்டிலுள்ள 2500 பள்ளிவாசல்களும் சமாதான இல்லங்களாக, தஃவா நிலையங்களாக, சமூக நல்லிணக்கத்தை முன்னெடுக்கின்ற மத்திய நிலையங்களாக மாற வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், ஒற்றுமை, சகவாழ்வு, இளைஞர், யுவதிகள் விவகாரங்களை கட்டியெழுப்புகின்ற மையங்களாக பள்ளிவாசல்கள் மாற வேண்டும். சில பள்ளிவாசல்கள் காலத்திற்கு தேவையான பணிகளை முன்னெடுத்து வருகின்றன. அத்தகைய முன்னெடுப்புகள் மெதுவாகவே நகர்கின்றன. இவை இன்னும் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

புத்திசாலிகள் சவால்களை சந்தர்ப்பங்களாக மாற்றிக் கொள்வார்கள். இன்று முஸ்லிம்களைப் பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் மக்கள் இருக்கின்றார்கள். முஸ்லிம்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மை குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். எனவே, இந்த சந்தர்ப்பத்தை இறை அருளாகப் பார்த்து பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்போமாக!

 

We have 60 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player