இர்பான் சஞ்சிகைக்கான விஷேட செவ்வி

 

 


அல்இர்பான்: இர்பானிய்யா அரபுக் கல்லூரி மற்றும் அல்இர்பான் சஞ்சிகை பற்றிய அறிமுகம் உள்ளதா?

அஷ்ஷெய்க் அகார்: இர்பானிய்யா கலாபீடத்தை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அறிவேன்.இர்பானிய்யாவின்பட்டமளிப்பு விழா ஒன்றில்சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்ட ஞாபகம் இருக்கிறது. மற்றொரு சந்தர்ப்பத்தில் அங்கு நடைபெற்ற செயலமர்வொன்றிலும் வளவாளராக பங்கேற்றுள்ளேன்.

இர்பானிய்யா அரபு கலாசாலையின் கலைத் திட்டம் மற்றும் பாடத் திட்டம் தொடர்பான அறிமுகமொன்றும்இருக்கிறது. ஜாமிஆ நளீமிய்யா இந்நாட்டில் பொதுக்கல்வியையும் ஷரீஆ கல்வியையும் வழங்கி சமகால சவால்களை எதிர்கொள்ளக் கூடிய ஆளுமைகளை உருவாக்குவதில் முன்னோடி நிறுவனமாக விளங்கு;கிறது. அண்iமைக் காலமாக ஜாமிஆ நளீமிய்யாவின் பாணியிலேஇயங்கி வருகின்ற சில இஸ்லாமிய நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளேன். அதில் இர்பானிய்யாவும் ஒன்ற என்பதை இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.

 

சமகாலத்தில் மாணவர்கள் ஷரீஆ துறையில் அறிவைப் பெறுவது போலவே பொதுக் கல்வியிலும் கணிசமானளவுஈடுபாடு காட்டுகிறார்கள். இர்பானிய்யா காலத்துக்கு தேவையான அறிஞர் குழாத்தைஉருவாக்குகின்ற அதேவேளைநடுநிலைப்போக்கை கடைபிடிக்கின்றஒரு நிறுவனமென்பதும்குறிப்பிடத்தக்கது.

அல்இர்பான்: இலங்கையின் தற்போதைய அசாதாரண சூழலில் அதனை எதிர்கொள்வது குறித்து...

அஷ்ஷெய்க் அகார்: முதலில் இந்த அசாதாரண சூழ்நிலை பற்றி அறிவுபூர்வமான ஒரு மதிப்பீடு அவசியம் என நினைக்கின்றேன். அந்த வகையில் சமூகத்தில் மூன்று சாராரை நாம் காண்கின்றோம்.

ஒரு சாரார் எப்பொழுதும் தனி மனிதர்கள்விடயத்தில் கவனம் செலுத்துபவர்கள். எப்போதும் அவர்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் குற்றறிவு உடையவர்கள.; இரண்டாவது சாரார் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளையும் சம்பவங்களையும் அலசிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் சராசரி; அறிவுடையவர்கள்.

மூன்றாவது சாரர் வெறுமனே நிகழ்வுகள் மற்றும் தனி மனிதர்கள் பற்றி அலசுவதை விடுத்து சிந்தனைகளை அலசுவார்கள். ஒவ்வொரு விடயத்திற்கும் பின்னாலுள்ள தத்துவங்களையும் தாத்பரியங்களையும் நோக்குபவர்களாக இருப்பார்கள். இவர்கள்தான் பேரறிவு படைத்தவர்கள். பேரறிவு படைத்தவர்களாக மாற வேண்டிய தேவை உணரப்படுகின்ற காலம் இது என கருதுகின்றேன்.

