நூற்கள்

Article Index
நூற்கள்
உழைப்பும் வட்டியும் - ஓர் இஸ்லாமிய அணுகல்
மறைவழி
இஸ்லாமிய வரையறைகள் : ஹலால் ஹராம் சட்டவிதிகளும் உணவு, உடை வரையறைகளும்
நபிவழி - 01
கல்வி கற்றல் கற்பித்தல்
நபிவழி - 02
இஸ்ராவும் மிஃராஜும் : ஒரு புதிய பார்வை
சன்மார்க்க சட்ட விளக்கங்கள் - (கேள்வி - பதில்)
All Pages

உழைப்பும் வட்டியும் - ஓர் இஸ்லாமிய அணுகல்    

அண்மைக் காலம் வரை உலகின் பொருளாதாரம் வட்டியை அடிப்படையாகக் கொண்டே சுழன்று வந்தது. ஆயினும் கடந்த சில தசாப்தங்களாக உலகளாவிய ரீதியில் ஆர்த்தெழுந்துள்ள இஸ்லாமிய விழிப்புணர்வின் விளைவாக வட்டியில்லாத ஒரு பொருளாதார ஒழுங்கை உருவாக்க வேண்டும் என்பதில் இஸ்லாமிய உலகு தீவிர ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது. இதன் விளைவாக இன்று (2006 வரை) உலகில் சுமார் 280 வட்டியில்லா இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் தோன்றி வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்களின் நிலையான சொத்துக்கள் 280 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்படுகின்றது. சுமார் 450 பில்லியன் அமெரிக்க டொலர்களை இவை பல்வேறு பொருளாதார முயற்சிகளில் முதலீடு செய்துள்ளன. இந்நிறுவனங்களில் வைப்புக்களாகவுள்ளவற்றின் பணப் பெறுமதி சுமார் 220 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

ஐக்கிய அரபு இராஜ்யங்களில் (U.A.E) அமைந்துள்ள துபாய் இஸ்லாமிய வங்கி, அபூதாபி இஸ்லாமிய வங்கி, ஷார்ஜா இஸ்லாமிய வங்கி, எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கி ஆகிய நான்கு வங்கிகளும் 2006ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஈட்டியுள்ள இலாபம் 33.2% வீதமாகும் என நிதி அறிக்கைகள் கூறுகின்றன.

மலேஷியா, இந்துனேஷியா, பஹ்ரைன், சவூதி அரேபியா, சூடான், குவைத், ஈரான், எகிப்து முதலான முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் மட்டுமன்றி பிரித்தனியா உள்ளிட்ட பல முஸ்லிம் அல்லாத நாடுகளிலும் இஸ்லாமிய வங்கிகள் தோன்றி வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. பல பாரம்பரிய சர்வதேச வங்கிகள் தத்தமது வங்கிகளில் வட்டியில்லாத கொடுக்கல் - வாங்கல் அலகுகளை உருவாக்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையிலும் தற்போது இஸ்லாமிய நிதித்துறை குறுகிய காலத்திற்குள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகின்றது.

ஆயினும் இஸ்லாமிய நிதி ஒழுங்கு பற்றியும் கொடுக்கல் - வாங்கல் முறைமை பற்றியும் போதிய அறிவும் தெளிவும் கொண்டவர்கள் குறைவாக இருப்பது கவலைக்குரிய நிலையாகும். இந்நிலையில் இஸ்லாமிய நிதித்துறை சார்ந்த நிபுணர்களையும் வளவாளர்களையும் உருவாக்க வேண்டிய பெரிய பொறுப்பை இஸ்லாமிய நிறுவனங்கள், கலாசாலைகள் நிறைவேற்ற  வேண்டியது காலத்தின் தேவையும் சன்மார்க்கக் கடமையும் ஆகும்.

