ஒழுங்கும் கட்டுப்பாடும் இணையும் புள்ளியில்தான் கட்டுக்கோப்பானதொரு சமூகம் மலரும்!

அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்களுடனான  அல்ஹஸனாத் சஞ்சிகையின் நேர்காணல்

அல்ஹஸனாத்: ஒரு கட்டுக்கோப்பான சமூக உருவாக்கம் இஸ்லாத்தில் எந்தளவு தூரம் முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறித்து சுருக்கமாகக் கூற முடியுமா?

அஷ்ஷெய்க் அகார்: பொதுவாக மதம் தனிமனிதனுக்கும் இறைவனுக்குமிடையிலான உறவு பற்றியே பேசுகிறது. அதற்கு அப்பால் செல்வதில்லை. ஆனால், இஸ்லாத்தைப் பொறுத்தவரை அது தனிமனிதன், குடும்பம், சமூகம் என்ற அம்சங்களை இலக்காகக் கொண்டது. எனவே, இஸ்லாத்தை ஒரு மதம் என்று அழைக்கலாகாது. அப்படிச் சொல்வதாயின் அதனோடு சேர்த்து குடும்ப சார்ந்த (Family Oriented) சமூக மைய (Community Oriented)  ஆகிய இரு அடைமொழி களை இணைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் தன்வழி தனி மனிதர்களை உருவாக்குதல், தன்வழி குடும்பங்களை உருவாக்குதல், அந்த குடும்பங்களை இணைத்த ஒரு கட்டுக்கோப்பான சமூகத்தை உருவாக்குதல் இஸ்லாத்தின் மிக முக்கியமான இலக்குகள் ஆகும். இஸ்லாத் தின் அடிப்படை மார்க்கக் கடமைகள் மற்றும் இபாதத்துக் களை ஆராய்கின்றபோது இந்த உண்மையை தெளிவாகவே புரிந்து கொள்ள முடியும். கூட்டுத் தொழுகை, நோன்பு, கூட்டாகச் சேர்ந்து நிறைவேற்றப்படும் ஸகாத், கூட்டாக இணைந்து நிறைவேற்றும் ஹஜ் கிரியைகள்... என அனைத்தும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைந்து நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகள் ஆகும்.

பொதுவாக வேத நூல்கள் தனி மனிதனை விளித்துப் பேசுகின்றன. ஆனால், அல்குர்ஆன் மிகப் பெரும்பாலும் பன்மையில் விளித்துப் பேசுவதையும் சமூகத்தை விளித்துப் பேசுவதையும் பார்க்கலாம். தொழுகையை நிலைநாட்டுங் கள்... ஸகாத்தை நிறைவேற்றுங்கள்... முதலான கட்டளைகள் முழு சமூகத்தையும் நோக்கி விளிக்கின்றமையை பார்க்கிறோம்.

அந்த வகையில் இஸ்லாம் ஒரு சமூகத்தை உருவாக்க வந்த மார்க்கம் ஒரு கட்டுக்கோப்பான சமூகத்தை இலக்காகக் கொண்ட மார்க்கம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். உலக வாழ்வின் இறுதி இலக்காகக்கூட இதனைக் குறிப்பிடலாம். இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளைப் பொறுத்தவரையில் எமது முதலாவது இலக்கு தனி மனித உருவாக்கம். இரண்டாவது இலக்கு குடும்ப உருவாக்கம். மூன்றாவது இலக்காக அமைவது ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒரு கட்டுக்கோப்பான சமூகத்தை உருவாக்குவதே ஆகும்.

அல்ஹஸனாத்: ஒழுங்கு பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம் குறித்து...

