துல்ஹிஜ்ஜா முதல் பத்து நாட்கள்...

 

மாதங்களில் சிறந்த மாதம் புனித ரமழான் மாதமாகும். நாட்களில் சிறந்த நாட்கள் துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்து நாட்கள். இரவுகளில் மிக உயர்ந்த இரவு லைலதுல் கத்ர் இரவாகும்.

துல்ஹிஜ்ஜா முதல் பத்து நாட்களின் சிறப்பு

துல்ஹிஜ்ஜா முதல் பத்து நாட்களின் மகத்துவம் பற்றி அல்குர்ஆன் இப்படிச் சொல்கிறது:

“காலைப்பொழுதின் மீது சத்தியமாக!

இது துல்ஹிஜ்ஜா மாத்தின் முதலாவது நாளை குறிப்பதாகவும்

“பத்து இரவுகள் மீது சத்தியமாக!

இது துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்து நாட்களின் இரவுகளைக் குறிப்ப தாகவும்

“ஒற்றை, இரட்டையின் மீதும் சத்தியமாக!

இரட்டை என்பது துல்ஹிஜ்ஜா மாதத்தின் பத்தாம் நாள் யவ்முன் நஹ்ரையும் ஒற்றை என்பது துல்ஹிஜ்ஜா மாதத்தின் ஒன்பதாம் நாளான அரபாவையும் குறிப்பதாகவும்

“கடந்து செல்கின்ற இரவின் மீது சத்தியமாக!

இது ஈதுல் அழ்ஹாவுடைய இரவைக் குறிப்பதாகவும் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். (முஸ்னத் அஹ்மத், ஸுனன் நஸாயி)

 

அல்லாஹுத் தஆலா துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் நாள் காலைப் பொழுது, பத்து இரவுகள், அரபா தினமாகிய துல்ஹஜ் ஒன்பதாம் நாள், யவ்முந் நஹ்ராகிய பத்தாம் நாள், ஈதுல் அழ்ஹா இரவு ஆகியவற்றின் மீது ஏன் சத்தியம் செய்யும் அளவுக்கு இப்பத்து நாட்களும் புனிதமானவை மகத்துவம் மிக்கவை.

 

அல்லாஹ் அல்குர்அனில் துல்ஹிஜ்ஜா மாதத்தை இரண்டு வார்த்தைகளில் சுட்டுகின்றான். அறியப்பட்ட நாட்கள் என ஒரு இடத் திலும் குறிப்பிட்ட நாட்கள் என மற்றோர் இடத்திலும் குறிப்பி டுகின்றான். அறியப்பட்ட நாட்கள் என்பது துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்து நாட்க ளையும் குறிப்பிட்ட நாட்கள் என்பது துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்து நாட் களையும் தொடர்ந்து வருகின்ற அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களையும் குறிக்கும் என இவ்வசனங்களுக்கு விளக்கமளிக்கும் இப்னு அப்பாஸ் (ரழியல் லாஹு அன்ஹு) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

ரமழான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களை விட துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்து நாட்கள் சிறந்தவை என்ற கருத்தை பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் அருளியதாக அப்துல் லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“அல்லாஹ்வின் பார்வையில் துல்ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்களை விட மகத்துவம் பொருந்திய வேறு நாட்கள் இல்லை. இந்நாட்களில் செய்யப்படு கின்ற அமல்களை விட அல்லாஹ்வுக்கு விருப்பமான வேறு அமல்களில்லை.