இஸ்லாமிய நிதி ஒழுங்கு சம்பந்தமாகவும் கொடுக்கல் வாங்கலில் ஹலால் ஹராம் வரையறை தொடர்பாகவும் புத்தகத் தொடரை வெளியிட வேண்டுமென்பது எனது நீண்ட நாள் அவாவாகும். உணவு, உடை தொடர்பான இஸ்லாமிய வரையறைகளை விளக்குகின்ற ஒரு நூல் ஏலவே ஹலால் ஹராம் சட்ட விதிகளும் உணவு, உடை வரையறைகளும்  எனும் தலைப்பில் நூலுருப் பெற்றுள்ளமை வாசகர்கள் அறிந்ததே.

இஸ்லாமிய நிதி ஒழுங்கு பற்றி விளக்கும் நூற்தொடரில் முதல் நூலாக இது அமையும் என நம்புகிறேன். இஸ்லாத்தில் உழைப்பு முதலான நிதி நடவடிக்கைகள் பெறும் முக்கியத்துவத்தைப் பற்றி பொதுவாகவும் கொடுக்கல் வாங்கலில் தவிரக்க வேண்டிய அம்சங்கள் பற்றி குறிப்பாகவும் வட்டியைப் பற்றி சிறப்பாகவும் இந்நூல் விளக்குகின்றது. வட்டிக்கான இஸ்லாம் முன்வைக்கும் பிரதியீடுகள் என்ற வகையில் தர்மம், அழகிய கடன், வியாபாரம் ஆகிய மூன்று அம்சங்களையும் தொட்டுக்காட்டி இந்நூல் நிறைவு பெறுகின்றது. இதன் தொடராக இஸ்லாம் கூறும் வேறுபட்ட வர்த்தக, வாணிப, நிதி ஒழுங்குகளைப் பற்றி விரிவாக விளக்கும் ஒரு நூல் இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவில் அச்சுவாகனம் ஏறும் என எதிர்பார்க்கின்றேன்.

வட்டியுடன் சம்பந்தப்பட்ட சில நடைமுறை சட்டப்பிரச்சினைகளுக்கான சட்டத்தீர்புகளும் இந்நூலின் இறுதிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும். அன்றாட வாழ்வில் அனைத்துத் துறைகளிலும் ஷரீஆ வரையறைகளை பேண விரும்புவோருக்கு இச்சிறு நூல் எல்லாவகையிலும் பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றேன். இஸ்லாமிய வங்கியில், நிதி முறைமை தொடர்பாக அறிய விரும்புபவர்களுக்கும் இந்நூல் பயனுள்ள தகவல்களைத் தரும் எனவும் எதிர்பார்க்கிறேன்.

இந்நூலை அச்சிட்டு வெளியிடுவதில் ஆர்வம் காட்டி இஸ்லாமிய ஊழியர்களுக்கு அல்லாஹ் அருள்பாளிக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

 

 


மறைவழி

 

எமது ஆன்மீக அமர்வுகளின் போது வாசித்துப் பயன் பெறக் கூடிய, அன்றாட வாழ்க்கைக்கு வழி காட்டும் பல குர்ஆன், ஸூன்னா போதனைகளைத் தொகுத்து ஒரு நூல் வரிசையாக வெளியிட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆவாவும் ஆசையுமாகும்.

அயசயi எயணாi டிழழம உழஎநசஇந்த வகையில் நபி வழி என்ற பெயரில் ஹதீஸ் விளக்கங்களை உள்ளடக்கிய எனது இரு நூல்கள் ஏலவே வெளிவந்தன. ஆயினும் குர்ஆன் விளக்கங்களின் தொகுப்பொன்றை வெளியிடும் சந்தர்ப்பம் தொடர்ந்தும் கிட்டாமலேயே இருந்து வந்தது. அல்லாஹ்வின் அருளால் மறைவழி என்ற இந்நூலுக்கூடாக அந்நாட்டம் நிறைவேறுவதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.