இந்த அசாதாரண சூழ்நிலை இலங்கையோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டு நோக்கப்பட வேண்டியதொன்றல்ல. இன்று உலகளாவிய ரீதியிலே திட்டமிடப்பட்ட அடிப்படையில் இஸ்லாம் குறித்த அச்ச உணர்வு (இஸ்லாமோபோபியா) ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வருடா வருடம் இஸ்லாம் பற்றிய வெறுப்பை, பகைமையை காழ்ப்புணர்ச்சியை, அச்சத்தை உருவாக்கும் இந்த வேலைத்திட்டத்திற்கு பல கோடி டொலர்கள் செலவிடப்பட்டு வருகின்றன. எவ்வாறு மருத்துவம் ஒரு தனித்துறையாக திகழ்கின்றதோ அந்தத் துறைக்கென்று வளவாளர்களும் துறை சார்ந்த நிபுணர்களும் பேராசிரியர்களும் இருக்கின்றார்களோஅது போன்று இஸ்லாமோபியாவும்(இஸ்லாம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துதல்) தனியான துறையாக நோக்கப்படுகிறது. பலர் இத்துறையில் முழு நேர ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றனர். இவர்கள் உலகளாவிய ரீதியில் பயிற்சிப் பட்டறைகள், மாநாடுகள், கருத்தரங்குகள், ஏனைய சமூக வலையத்தளங்களுக்கூடாக இந்தக் கொள்கையைப் பிரகடனப்படுத்துகின்றனர். இதற்கு நாளாந்தம் பல்லாயிரக் கணக்கான மனிதர்கள் பலியாகி வருகின்றனர்.

1430 வருட வரலாற்றைக் கொண்ட இஸ்லாம் கடந்த ஒரு தசாப்த காலத்திற்குள் ஒரு பயங்கரவாத,தீவிரவாத,உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற மார்க்கமாக நோக்கப்படுகின்றமைக்குஇஸ்லாமோபியா செயற்திட்டமே காரணம் ஆகும்.

இதன் விளைவையே நாம்எமது நாட்டிலும் காண்கின்றோம். எமது நாட்டிலும் பல்வேறு உள்நோக்கங்களோடு செயல்படுகின்ற அணிகளும் இல்லாமல் இல்லை.

எனவே, நாம் முதலில் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம். சமூகத்தில் உள்ள பொது மக்களை அறிவூட்டுகின்ற கடப்பாடு இஸ்லாமிய அறிஞர்கள், புத்திஜீவிகள்,அழைப்பாளர்கள், துறைசார் நிபுணர்களைச் சாரும்.

இவ் அசாதாரண சூழலை எதிர்கொள்வதற்கு குறுகிய கால, நீண்ட கால திட்டம் வகுக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையிலேயே அண்மைக் காலமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான கவுன்சிலுக்கூடாக (ccc) பல நிகழ்ச்சி திட்டங்களை நாடளாவிய ரீதியில் அமுல்நடத்தி வருகின்றது.

கடந்த இரு வருட காலமாக நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலைக்குப் பிறகு அவ்விரு திட்டங்களையும் மிகவும் தீவிரமாக அமுல்நடத்திக் கொண்டிருக்கின்றோம். இந்நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாகவாழ்ந்து வரும் நாம் சில வரலாற்று தவறுகளை இழைத்திருக்கிறோம். இந்த நாட்டில் அபூபக்ர்களையும் அஸ்மாக்களையும் உருவாக்க தவறியமை நாம் விட்ட மிகப் பெரிய தவறு. குறைந்தபட்சம்நாம் அபூதாலிப்களையாவது உருவாக்கி இருக்க வேண்டும். அதையும் நாம் செய்யத் தவறி விட்டோம். ஆனால்,அபூஜஹ்ல்களையல்லவா உருவாக்கியிருக்கின்றோம்.மாத்திரமல்ல, அபூ தாலிப்களும் அபூஜஹ்ல்லாக மாறி கொண்டிருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

இக்கால கட்டத்தில் குறைந்தபட்சம், அபூஜஹ்ல்களுடைய எண்ணிக்கையைக் குறைத்து அபூதாலிப்களுடைய எண்ணிக்கையை கூட்டுவதே எமக்கு முன்னாலுள்ள தலையாய பணியாக உள்ளது.

இனங்களுக்கிடையிலான சமூக ஒற்றுமை,சமூக ஐக்கியம் குறித்து கரிசனை செலுத்துகின்ற அதேவேளை,முஸ்லிம் சமூகத்தில் ஒற்றுமைக் கட்டியெழுப்ப வேண்டும். முஸ்லிம் சமூகத்திலுள்ள முரண்பாடுகள், பிளவுகள்,சண்டைகள்,காட்டி கொடுத்தல்களைப் பார்க்கின்றபோது முஸ்லிம்கள் மத்தியில் ஆரம்பமாக சகவாழ்வையும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருக்கின்றது. அவ்வாறே சகோதரத்துவத்தையும் சமூக ஒற்றுமையையும்மேலும் வலுப்படுத்த வேண்டும்.

இதனை அடிப்படையாகக் கொண்டே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இரு முக்கிய பிரகடனங்களை வெளியிட்டுள்ளது.

