பிரார்த்தனை: முஸ்லிமின் ஆயுதம்எமது ஆன்மிக வாழ்வில் எழக்கூடிய ஒரு முக்கியமான பிரச்சினை இருக்கிறது. அந்தப் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பாத எந்தவொரு இறை விசுவாசியும் இல்லை என்று சொல்லுமளவுக்கு அது சகலரையும் ஆட் கொண்டிருக்கிறது. அதுதான் எமது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படாமல் இருப்பது ஏன்? என்ற பிரச்சினைக்குரிய கேள்வி.

ஹஜ்ஜில் புனித அரபா வெளியில் நின்ற வண்ணம் கேட்கும் பிரார்த்த னைகள், ரமழானில் குறிப்பாக, கடைசிப் பத்து இரவுகளில் கேட்கப்படும் பிரார்த்தனைகள், கியாமுல் லைல், தஹஜ்ஜுத் தொழுகைகளின்போதான பிரார்த்தனைகள்... என்று பல நாளாந்த வாழ்வில் பல்வேறு துஆக்களை கேட் கின்றோம். ஆனால், இவற்றுள் எத்தனை பிரார்த்தனைகளுக்கு பதில் கிடைக் கின்றன என்ற ஆதங்கம் எல்லோருக்கும் இருக்கிறது.

பொதுவாக பிரார்த்தனைகள் அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவை நிறைவேற்றப்பட்ட நிலையில் பிரார்த்திக் கின்றபோதுதான் எமது துஆக்களுக்கு பெறுமானம் கிடைக்கிறது. மறுபக்கத்தில் எமது பிரார்த்தனைகள் எப்போது, எவ்வாறு, எந்த அமைப்பில் அங்கீ கரிக்கப்பட வேண்டும் என்பதனை அல்லாஹ்வே தீர்மானிக்கின்றான் என்ற உண்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுவதற்கான நிபந்தனைகள்


01.    அல்லாஹ்வுடனான நெருக்கமான தொடர்பு

நாம் எப்போதும் அல்லாஹ்வுடன் நெருக்கமான தொடர்பை வைத்திருக்க வேண்டும். அந்தத் தொடர்பு பலமானதாக, வலுவானதாக இருக்க வேண்டும். அது துண்டிக்கப்பட்டிருப்பின் எமது பிரார்த்தனைகள் நிச்சயம் அல்லாஹ் விடம் சென்றடைவதில்லை.

ஓர் இக்கட்டான நிலையில் தீயணைப்புப் படையை அணுக வேண்டியி ருக்கிறது என வைத்துக் கொள்வோம். ஆனால், அந்த தீயணைப்பு படையினருட னான எமது தொடர்பு  அறுபட்ட நிலையில் இருக்கின்றபோது நாம் எவ்வளவு அவசரமாக அழைத்தாலும் எமது அழைப்பு அவர்களைச் சென்றடையப் போவதில்லை. அவசர பொலிஸ் சேவையை அழைக்கிறோம். தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்நிலையில் அவர்களை எம்மால் தொடர்பு கொள்ள முடியாது. அவர்கள் சம்பவ இடத் துக்கு வரப்போவதுமில்லை எமது தேவை நிறைவுவேறப் போவதுமில்லை.

இவ்வாறே அல்லாஹ்வுடனான தொடர்பு அறுபட்டிருக்கின்ற நிலையில் நாம் அழைப்புக்கு மேல் அழைப்பு விடுக்கிறோம். ஆனால், எமது அழைப்பு அல்லாஹ்வைச் சென்றடைவதில்லை.
எமது பாவங்கள், ஷரீஅத்துக்கு முரணான செயற்பாடுகள், அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதிலுள்ள பொடுபோக்கு, நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் பணியில் ஈடுபடத் தவறியுள்ளமை... முதலானவற்றி னால் அல்லாஹ்வுடனான எமது தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையிலல் நாம் கேட்கின்ற பிரார்த்தனைகள் எங்கே அங்கீகரிக்கப்பட போகின்றன?
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.