இவ்வாறு சொன்ன நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தொடர்ந்து, துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்து நாட்களிலே நீங்கள் அதிகமாக தஹ்லீல் (லா இலாஹ இல்லால்லாஹ்) சொல்லுங்கள் அதிகமாக தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள் அதிகமாக தஹ்மீத் (அல்ஹம் துலில்லாஹ்) சொல்லுங்கள் என்று சொன்னார்கள். (ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்)

 

“ஒரு தடவை துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்து நாட்களில் செய்யப்ப டுகின்ற நற்செயல்கள் ஏனைய நாட்களில் செய்யும் நற்செயல்களை விட அல்லாஹுத் தஆலாவுக்கு மிகவும் விருப்பமானவையாகும்என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் சொன்னபோது ஸஹாபாக்கள், “அல்லாஹ்வின் தூதரே, அல்லாஹ்வின் பாதையில் போராடுவதை விடவு மா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், “ஆம் அல்லாஹ்வின் பாதையில் போராடுவதை விடவும்தான். ஆனால், அல்லாஹ்வின் பாதையில் உயிரையும் பொருளையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவவையைத் தவிரஎன விடை பகர்ந்தார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா, அஹ்மத்)

துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்து நாட்களும் இவ்வளவு சிறப்புப் பொருந் தியதாக அமைந்திருப்பதற்கான காரணத்தை விளக்கவந்த இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்,

“துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்து நாட்களிலும் பிரதானமான எல்லா வணக்கங்களும் ஏக காலத்தில் இடம்பெறுகின்றன. முதல் பத்து நாட்களில் தான் மிக உயர்ந்த ஹஜ் கிரியைகள், அரபா நோன்பு உட்பட ஸுன்னத்தான நோன்புகள் நிறைவேற்றப்படுகின்றன. மறுபுறம் அல்லாஹ்வின் அடியார்கள் தொழுகைகளிலும் வணக்க வழிபாடுகளிலும் ஈடுபடுகிறார்கள். தான தர்மங் களில் முனைப்புடன் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த பல வணக்கங்கள் அதிகம் இடம்பெறுகின்ற ஒரு காலமாக துல்ஹிஜ் ஜாவின் முதல் பத்து நாட்களும் இருக்கின்ற காரணத்தினாலேயே துல்ஹிஜ்ஜா வின் முதல் பத்து நாட்களுக்கும் இத்தகைய சிறப்பு வழங்கப்பட்டிருக்கின்றதுஎனச் சொல்கிறார்கள்.

“துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களைவிட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதும் மகத்தானதும் வேறு எதுவும் இல்லை. எனவே, அந்த நாட்களில் லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் அதிகமாகக் கூறுங்கள்என நபி (ஸல்லல்லாஹு அலை ஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள். (அத்தபராணி)

கியாமுல் லைல், தஹஜ்ஜுத், இரவுநேரத் தொழுகைகளுக்கூடாக இந்த நாட்களின் இரவுகள் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். குறிப்பாக, இந்நாட்களில் ஸுன்னத்தான நோன்புகளை அதிகம் நோற்க வேண்டும். ஹஜ்ஜுக்குச் செல் லாதவர்கள் துல்ஹிஜ்ஜா பிறை ஒன்பதில் அரபாவுடைய நோன்பை நோற்பது ஸுன்னா முஅக்கதாவாகும்.

அரபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல் லம்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “அது கடந்த வருடத் தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவங்களைப் போக்கிவிடும்எனப் பகர்ந் தார்கள். (முஸ்லிம், அத்திரமிதி, அபூ தாவூத்)

“நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் துணைவியரில் சிலர் கூறினார்கள்.” (அஹ்மத், அந்நஸாயி, அபூதாவூத்)

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் தனது வாழ்வில் எச்சந்தர்ப்பத்திலும் விடுபடாமல் தொடர்ந்து செய்த சில அம்சங்கள் இருக்கின்றன.

 

01. ஆஷூரா நோன்பு.

02. ஸுப்ஹுக்கு முந்திய இரண்டு ரக்அத் ஸுன்னத்துத் தொழுகை.

03. துல்ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்களும் நோன்பு நோற்றல்.

 

துல்ஹிஜ்ஜா மாதத்தில் நிறைவேற்றப்படும் அமல்களில் மிகச் சிறந்த மற்றுமோர் அமல்தான் உழ்ஹிய்யா.