அஷ்ஷெய்க் அகார்: இஸ்லாம் சமூக உருவாக்கம் குறித்து பேசுகின்றபோது அது கட்டுப்பாடான, ஒழுங் குடன் கூடிய சமூகமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இஸ்லாமிய அடிப்படை மார்க்க கடமைகள், வணக்க வழிபாடுகள் அனைத்திலும் ஓர் ஒழுங்குமுறை இருப்பதை அவதானிக்கலாம். தொழுகைக் கென்று ஓர் ஒழுங்குமுறை இருக்கின்றது. அதனை அவரவர் விருப்பத்திற்கேற்ப நிறைவேற்ற முடியாது. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட ரக்அத்துக்கள் தொழ வேண்டும், கூட்டாக இமாமைப் பின்தொடர்ந்து தொழ வேண்டும்... என பல ஒழுங்குகள், நிபந்தனைகள், பர்ளுகள், ஸுன்னத்துகள் உள்ளன. நோன்பை எடுத்துக் கொண்டால் பிறை பார்த்து நோன்பு நோற்றல், நோன்பை ஆரம்பிக்கும் ஸஹர் நேரம், துறக்க வேண்டிய இப்தார் வேளை... என அனைத்தும் திட்டமிடப்பட்ட அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. ஸகாத்தை எடுத்துக் கொண்டால், ஸகாத் கொடுங்கள் என்று மாத்திரம் கூறி இஸ்லாமிய சட்டம் முடிவடைந்து விடவில்லை. மாறாக, ஸகாத்தை யார் கொடுக்க வேண்டும், யாருக்கு கொடுக்க வேண்டும், எந்த அளவு கொடுக்க வேண்டும், அதனுடைய வருடப் பூர்த்தி எவ்வாறு அமைதல் வேண்டும்... என அனைத்து விட யங்களும் தெளிவாக வரையறுத்துத் தரப்பட்டுள்ளன. ஹஜ் கடமையிலும் இது போன்ற ஒழுங்கு விதிகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு இஸ்லாத்தின் அத்தனை வழிகாட்டல்களிலும் ஓர் ஒழுங்கு முறை முக்கியத்துவம் பெறுகின்றது. ஏதாவதோர் ஒழுங்கில் தொழுகையை நிறைவேற்றுங்கள், எந்த மாதத்திலாவது நோன்பை நோற்றுக் கொள்ளுங்கள், நீங்கள் விரும்பு கின்ற மாதத்தில் ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள் என்று இஸ்லாம் கூறாமால் அனைத்திற்கும் ஓர் ஒழுங்கு முறையை காட்டித் தந்திருக்கிறது. வணக்க வழிபாடுக ளில் பேணப்படுகின்ற இந்த ஒழுங்குகள் எந்தளவு தூரம் எமது நாளாந்த வாழ்வில் கடைப்பிடிக்கப்படு கின்றன என்பது கேள்விக்குறியே.

இன்று சமூகத்தில் ஓர் ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால்தான் இஸ்லாம் எதிர்பார்க்கும் ஒழுங் கான ஒரு சமூகத்தை உருவாக்க முடியாதிருக்கிறது. இஸ்லாத்தின் போதனைகள், பயிற்சிகளுக்கு ஊடாக  தனிமனிதனும் குடும்பமும் சமூகமும் தமது செயற்பா டுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பு மிகக் குறைவாக நிறைவேறுவதுதான் வேதனைக்குரிய விடயம்.

அல்ஹஸனாத்: கட்டுப்பாடு பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம் குறித்து...

அஷ்ஷெய்க் அகார்: ஒரு சமூகத்தின் அவசியத்தை வலியுறுத்துகின்ற இஸ்லாம், ஒழுங்கு மற்றும் கட்டுப் பாட்டின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாத நிலையில் கட்டுக்கோப்பான ஒரு சமூகம் உருவாக முடியாது. ஒழுங்கும் கட்டுப்பாடும் இணையும் இடத்தில்தான் கட்டுக்கோப்பான சமூகம் மலரும்.