01. ஒற்றுமைப் பிரகடனம்

02. சகவாழ்வுப் பிரகடனம்

இவ்விரு பிரகடனங்களும் மும்மொழிகளில் அச்சிடப்பட்டு நாடளாவிய ரீதியில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதன் தொடராக தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு பிரகடனமும் செய்திருக்கிறோம்.

முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை மற்றும் சகோதர இனத்தவர்களுடனான சகவாழ்வை மேலும் பலப்படுத்தும் நோக்கில் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை ஊர் மட்டத்தில் இருந்து தேசிய மட்டம் வரை பல செயற்திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது, அல்ஹம்து லில்லாஹ்.

அல்இர்பான்: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உப தலைவர் என்ற வகையில் உலமா சபையின் எதிர்கால திட்டங்கள் குறித்து சொல்ல முடியுமா?

அஷ்ஷெய்க் அகார்: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாஇலங்கைக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர்நிறுவப்பட்ட முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகின்ற மிகவும் பழமை வாய்ந்த ஒருநிறுவனம். 90 வருட கால அனுபவத்தைக் கொண்ட முதிர்ச்சியான ஒரு சபைஎன்பதை ஆரம்பமாக சொல்ல விரும்புகின்றேன்.

ஆரம்ப கால அறிஞர்கள், முன்னோர்கள் குறிப்பாக ஆலிம்கள் மிகவும் தூரநோக்கோடு சமயோசிதமாக ஜம்இய்யதுல் உலமாவை நிறுவியுள்ளார்கள். பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் தனித்துவமான ஒரு சபையாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாகாணப்படுகிறது. இலங்கையில் உலமாக்களை ஏற்று அங்கீகரித்த ஒரே சபையாக இதுவே காணப்படுகின்றது. அதற்கு நிகராக மற்றொரு சபை இல்லையென்று சொல்வது பொருத்தம் என்று நினைக்கின்றேன். யதார்த்த நிலையும் அதுவே. ஆனால்,இந்நிலையை அயல் நாடுகளிலும் ஏனைய பல நாடுகளிலும் பார்க்க முடியாது. அவ்வாறோ அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆவின் கீழுள்ள அமைப்புக்கள்,தரீக்காக்கள்,ஜமாஅத்கள் மற்றும் இயக்கங்களும் இவற்றைச் சாராத தனி நபர்களும் இதில் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாபல மட்டங்களில் விமர்சிக்கப்பட்டாலும் பல அழுத்தங்களுக்கு உட்டபட்ட போதிலும் இலங்கை முஸ்லிம் சமூகம் ஜம்இய்யதுல் உலமாவின் நிலைப்பாடுகளையும் முடிவுகளையும் தீர்ப்பையும் ஏற்றுக் கொள்கிறார்கள்ளூ கட்டுப்படுகிறார்கள். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாஇலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு இலங்கை முஸ்லிம் சமூக விவகாரங்களில் கூடுதல் கரிசனை செலுத்தி வருகிறது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கீழ் பத்வா பிரிவு, சமூக சேவைப் பிரிவு, கல்விப் பிரிவு, ஊடகப் பிரிவு, ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு, இளைஞர், யுவதிகளுக்கான குழு, பிரசாரக் குழு, பிரசுரக் குழு, பிறைக் குழு என்று 13க்கும் மேற்பட்ட பிரிவுகள் இயங்கி வருகின்றன. மட்டுமன்றி, சமூகம் செயற்கை மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படுகின்றபோது அனர்த்த நிவாரணப் பணிகளுக்கு ஜம்இய்யதுல் உலமா தலைமைத்துவம் வழங்கி வந்திருக்கிறது. நேரடியாக நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறது. மூதூர் வெளியேற்றத்தின்போதும் சுனாமி அனர்த்தத்தின்போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை மற்றும் வீடமைப்புத் திட்டம் என்பவற்றை ஜம்இய்யதுல் உலமாவின் சமூக சேவைப் பிரிவு மேற்கொண்டிருக்கிறது. அண்மையில் இன வன்முறையினால் பாதிக்கப்பட்;ட அளுத்கமை, பேருவளை மற்றும் தர்கா நகர் மக்களுக்கு அளுத்கம அபிவிருத்தி நிலையத்திற்கூடாக பெரும் தொகைப் பணம் வழங்கியது.

