ரமழானும் நடைமுறை வாழ்வும் - நேர்காணல்

Ramadan_Kareen

தலைசிறந்த இஸ்லாமிய அறிஞரும் எழுத்தாளரும் நாவன்மை மிக்க பேச்சாளருமாகிய ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் 'ரமழானும் நடைமுறை வாழ்வும்' என்ற தலைப்பில் அல்ஹஸனாத்துக்கு வழங்கிய நேர்காணலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

அல்ஹஸனாத்: பல்லின சமூகத்தின் மத்தியில் வாழ்கின்ற சிறுபான்மையினர் என்ற வகையில் எமது ரமழான் கால நடவடிக்கைகளை, ரமழான் மாதத்தை பிற சமூகத்தினர் எவ்வாறு நோக்குகின்றார்கள்?
அஷ்ஷெய்க் அகார்: இந்த நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம் சமூகத்தின் நடவடிக்கைகளை அடுத்த சமுதாயங்கள் தூரத்தில் நின்று அவதானித்து வருகின்றன. எமது ஒவ்வொரு செயற்பாடும் அவர்களது பார்வையில் நேரானதாகவோ எதிர்மறையாகவோ நோக்கப்படுவதையும் எமது ஒவ்வொரு செயற்பாடு பற்றியும் அவர்களிடம் ஒரு கருத்து இருப்பதையும் நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. எமது பள்ளிவாசல்கள், வணக்க முறைகள், தொழுகைகள், சகோதரத்துவ உறவுகள், பழக்கங்கள், திருமண வைபவங்கள், ஜனாஸா நல்லடக்கம், பெண்களின் உடை, நடை, பாவனைகளை அவதானித்து முஸ்லிம்கள் பற்றி ஒரு கருத்தை எடுத்துக் கொள்கின்றார்கள்.

 

 

இவற்றில் எம்மிடமுள்ள நல்லம்சங்கள் மீது நல்லெண்ணம் கொள்கிறார்கள். ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான எமது கிரியைகளை அவர்கள் எப்போதுமே பாராட்டுகிறார்கள். முஸ்லிம்கள் மிகவும் எளிமையான முறையிலும் ஜனாஸாக்களை நாட்கணக்கில் வைத்திருக்காமலும் அவசரமாக நல்லடக்கம் செய்கின்றார்கள் என சிலாகித்துப் பேசக்கூடிய அளவுக்கு அவர்கள் இந்நடைமுறையினால் கவரப்பட்டிருக்கின்றார்கள். மற்றும் அண்மைக் காலம் வரைக்கும் எமது நடைமுறையில் இருந்து வந்த இறுக்கமான சகோதரத்துவ உறவைப் பாராட்டி பேசியுள்ளார்கள்.
ஆனால் அவர்கள் தற்போது எம்மை ஏளனமாகப் பார்க்கும் நிலை தோன்றி  இருக்கிறது. அந்த அளவுக்கு எமது சமூகத்தில் நிலவும் பிளவுகளை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