“நீங்கள் நன்மையை ஏவ வேண்டும் தீமையைத் தடுக்க வேண்டும். நன்மையை ஏவி தீமையைத் தடுக்கின்ற மார்க்கக் கடமையைப் புறக்கணிக்கின்றபோது அல்லாஹ் தீயவர்களை உங்கள் மீது சாட்டிவிடுவான். பின்னர் உங்களுக்கு மத்தியில் இருக்கின்ற நல்ல மனிதர்கள் துஆ செய்வார்கள். ஆனால் அந்த துஆவுக்கு பதில் கிடைக்காது.”

நன்மைகள் ஏவப்படாத, தீமைகள் தடுக்கப்படாத, சமூக விரோதச் செயல் களுக்கெதிராக குரல்கள் எழுப்பப்படாத, பாவங்கள் நிறைந்த ஒரு சூழ்நிலையில் கேட்கப்படும் பிரார்த்தனைகளுக்கு பதில் கிடைக்கப்போவதில்லை. காரணம், பாவங்களின் மூலம் அல்லாஹ்வுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, எமது துஆக்கள் அங்கீரிக்கப்பட வேண்டுமாயின் ஒவ்வோரு தனி நபரும் அல்லாஹ்விடனான தொடர்பை வலுப்படுத்த வேண்டும். நாம் வாழுகின்ற சூழலை, சமூகத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும். பாவமற்ற, குற்றச்செயல்களற்ற, அராஜகம் இல்லாத ஒரு சமூகத்தில்தான் அல்லாஹ்வுட னான தொடர்பு இறுக்கமானதாக இருக்கும். அத்தகையோர் கேட்கும் துஆக்களுக்கே பதில் கிடைக்கும்.


“யார் அல்லாஹ்வுக்கு உதவி செய்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்வான்.” (ஸூரதுல் ஹஜ்: 40)

அல்லாஹ்வுக்கு உதவி செய்வதென்பது, அவனது கட்டளைகளுக்கு அடிபணிவதும் அவன் தடுத்த விடயங்களிலிருந்து முற்றாக ஒதுங்கி வாழ் வதுமாகும். அப்போதுதான் அல்லாஹ்வுடனான தொடர்பு உருவாகும். அந்தத் தொடர்புதான் நமது அழைப்புக்கு பதில் சொல்லும் ஊடகமாக அமையும். இதுபற்றி அல்லாஹுத் தஆலா அல்குர்ஆனில் இப்படிச் சொல் கின்றான்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تَنصُرُوا اللَّـهَ يَنصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ 
“ஈமான் கொண்டவர்களே, நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான் உங்களது பாதங்களை ஸ்திரப்படுத்துவான்.” (ஸூராமுஹம்மத்: 7,8)

எனவே, அல்லாஹ்வுடனான எமது தொடர்பை எப்போதும் ஆரோக்கிய மானதாக வைத்துக் கொள்வது முக்கியமானது. அல்லாஹ்வுடனான அத்தி யந்த உறவை, தொடர்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு பிரதானமாக இரு நிபந்தனைகள் உள்ளன. அவற்றை சுருக்கமாக நோக்குவோம்.

1. உளத்தூய்மை

அல்லாஹ்வுடனான தொடர்பு வலுப்பெற வேண்டுமேன்றால் உளத் தூய்மை மிக முக்கியமானது. உளத்தூய்மையுடனேயே அல்லாஹ்விடம் பிரார்த்திக்கி வேண்டும். ‘யா அல்லாஹ் நீதான் அகிலத்தின் அதிபதி. நான் உனது அடிமை’ என்ற மனோநிலையுடன் அவனிடம் கையேந்த வேண்டும். இதுபற்றி அல்குர்ஆன் இப்படிச் சொல்கிறான்:

“எனது அடியார்கள் என்னைப் பற்றி விசாரித்தால், நான் அவர்களோடு மிகவும் நெருக்கமாக இருக்கிறேன் என்று சொல்லுங்கள் அவர்களுடைய அழைப்புக்கு பதில் கூறத் தயாராக இருக்கிறேன் என்று நபியே கூறுங்கள்.” (ஸூரதுல் பகரா: 186)