பல்லின சமூகங்களும் பல சமயத்தவர்களும் வாழ்ந்து வருகின்ற இந்நாட்டில் நாட்டு சட்டங்களைக் கவனத்திற் கொண்டு மார்க்கத்தின் வரையறை களுக்குள் நின்று உழ்ஹிய்யாவை முறையாக நிறைவேற்ற வேண்டும்.

துல்ஹிஜ்ஜாவின் சிறப்புக்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்ற போதி லும், துல்ஹிஜ்ஜா மாதத்தின் சிறப்புக்கு பொதுவாகவும் முதல் பத்து நாட் களின் சிறப்புக்கு குறிப்பாகவும் காரணமாக இருப்பது இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையான ஹஜ் கடமையே ஆகும்.

 

ஹஜ்ஜின் தத்துவம்

ஹஜ் விஷேடமான, தனித்துவமானதொரு கிரியை. தொழுகை உடலோடு சம்பந்தப்பட்ட ஓர் இபாதத். ஸகாத் பொருளோடும் செல்வத்தோடும் சம்பந் தப்பட்ட ஓர் இபாதத். நோன்பு உடலோடு சம்பந்தப்பட்ட ஓர் இபாதத். ஆனால், ஹஜ் அது ஏக காலத்தில் உடலோடும் பொருளோடும் ஆன்மாவோடும் தொடர்புபட்ட ஓர் இபாதத். அது இஸ்லாத்தின் அடிப்படையான பண்பு களை, உயர் விழுமியங்களை வளர்ப்பதற்கான ஓர் அற்புதமான பயிற்சிப் பாசறை.

மனித வாழ்க்கை கஷ்டங்கள், சோதனைகள் நிறைந்தது. ஏழைக்கு சொத்து, செல்வம் இல்லை என்ற பிரச்சினை. செல்வந்தனுக்கு இருக்கின்ற சொத்து, செல்வங்களை இழந்து விடுவோமோ என்ற அச்சம். குழந்தைப் பாக்கியம் இல்லாதவனுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லையே என்ற ஆதங்கம். குழந்தைப் பாக்கியம் உள்ளவர்களுக்கு இந்தப் பிள்ளையால் என்ன வினை வருமோ என்ற யோசனை. இப்படி மனித வாழ்க்கையில் பிரச்சினை, சிக்கல் இல்லாதவர்கள் எவரும் இல்லை. மனிதனாகப் பிறந்த எல்லோரும் பிரச் சினைகளுக்கு முகம் கொடுத்தே ஆக வேண்டும்.

உலகின் கோடிஸ்வரர்கள் பட்டியிலில் இருந்து அவரது பெயர் சற்று கீழ்நோக்கிச் சென்ற உலகின் முதற்தர செல்வந்தர்களில் ஒருவர் சில ஆண்டுக ளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அது அவரது பிரச்சினை. மறுபக் கம் சோமாலியா, எதியோப்பியா நாடுகளில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் ஒரு வேளை சோற்றுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார் கள். ஆனால், அவர்கள் தம்மைத் தாமே தற்கொலை செய்து கொள்வது அரிதி லும் அரிது.

இது பற்றி அல்குர்ஆன் சொல்வதைப் பாருங்கள்:

“மனிதனை நாங்கள் கஷ்டத்தில் படைத்திருக்கின்றோம். (ஸூரதுல் பலத்: 04)

இத்தகைய கஷ்டங்களை தாங்கிக் கொள்கின்ற பயிச்சியை ஹஜ் வழங்கு கின்றது.

ஒரு மனிதர் ஹஜ்ஜுக்காக தனது தாய் நாட்டைத் துறந்து, குடும்பத்தை, குழந்தைகளை, அன்பர்களை, நண்பர்களைப் பிரிந்து பயணக் கஷ்டங்களைச் சுமந்து செல்கிறார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்:

“பிரயாணம் என்பது ஒரு வகை வேதனை.