உண்மையில் அவர்கள் ரமழானை நேர்மறையாகப் பார்க்கின்றார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு மாத காலம் அதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை  உண்ணாமல், பருகாமல் இறைவனுக்காக இவர்கள் விரதம் இருக்கிறார்களே! எப்படி இதைச் சாதிக்கிறார்கள் இவர்களுடைய மனோ வலிமை, மத நம்பிக்கை எவ்வளவு பலமானது, வலுவானது என்று அவர்கள் தமக்கு மத்தியில்  பேசிக்கொள்கிறார்கள். முஸ்லிம் சகோதரர்களிடமும் இதனை சிலாகித்து பேசிக் கொள்கிறார்கள். முஸ்லிம்கள் மார்க்கத்தை ஆழமாக விசுவாசிப்பவர்கள் மாத்திரமல்ல  அதனடிப்படையில் தமது வாழ்வை அமைத்துக் கொள்கின்றவர்கள் முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுவது போல் வேறெவரும் தனது மார்க்கத்தைப் பின்பற்றுவதில்லை என்ற கருத்து பிற சமூகத்தவர் மத்தியில் பரவலாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுபக்கம், அவர்களில் சிலர் ரமழான் மாதத்தை வரலாறு நெடுகிலும் எதிர்மறையாகவும்  பார்த்து வருகின்றார்கள். குறிப்பாக, நகர்ப்புறங்களில் வாழ்கின்ற பிற சமயத்தவர்கள், அதாவது முஸ்லிம்களோடு  இரண்டறக் கலந்து வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் அல்லாத  மக்கள் நோன்பு மாதம் வரப்போகிறது என்றாலே இனி ஒருமாத கால இரவுத் தூக்கம் இல்லாமல் போய்விடும் நிம்மதியை இழந்துவிடுவோம் சிறுவர்களும் இளைஞர்களும் பாதையோரங்களில் விளையாட ஆரம்பித்துவிடுவார்கள், பாதையெங்கும் ஒரே சப்தமாக இருக்கும், குழந்தைகள் நோயாளிகளுக்கு நிம்மதியாக தூங்க முடியாது போகும் என்று எண்ணி கவலைப்படுகிறார்கள், அதிருப்தியடைகின்றார்கள்.


"யார் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்டார்களோ அவர் தனது அயலவருக்கு தொந்தரவு செய்யாமல் இருக்கட்டும் " என்றும் இன்னோர் அறிவிப்பில் "யார் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்டார்களோ அவர் தனது அயலவரை கண்ணியப்படுத்தட்டும்"  என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள்.
அண்டை அயலவரோடு நல்ல முறையில் நடந்து கொள்வது, அவர்களின் உணர்வுகளை மதிப்பது ஈமானின் பிரதிபலிப்பாகும். எனவே அயலவர்கள் முஸ்லிம்களாக அல்லது முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களின் உரிமைகளை மிகக் கவனமாக பேணுமாறு நபியவர்கள் வலியுறுத்தினார்கள்.
ஆனால், எம்மவரின் நடைமுறை இதற்கு மாற்றமாக இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் வீதியோர  விளையாட்டுக்களும் கேளிக்கைகளும் ஒருபுறம் இடையூறு விளைவிக்க, மறுபக்கம் ஸஹர் வேளையில் வானொலி சப்தத்தை அளவுக்கதிகம் கூட்டி வைத்துத்து கிறாத், உரைகள், ஸஹர் சிந்தனை உள்ளிட்ட அதிகாலை ரமழான் நிகழ்ச்சிகளை செவிமடுப்பதன் மூலம் அயலிலுள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.  இது இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் குற்றம், பாவம் என்பதையும் யாரும் உணர்ந்து கொள்வதாகத் தெரியவில்லை. மாற்றமாக அதன் மூலம் ஆன்மிக சூழலை உருவாக்குவதாக பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். உண்மையில் இது இஸ்லாத்தின் தார்மீக அடிப்படைகளை மீறும் செயல். ஏனைய மதத்தவர்களுக்கு பெரும் தலையிடியைக் கொடுக்கிறோம் அவர்களின் கோபத்தையும் சாபத்தையும் சம்பாதித்துக் கொள்கிறோம் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்து கொள்ள வேண்டும்.