இங்கு அல்லாஹுத் தஆலா அடியார்கள் எனக்கு நெருக்கமாக இருக் கிறார்கள் என்று சொல்லாமல் நான்தான் அடியார்களுக்கு நெருக்கமாக இருக் கிறேன் எனச் சொல்கின்றான்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூ மூஸா அஷ்அரி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“நாங்கள் இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்க ளுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும்போது, “லா இலாஹ இல்லல்லாஹ் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிகப் பெரியவன்” என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெ னில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கிறான். அவன் செவியேற்பவன் அருகிலிருப் பவன். அவனுடைய திருப்பெயர் நிறைவானது. அவனுடைய மதிப்பு உயர்ந்தது” என்று கூறினார்கள். (அல்புகாரி, முஸ்லிம்)

நாம் அல்லாஹ்வின் அடிமைகள் அவன் எங்களுடைய ரப்பு என்ற உணர் வும் நம்பிக்கையும்தான் அல்லாஹ்வுக்கும் எங்களுக்குமிடையிலான உறவின் ஆரம்ப நிலை.

“நீங்கள் அல்லாஹ்வன் மீது கொண்ட ஆழமான விசுவாசத்தோடு நம்பிக் கையோடு அவனிடம் கையேந்தினால் உங்களுடைய துஆக்களின் காரண மாக மலைகள் கூட பெயர்க்கப்பட்டு விடும்”
எனச் சொன்னார் கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.

“துஆ ஒரு முஃமினின் ஆயுதம்” என்று சொல்கிறது இஸ்லாம். எனவே, ஈமானோடு நம்பிக்கையோடு அல்லாஹ்வுடைய அடியார்கள் என்ற ஆழ மான மனப்பதிவோடு எமது கரங்கள் உயர வேண்டும். இதுதான் அல்லாஹ்வுக்கும் எமக்கும் இடையிலான தொடர்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முதலாவது அடிப்படை.

2. ஹலால் ஹராம் வரையறை

அல்லாஹ்வை நோக்கி உயர்கின்ற எமது கரங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். கரங்கள் மட்டுமல்ல, எமது உடல் உறுப்புக்கள் அனைத்தும் நாம் அணியும் ஆடையும் சுத்தமாக இருக்க வேண்டும். ஹராத்தை சம்பாதித்த நிலை யில், ஹராத்தை உட்கொண்ட நிலையில், ஹராமான உழைப்பைக் கொண்டு வாங்கிய ஆடைகளை அணிந்த நிலையில், உடலில் ஹராமான இரத்தம் ஓடும் நிலையில் கேட்கப்படுகின்ற பிரார்த்தனைகள் அல்லாஹ்விடத்தில் எவ் வித பெறுமானமுமற்றவை.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.


“ஒருவர் பயணத்தில் இருக்கிறார். நீண்ட நெடும் பயணத்தில் ஈடுபட்டு தலைமுடி கலைந்து புழுதி படிந்த நிலையில் நின்றவாறு வானத்தை நோக்கி கரங்களை உயர்த்துகிறார். “யா ரப்பு! யா ரப்பு!” என்று அல்லாஹ்விடம் தனது தேவைகளை முன்வைக்கிறார். ஆனால், அவர் உண்ணும் உணவு ஹராமாக இருக்கிறது. அவர் குடிக்கும் பானம் ஹராமானது. அவர் அணிந்திருக்கும் ஆடை ஹராமானது. அவரது உடல் ஹராத்தினால் போஷிக்கபட்டிருக்கிறது. இவருடைய பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?” (முஸ்லிம்)

ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு நாள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அணுகி “யா ரஸூலல் லாஹ் நான் கேட்கும் துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்” என்று சொன்னபோது நபியவர்கள், “ஸஅதே! (ரழியல்லாஹு அன்ஹு) உமது உணவை ஹலாலானதாகவும் சுத்தமான தாகவும் அமைத்துக் கொள்ளுங்கள். அப்போது உமது பிரார்த்தனைக்கு பதில் கிடைக்கும். ஹராமான ஒரு கவள உணவு, நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக் கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்” என்று கூறினார்கள். (தப்ஸீர் இப்னு கஸீர்)
அழுது தொழுது கண்ணீர் வடித்துக் கேட்கின்ற துஆக்கள் அங்கீகரிக்கப்ப டுவதாகத் தெரியவில்லையே! என அங்கலாய்க்கின்ற நாம், இவ்விடயங்கள் குறித்து சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