எல்லாக் காலத்திலும் பயணம் சிரமமே. மனிதர்கள் ஒட்டகத்தில் பயணித்த காலத்திலும் பிரயாணம் வேதனையாக இருந்தது. இன்றும் பயணம் வேதனையாக இருக்கிறது. அதுவும் ஹஜ்ஜுக்குச் செல்வது மிகப் பெரிய வேதனை. வீஸா ஒழுங்குகள், பயண ஏற்பாடு, ஹஜ் முகவர்களின் கெடுபிடிகள், இறுதிவரை என்ன நடக்கும் என்ற பயம், அச்சம், விமான நிலைய கெடுபிடிகள்.. போன்ற அனைத்து உடல், உள வேதனைகளையும் அனுபவித்த பின்னரே புனித பூமியில் காலடி எடுத்து வைக்க வேண்டும். சஊதி அரேபியா ஒரு பாலைவனம் புற்பூண்டுகளற்ற ஒரு கட்டாந்தரை அங்கு எவ்வித கவர்ச்சியுமில்லை.


புற்பூண்டுகள் இல்லாத ஒரு கட்டாந்தரை.

மாரிகாலத்தில் ஹஜ் பருவம் வந்தால் அப்போது சஊதி அரேபியா கடும் குளிராக இருக்கும். கோடை காலத்தில் ஹஜ் பருவம் வந்தால் அப்போது சஊதியில் கடும் வெய்யிலாக இருக்கும். ஹஜ்ஜுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் இவற் றையல்லாம் சகித்துக் கொள்ள வெண்டும்.

மினா நெருக்கடியானதோர் இடம். அவ்விடத்தில் எல்லோரும் எந்தப் பாகுபாடுமின்றி ஒரு சாதாரண கூடாராத்தில் தங்க வேண்டும். இது உலக வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களை, துன்ப துயரங்களை, சோதனைகளை, வேதனைகளை, சவால்களை, அறைகூவல்களை தாங்கிக் கொள்வதற்கான பயிற்சியை வழங்குகின்றது. முஸ்தலிபாவில் திறந்த வெட்ட வெளியில் இரவில் தங்க வேண்டும். இவ்வாறு அற்புதமானதொரு பயிற்சியை வழங்குகிறது ஹஜ்.

எனவேதான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.

“ஜிஹாத் என்பது அல்லாஹ்வின் பாதையில் போராடுவது மாத்திரமல்ல, வயதில் மூத்தவர்களதும் பலவீனமானவர்களதும் பெண்களதும் ஜிஹாதாக ஹஜ் இருக்கிறது.” (ஸுனன் அந்நஸாஇ)

மனித வாழ்வில் குறுக்கிடும் சோதனைகள், அறைகூவல்கள், பிரச்சினை களுக்கு முகம் கொடுப்பதற்கான ஓர் அற்புதமான பயிற்சியை ஹஜ் வழங்குகிறது. உலகத்தில் சமத்துவம் நடைமுறைச் சாத்தியமானது என்று கற்றுத் தருகிறது ஹஜ்.

ஜமாஅத் தொழுகையும் சமத்துவத்தை உலகத்திற்குப் பறைசாற்றும் ஓர் அமல். ஏழை, பணக்காரன், அரசன், குடிமகன், அதிபர், மாணவன், பெரியோர், சிறியோர் என்ற எவ்வித வேறுபாடுமின்றி ஓர் அணியில் நின்று தொழுவதன் மூலம் சமத்துவம் பறைசாற்றப்படுகிறது. ஆனால், தொழுகையின்போது எல்லோரும் ஒரே விதமான, ஒரே நிறத்தினாலான ஆடையை அணிய வேண்டும் என்ற நிபந் தனை கிடையாது. இஸ்லாமிய வரையறைக்குள் நின்று விரும்பியோர் விரும்பிய ஆடை அணிந்து வரலாம்.