"அநியாயம் இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கும், அல்லாஹ்வுக்குமிடையில் எவ்விதத் திரையும் கிடையாது. (காபிர்களாக இருந்தாலும் சரி) என நபி ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம்  அவர்கள் கூறினார்கள்.
எமது செயற்பாடுகளால் அயலவர்கள் எம்மை சபித்தவர்களாகவே தூங்குவார்கள் அவர்களின் உளக் குமுறல் எம்மைப் பாதிக்கும்.
ரமழானைப் பற்றி இன்னொரு கருத்தும் அவர்களிடம் இருக்கிறது. அதாவது, ரமழான் பிச்சைக்காரர்களின் மாதம், யாசகம் கேட்கும் மாதம் என்று ரமழானுக்கு அவர்கள் பெயர் சூட்டி வைத்துள்ளார்கள். ரமழான் காலப் பகுதியில் முஸ்லிம் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சகலரும் பாதைகள், கடை வீதிகள், அங்காடிகள் வழியே தெருத் தெருவாக  கூட்டம் கூட்டமாகச் சென்று ஹதிய்யா கேட்பதனை வைத்தே அவர்கள் இப்படியொரு பெயரை புனித ரமழானுக்கு சூட்டி எள்ளி நகையாடுகிறார்கள்.
மேலும், ரமழான் காலத்தில் இலங்கையிலுள்ள சகல பள்ளிவாசல்களிலும் தராவீஹ் மற்றும் கியாமுல் லைல் தொழுகைகள் ஒலிபெருக்கிப் பாவனையுடன்தான் நடத்தப்படுகின்றன. இதுவும் பள்ளிவாயல்களைச் சூழ்ந்திருக்கின்ற மாற்று மத சகோதரர்களுக்கு இடையூறாகவே அமைகின்றது. தற்போது ஒலிபெருக்கி கட்டுப்பாடு இருக்கும் காரணத்தினால் இவ்விடயத்தில் நாம் சட்டத்திற்கு அமைவாக நிதானமாக செயல்பட வேண்டும்.
அல்ஹஸனாத்: இவ்வாறான தவறான அல்லது தூர நோக்கற்ற சில நடவடிக்கைகளால் இனமுறுகல்களும் ஏற்பட்டுள்ளன. எனவே மாற்று மதத்தவரின் அதிருப்தியைச் சம்பாதிக்காத வண்ணம் அவர்களின் உரிமைகளைப் பேணி நடந்து கொள்ளும் வழிமுறைகள் என்ன?
அஷ்ஷெய்க் அகார்: இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்குமிடையில் இனரீதியான அசம்பாவிதங்களுள் கணிசமானளவு ரமழான் காலத்தில்தான் இடம்பெற்றிருக்கின்றன. இதற்கு நான் ஏலவே குறிப்பிட்ட எமது தவறான நடத்தைகளும் முக்கிய காரணம்.
நாம் இந்த நாட்டில் தனியாக வாழ்பவர்கள் அல்ல. இங்கு வாழும் சகலரும் முஸ்லிம்களும்  அல்ல.  நாம் பெரும்பான்மை சமூகங்களுடன் இரண்டறக் கலந்து வாழ்கிறோம். எனவே அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அவர்களின் உரிமைகள் பேணப்பட வேண்டும்.  அவர்கள் ஆவேசப்படுகின்ற, ஆத்திரப்படுகின்ற சூழ்நிலையை நாம் உருவாக்கக் கூடாது.


எனவே, ரமழான் கால இரவு விளையாட்டுக்கள் முற்று முழுதாக நிறுத்தப்படல் வேண்டும். ரமழான் காலம் இரவு முழுக்க விளையாடி பகலெல்லாம் தூங்கும் காலமல்ல. அது வணக்க வழிபாடுகளின் பருவ காலம் என்ற மனப்பதிவு சகல மட்டங்களிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
ரமழானில் ஸகாத் கொடுப்பதன் சிறப்புக்கள் தாராளமாக வலியுறுத்தப்பட்டிருப்பதால்  இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எல்லோரும் வீதிக்கு வருகின்றார்கள்.  இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு ஒவ்வொரு ஊரும் கிராமமும் முயற்சிக்க வேண்டும். ஸகாத்தை கூட்டாக சேகரித்துக் கொடுத்தல், ஸதகாவை ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பின் கீழ் கொடுத்தல் போன்ற வழிமுறைகளின் மூலம் சமூகத்தின் வறுமை நீக்கப்படுமாக இருந்தால் இதனை நியாயமான அளவு குறைக்க முடியும்.