ஹலால் உத்தரவாதப்படுத்தப்பட்ட நிலையில், ஹராம் தவிர்க்கப்பட்ட நிலையில் கையேந்துகின்றபோது நிச்சயமாக எமது துஆக்களுக்கு பதில் கிடைக்கும். மட்டுமல்ல, எமது துஆக்கள் மலைகளையும் தகர்க்கும் சக்தி வாய்ந்தது என்ற உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

அல்லாஹ்வுடனான உறவை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு அனைத்திலும் ஹலால் பேணப்பட வேண்டும். அனைத்திலும் ஹராம் தவிர்க் கப்பட வேண்டும்.

3. நிராசையடையாமல் தொடர்ந்தும் பிரார்த்தித்தல்

தொடர்ந்தும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிய வேண்டும். பிரார்த் தித்தோம் பதில் கிடைக்கவில்லை என்று நம்பிக்கை இழக்காமல், நிராசைய டையாமல் தொடர்ந்தும் அல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவர் அவசரப்படாத வரைக்கும் அவருடைய பிரார்த்தனைக்கு நிச்சயமாக பதில் கிடைக்கும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்:

“(நான் என்னுடைய இரட்சகனிடம் பிரார்த்தனை செய்தேன். ஆனால், அவன் அதற்கு பதிலளிக்கவில்லை என்று கூறி) அவசரப்படாதவரை உங்கள் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.” (அல்புகாரி, முஸ்லிம்)

இது பற்றி அல்குர்ஆன் சொல்வதைப் பாருங்கள்.

“தனக்குத் தானே அநீதம் இழைத்துக் கொண்ட எனது அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளை விட்டும் ஒருபோதும் நிராசை ஆகிவிட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்ப வனாக உள்ளான் என்று (நபியே) நீர் கூறுவீராக!”  (39: 53)

“வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப் பற்றி நிராசை கொள்வர் என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார்” (15: 56)

எனவே, நாம் நம்பிக்கையோடு பிரார்த்திக்க வேண்டும். இது நடக்குமா, இல்லையா என்ற சந்தேகத்தோடு பிரார்த்திக்கக் கூடாது. எல்லாவற்றையும் செய்து பார்த்து விட்டோம். கடைசியாக அல்லாஹ்விடம் ஒரு முறை பிரார்த் தித்துப் பார்ப்போம். ஏதாவது நல்லது நடக்கட்டும் என்ற மனோ நிலையோடு கேட்கப்படுகின்ற பிரார்த்தனைகளுக்கு நிச்சயமாக பதில் கிடைக்கப் போவ தில்லை.

வெறுமனே நாவினால் மாத்திரம் பிரார்த்திக்காமல் உள்ளத்தாலும் பிரார்த்திக்க வேண்டும். அவ்வாறே கஷ்டமான, துன்பகரமான வேளையில் மாத்திரம் துஆ கேட்காமல் சுகமாக, வளமாக இருக்கும்போதும் துஆக் கேட்க வேண்டும்.

இன்று பலர் கஷ்டம், நஷ்டம் ஏற்பட்டால் மாத்திரம் உம்ரா செய்கிறார்கள். ஸதகா கொடுக்கிறார்கள். அதன் பின்பே துஆ கேட்கிறார்கள். சிலவேளை இத்தகைய துஆவுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கின்ற பெறுமானம் குறை வாக இருக்கலாம். சிலபோது எதிர் மறையாகவும் அமைந்துவிடலாம் என்பதை யும் நினைவிற் கொள்ள வேண்டும்.