ஆனால், உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் மிகப் பெரிய வருடாந்த மாநாடான ஹஜ்ஜில் அல்லாஹ்வின் அடியார்களுக்கு மத்தியில் எவ்வித பாகுபாடும் இல்லை. எல்லோரும் தைக்கப்படாத, வெந்நிற ஆடையையே அணிய வேண்டும். அது இயற்கையான ஆடை சமத்துவமான ஆடை கபன் துணியை ஒத்த ஆடை. இந்த ஆடையை அணிந்த நிலையிலேயே ஹஜ் கிரியைகள் நிறைவேற்றப்படு கின்றன. அரபா மைதானத்தில் இஸ்லாம் வலியுறுத்துகின்ற சமத்துவம் அற்புத மாக நிலைநாட்டப்படுகிறது. இதற்குப் பின்னால் இருக் கின்ற மிகப் பெரிய தத்துவம் உலகில் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே.

இறுதி ஹஜ்ஜின்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.

“மக்களே! உங்களது இறைவன் ஒருவனே. அறிந்து கொள்ளுங்கள்! எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவ ருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள் ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்க ளில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர்தான்.” (அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ)

ஹஜ் கடமை வருடாந்தம் மனித சமுதாயத்தின் ஐக்கியத்தை உலகத்திற்கு எடுத்துச் சொல்கிறது. இது ஒரே உம்மத், ஒரே இறைவன், ஒரே தூதர், ஒரே இலக்கு, ஒரே குறிக்கோள், ஒரே வாழ்க்கை வழி, ஒரே வகையான கிரியைகள், ஒரே வகையான வணக்க வழிபாடுகள், ஒரே கோஷம் என்பதை அற்புதமாக எடுத் தியம்புகிறது ஹஜ்.

“வந்தேன் இறைவா! வந்தேன் இறைவா!

உன் அழைப்பை ஏற்று இதோ வந்தேன் இறைவா!

உனக்கு நிகரானவர் எவருமில்லை!

அருளும் ஆட்சியும் புகழும் உனக்கே!

உனக்கு நிகரானவர் எவருமில்லை.

அரபிஅஜமி, ஐரோப்பியன்ஆசியன், முதலாம் உலகத்தைச் சேர்ந்தவன் மூன்றாம் உலகத்தைச் சேர்ந்தவன், கறுப்பன்வெள்ளையன் என அனைவரும் ஒத்த குரலில் முழு உலகத்திற்கும் கேட்க எழுப்பப்படுகின்ற கோஷம் இது.

“நிச்சயமாக உங்கள் சமுதாயம் (உம்மத்) (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான். (ஸூரதுல் அன்பியா: 92)

“மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள். (ஸூரதுல் அன்பியா: 92)

அல்குர்ஆனின் இந்தப் பிரகடனம் வருடாந்தம் ஹஜ் மாநாட்டில் புதுப்பிக்கப்படுகிறது.

முஸ்லிம்கள் போர்க்குணமுள்ளவர்களல்ல. முஸ்லிம்கள் சமாதானத்தின் தூதுவர்கள் என்ற செய்தியை ஹஜ் உலகத்திற்குச் சொல்கிறது. அல்குர்ஆனில் ஆறு இடங்களில் மாத்திரமே யுத்தம் என்ற பொருளைத் தரும் (ஹர்ப்) என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் சமாதாம் எனும் பொருளைத் தரும் (ஸலாம்) என்ற சொல் பயன்ப டுத்தப் பட்டிருக்கிறது. இஸ்லாம் என்ற சொல்லே (ஸலாம்) என்ற சொல்லிலிருந்து பிறந்ததுதான்.