இதன் தொடராக மேலும் சில நூல்களை வெளிக்கொணர வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும். தப்ஸீர் இப்னி கஸீர், பீ ழிலாலில் குர்ஆன், ஸப்வதுத் தபாஸீர் முதலான நூல்கள் இவ்விளக்கங்களை எழுதுவதற்கு துணைநின்றன என்பதை நன்றியுடன் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

எல்லாம் வல்ல அல்லாஹூத்தஆலா எமது நாட்ட தேட்டங்களை நிறைவேற்றி, பணிகளை ஏற்று கபூல் செய்வானாக. இந்நூலை வெளியிடுவதில் தீவிர ஆர்வமும் ஈடுபாடும் காட்டிய சகோதரர்களுக்கும் நற்கூலி வழங்குவானாக.

 


இஸ்லாமிய வரையறைகள் : ஹலால் ஹராம் சட்டவிதிகளும் உணவு, உடை வரையறைகளும்


அல்லாஹ்வின் பேரருளினால் இன்று முஸ்லிம்கள் மத்தியில் மார்க்க ரீதியிலான விழிப்புணர்வு தோன்றியுள்ளதை பரவலாக அவதானிக்க ளாயசநநய எயசயலயசihயடமுடிகின்றது. இதன் விளைவாக வணக்க வழிபாடுகளில் மட்டுமன்றி தனிப்பட்ட வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக உறவுகளிலும் இஸ்லாமிய சட்ட திட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும், ஹலால், ஹராம் வரையறைகளைப் பேண வேண்டும் என்ற ஆர்வம் எல்லோர் மத்தியிலும் உருவாகி வருவதைக் காண முடிகின்றது. இப்பின்னணியில் பலர் மார்க்க விடயங்களை அறிந்து கொள்ள உலமாக்களை அணுகுகின்றனர். நூல்களைத் தேடிப் படிக்கின்றனர்.

ஆயினும் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு, அவர்களின் பிரச்சினைகளுக்கு விளக்கம் சொல்லும் அளவுக்கு போதுமான படைப்புகள், ஆக்கங்கள் தமிழில் இல்லை என்றே கூற வேண்டும். இக்குறையை ஓரளவுக்கேனும் நிவர்த்தி செய்யும் நோக்குடனேயே எனது சன்மார்க்க சட்டவிளக்கங்கள் என்ற நூல் வெளியிடப்பட்டது.

மக்களுக்கு ஷரீஆ வரையறைகளைப் பற்றிய விளக்கங்களை மேலும் விரிவாக வழங்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த சில ஆண்டுகளாக நடைமுறை வாழ்வில் இஸ்லாம் என்ற தலைப்பில் ஒரு தொடர் பேச்சை இலங்கை வானொலி முஸ்லிம் சேவைக்கூடாக நிகழ்த்தி வருகின்றேன். இந்நிகழ்ச்சிக்கு நேயர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதுடன் உரைகளை நூலுருவில் கொண்டு வருவது பயனுள்ளதாக அமையும் என பலர் ஆலோசனை கூறினர். அந்தவகையில் எனது தொடர் பேச்சின் முதற் பகுதியே இங்கு நூலுருப் பெற்றிருக்கின்றது.

ஹலால், ஹராம் தொடர்பாக குர்ஆன், சுன்னாவின் ஒளியில் இமாம்களால் பெறப்பட்டுள்ள பொது விதிகளை நூலின் முதற் பகுதி விளக்குகின்றது. இவ்விதிகள் இஸ்லாமிய ஷரீஆவின் தனிப் பெரும் சிறப்பம்சங்களை விளங்கிக் கொள்ள துணை புரிவதுடன் ஹலால், ஹராம் வரையறைகளுக்குப் பின்னாலுள்ள தத்துவங்களையும் தாத்பரியங்களையும் அறிந்து கொள்ளவும் உதவுகின்றன. நாம் எமது அன்றாட வாழ்வில் எதிர் நோக்கும் புதுப்புது பிரச்சினைகளைப் பற்றிய முடிவுகளைப் பெறுவதற்கும் இவ்விதிகள் பெரும் துணையாய் அமையும்.

