அல்குர்ஆனிய ஆளுமையை உருவாக்குவது எப்படி?

அல்குர்ஆனிய ஆளுமையை உருவாக்குவது எப்படி?

ஆளுமை என்பது மனிதனது உடல், உள்ளம், உணர்வு, சிந்தனை, அறிவு, ஆன்மா, நடத்தை, பண்பாடு போன்ற அனைத்துடனும் தொடர்புற்ற ஒன்றாகும். பொதுவாக ஆளுமை என்பது இரு கூறுகளைக் கொண்டது என்பர். அவையாவன:

   1. சிந்தனைப்பாங்கு
   2. உளப்பாங்கு மனப்பாங்கு

மனிதனது வெளித்தோற்றமும், ஆடை அலங்காரம் போன்றவையும் அவனது ஆளுமைக்குரிய அடிப்படைகளில் ஒன்றாகக் கொள்ளப்படுவதில்லை. வாட்ட சாட்டமான உடம்பையும் வசீகரமான தோற்றத்தையும் கொண்ட பலர் ஆளுமையைப் பொறுத்த வரையில் பலவீனர்களாக இருப்பதைக் காண முடியும். சிறிய உடலும், மெலிந்த மேனியும், அவலட்சணமான தோற்றமும் கொண்ட எத்தனையோ பேர் அளப்பரிய ஆளுமை பெற்றவர்களாகத் திகழ்வதனையும் பார்க்க முடியும். ஆளுமைக்குரிய அடிப்படைக் காரணிகளை ஒருங்கே பெற்ற ஒருவருக்கு, குறித்த அம்சம் ஒரு மேலதிக தகைமையாகக் கொள்ளப்படுவதுண்டு. இவ்வகையிலேயே அல்குர்ஆன் 'தாலூத்'தின் ஆளுமையைப் பற்றி கீழ்வருமாறு விளக்குகின்றது:

''நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது (ஆட்சி புரிய)அவரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். அன்றி கல்வியிலும், உடற்கட்டிலும் உங்களைவிட அவரை அதிகப்படுத்தியும் வைத்திருக்கின்றான்.''(-2 -247)

ஆளுமைப் பற்றிய மேலே கண்ட விளக்கத்தின் ஒளியில் 'அல்குர்ஆனிய ஆளுமை' என்பது என்ன என்பதனை விளங்க முடிகிறது. அல்குர்ஆனிய சிந்தனைப்பாங்கையும் மனப்பாங்கையும் பெற்ற ஒருவரே அல்குர்ஆனிய ஆளுமையைப் பெற்ற ஒருவராகக் கருதப்படுகிறார். எதனையும் அல்குர்ஆனின் அடிப்படையில் நோக்குகின்ற, சிந்திக்கின்ற, ஆய்கின்ற, தீர்மானிக்கின்ற சிந்தனைப்போக்கு, மனிதன், பிரபஞ்சம், வாழ்வு பற்றிய அல்குர்ஆனின் அடியாகப் பிறக்கின்ற கண்ணோட்டம், 'அகீதா' எனும் நம்பிக்கை சார்ந்த அம்சங்கள், 'ஷரீஆ' எனும் சட்டம் சார்ந்த விடயங்கள், 'அக்லாக்' எனும் ஒழுக்கப்பண்பாடு தொடர்பான அம்சங்கள் உட்பட வாழ்வின் அனைத்து நடத்தைகளையும் அல்குர்ஆனின் வெளிச்சத்தில் நோக்குகின்ற போக்கையே 'அல்குர்ஆனிய சிந்தனைப்பாங்கு' என்கிறோம். வேறுவார்த்தையில் சொல்வதாயின், அனைத்து நிகழ்வுகளையும் அல்குர்ஆனிய அடிப்படையில் விளக்குகின்ற, அதனையே அனைத்துக்கும் அளவுகோலாகக் கொள்கின்ற தன்மையையே 'அல்குர்ஆனிய சிந்தனைப்பாங்கு' எனலாம்.