அடுத்ததாக ரமழானில் தெருத் தெருவாகச் சென்று யாசகம் கேட்பதை தொழிலாகச் செய்கின்றவர்கள் இருக்கின்றமை ஒரு கசப்பான உண்மை. இதன் பாரதூரமான விளைவை அவர்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களை நல்ல மக்களாக மாற்றுவதும் எமது பொறுப்பாகும்.


அல்ஹஸனாத்: ரமழான் விடுமுறைக்குரிய காலம், ஓய்வெடுப்பதற்குரிய காலம் எனும் மனப்பதிவு மக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டிருக்கிறது. அது பற்றி...?
அஷ்ஷெய்க் அகார்: உலகின் பல நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம்களோடு ஒப்பிடுகின்ற போது  இலங்கை நாட்டு முஸ்லிம்கள் பாக்கியம் பெற்றவர்கள். இந்நாட்டில் நாம் 810 என்று சொல்லலாம். மிகுதி 90 ஆன மக்கள் பெரும்பான்மையினர். எனினும், இந்நாட்டில் வரலாறு நெடுகிலும்  மிகவும் வளமாக வாழக்கூடிய சூழ்நிலையை அல்லாஹ் எமக்கு ஏற்படுத்தித் தந்துள்ளான்.
அண்மைக் காலம் வரைக்கும் கௌரவமான ஒரு சமுதாயமாக, எல்லா உரிமைகளையும் பெற்று வாழும் ஒரு சமுதாயமாக நாம் இருந்து வந்துள்ளோம்.
கடந்த பல தசாப்த காலமாக நாம் அனுபவித்து வரும் ஓர் உரிமைதான் ரமழான் கால நீண்ட விடுமுறை. எமது மாணவர்கள், சிறார்களுக்கு மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும் இச்சலுகை உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்விடுமுறைக் காலத்தை வெறுமனே ஓய்வு காலமாக அமைத்துக் கொள்ளக் கூடாது. இக்காலத்தில் ஆன்மிக ரீதியாக, ஒழுக்க ரீதியாக, தார்மிக ரீதியாக எம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த வகையில் ரமழான் காலத்தை இளைஞர்களுக்கான பயிற்சிக் காலமாக கருதி அவர்களை ஆன்மிக ஒழுக்க, தார்மீக ரீதியாக, பண்பாட்டு, அறிவு ரீதியாக வழிநடத்த வேண்டிய பொறுப்பு இந்த நாட்டிலுள்ள இஸ்லாமிய இயக்கங்கள், நிறுவனங்களுக்குரியது.


அண்மைக் காலமாக வானொலி நிகழ்ச்சிகளில் அதிகமான போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவ்வாறே இஸ்லாமிய அமைப்புக்களும் தஃவா நிறுவனங்களும்  ரமழான் கால போட்டி நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. எமது இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் என சகலரும் இந்நிகழ்ச்சிகளைக் கேட்டு அதற்கான விடைகளை எழுதி அனுப்புவதில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். உண்மையில் இது வரவேற்கத்தக்க விடயம்.  ஆனால் இது மாத்திரம் போதுமானதல்ல. இதுபோன்ற இன்னும் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் மாணவர்களின், இளைஞர்களின் அறிவை, ஆற்றலை கூர்மைப்படுத்துகின்ற நிகழ்ச்சிகள் மற்றும் மார்க்க விழுமியங்களைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
இஸ்லாமிய வரலாற்றிலும் ரமழான் காலம் ஓய்வுக்குரிய காலமாக இருந்ததில்லை. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் ரமழானில் இடம்பெற்றுள்ளன.  இஸ்லாத்தின் தலைவிதியைத் தீர்மானித்த பத்ர் யுத்தம், மாபெரும் மக்கா வெற்றி, வரலாற்றுப் புகழ் மிக்க ஐன் ஜாலூத் யுத்தம் என்பன ரமழான் காலத்தில்தான் இடம்பெற்றன.  இவற்றை வைத்து ரமழான் யுத்தம் புரியும் காலம் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. அதாவது, ரமழான் செயற்திறன்மிக்க ஒரு காலம் உற்சாகமாக, சுறுசுறுப்பாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் காலம் சோம்பலினால் பல மணிநேரம் உறங்கும் காலம் அல்ல என்பதை அந்நிகழ்வுகள் எமக்கு  சொல்லித் தருகின்றன.