இறை தூதர்கள் அனைவரும் தத்தமது சமூகத்தின ருக்கு போதித்த இரண்டு விடயங்கள் முக்கியமானவை. முதலாவது, தக்வா (அல்லாஹ்வுக்கு அஞ்சி வழிபடுவது). அடுத்தது, தாஅத் (எனக்கு கட்டுப்பட்டு நடப்பது). அல்லாஹ்வுக்கு வழிபடுவது போலவே நபிமார்களின் தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டு, கட்டுக்கோப்பான சமூகமாக வாழ வேண்டும் என்பதை உலகில் தோன்றிய எல்லா நபிமார்களும் வலியுறுத்தியதை அல்குர்ஆன் பறைசாற்றுகிறது. அல்குர்ஆன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுமாறு ஓரிரு இடங்களில் அல்ல ஏராளமான இடங்களில் கட்டளை பிறப்பித்துள்ளது.

"அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக!" (3: 32)

"அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படு வீர்கள்." (3: 132)

"எவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவே சிக்கச் செய்வான். அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும்..." (4: 13)

"நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்." (8: 1)

"நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும் கட்டுப் படுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கட்டுப்படுங்கள்..." (4: 59)

மற்றும் பல வசனங்களில் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாத இடத்தில் கட்டுக் கோப்பான ஒரு சமூகம் உருவாக முடியாது. அவை இரண் டும் இணையும் புள்ளியில்தானொரு கட்டுக்கோப்பான சமூகம் உருவாகும் என்பதற்கு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது பின்வரும் கூற்று தகுந்த சான்று:


"சமூகம் (கூட்டமைப்பு) இல்லாத நிலையில்  இஸ்லாம் இல்லை. தலைமைத்துவம் இல்லாத இடத்தில் சமூகம் இல்லை. கட்டுப்பாடு இல்லாத இடத்தில் தலைமைத்துவம் இல்லை."

எனவே, ஒரு தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்ட ஒரு சமூகம் இருக்கும் இடத்தில்தான் இஸ்லாம் வாழும். தனி மனிதர்களால் இஸ்லாத்தின் சொற்ப பகுதியைத் தான் கடைப்பிடிக்க முடிகிறது. இஸ்லாத்தின் பெரும்பாலான பகுதிகளை கடைப்பிடிப்பதற்கு ஒரு சமூகம் இன்றியமையாதது. ஒழுங்கு, தலைமைத்துவம், கட்டுப்பாடு என்பவற்றுடன் கலந்தாலோசனையும் ஒன்றுசேர வேண்டும். அப்போது தான் கட்டுக்கோப்பான சமூகம் பூரணத்துவம் பெறும். வெறுமனே தலைமைத்துவத்துக்கு கட்டுப்படுதல் என்ப தற்காக கலந்தாலோசனை இல்லாமல் தலைமைத்துவத்தினால் முடிவுகள் பெறப்படலாகாது.

இஸ்லாம் சமூக அமைப்பை (ஜமாஆ), ஒழுங்கை (நிழாம்), தலைமைத்துவத்தை (இமாறா) வலியுறுத்துவது போன்று கலந்தாலோசனையையும் வலியுறுத்துகிறது. ஏனெனில், ஷூரா இல்லாத இடத்தில் வெற்றிகரமான தலைமைத்து வம் உருவாக முடியாது. வெற்றிகரமான தலைமைத்துவம் இல்லாத இடத்தில் கட்டுப்பாடும் ஒழுங்குமுள்ள கட்டுக் கோப்பானதொரு சமூகத்தை உருவாக்க முடியாது.

அல்ஹஸனாத்: இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறு பான்மையினராக வாழ்கின்ற ஒரு நாட்டில் கட்டுக்கோப்பான ஒரு முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதன் அவசியம் குறித்து...

அஷ்ஷெய்க் அகார்: இலங்கை போன்ற நாட்டில் கட்டுக் கோப்பான ஒரு முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவது காலம் வேண்டி நிற்கின்ற ஓர் அடிப்படையான மார்க்கக் கடமை என்றால் அது பிழையாக மாட்டாது. ஒரு தலைமைத்துவத்தின் கீழ் கட்டுக்கோப்பாக, ஒழுங்குடன் வாழுகின்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதென்பது மார்க்கக் கடமை காலத் தின் தேவை. ஒரு சிறுபான்மை சமூகம் பெரும்பான்மை சமூகத்தின் முன்னால் எப்போதும் பலவீனமான நிலையிலேயே இருக்கும். எப்போது அது ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கியப்பட்டு கட்டுக்கோப்பான ஒரு சமூகமாக மாறுமோ அப்போதுதான் அந்த சமூகம் எல்லா வகையிலும் பலம் பொருந்திய சமூகமாக, சவால்களுக்கும் அறைகூவல்களுக்கும் முகம் கொடுக்க வல்லமையுள்ள ஒரு சமூகமாக திகழும் என்பதுதான் யதார்த்தம்.