மேலே விளக்கிய சிந்தனைப்பாங்கின் பிரதிபலிப்பாகவும் வெளிப்பாடாகவும் அமைவதே மனப்பாங்காகும்.மனிதனது ஆசை, அபிலாஷைகள், நடத்தைகள் போன்றன பெரும்பாலும் அவன் கொண்டுள்ள கருத்துக்கள், கண்ணோட்டங்களினதும், சிந்தனைப் போக்குகளினதும் வெளிப்பாடாகும் என்பதனை மறுப்பதற்கில்லை. எனவே குர்ஆனிய மனப்பாங்கானது அல்குர்ஆனின் அடியாகப் பிறந்த சிந்தனைப்பாங்கின் நடைமுறைச் செயற்பாடேயன்றி வேறில்லை.

இவ்வகையில், குர்ஆனிய கருத்துக்களை நடத்தைக்குப் பரிவர்த்தனை செய்யும் போதே ஆளுமைக்குரிய இரு கூறுகளும் ஒன்றிணைந்து அது முழுமை பெறுகின்றது.

அல்குர்ஆன் எப்பொழுதும் ஆளுமையின் இரு பகுதிகளையும் இணைக்க விரும்புகிறது. கருத்தாக உள்ளவை அனைத்தும் செயல்களாக மாறவேண்டும் என்பது அல்குர்ஆன் வலியுறுத்தும் ஓர் அடிப்படையான கருத்தாகும். ஆளுமையின் ஒரு கூறை அடுத்ததிலிருந்து பிரிப்பதை அல்குர்ஆன் வன்மையாகக் கண்டிக்கி;றது.

''விசுவாசிகளே! நீங்கள் செய்யாதவற்றையிட்டு ஏன் கூறுகிறீர்கள்? நீங்கள் செய்யாததைக் கூறுவது அல்லாஹ் விடத்தில் மிகவும் வெறுக்கத்தக்கதாய் உள்ளது.'' (61 - 2, 3)

அல்குர்ஆனிய ஆளுமையை உருவாக்குவதற்கான முன்மாதிரியை நபி (ஸல்) அவர்களிடமிருந்து பெறவேண்டியுள்ளது. அன்னார் முழுமையான அல்குர்ஆனிய ஆளுமையைப் பெற்ற பல்லாயிரம் தனிமனிதர்களை உருவாக்கியது மாத்திரமல்ல, அல்குர்ஆனிய சமூகம் ஒன்றினையே கட்டியெழுப்பினார்கள். நபியவர்கள் உருவாக்கிய மனிதர்கள் நடமாடும் குர்ஆன்களாகத் திகழ்ந்தனர். பாதையிலும் கடைத்தெருவிலும் என்றும் எப்போதும் அல்குர்ஆனை நிதர்சனமாக அன்று காணக்கூடியதாயிருந்தது.

இன்று ஏன் அத்தகைய ஓர் அல்குர்ஆனிய சமூகத்தை உருவாக்க முடிவதில்லை? அன்றைய ஸஹாபா சமூகத்திற்குக் கிடைத்த அல்குர்ஆன் இன்றும் உள்ளது. அவர்கள் பெற்ற ஸுன்னாவும் ஸீராவும் இன்றும் கிடைக்கக்கூடியதாய் உள்ளன. இன்று நபிமாத்திரம் எம்மத்தியில் இல்லை. ஆயினும், குறித்த சமூகம் உருவாக நபியில்லாமை தான் காரணம் என நியாயம் கற்பிக்க முடியாது; ஏனெனில், இம்மார்க்கம் வாழ்வதற்கும், உலகில் நிலைப்பதற்கும், நபி தொடர்ந்தும் உயிர் வாழ்வது அவசியமென்றிருப்பின் இம்மார்க்கம் முழுமனித சமுதாயத்திற்கும் உரியதாகவும், இறுதித் தூதாகவும், மறுமைவரை மனித குலத்திற்கு வழிகாட்டியாகவும் அமைக்கப்பெற்றிருக்க முடியாது. இவ்வேதம் நிலைக்க நபியவர்கள் உயிர்வாழ்வது அவசியமானதன்று என்பதனாலேயே அல்லாஹ் அன்னாரை அவர்களின் 23 வருடகால பணியின் பின்னர் தன்பக்கம் எடுத்துக் கொண்டான். எனவே, பிற்பட்ட காலத்தில் இன்றுவரை எதிர்பார்க்கப்படுகின்ற அல்குர்ஆனிய சமூகம் உருவாகாமல் இருப்பதற்குரிய காரணமாக நபியின் இழப்பைக் கூற முடியாது. அவ்வாறே அன்றைய அல்குர்ஆனிய சமூகம் உருவாக நபி உயிருடன் வாழ்ந்தமையே அடிப்படைக்காரணம் என்றும் கூற முடியாது; அப்படியாயின், அன்றைய சமூகத்தை உருவாக்கிய அன்றைய மனிதர்களை அல்குர்ஆனிய ஆளுமை பெற்றவர்களாக மாற்றிய வேறு காரணிகள் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். அக்காரணிகளை ஆராய்ந்த 'ஷஹீத் ஸெய்யித் குத்ப்' அவர்கள் அடிப்படையான மூன்று காரணிகளைக் குறிப்பிட்டு அவற்றை அழகுற விளக்கியுள்ளார்.