அல்ஹஸனாத்: ஏனைய காலங்களை விட ரமழானில் வீட்டு செலவினம் இரட்டிப்படைவதன் காரணங்கள் என்னவாக இருக்கலாம்.?
அஷ்ஷெய்க் அகார்: உண்மையில் இது மிகவும் வினோதமான ஒரு நிலை. ரமழானுடைய காலம் என்பது முஸ்லிம்கள் பசியுடனும் தாகத்துடனுமிருக்கும் காலம். எனவே ஏனைய காலங்களுடன் ஒப்பிடுகின்றபோது ரமழானில் கண்டிப்பாக செலவினங்கள் குறைய வேண்டும். ஆனால் நடைமுறையில் நிலைமை நேர் எதிராகவே இருக்கின்றது.


இதற்கான அடிப்படைக் காரணங்களுள் ஒன்று, நாம் இஸ்லாமிய வணக்க வழிபாடுகளின் தாத்பரியங்களையும் தத்துவங்களையும் சரியகப் புரிந்து கொள்ளாமையே.  பசி, தாகத்துடனிருந்து வணக்க வழிபாடுகள், நற்பண்புகளில் ஈடுபட்டு உடலுக்கும் உள்ளத்துக்குமான பயிற்சியைப் பெற்றுக் கொள்ளும் காலமே ரமழான்.  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
ஷஷநோன்பு நோற்று உடல் ஆரோக்கியம் பெறுங்கள்
ஆனால், நாம் ரமழான் கால இரவுகளில் அதிகமாகச் சாப்பிடுகிறோம் அருந்துகிறோம். வகை வகையான உணவுகளைப்  புசிக்கிறோம். இது ரமழானின் பயனைக் கெடுத்துவிடும். இதனால் ரமழானின் பயன், நோக்கம், அதன் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் வீணாகிவிடும். ரமழானில் பெரும்பாலான பெண்கள் ளுஹர் தொழுகையோடு சமையலறைக்குச் சென்றால் மஃரிப் வரைக்கும் அங்குதான் இருக்கிறார்கள். தராவீஹுக்குப் பின் இன்னும் சில மணித்தியாலயங்களை சமையலில் கழித்து விடுகிறார்கள். மீண்டும் ஸஹர் உணவைத் தயாரிப்பதற்காக நடுநிசியில் எழுந்துவிடுகிறார்கள். இப்படி பெண்களின் காலம் பெரும்பாலும் சமையலறையில்தான் கழிகின்றது.
எனவே, ரமழானில் நாம் இதுவரை காலமும் பேணிவந்த உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

 

அல்ஹஸனாத்: ஏனைய காலங்களைவிட ரமழானில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரச்சினைகளும் பிளவுகளும்  அதிகமாகவே நிகழ்கின்றன. சிலபோது கைகலப்பும் ஏற்படுவதுண்டு. இது பற்றி...?
அஷ்ஷெய்க் அகார்: இது அண்மைக் காலமாக முஸ்லிம்கள் மத்தியில் தொற்றிக் கொண்ட ஒரு கொடிய நோய். வரலாற்றில் முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் இப்படியான பிரச்சினைகள் பெரியளவில் இருக்கவில்லை. இஸ்லாமிய எழுச்சியும் மறுமலர்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக நாம் கூறிக் கொள்ளும்  இந்தக் காலத்தில்தான் இப்படியான அவலங்கள் அதிகரித்துள்ளன. அமைதியாக, ஆன்மிக பக்குவத்துடனும் சகிப்புத்தன்மையுடனும் பரந்த மனப்பாங்குடனும் இருக்க வேண்டிய ஒரு காலத்தில் குழப்பம் விளைவித்துத் திரிவது ஆபத்தானது. எமது சமூகம்  துண்டாடப்படுவதற்கு வழிகோலக் கூடியது.


வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு  மிக மோசமான அசம்பாவிதங்கள் அண்மைக் காலங்களில் இடம்பெற்றுள்ளன. எனவே, முஸ்லிம் சமூகத்தில் மார்க்கத்தின் பெயரால் சண்டை, சச்சரவுகள் ஏற்படும்போது ரஹ்மத்துடைய மலக்குகள் இருக்க மாட்டார்கள். ஷைத்தான்களே ஆதிக்கம் செலுத்துவர். இதனால் நாம் அல்லாஹ்வின் அருளை இழந்து அவனின் கோபத்திற்குள்ளாகுவோம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.


மார்க்கம் பற்றிய புரிதலில் உள்ள கோளாறுதான் இம்மோதலுக்கு காரணம். எமக்கு மத்தியில் நிகழும் உட்பூசல்களுக்கும் சர்ச்சைகளுக்கும் காரணம், அறிவும் அறிவும் மோதிக்கொள்வதல்ல அறிவும் அறியாமையும் மோதிக் கொள்ளும் நிலையுமல்ல அறியாமையும் அறியாமையும் முட்டி மோதுவதன் விளைவுதான் இது என்பதை உறுதியாகக் கூறலாம்.
உதாரணமாக, தராவீஹ் தொழுகையைப் பொறுத்தவரை எட்டு ரக்அத்துக்களுக்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன. யாராவது எட்டு ரக்அத்துக்கள் தொழுதால் அவர்களைக் குழப்பவாதிகள் எனச் சொல்லக் கூடாது. அதேநேரம் இருபது ரக்அத்துகளுக்கு ஆதாரம் இல்லாமல் இல்லை. 'ரம் ஷரீபில் வரலாறு நெடுகிலும் இருபது ரக்அத்துக்களே தொழுவிக்கப்பட்டு வருகின்றன. உலகில் பல நாடுகளில் இருபது ரக்கஅத்துக்களே நடைமுறையில் உள்ளன.  இதனை அரபியில்  ஷமுதவாதிர் அமலி என அழைப்பர்.


தராவீஹின் ரக்அத்துக்கள் இருபதா, எட்டா? என்ற சர்ச்சை ஏற்படுவதற்கான காரணம்,  அது ஷநபில் முத்லக் என்ற அந்தஸ்தைப் பெற்றிருப்பதாகும். ஐவேளைத் தொழுகையில் ரக்அத்துக்களின் எண்ணிக்கையில் கருத்து முரண்பாடு ஏற்படுவதில்லை. காரணம், அவை வரையறுக்கப்பட்ட ரக்அத்துக்களைக் கொண்ட தொழுகைகள். எனவேதான் ஷநபில் முத்லக் ஆன தராவீஹ் தொழுகையின் ரக்அத்துக்கள் பற்றி வரலாறு நெடுகிலும் கருத்து வேறுபாடுகள் நிலவியுள்ளன. எட்டு, இருபது ரக்அத்துக்கள் மட்டுமல்ல, 36 ரக்அத்துக்கள் தொழலாம் என இமாம் அஹ்மத் கூறுகின்றார்.