ஜம்இய்யாவின் மீது வைத்துள்ள நம்பிக்கையினால் தனவந்தர்கள், பரோபகாரிகள் தாராளமனம் படைத்தவர்கள் தொடர்ந்தும் ஜம்இய்யாவுக்கு தமது பங்களிப்பை நல்கி வருகின்றனர். அவ்வாறே முஸ்லிம் சமூகத்தின் இருப்பு, பாதுகாப்பு மற்றும் பல்துறை சார்ந்த மேம்பாட்டு நடவடிக்கைகளிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கூடிய கரிசனை செலுத்தி வருகிறது. அண்மைக் காலமாக கல்வி, சமூக சேவை மற்றம் ஊடகத் துறை முதலானவற்றை முன்னுரிமைப்படுத்தி திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் மேம்பாட்டுக்காக பல அமைப்புக்கள், இயக்கங்கள், நிறுவனங்கள் உழைக்கின்றன. அந்த அமைப்புக்களோடு உறவைக் கட்டியெழுப்புகின்ற விடயத்தில் ஜம்இய்யதுல் உலமா அதீத கவனம் செலுத்தி வருகிறது. இந்த நாட்டிலுள்ள ஏனைய அமைப்புக்களோடு புரிந்துணர்வு உடன்படிக்கைகளைக் கைச்சாத்திட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் ஜம்இய்யா இருக்கிறது. எல்லோரையும் இணைத்துக் கொண்டு, அரவணைத்துக் கொண்டு நாட்டு முஸ்லிம்களுடைய நலன்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது ஜம்இய்யதுல் உலமாவின் எதிர்பார்ப்பு.

பல மட்டங்களில் விமர்சிக்கப்பட்டபோதிலும் சமூகத்தில் ஜம்இய்யதுல் உலமாவின் வகிபாகம் பாராட்டத்தக்கது என்றால் அதில் மிகையில்லை. உண்மையில் ஜம்இய்யதுல் உலமா அதிகமாக இயங்குகின்ற காரணத்தால்தான் அது விமர்சிக்கப்படுகிறது என நான் நினைக்கின்றேன். இயங்காதோரை யாரும் விமர்சிப்பதில்லை. எனவே, இத்தகைய விமர்சனங்கள் ஜம்இய்யதுல் உலமா உயிரோட்டமாக இருக்கிறதுளூ நிறைவான பங்களிப்பைச் செய்கிறது என்பதற்கு சான்றாதாரமாக இருக்கிறது என நான் கருதுகிறேன்.

அல்இர்பான்: பல இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களோடு தொடர்புள்ள நீங்கள் அவை தற்போது செய்ய வேண்டிய பணி எவையெனக் கருதுகிறீர்கள்?

அஷ்ஷெய்க் அகார்: இன்றைய இஸ்லாமிய அமைப்புக்கள் சமூக ஒற்றுமையை முதன்மைப்படுத்த வேண்டும்ளூ முன்னுரிமைப்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் அவரவருடைய ஜமாஅத்களில் இருந்தாலும் அவர்களுடைய கவலை சமூகத்தின் மீதிருக்க வேண்டும். அதாவது அழைப்புப் பணி புரிபவர்களின் கால்கள் தத்தமது ஜமாஅத்களில் இருக்கின்ற அதேவேளை, அவர்களது கண்கள் உம்மத்தின் மீது இருக்க வேண்டும் என்றும் சொல்லலாம். ஜமாஅத், நாம் சென்றடையும் பாதை. உம்மத் எமது இலக்கு என்ற பார்வை அவசியம்.

குறிக்கோள் நிலையானதுளூ மாறாத் தன்மை கொண்டது. இலக்கை அடைகின்ற வழிகள் மாறும் தன்மை கொண்டவை. இன்று உலகளாவிய ரீதியிலும் நாடளாவிய ரீதியிலும் நிலவுகின்ற இஸ்லாமிய எழுச்சிக்கு, புரட்சிக்கு பிரதான காரணம் இஸ்லாமிய இயக்கங்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், இஸ்லாமிய இயக்கங்கள் தமக்கிடையில் மோதிக் கொள்வது ஆரோக்கியமானதல்ல. சாண் ஏறி முழம் இறங்குகின்ற நிலையாக மாறிவிடும்.