எனவே, நாம் இன்பத்திலும் துன்பத்திலும் அல்லாஹ்விடம் கையேந்த வேண்டும். நாம் செய்த பாவங்களை ஏற்றுக் கொண்ட மனோநிலையிலேயே பிரார்த்திக்க வேண்டும். ஒவ்வொரு துஆவையும் மீட்டி மீட்டிக் கேட்க வேண் டும். குறைந்தபட்சம் மூன்று தடவைகளாவது மீட்ட வேண்டும். இது நபியவர் களின் முக்கியமானதொரு ஸுன்னாவாகும்.

துஆ கேட்கின்றபோது எமது உடலும் உள்ளமும் துய்மையாக இருப்பது டன் முடியுமானவரை வுழு செய்து கொள்ள வேண்டும். தாழ்ந்த, அமைதி யான தொனியில் துஆ கேட்க வேண்டும். கிப்லாவை முன்னோக்கி அமர்ந்த நிலையில் துஆ கேட்பது சிறப்பானது.

துஆக்கள் அங்கீகரிக்கப்படுகின்ற சிறப்பான நேரங்கள்

 • லைலதுல் கத்ர் இரவு
 • நடுநிசிப் பொழுது
 • நடுநிசியைத் தொடர்ந்து வருகின்ற நேரம்
 • அதானுக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட வேளை
 • மழை பொழியும் சந்தர்ப்பம்
 • ஜுமுஆ தினம்
 • குத்பா வுக்கும் தொழுகைக்கும் இடைப்பட்ட நேரம்
 • ஸம்ஸம் தண்ணீர் அருந்துகின்ற சந்தர்ப்பம்
 • ஸுஜூதில் இருக்கின்ற வேளை
 • அரபாவுடைய நாள்
 • ரமழான் காலம்
 • இப்தார் நேரம்
 • ஜம்ரத்களில் கல்லெறிகின்றபோது
 • ஸபா மர்வா தொங்கோட்டத்தின்போது
 • திக்ர் மஜ்லிஸுகள்...

முதலான கால நேரங்களில் துஆக்கள் விரைவில் அங்கீகரிக்கப்படுகின்றன என நபியவர்கள் அடையாளப்படுத்தித் தந்திருக்கி றார்கள். இந்த சந்தர்ப்பங்களை உச்ச அளவில் பயன்படுத்துவது எமது கடமை.

அவ்வாறே அநீதி இழைக்கப்பட்டவரின் துஆவும் பெற்றோர் தமது பிள்ளைகளுக்காக கேட்கின்ற துஆவும் எவ்வித திரையுமின்றி அங்கீரிக்கப்ப டுகின்றன. நோயாளியின் துஆ, நோன்பாளி நோன்பு துறக்கின்றபோது கேட்கும் துஆ, பிள்ளைகள் தமது பெற்றோருக்காகச் செய்கின்ற பிரார்த்தனை என்பன அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படுகின்றன. எனவே, ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளுக்காகவும் பிள்ளைகள் தமது பெற்றோருக்காகவும் துஆ செய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள்.

பெற்றோருக்கு துரோகம் செய்த நிலையில், அவர்களுடைய உள்ளத்தை நோகடித்த நிலையில் ஒருவன் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற முடி யாது. அத்தகைய மனிதனின் துஆ அங்கீகரிக்கப்படுவதில்லை. பெற்றறோருக்கு அதிக நன்மை செய்து விட்டு அவர்களின் அன்பைப் பெற்ற நிலையில் அல்லாஹ்விடம் கையேந்துகின்றபோது நிச்சயமாக அல்லாஹ் அதனை ஏற்றுக் கொள்வான்.

கஷ்டம், துன்பம், மன வேதனை, கவலைகள் நீங்குவதற்கும் பிரார்த்தனை எனும் ஆயுதத்தை கையிலேடுக்குமாறு நபியவர்கள் பணித்திருக்கிறார்கள்.

நபி யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அவசரப்பட்டு எடுத்த முடிவின் காரணமாக அவர் மீனினால் விழுங்கப்படுகிறார். அந்த மீனின் வயிற்றினுள் சில காலம் வாழ வேண்டிய நிலை. அப்போது அவர் அந்தத் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக திரும்பத்  திரும்ப “உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்” என்ற துஆவை மொழிந்து அல்லாஹ்விடம் மன்றாடியபோது அல்லாஹ் அந்தப் பயங்கரமான ஆபத்தி லிருந்து அவரைக் காப்பாற்றினான்.