ஹஜ் ஒரு சமாதானப் பயணம் சமாதான பூமியை நோக்கிய ஒரு பயணம். சமாதான காலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு பயணம். புனித பைதுல் ஹராம் அமையப் பெற்றிருக்கின்ற அந்த மக்கமா நகர் ஒரு சமாதான பூமி. யார் அந்தப் பூமியில் நுழைகின்றாரோ அவர் பாதுகாப்புப் பெறுவார் என அல்குர்ஆன் சான்று பகர்கிறது.

“(கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும் பாதுகாப் பான இடமாகவும் ஆக்கினோம். (ஸூரதுல் பகரா: 125)

(அஷ்ஹுருல் ஹுரும்) என அழைக்கப்படுகின்ற கண்ணியமிக்க, யுத்தம் தடைசெய்யப்பட்ட மாதங்களில் ஒன்றுதான் துல்ஹிஜ்ஜா. இஸ்லாம் வருடாந்தம் நான்கு மாதங்களை யுத்தம் தடைசெய்யப்பட்ட சமாதான மாதங்களாக பிரகடனப்படுத்தியிருக்கிறது. உலகில் இஸ்லாம் மேலோங் கினால் குறைந்தபட்சம் நான்கு மாதங்களுக்காவது யுத்தங்களே இருக்காது என்ற உண்மையை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

“எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமை யாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு ஆகியவை செய்தல் கூடாது. (ஸூரதுல் பகரா: 197)

ஹஜ் ஒரு சர்வதேச மகாநாடு. முஸ்லிகளின் விவகாரங்கள், பிரச்சினைகள் கலந்துரை யாடப்பட வேண்டிய, முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய ஓர் இடம்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின்போது மக்கா குன்றின் மீது நின்றவராய் அங்கு குழுமியிருந்த ஓர் இலட்சம் சஹாபாக் களைப் பார்த்து நிகழ்த்திய உரை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அப்போது,

“மக்களே! நன்றாகக் கவனத்துடன் கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப் பேனாவென்பது எனக்குத் தெரியாது. இந்த நாளும் இந்த மாதமும் இந்த நகரமும் பரிசுத்தமானவை. அது போலவே உங்களது உயிரும் உடைமையும் கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதி நாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ அபகரிக்கவோ கூடாது) இறைவனின் சமூ கத்திலே இவற்றுக்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்எனப் பிரகடனம் செய்தார்கள். பின்னர்,

“(மக்களே!) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறைவேற்றி விட்டேனா?” எனக் கேட்டார்கள்.

“நிச்சயமாக இறைவனது கட்டளைகளை எங்களுக்கு அறிவித்து விட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றி விட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவு ரைகளையும் வழங்கி விட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்!

அந்த மாபெரும் மனிதக் கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி. இதைக் கேட்ட இறுதித் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி, “அல்லா ஹும்ம அஷ்ஹது! அல்லாஹும்ம அஷ்ஹது!! அல்லாஹம்ம அஷ்ஹது!!! இறைவா நீயே இதற்கு சாட்சி! இறைவா நீயே இதற்கு சாட்சி! இறைவா நீயே இதற்குச் சாட்சி! என்று முழங்கினார்கள்.

எனவே, இந்த சர்வதேச மாநாட்டின்போது முஸ்லிம் சமூகத்துடன் தொடர் பான, மனித சமுதாயத்துடன் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் பெறப்பட வேண்டும் அங்கு காத்திரமான தீர்மானங்கள் எட்டப்பட வேண்டும். அவை பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.

மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் மக்காவை நோக்கிய சமாதானப் பயணத்தில் ஈடுபட்டு லப்பைக் கோஷத்தை எழுப்பிய வண்ணம் முஸ்லிம் சமூகத்துக்காக, உலக அமைதிக்காக, மனித இனத்தின் மேம்பாட்டிக்காக அல்லாஹ்விடம் கையேந்திப் பிரார்த்திதுக் கொண்டிருக்கிறார்கள். நாமும் பிரார்த்திப்போமாக!

 

We have 23 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player