எனவே, இஸ்லாமிய இயக்கங்கள் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, முரண்பாட்டில் உடன்பாடு கண்டு தமது இலக்கை நோக்கிய பாதையில் பயணிக்க வேண்டும். இதுதான் இஸ்லாமிய இயக்கங்கள் செய்ய வேண்டிய தலையாய பணி என நான் நினைக்கின்றேன். ஆனால், களத்தில் கவலைக்குரிய நிலையையே அவதானிக்க முடிகிறத. முன்பை விட குறைவாக இருந்தாலும் இயக்கங்களுக்கிடையில் ஒரு வகையான பனிப் போர் தொடர்ந்து கொண்டிருப்பது கவலையளிக்கிறது.

ஒரு சாரார் நாகரிகமாக முரண்படுகின்றார்கள். மற்றொரு சாரார் மிகவும் அநாகரிகமாக முரண்படுகிறார்கள். இவ்விரு முரண்பாடுகளும் கண்டிக்கத்தக்கது. கடந்த கால வரலாற்றைப் பார்த்தாலும் ஒரு காலத்தில் தரீக்காக்களுக்கு மத்தியில் மோதல் ஏற்பட்டது. இப்போது அதனைக் காண முடியாது. பின்பு மத்ஹபுக்களுக்கிடையில் மோதல் நிலவியது. அந்நிலையும் தற்போது இல்லை. ஆனால் தற்போது ஜமாஅத்களுக்கிடையில் முரண்பாடு நிலவுவதைக் காணலாம். இதுவும் நிலையானதல்ல.

எனது 35 வருட கால கள அனுபவத்தில் சொல்கிறேன். பொதுவாக அரசியலில்தான் நிரந்தர எதிரிகள் இல்லை என்று சொல்லுவார்கள். ஆனால், தஃவாவிலும் நிரந்தர எதிரிகள் இல்லை என்பதை நான் அவதானித்;துள்ளேன். ஒரு காலத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் இன்று அந்தப் பகைமையை மறந்து களத்தில் பணியாற்றுகிறார்கள. ஒரு காலத்தில் நெருக்கமாக, நண்பர்களாக இருந்தவர்கள் இன்று எதிரிகள் போல் நடந்து கொள்கிறார்கள். இந்நிலையும் மாற்றமடையும். மாறுகின்றபோது ஏராளமான இழப்புக்கள் நடந்து முடிந்திருக்கும்.

எனவே, இன்று யார் எந்த அமைப்புக்களில் இருந்தாலும் அவர்கள் எல்லோருடைய கவலையாகவும் உம்மத் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். ஒவ்வோர் அழைப்பாளனும் இந்தக் கவலையோடு பணியாற்ற வேண்டும்.

இந்த நாட்டில் சிறுபான்மையினரா வாழ்கின்ற எம்மிடமுள்ள முதலாவது மிகப் பெரிய பலம் ஈமானிய பலம். அடுத்தது ஒற்றுமை, ஐக்கியம் எனும் பலம். பிளவுபட்ட ஒரு பெரும்பான்மைக்கு முன்னால் ஐக்கியமாக இருக்கின்ற சிறுபான்மை பலமானது என்று ஓர் அறிஞர் அண்மையில் கூறிய கருத்தை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூர்கிறேன்.

எனவே, முஸ்லிம்களுக்களாகிய எங்களுக்குள்ள மிகப் பெரிய பலம், நாம் ஓர் அணியாக இயங்க வேண்டும். அவ்வாறு ஐக்கியப்படுவதற்கு இருக்கின்ற தடைகள் மிக மிகக் குறைவு. நாம் எல்லாரும் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆவைச் சேர்ந்தவர்கள். எம்மிடம் குல பேதம், கோத்திரவாதம், பிரதேசவாதம் எதுவும் இல்லை. இலங்கை சிறிய நாடு. தொடர்புகளுக்கான வசதி அதிகம். எனவே, இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தை முன்மாதிரியான சமூகமாக மிகவும் இலகுவாக உருவாக்கலாம்.

ஆகவே, தற்போதைய சூழ்நிலையில் முன்னுரிமை பெற வேண்டியது சமூக ஒற்றுமையாகும் என்பதை சகல இஸ்லாமிய இயக்கங்களும் உணர வேண்டும்.

அல்இர்பான்: நான்கு தசாப்த வரலாற்றைக் கொண்ட ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் என்ற வகையில் ஜாமிஆ நளீமிய்யா முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை, இடைவெளிகளை எந்தளவு நிரப்பியுள்ளது?