முதற்காரணி :

அன்றைய மனிதர்கள் தமது ஏக வழிகாட்டியாக அல்குர்ஆனையே கொண்டிருந்தனர். அல்குர்ஆன் அல்லாத வேறு எதனையும் அவர்கள் தங்களுக்குத் தேவையான வழிகாட்டல்களையோ சட்டதிட்டங்களையோ பெற்றுக்கொள்ள நாடவில்லை.

நபிகளாரின் ஸுன்னாவைப் பொறுத்தவரையிலும் அது அல்குர்ஆனுக்கான நடைமுறை விளக்கமாகவே இருந்து வந்தது. இதனால்தான் நபியவர்களின் வாழ்வு பற்றி அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் வினவப்பட்ட போது, 'அன்னாரின் வாழ்வு அல்குர்ஆனாகவே இருந்தது' (ஆதாரம்: நஸாஈ) என இரத்தினச் சுருக்கமாகப் பதில் அளித்தார்கள்.

தமது பாசறையில் வளரும் தோழர்கள் எவரும் அல்குர்ஆன் அல்லாத வேறெதனையும் நாடக்கூடாது என்பதில் நபியவர்கள் கண்டிப்பாக இருந்தார்கள். இதனால் தான் ஒரு சந்தர்ப்பத்தில் தௌராத்தின் பிரதியொன்றைத் தம் கையில் வைத்திருந்த உமர் (றழி) அவர்களைக் கண்ட நபியவர்கள் கடுஞ்சினங்கொண்டு கீழ்வருமாறு பகர்ந்தார்கள்:

'அல்லாஹ்வின் மீது சத்தியமாக இன்று மூஸா உங்கள் மத்தியில் வாழ்ந்திருப்பினும் அவரும் என்னையே பின்பற்ற வேண்டியிருக்கும்.' (அபூதாவூத்)

அன்றைய அம்மனிதர்கள் அல்குர்ஆனை மாத்திரம் தமது ஒரே வழிகாட்டியாகக் கொண்டிருந்தமைக்கு, அவர்களுக்கு அன்றைய சூழ்நிலையில் வேறு கொள்கைகள் கிடைக்காமையே காரணம் என்று எவரும் கூறுவாராயின், அது வரலாறு பற்றிய அவரது அறிவீனத்தையே காட்டும்; ஏனெனில், ஸஹாபாக்கள் வாழ்ந்த காலப்பிரிவை நோக்குகின்றபோது, அன்று அறிவு ஆராய்ச்சிகளும் நாகரிகங்களும் பண்பாடுகளும் கலைகளும் இல்லாமலிருக்கவில்லை.

அன்று ரோமர்களின் நாகரிகமும், கலை கலாசாரமும், சட்டமும், நூல்களும் இருந்தன. கிரேக்கரின் தர்க்கவியல், தத்துவம் உட்பட இன்னும் பல கலைகள் காணக்கிடைத்தன. பாரசீகத்தின் நாகரிகமும், கலைகள், கவிதைகள், அரசியற்கோட்பாடு போன்றவையும் அன்று இருந்தன. இந்தியாவிலும் சீனாவிலும் கூட நாகரிக வளர்ச்சி காணப்படவே செய்தது.

குறிப்பாக அரபு நாட்டைச் சூழ ரோம, பாரசீகமும், யூத, கிறிஸ்தவ மதமும் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்தன.