இந்தப் பிரார்த்தனையில் “லா இலாஹ இல்லா அன்த” (யா அல்லாஹ் உன்னைத் தவிர வணங்கி வழிபட தகுதியானவன் வேறு யாருமில்லை) என்று சொல்வதினூடாக நாம் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்கின்றோம். துஆ ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இது மிக முக்கியமான நிபந்தனை. இரண்டாவதாக “ஸுப்ஹானக” (நீ மிகத் தூய்மையானவன் நீ நீதியானவன் நேர்மையானவன்) என்று ஏற்றுக் கொள்வதனூடாகவும் “இன்னீ குன்து மினல் லாழிமீன்” (நான் அநியாயக்காரனாக இருக்கிறேன்) என்று அல்லாஹ்வின் முன்னிலையில் அடிமைப்பட்டு நிற்பதனூடாகவும் அவன் எம்மீது அன்பு கொண்டு எமது பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கின்றான்.

ஒரு நபித் தோழர் நபியவர்களை அணுகி, “யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்செய்த, ‘லா இலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னி குன்து மினல் ழாளிமீன்’  எனும் பிரார்த்தனை யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமாக வழங்கப்பட்டதா அல்லது அனைத்து முஃமின்களுக்கும் உரியதாh?” என்று கேட்டபோது, “இது நபி யூனுஸுக்கு மாத்திரம் பிரதியேக மான பிராரத்தனையல்ல, சகல முஃமின்களுக்குமான துஆவாகும். யார் தூய்மையோடு இந்த துஆவை ஓதுகின்றாரோ அவருக்கு ஏற்படும் எந்தவொரு கஷ்டத்தையும் துன்பத்தையும் நிச்சயமாக அல்லாஹ் நீக்கிவிடுவான்” எனச் சொல்லிவிட்டு நபியவர்கள் ஓர் அல்குர்ஆன் வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

“எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்.” (ஸூரதுல் அன்பியா: 88)

களத்தில் இருக்கும் நிலையில், உழைக்கும் நிலையில், முயற்சியில் ஈடுபட் டிருக்கும் சந்தர்ப்பத்தில், பேராடும் வேளையில், அர்ப்பணத்தோடும் தியாகத் தோடும் செயற்படும் பொழுதுகளில் நாம் எமது கரங்களை உயர்த்தும்போது நிச்சயமாக அல்லாஹ் பதில் தருவான். வெறுமனே எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் அல்லாஹ்வின் உதவி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை.

பத்ரிலும் உஹுதிலும் கந்தக்கிலும் ஹுனைனிலும் அல்லாஹ் முஸ்லிம் களுக்கு உதவி செய்தான். குறிப்பாக, பத்ரில் அல்லாஹ் மலக்குகளை அனுப்பி முஸ்லிம்களுக்கு உதவி செய்தான். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் ஸஹாபாக்களும் மதீனாவில் இருந்து கொண்டு எவ்வித முயற்சி யிலும் ஈடுபடாமல் மலக்குகளின் உதவியை நாடவில்லை. பெரும் முயற்சி யில் ஈடுபட்டார்கள். அத்தனை பௌதிக காரணிகளையும் கவனத்தில் கொண்டார்கள் போரட்டக் களத்திற்குச் சென்றார்கள். இறுதியாக அல்லாஹ் வின் மீது தவக்குல் வைத்து கையேந்திப் பிரார்த்தித்தார்கள்.

“ரப்பே, ரஹ்மானே! மனிதர்கள் என்ற நிலையில் நாம் எம்மால் முடிந்த முயற்சிகளைச் செய்து விட்டோம். இதோ எமது அர்ப்பணம். இதோ எமது தியாகம். இப்போது எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள்.

அல்லாஹ் அவர்களது முயற்சிகயையும் பிரார்த்தனையையும் ஏற்று அங்கீகரித்து உதவி செய்தான்.