அஷ்ஷெய்க் அகார்: ஜாமிஆ நளீமிய்யா தற்போது நான்கு தசாப்தங்களைப் பூர்த்திசெய்து 5ஆவது தசாப்தத்தில் காலடி வைத்துள்ளது. 1973ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்நிறுவனம் குறுகிய கால வரலாற்றில் மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறதுளூ இஸ்லாமிய கல்வித் துறையில் மிகப் பெரிய புரட்சியை செய்திருக்கிறதென்றால் அதில் மிகையில்லை.

இலங்கை முஸ்லிம்;களின் கல்வித் துறை வரலாற்றிலே ஜாமிஆ நளீமிய்யா ஒரு திருப்புமுனை என்பதை இலங்கையிலுள்ள கல்விமான்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ஜாமிஆ உருவாக்கப்பட்டபோது இஸ்லாமிய உலகத்தில்கூட இந்தக் கல்விக் கொள்கையோடு எந்தவொரு நிறுவனமும் முறையாக நிறுவப்பட்டிருக்கவில்லை. ஒரு பக்கம் ஷரீஆவுக்கான கல்வி நிறுவனங்கள். மறுபக்கம் பொதுக் கல்விக்கான கல்வி நிறுவனங்கள். இவ்விரண்டு கல்வியையும் இணைத்த கல்லூரிகள் இல்லாத ஒரு கால கட்டத்தில்தான் ஜாமிஆ நளீமிய்யா உருவாக்கப்பட்டது. எந்தளவுக்கென்றால், ஜாமிஆவை உருவாக்குவதற்கு முன்னர் இது பற்றி ஆலோசனை பெறுவதற்கு ஒரு தூதுக் குழு வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தது. அந்தக் குழு மௌலானா மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களையும் சந்தித்து ஆலோசனை பெற்றது. அப்போது அவர் 'இது ஓர் அற்புதமான காலத்துக்குத் தேவையான ஒரு திட்டம்;. எந்தளவுக்கு இந்தத் திட்டம் பயனளிக்கும் என்று நான் அஞ்சுகிறேன். பல முறை இதை பரீட்சித்துப் பாருங்கள்' எனக் கூறியிருந்தார்.

அந்த அளவுக்கு ஒரு முன்னோடித் திட்டமாக ஜாமிஆ நிறுவப்பட்டது. அந்த வகையில் ஜாமிஆ சிறந்த சிந்தனையாளர்களை, புத்திஜீவிகளை, துறை சார்ந்த நிபுணர்களை, எழுத்தாளர்களை, ஊடகவியலாளர்களை மற்றும் சட்டத் துறை நிபுணர்களை உருவாக்கி உள்ளது. பல இஸ்லாமிய அமைப்புகளில் நளீமிக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்களவு உள்ளது. நளீமிக்கள் சமூகத்தில் நடுநிலை சிந்தனையைக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, முரண்பாட்டில் உடன்பாடு கண்டு இந்த நாட்டிலுள்ள பாரம்பரிய அணிகளுக்கிடையே உள்ள முரண்பாடுகளைக் குறைப்பதில் கணிசமானளவு பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் நளீமிய்யா கல்வித் துறையிலும் ஷரீஆத் துறையிலும் மற்றும் தஃவா களத்திலும் பாரியதொரு இடைவெளியை நிரப்பியிருக்கிறது. இன்னும் பாரிய வேலைத் திட்டங்கள் செய்யப்பட வேண்டியிருக்கிறது என நான் நினைக்கின்றேன்.

ஒரு காலத்தில் ஜாமிஆ நளீமிய்யா உருவாக்கப்பட்டபோது அதன் கல்விக் கொள்கை விமர்சிக்கப்பட்டது. இங்கிருந்து புத்திஜீவிகளோ உலமாக்களோ அல்லது துறைசார்ந்தவர்களோ வெளியேற மாட்டார்கள் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது. ஆனால் இன்று குறிப்பிடத்தக்க அரபுக் கலாசாலைகள் ஜாமிஆ நளீமிய்யாவின் கலைத் திட்டத்தை, கல்விக் கொள்கையைப் பின்பற்றுவதை நாம் பார்க்கின்றோம். இது ஜாமிஆவின் கல்விக் கொள்கைக்கு கிடைத்த பெரும் வெற்றி என நான் நினைக்கின்றேன். இன்னும் நீண்ட பயணம் செல்ல வேண்டி இருக்கிறது. எமது அடுத்த கட்ட நடவடிக்கையாக ஜாமிஆவோடு இணைந்து இயங்குகின்ற இக்ரஃ தொழிநுட்பக் கல்லூரியின் பாடத் திட்டத்தை தொழில்நுட்பத் துறையை இணைத்த இஸ்லாமிய கற்கை நெறியாக மாற்றவுள்ளோம். அதாவது இஸ்லாமிய கல்விக்கும் தொழில்நுட்பக் கல்விக்குமான உயர் கலாபீடமாக இதை மாற்ற முயற்சிக்கின்றோம், இன்ஷா அல்லாஹ்.