எனினும், அல்குர்ஆனைத் தவிர வேறு எதனையும் நாடக்கூடாது என்பது இறைவனதும் அவன் தூதரதும் திட்டமாகவும், முடிவாகவும் இருந்தமையினால் அம்மனிதர்கள் அல்குர்ஆன் ஒன்றையே தங்களது ஒரே வழிகாட்டியாக அமைத்துக் கொண்டனர்.

இரண்டாவது காரணி :

அல்குர்ஆனிய மனிதர்கள் அல்குர்ஆனைக் கண்ட விதமும், அணுகிய முறையும் அவர்கள் அல்குர்ஆனிய ஆளுமையை முழுமையாகப் பெற்றுக் கொள்ளப் பெரிதும் துணை புரிந்தன.

அவர்கள் அல்குர்ஆனை அணுகிய போது வெறுமனே ஓதி பரக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்னும் நோக்குடனோ அல்லது அதில் அறிவு ஆராய்ச்சியினை மேற்கொள்ளும் நோக்குடனோ அன்றி அதிலுள்ள இலக்கிய இன்பத்தை அனுபவிக்கும் நோக்குடனோ அணுகவில்லை. மாறாக, அல்குர்ஆனின் போதனைகளையும், அதன் கட்டளைகளையும் அறிந்து வாழ்வில் அவற்றைச் செயற்படுத்த வேண்டும் என்ற உணர்வுடனேயே அவர்கள் அல்குர்ஆனை அணுகினர். அல்குர்ஆனைப் பார்க்கும் அளவிற்கு, ஓதும் அளவிற்குத் தங்களுக்கான கடமைகளும் பொறுப்புக்களும் அதிகரிக்கும் என்ற உணர்வே அவர்களிடம் மிகைத்து நின்றது.

இந்தவகையில் அம்மனிதர்கள் அல்குர்ஆனை ஓர் இலக்கிய நூலாகவோ, வரலாற்று ஏடாகவோ, அறிவியற் களஞ்சியமாகவோ காணாது தங்களது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் வழங்கும் ஒரு வழிகாட்டி நூலாகக் கண்டனர்.

மூன்றாவது காரணி :

நபித்தோழர்கள் அல்குர்ஆனிய ஆளுமையை முழுமையாகப் பெறுவதற்குத் துணைநின்ற பிறிதொரு காரணியும் உண்டு. ஜாஹிலிய்யத்துடன் அவர்கள் கொண்ட நிலைப்பாடே அதுவாகும். ஆவர்கள் இஸ்லாத்தில் நுழைந்த மாத்திரத்தில், பழைய ஜாஹிலிய்யத்தில் இருந்து முற்றுமுழுதாக விடுபட்டார்கள். அதன் சமூகத்தில் இருந்தும். சிந்தனையில் இருந்தும், ஏன் சூழலில் இருந்தும் கூட அகன்றார்கள். ஒரு ஜாஹிலிய்யத்தான அம்சம் அவர்களில் ஒருவரில் அவரை அறியாமல் வெளிப்படும் போதும், அதனை உணர்கின்ற போதும் அது தன்னை இஸ்லாத்திலிருந்தே வெளிப்படுத்திவிட்ட உணர்வைப் பெற்றார்.

நபித்தோழர்களை அல்குர்ஆனிய மனிதர்களாக உருவாக்கத் துணைபுரிந்த காரணிகளையே மேலே கண்டோம். இக்காரணிகளைக் கருத்திற்கொண்டு செயற்படும் போது இன்றும் அத்தகைய மனிதர்களை உருவாக்க முடியும் என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை.

இதுவரை 'அல்குர்ஆனிய ஆளுமை' என்றால் என்ன என்பது பற்றியும், அத்தகைய முழு ஆளுமை பெற்ற மனிதர்களை நபியவர்கள் உருவாக்கத் துணைபுரிந்த காரணிகள் யாவை என்பதனையும் பொதுப்படையாக நோக்கினோம்.

தொடர்ந்து, அல்குர்ஆனிய ஆளுமை பெற்ற மனிதர்களை உருவாக்க முனையும் போது கருத்திற்கொள்ளப்பட வேண்டிய அம்சங்களைச் சிறிது விரிவாக நோக்குவோம்.