இலங்கை முஸ்லிம்கள் தமது தனித்துவத்தை, அடை யாளத்தைப் பேணிக் கொள்ள வேண்டுமாயின், தாம் எதிர்நோக்குகின்ற சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்க வேண்டுமாயின் கண்டிப்பாக ஒரு கட்டுக் கோப்பான சமூக அமைப்பு இன்றியமையாதது.

கட்டுக்கோப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான பொறிமுறை:

கட்டுக்கோப்பான ஒரு சமூகத்தை அந்தரத்தில் உரு வாக்க முடியாது என்பது அடிப்படை உண்மை. இதற்கு ஓர் அத்திவாரம்  அவசியம். ஒரு கட்டுக்கோப்பான சமூகம் உருவாக அத்திவாரமாக இருப்பது ஒரு கட்டுக்கோப்பான கூட்டமைப்பு ஆகும். ஒரு கட்டுக்கோப்பான சிறிய கூட்ட மைப்பே கட்டம் கட்டமாக வளர்ந்து, பலமடைந்து ஒரு கட்டுக்கோப்பான சமூகமாக மாற வேண்டும். மாறாக, திடீரென ஒரு கட்டுக்கோப்பான சமூகத்தை அந்தரத்தில் உருவாக்குவதென்பது சாத்தியமானதல்ல. எனவே, கட்டுக் கோப்பான சமூகம் என்ற கட்டிடத்துக்கு அத்திவாரமாக ஒரு கட்டுக்கோப்பான கூட்டமைப்பு (ஜமாஅத்) அவசியம்.

இதனை வேறு வார்த்தையில் சொல்வதாயின், ஒரு கூட்டமைப்பு (ஜமாஅத்) என்பது ஒரு சிறிய கட்டுக் கோப்பான சமூகம் ஆகும். கட்டுக்கோப்பான சமூகம் என்பது ஒரு பெரிய கூட்டமைப்பு ஆகும். அதாவது, ஒரு சிறிய சமூகமே ஜமாஅத். ஒரு பெரிய கூட்ட மைப்பே ஒரு சமூகம்.

எனவே, ஜமாஅத் என்ற சிறிய சமூகம் உருவாகாமல் ஒரு பெரிய சமூகம் உருவாகுவதென்பது சிரம சாத்திய மானது. எனவே, முதலாவதாக சேர்ந்து பணியாற்று கின்ற நிலை (Collective Work)  உருவாக வேண்டும். இந்த சிந்தனையே அவர்களது இலக்காக மாற வேண்டும். ஒவ்வொரு ஜமாஅத்தும் ஒரு பெரிய சமூகம் (Macro Society) அல்ல. அவை ஒவ்வொன்றும் சிறிய சமூகமே (Micro Society) ஆகும். பெரிய சமூகத்தை நோக்கி பயணிக்கின்ற ஒரு தற்காலிக அமைப்பே ஜமாஅத் என்பது ஆழமாகப் புரியப்பட வேண்டும். இல்லாத போது குறித்த அந்த ஜமாஅத்தே இறுதி இலக்காக மாறிவிடும். குறித்த ஒரு ஜமாஅத் என்ற கண்ணோட் டமும் மனோநிலையும் இருக்குமிடத்தில் இறுதி வரைக்கும் கட்டுக்கோப்பான ஒரு சமூகம் உருவாகுவ தென்பது ஒரு பகற் கனவாகவே இருக்கும். அதாவது, தத்தமது ஜமாஅத்துக்களை, அமைப்புக்களை வளர்க் கும் மனப்பாங்கைக் கொண்டவர்கள் இருக்கும் வரை கட்டுக்கோப்பான சமூகம் உருவாகுவதை எதிர்பார்க்க முடியாது.