இதுவெல்லாம் மார்க்க ரீதியான கண்ணோட்டங்களின் சில விளைவுகள். எனவே எட்டு ரக்அத்துக்கள் தொழுபவர்கள் இருபது ரக்அத்துக்கள் தொழுபவர்களோடு சச்சரவில் ஈடுபட வேண்டிய தேவையில்லை.
எனவே, இந்த வகையில் எல்லோரும் சேர்ந்து இருபது ரக்அத்துக்களைத் தொழலாம். அல்லது எட்டு ரக்அத்துக்கள் தொழலாம்.  அல்லது  உடன்பாட்டுடன் எட்டு ரக்அத்துக்கள் தொழுபவர்கள் எட்டும்  இருபது தொழுபவர்கள் இருபதும் தொழலாம். தராவீஹ் நடத்துவதில் குழப்பம் ஏற்படுமாக இருந்தால் அதனைத் தொழாமல் இருக்கலாம்.


அல்ஹஸனாத்: ரமழானில் கடைசிப் பத்தில் முஸ்லிம் வியாபாரிகள் இரவு பகலாக கடைகளைத் திறந்து வைத்திருக்கின்றனரே!
அஷ்ஷெய்க் அகார்: இது அண்மைக் காலங்களில் ஏற்பட்ட ஒரு புதிய மாற்றம். ஆரம்ப காலங்களில் இவ்வாறானதொரு நிலை இருக்கவில்லை. ஆடம்பர மோகம், எளிமையான வாழ்வு எம்மை விட்டும் விடைபெற்றுச் சென்றமை, இக்காலப் பகுதியில் அதிகப்படியான இலாபம் கிடைப்பது போன்ற காரணத்தினாலும் இன்று ரமழானுடைய பிற்பகுதி  முழுக்க முழுக்க கடைத் தெருக்களிலும் நடைபாதைகளிலும் கழிகின்றன.
ரமழானின் கடைசிப்பகுதி வந்துவிட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லுங்கியை இறுக வரிந்து கட்டிக் கொண்டு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.  குடும்பத்தாரையும் விழிப்படையச் செய்து அவர்களும் இரவெல்லாம் வணங்குவதற்கு உற்சாகமளிப்பார்கள்.
எனவே, வியாபாரிகள் தமது வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் ஒரு பருவ காலமாக ரமழானைப் பயன்படுத்தாமல் அதனை ஆன்மிக வாழ்வுக்கான பருவ காலமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் வேறு பண்டிகைகள், விழாக்களை இலாபமீட்டிக் கொள்வதற்கான பருவ காலமாக மாற்றிக் கொள்ளட்டும்.


தற்போது சில வானொலி அலைவரிசைகளைக் கூட சிலர் வியாபார நோக்கத்துக்காக ஆரம்பித்துள்ளார்கள். அதில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை ஒலிபரப்பி மக்களை ஈர்த்துவிடுகின்றார்கள்.  
வியாபாரிகள் இதற்கு மாற்று வழிகளைக் காண வேண்டும். குறிப்பாக இரவு காலங்களில் கடைகளைத் திறந்து வைத்து இரவு முழுக்க அல்லது நடுநிசி வரை வியாபாரம் செய்கின்ற சம்பிரதாயம் மிகவும் ஆபத்தானது. அதன் மூலம் ரமழானின் சிறப்புகளுக்கும் அதன் எதிர்பார்ப்புகளுக்கும் நாம் துரோகமிழைக்கின்றோம்.


வெறும் அற்ப லௌகிக இலாபத்துக்காக வாழ்க்கையில் மிக அருமையாகக் கிடைக்கும் ரமழானுடை காலத்தை நாம் வீணடித்து நஷ்டவாளிகளாக ஆகிவிடக் கூடாது. ஒரு ரமாழானை அடைந்தவர் அடுத்த ரமழானை அடைவார் என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. எனவே ஒவ்வொரு ரமழானையும் கடைசி ரமாழான் என்ற உணர்வோடு நோக்குவோம். எதிர்வரும் ரமழானில் முழுமையான பயனடைந்து முத்தகீன்களாக மாறுவதற்கு முயற்சிப்போம்!

 

நேர்காணல்: ஜெம்ஸித் அஸீஸ்

We have 18 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player