அல்குர்ஆன் உருவாக்க விரும்பும் மனிதன் உடலாலும், உள்ளத்தாலும், ஆன்மாவாலும், அறிவாலும் மேம்பட்டுத் திகழ்வான். அல்குர்ஆன் வெறுமனே கிரேக்கர்கள் செய்தது போன்று மனிதனது மூளையைத் தத்துவக் கருத்துக்களால் நிரப்ப விரும்புவதில்லை. அல்லது இந்தியர்கள் செய்தது போன்று வெறும் ஆன்மீக அனுபவங்களை மாத்திரம் மனிதனுக்கு வழங்க விரும்புவதில்லை. அல்லது ரோமர்களைப் போன்று மனிதனின் வெறும் உடல் வளர்ச்சியை மாத்திரம் கருத்திற்கொள்வதுமில்லை. அல்லது இன்றைய உலகம் நோக்குவது போன்று மனிதனது சடரீதியான வளர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதுமில்லை.

மாறாக, அல்குர்ஆன் மனிதனை உடல், உள்ளம், சிந்தனை ஆகிய மூன்று கூறுகளினால் உருவானவன் எனக் காண்கிறது. இவ்வடிப்படையிலேயே அவனது ஆளுமையை வளர்ப்பதற்கான திட்டத்தையும் வழங்கியுள்ளது. இக்கூறுகளில் ஒன்று மற்றையதை மிகைத்து விடாதவாறு மூன்றுக்கும் சம அளவிலான முக்கியத்துவத்தை அது வழங்குகின்றது. அறிவுப் பலம், ஆன்மீகப் பலம், உடற் பலம், பண்பாட்டுப் பலம் ஆகிய அனைத்துச் சக்திகளையும் ஒருங்கே பெற்றவனே அல்குர்ஆனிய ஆளுமையை முழுமையாகப் பெற்றவனாகக் கொள்ளப்படுகிறான்.

இனி நாம் அல்குர்ஆனின் வெளிச்சத்தில் ஆளுமையின் குறித்த கூறுகள் பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.

அடிப்படையாக அல்குர்ஆன் மனிதனின் ஆளுமையை ஆன்மீகரீதியாகக் கட்டியெழுப்ப விரும்புகிறது. இந்த வகையில் முதலாவதாக ஆன்மீக வளர்ச்சியின் முக்கியத்துவத்தை அது வலியுறுத்துகிறது.

''நிச்சயமாக அதனை (ஆன்மாவை) தூய்மைப்படுத்தியவன் வெற்றிபெற்றான். அதனை மாசுபடுத்தியவன் தோல்வியடைந்தான்'' என்று கூறுகிறது. அதற்கான வழிமுறைகளையும் அது விளக்குகிறது. தொழுகை, திக்ர் போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிட முடியும்.

ஆன்மீகத்தைப் பொறுத்தவரையில், அல்குர்ஆன் காணவிரும்பும் மனிதர்கள் எத்தகையோரெனில்...

''அவர்கள் நின்ற நிலையிலும், இருந்த நிலையிலும், சாய்ந்த நிலையிலும் அல்லாஹ்வை திக்ர் செய்வார்கள்.''

''மேலும், (இரவிலே) தங்களது படுக்கையில் இருந்து தங்கள் விலாக்களை உயர்த்தி (எழுந்து அப்புறப்பட்டு) தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும் பயந்தும் (அவனைப்) பிரார்த்தனை செய்வார்கள்.''

''மேலும் அவர்கள், 'தங்கள் இறைவனை நின்றவர்களாகவும், சிரம் பணிந்தவர்களாகவும், இரவெல்லாம் வணங்கிக் கொண்டிருப்பார்கள்.''

''மேலும், இரவு வேளையிலே (நடுநிசியிலே) அவர்கள் பாவமன்னிப்புக் கோருவோராய் இருப்பர்.''

அடுத்து, அல்குர்ஆன் மனிதனை, அவனது ஆளுமையை அறிவு, சிந்தனா ரீதியாகக் கட்டியெழுப்ப விரும்புகிறது. இந்தவகையில் முதலில் அறிவின் முக்கியத்துவம் அல்குர்ஆனில் விளக்கப்படுகிறது. அதன் ஆரம்ப வசனமே அறிவைப்பற்றியும், அறிவிற்குத் துணை புரிகின்ற வாசிப்பு, எழுத்து, எழுதுகோல் பற்றியும் பேசுவதனைக் காணமுடிகிறது.