இந்த சந்தர்ப்பத்தில் ஓர் உண்மையை பதிவு செய்ய விரும்புகின்றேன். சமூகத்திலுள்ள அனைவரையும் ஒரு சிறிய ஜமாஅத்திற்குள் (Micro Society) உள்வாங்குவது சாத்தியமற்றது. ஆனால், எல்லோரையும் ஒரு பெரிய சமூகத்திற்குள் (Macro Society) உள்வாங்குவது சாத்தியமானது. இந்த இலக்கை நோக்கி நகர்கின்ற முயற்சிகள் பரவலாக முன்னெடுக்கப்பட வேண்டும். உதாரணமாக யூதர்கள் உலகத்திலுள்ள அனைவரையும் யூதர்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் ஓரிரு வீதத்தினரையாவது அவர்களால் யூதர்களாக மாற் றியிருக்க முடியாது. ஆனால், உலகிலுள்ள கணிசமானோர் யூத சிந்தனையைக் கொண்டவர்களாக இருக்க வேண் டும் என அவர்கள் விரும்பினார்கள் விரும்புகிறார்கள். அதன் விளைவாக, இன்று விரும்பியோ வெறுத்தோ உலகத்தில் யூதர்கள் என்ற பெயரில் 14 மில்லியன் பேர் இருந்தாலும் யூத சிந்தனை, யூத நிகழ்ச்சி நிரலைச் சுமந்த கோடிக்கணக்கானோர் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.

எனவே, எந்த ஓர் இஸ்லாமிய அமைப்பும் கட்டுக்கோப்பான சமூகத்தை நோக்கிய பார்வையை கொண்ட தாக இருக்க வேண்டும். இதனால்தான் நான் தொடர்ந்தும் ஒரு விடயத்தை வலியுறுத்தி வருகிறேன். ஒருவருடைய கால்கள் ஜமாஅத்திலிருந்தாலும் கண்கள் சமூகத்தில் இருக்க வேண்டும் என்பதே அது. அவற்றிலிருந்தவாறு எமது பணிகள் சமூகத்தை மையப்படுத்தியதாக அமைய வேண்டும்.

எமது கூட்டு முயற்சிகள் சமூக உருவாக்கத்துக்கான ஒரு வழிமுறையாக (வஸீலா) இருப்பது போன்று எமது இலக்காக (காயா) அமைய வேண்டியது கட்டுக்கோப் பான ஒரு சமூகம் என்பது ஆழமாகப் புரியப்பட வேண்டும்.

இந்த வகையில் அல்லாஹ்வின் உதவியால் இலங்கை மண்ணில் ஒரு கட்டுக்கோப்பான சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் பல இஸ்லாமிய அமைப்புகள், நிறுவனங்கள் நீண்ட காலமாக முனைப்புடன் செயற்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்ததே. இவற்றோடு சிவில் சமூக அமைப்புக்களும் தேசிய மட்டத்தில் தம்மாலான பங்களிப்புக்களை நல்கி வருகின்றன.

இஸ்லாமிய தஃவா அமைப்புக்கள், முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் தமக்கிடையில் ஒரு புரிந்துணர்வுக்கு வர வேண்டும்.  இவ்விடயத்தில் கை கோர்த்து செயற்பட வேண்டும். கருத்து வேறுபாடுகள் நிலவுவதில் தவறில்லை. ஆனால், முரண்பாடுகளும் பிளவுகளும் வரக் கூடாது. தத்தமது தளங்களில் இருந்து கட்டுக்கோப்பானதொரு சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். யாருடைய இயக்கம் பிரபல்யம் அடைய வேண்டும், சமூகத்தில் கூடுதல் அங்கீகாரம் யாருக்கு கிடைக்கிறது... போன்ற போட்டா போட்டிகள் இருக்கக் கூடாது. இந்நி லைமையிலிருந்து எம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஓர் அமைப்பின் ஒரு சில செயற்பாடுகள் சமூகத்தின் ஒற்றுமையை, ஐக்கியத்தை பாதிக்கும் என்றிருந்தால், அந்த அமைப்பு தனது நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். சிலபோது குறித்த நிலைப்பாட்டை வாபஸ் பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அவ்வாறு செய்யவும் தயங்கக் கூடாது.