எனவே, பிரார்த்திக்கும்போது இத்தகைய அம்சங்கள் கவனத்தில் கொள்ளப் பட வேண்டும்.
“நாம் அல்லாஹ்வை நோக்கி ஒரு சாண் முன்னேறினால் அல்லாஹ் ஒரு முழம் எம்மை நோக்கி வருவான். நாம் ஒரு முழம் முன் சென்றால் அவன் நடந்து வருவான். நாம் நடந்து சென்றால் அவன் ஓடி வருவான்” என நபி (ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள். (ஹதீஸ் குத்ஸி)

பிரார்த்தனைகள் வீண்போவதில்லை

தூய எண்ணத்துடன் பிரார்த்தனையில் ஈடுபடும் ஓர் அடியானின் பிரார்த்தனைக்கு அல்லாஹ் மூன்று வகையில் பதிலளிக்கின்றான்.

 1. ஓர் அடியான் கேட்கும் துஆவை ஏற்றுக் கொண்டு அவனது எதிர்பார்ப்பை அல்லாஹ் இவ்வுலகத்திலேயே நிறைவேற்றி விடுகின்றான்.
 2. பிரார்த்தனைக்கான பிரதிபலனை மறுமையில் வழங்கும் நோக்கில் அதனைப் பிற்படுத்துகின்றான்.
 3. குறிப்பிட்ட அந்த பிரார்த்தனை அல்லது அடியான் எதிர்பார்க்கும் தேவையை நிறைவேற்றாமல் அல்லாஹ் அந்த அடியானுக்கு நேரவிருந்த கஷ்டத்தை, துன்பத்தை, அனர்த்தத்தை நீக்கி விடுகிறான்.


எனவே, தூய எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் பிரார்த்தனைகள் ஒருபோதும் வீண்போவதில்லை. எனவே, பிரார்த்தித்துவிட்டு அவசரப்படக் கூடாது அதில் நம்பிக்கை இழந்து விடக் கூடாது.

“எனது அடியார்களே, உங்களில் வாழ்ந்த ஆரம்ப மனிதனும் கடைசி மனிதனும் உங்கள் மத்தியில் இருக்கின்ற மனிதர்களும் ஜின்களும் அனை வரும் ஒரே திடலில் ஒன்றுகூடி என்னிடம் கேட்டாலும் அனைவருடைய தேவைகளையும் நான் நிறைவேற்றுவேன். அவர்களுடைய தேவையை நிறை வேற்றிய காரணத்தினால் எனது கஸானாவில் எதுவும் குறையப் போவதுமில்லை. கடலில் ஓர் ஊசியைப் போட்டு எடுத்தால் அந்த ஊசியின் துவாரத்தில் எந்தளவு தண்ணீர் தங்கியிருக்குமோ அந்தளவுகூட எனது பொக்கிஷத்தி லிருந்து எதுவும் குறையப் போவதில்லை” என்று அல்லாஹ் வாக்குறுதியளித் திருக்கின்றான்.

எனவே, நாம் அதிகமதிகம் துஆ கேட்போம் அல்லாஹ்விடம் கையேந்திக் கெண்டே இருப்போம். துஆ கேட்பதே ஓர் இபாதத் என்ற எண்ணத்தோடு துஆக் கேட்போம். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

“பிரார்த்திப்பது ஓர் இறை வணக்கமாகும்.” (அத்திர்மிதி)

“இபாதத்களின் மூளை பிரார்த்தனையாகும்.” (அல்ஹாகிம்)

“நிச்சயமாக அல்லாஹ் மிகவும் வெட்கமுடையவன் தாராளத்தன்மை கொண்டவன். தனது அடியான உயர்த்திய கரங்களை வெறும் கைகளாக திருப்பி அனுப்புவதற்கு அவன் மிகவும் வெட்கப்படுகின்றான்.” (அத்திர்மிதி)

எனவே, நாம் அல்லாஹ்விடம் முறைப்படி பிரார்த்திப்போம் அவனிடம் மீள்வோம்.

We have 13 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player