தொடர்ந்து இறங்கிய வசனமும் எழுத்தினதும், பேனாவினதும், நூல்களினதும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

''நூன், பேனாவின் மீது சத்தியமாக அதனைக் கொண்டு அவர்கள் எழுதியவை மீது சத்தியமாக.''(60 :1)

சிந்திக்கவும் ஆராயவும் மனிதனைத் தூண்டுகின்ற பல வசனங்களை அல்குர்ஆனில் காணமுடிகிறது.

''அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?''
''நீங்கள் யோசனை செய்வதில்லையா?''
''அறிவுள்ள, சிந்திக்கின்ற மனிதர்களுக்கே இதில் அத்தாட்சி உண்டு.''
''இது அறிவுள்ளவர்களுக்கே''
''இது சிந்தனைத் தெளிவுள்ளவர்களுக்கே.''

போன்ற அமைப்பில் முடிவடைகின்ற அதிகமான வசனங்களை அல்குர்ஆனில் பரவலாகக் காணமுடியும்.

ஆன்மீகமும், அறிவும் ஒன்றோடொன்று இணைந்தவைகளாகும். ஆளுமையை உருவாக்கும் இரு அடிப்படைக் கூறுகளாக இவை காணப்படுகின்றன. இவையிரண்டையும் பிரிப்பது பிழையான தாகும். ஏனெனில் மனிதனது நடத்தை என்பது, அவனது சிந்தனையின் வாழ்வு பிரபஞ்சம் - மனிதன் - ஆகியவற்றைப் பற்றிய அவனது கருத்தின் வெளிப்பாடாகும்.

இதனால்தான் அல்குர்ஆன் இவையிரண்டையும் பல இடங்களில் இணைத்துள்ளதுடன் சிலபோது அறிவை, ஈமானிலும் முற்படுத்திக் கூறியிருப்பதனை அவதானிக்க முடிகிறது.

''எவர்களுக்குக் கல்வியறிவு கொடுக்கப்பட்டிருக்கின்றதோ அவர்கள் நிச்சயமாக இது உமது இறைவனிடம் இருந்து வந்த உண்மை என்று உறுதியாக அறிந்து, விசுவாசித்து, மனப்பூர்வமாகவே அவனுக்கு வழிப்படுகின்றனர்.'' (22:54)

ஆளுமையின் மேலுமொரு கூறான பண்பாடு பற்றியும் அல்குர்ஆன் பேசுகிறது. பண்பாட்டு ரீதியில் மனிதனது ஆளுமை கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசியத்தையும் அது வலியுறுத்துகிறது. நெஞ்சுரம், வாய்மை, துணிச்சல், நேர்மை, உறுதி, நன்மையை ஏவித்தீமையைத் தடுத்தல், சுத்தம் பேணல், சட்டத்தையும் ஒழுங்கையும் பேணல் போன்ற பல பண்புகளைப் பற்றி அல்குர்ஆன் பேசுகிறது. குறிப்பாக அல்குர்ஆனிய மனிதனின் ஆளுமைக்கு உரமூட்டும் 4 (நான்கு) பண்புகளைக் குறிப்பிட முடியும்.

'ஸப்ர்' எனும் பொறுமையும் சகிப்புத்தன்மையும்;
'ஸபாத்' எனும் உறுதியும் ஸ்திரத்தன்மையும்
'அமல்' எனும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்
இறுதியாக, 'பத்ல்' எனும் தியாகமும் உழைப்பும்.

ஆல்குர்ஆன், 'ஸப்ரை' வெற்றியாளர்களின் ஓர் அடிப்படைப் பண்பாகக் குறிப்பிடுகிறது. லுக்மான் (அலை) அவர்கள் தனது மகனுக்குச்செய்த உபதேசங்களில் 'ஸப்ரும்' இடம் பெற்றுள்ளமையைக் காணமுடிகின்றது.

''அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு, நன்மையை ஏவித் தீமையை விலக்கு, உனக்கேற்பட்ட துன்பங்களைச் சகித்துக் கொள். இவை உறுதியான விடயங்களில் உள்ளவையாகும்.'' (31: 17)

மேலும், போராளிகளின் பிரார்த்தனையாக 'ஸப்ர்' அமைவதனை அல்குர்ஆன் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது.

''எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்தி வைப்பாயாக! நிராகரிக்கும் இம்மக்கள் மீது (வெற்றிபெற) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக!'' (2:250)

இரண்டாவது பண்பான 'ஸபாத்தை' தனது இலட்சியப்பாதையில், அது எவ்வளவு நீண்டதாக இருப்பினும் ஸ்திரமாக நிலைத்து நிற்பதனைப் பற்றி அல்குர்ஆன் விளக்குகிறது. ஆரம்பகால நபித்தோழர்களிடத்தில் காணப்பட்ட இப்பண்பை அது சிலாகித்துக் கூறுகிறது.

''விசுவாசிகளில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் செய்த உடன்படிக்கையை உண்மையாக்கி வைத்தார்கள். அவர்களில் சிலர் (வீரமரணமடைந்து) தமது இலக்கை அடைந்து விட்டனர். வேறு சிலர் அதனை எதிர்பார்த்து நிற்கின்றனர். அவர்கள் (தமது வாக்கை) ஒரு சிறிதும் மாற்றவில்லை.''(33: 23)

அடுத்த பண்பான 'அமல்' எனும் இறுதிவெற்றி அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கே கிட்டும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் அது விளக்குகிறது.

''வழி தவறியோரைத்தவிர வேறு எவர் தான் இறைவனது அருளில் நம்பிக்கை இழக்க முடியும்!'' (15:56)

இறுதிப் பண்பான 'பத்ல்'- தியாகம் பற்றி விளக்குகின்ற பல வசனங்களை அல்குர்ஆனில் காணமுடியும். காலம், நேரம், பணம், சக்தி ஆகியவற்றை இறைபாதையில் செலவு செய்ய வேண்டியதன் அவசியத்தை அல்குர்ஆன் ஆங்காங்கே வலியுறுத்தி நிற்கிறது.

மனிதனது ஆளுமை முழுமை பெற உடலாரோக்கியமும் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்காமல் இல்லை. இதனாலேயே அல்குர்ஆன் உடல் ஆரோக்கியம் பேணல், அதன் தேவைகளைக் கவனித்தல், அதற்கு வலுவூட்டல் போன்றவற்றின் அவசியத்தைப் பற்றிப் பேசுகின்றது. உதாரணமாகக் கீழ்வரும் அல்குர்ஆன் வசனத்தைக் கவனிப்போம்.

''(நபியே!) கூறும்: அடியார்களுக்காக அல்லாஹ் நெறிப்படுத்தியுள்ள அலங்காரங்களையும் நல்ல ஆகாரங்களையும் (கூடாதவையென) விலக்குவோர் யார்?'' (7: 32)

உடம்புக்குத்தீங்கையும், கேட்டையும் ஏற்படுத்தக் கூடியவற்றைத் தவிர்க்குமாறு அல்குர்ஆன் பணிக்கின்றது.

''மேலும் நீங்கள் விபச்சாரத்தை நெருங்கவும் வேண்டாம்.'' (17: 32)

அல்குர்ஆன் தான் காண விரும்பும் முழுமையான ஆளுமை பெற்ற மனிதனுக்குத் தேவையான அனைத்து அடிப்படைகளையும் அழகுற விளக்கியுள்ளதைக் காணலாம். இந்த வகையில் அல்குர்ஆன் உருவாக்க விரும்பும் மனிதனை இரத்தினச்சுருக்கமாக 'இமாம் ஹஸனுல் பன்னா(ரஹ்)' படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
'நம்பிக்கையில் (அகீதா) சீரான வணக்கத்தில் (இபாதத்) சரியான பண்பாட்டில் சிறந்த அறிவு விளக்கமுள்ள, உடல் ஆரோக்கியமிக்க, உழைக்கும் சக்தி பெற்ற, பிறருக்கு நன்மை செய்கின்ற, தன் உள்ளத்துடன் போராடுகின்ற, நேரத்தின் பெறுமதியையுணர்ந்து தனது கருமங்களை ஒழுங்காக மேற்கொள்கின்ற மனிதனே அல்குர்ஆன் காண விரும்பும் உண்மை முஸ்லிம் ஆவான்;.'

We have 23 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player