ஜமாஅத் அமைப்பை நான் எவ்வாறு ஒரு சிறிய கட்டுக்கோப்பான சமூகம் என்று குறிப்பிட்டேனோ அதே போன்று நாட்டிலுள்ள ஒவ்வொரு மஹல்லாவும் ஒரு சிறிய சமூகமாக (Micro Society) பார்க்கப்பட வேண்டும். இந்த மஹல்லா அமைப்பை ஒழுங்குபடுத்தி எவ்வாறு கட்டுக்கோப்பான இலட்சிய சமூகத்தை உருவாக்கலாம் என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும். கிராமங் களை மையப்படுத்தி சிறிய சமூகங்களை உருவாக்குகின்ற முயற்சியும் பரவலாக மேற்கொள்ளப்பட வேண்டும். ஊர், மஹல்லா, கிராமம் எனத் துவங்கி தேசிய மட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வரலாம் என நினைக்கிறேன்.

ஓர் ஊரின் தலைவாசல்தான் அங்குள்ள பள்ளிவாசல். அந்த ஊரின் தலைமைத்துவம் பள்ளிவாசலை மையமாகக் கொண்டதாகவே காணப்பட வேண்டும். அந்தவகையில் பள்ளிவாசலை மையமாகக் கொண்டு அதன் தலைமைத்துவத்தை மையப்படுத்தி ஒவ்வோர் ஊரையும் ஒரு கட்டுக்கோப்பான ஊராக உருவாக்க முடியும். அதற்கு மிகச் சிறந்த வேலைத்திட்டம் தேவை. சுகாதார, பொருளாதார, ஆன்மிக, தார்மிக பண்பாட்டில் மேம்பட்ட சமூகமாக திகழ வேண்டும். இவற்றோடு  கட்டுக்கோப்பான ஒரு தலைமைத்துவத்தின் கீழ் செயற் பட வேண்டும்.

குறித்த அந்த இலக்கை அடையும் நோக்கில் நாம் MEEDS எனும் பெயரில் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். பள்ளிவாசலை மையப்ப டுத்தி ஓர் ஊரைக் கட்டியெழுப்புவதே அத்திட்டத்தின் நோக்கம். கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், ஆன்மிகம், ஒழுக்கப் பண்பாடு, ஒற்றுமையும் சகவாழ்வும் ஆகிய ஆறு விடயங்களை மையமாகக் கொண்டு இந்தத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான முயற்சிகளை முடுக்கி விட்டுள் ளோம். ஓர் இயக்கத்தால் மாத்திரமே கட்டுக்கோப்பான சமூகத்தை உருவாக்க முடியும் என்ற வாதம் பிழையானது. அனைவரும் ஒன்றிணைந்துதான் கட்டுக்கோப்பான சமூகத்தை உருவாக்க முடியும். அதுவே வெற்றியைத் தரும்.

இஸ்லாம் எதிர்பார்க்கும் கட்டுக்கோப்பான இலட்சிய சமூகத்தை உருவாக்குவதில் ஆலிம்களுக்கு பாரிய பொறுப்பு காணப்படுகிறது. மக்களை விழிப்புணர்வூட்டும் பொறுப்பில் ஆலிம்களினதும் புத்திஜீவிகளினதும் பங்களிப்பு இன்றியமையாதது. இந்த நிகழ்ச்சிச் திட்டத் தில் நாம் அனைவரும் பார்வையாளர்களாகவன்றி  பங்காளிகளாக மாற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இது  காலத்தின் தேவையுமாகும்.

We have 90 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player