அல்இர்பான்: இலங்கை முஸ்லிம் பெண்களின் சமூகப் பங்கேற்பு எவ்வாறு உள்ளது, எவ்வாறிருக்க வேண்டும் என்பது பற்றி சுருக்கமாகக் கூற முடியுமா?

அஷ்ஷெய்க் அகார்: நான் அதிகமாக பேசிய விடயங்களில் இதுவும் ஒன்றாகும். சமூகத்துடைய சரிபாதியாக பெண்கள் இருக்கிறார்கள். பெண்களின் பங்களிப்பு இல்லாத எந்தத் துறையும் நாம் எதிர்பார்க்கும் முன்னேற்றத்தை அடைய முடியாது. பெண்கள் பங்களிப்புச் செய்யாத முன்னேற்றம் அரைகுறை முன்னேற்றமாகும். ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை முஸ்லிம் பெண்கள் சமூகப் புனர்நிர்மாணப் பணியில் வெறும் பார்வையாளர்களாகவே இருந்து வருகிறார்கள். அவர்கள் பங்காளிகளாகவோ போராளிகளாகவோ இல்லை. இதனால்தான் சமூகத்தின் பல நகர்வுகள் நாம் எதிர்பார்க்கின்ற இடத்தைச் சென்றடைவதில்லை.

எனவே, இன்றை சமூகத் தளத்தில் என்றும் இல்லாத அளவிற்கு ஆண்கள், பெண்கள் ஆகிய இரு தரப்பினரது பங்கேற்பும் நிறைவாகத் தேவைப்படுகிறது. பெண்கள் ஷரீஆ வரையறைகளைப் பேணி சமூகப் பங்களிப்பில் முனைப்போடு ஈடுபட வேண்டிய தேவையிருக்கிறது.

இன்று இது பற்றிய விழிப்புணர்வு ஓரளவு ஏற்பட்டிருக்கிறது என நான் கருதுகிறேன். கடந்த காலங்களை விட தற்போது முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றமடைந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் பெண்கள் ஷரீஆத் துறையில் கல்வி பயில்வதற்கு இருந்த ஒரே ஒரு கலாசாலை கள்- எலிய அரபுக் கல்லூரி மாத்திரம்தான். இன்று நாற்பதுக்கும் அதிகமான ஷரீஆ கலாசாலைகள் உருவாகியுள்ளன. இவை தவிர, ஷரீஆத் துறையில் யுவதிகளை பயிற்றுவிப்பதற்கான பல பயிற்சிப் பட்டறைகள் நடைபெறுகின்றன. முஸ்லிம் மாணவிகள் பல்கலைக்கழகம் செல்கிறார்கள்ளூ அரபுக் கலாசாலைக்குச் செல்கிறார்கள்ளூ பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொள்கிறார்கள். அதேபோல் தஃவா களத்திலும் அவர்கள் பங்கேற்கிறார்கள்.

பெண்களுடைய சுபாவம் மற்றும் இயல்புகளைக் கருத்திற் கொண்டு அவர்களுடைய வீட்டுக் கடமையை கவனத்திற் கொள்வதும் அவசியமாகும். ஏனெனில், பெண்களின் இராச்சியம் வீடுதான். எனவே, கணவனுக்குள்ள கடமைகள் பெற்றோர் மற்றும் வீட்டாருக்குள்ள கடமைகளை நிறைவேற்றுவதோடு சமூகப் புனர்நிர்மாணப் பணியிலும் பங்கேற்றால்தான் நிறைவான வெற்றியை அடைய முடியும். இதுவே சமநிலையான ஒரு தலைமுறை உருவாகக் காரணமாய் அமையும், இன்ஷா அல்லாஹ்.

 

We have 68 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player