நூலின் இரண்டாம் பகுதி உணவு தொடர்பான ஹலால், ஹராம் வரையறைகளை விளக்குகின்றது. தொடர்ந்து உடை பற்றிய மார்க்க விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.

ஷெய்க் யூஸுப் அல்-கர்ழாவி, ஸெய்யித் ஸாபிக், முஸ்தபா அஹ்மத் ஸர்கா, ஸகரிய்யா அல்பர்ரீ, அப்துல் ஹலீம் மஹ்மூத் முதலான பிற்கால, சமகால அறிஞர்களின் சில நூல்களும் இப்னுல் கையிம், ஷெளகானி போன்ற ஆரம்ப கால அறிஞர்கள் சிலரின் ஆக்கங்களும் இவ்வாக்கத்தைத் தயாரிப்பதற்கு எனக்குப் பெரிதும் துணைபுரிந்தன என்பதை இங்கு நன்றியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.


 நபிவழி - 01


ஸுன்னா, ஹதீஸ் இஸ்லாத்தின் இரண்டாவது சட்ட மூலாதாரமாகும். அதனை முதல் மூலாதாரமான அல்குர்ஆனுடன் சம தரத்தில் வைத்து நோக்கும் அறிஞர்களும் உளர்.

ஸுன்னாவானது அகீதா, ஷரீஆ, அஃலாக் உட்பட இஸ்லாத்தின் அனைத்துத் துறைகளுக்குமான மூலாதாரமாகக் கொள்ளப்படுகிறது. இந்தவகையில் அது வாழ்வின் எல்லாத் துறைகளுக்குமான வழிகாட்டல்களைத் தன்னகத்தே பொதிந்ததாக காணப்படுகிறது.

உண்மையில் ஸுன்னா நீளத்தால் அகலத்தால் ஆழத்தால் முழுமை பெற்றதாகத் திகழ்கின்றது. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கையை, ஏன் பிறப்புக்கு முன்னர் கருவாக, சிசுவாக இருந்தது முதல் இறப்புக்குப் பிந்திய வாழ்வையும் கவனத்திற் கொண்டதாக அமைந்துள்ளது என்ற வகையில் அது காலத்தால் நீண்டதாகக் காணப்படுகின்றது.

வீடு, கடை, வீதி, பள்ளிவாயல், வேலைத்தளம் உட்பட இறைவனுட னான தொடர்பு, குடும்பத்துடனான தொடர்பு, பிறருடனான தொடர்பு முதல் மிருகங்கள், சடப்பொருட்கள் வரையிலான அம்சங்கள் பற்றியெல்லாம் சுன்னா பேசுகின்றது. தேவையான வழிகாட்டல்களை வழங்குகின்றது. இந்த வைகயில் அது வாழ்வின் எல்லாப் பாகங்க ளையும் தழுவி அகலமாகத் திகழ்கின்றது.

ஸுன்னா மனித வாழ்வின் ஆழத்திற்கும் செல்கின்றது. அது மனிதனின் உடல், உள்ளம், அறிவு, ஆன்மா அனைத்தையும் வியாபித்து நிற்கின்றது. இக்காரணத்தால் ஸுன்னா ஆழமானது என்றும் வர்ணிக்கப்படுகின்றது.

இத்தகைய சிறப்புக்குரிய நபிவழியை தாமும் கற்றுப் பிறருக்கும் கற்பிப்பது ஒரு முஸ்லிமின் தலையாய கடமையாகும். ஸுன்னாவுக்குப் பணி செய்வோர் பற்றிக் குறிப்பிடும் நபி மொழிகளைக் காணும் போது அவர்கள் எத்தகைய மகத்தான பாக்கியத்தைப் பெறுகின்றனர் என்பதனை அறிய முடியும்.

'ஒருவர் எனது உம்மத்தினருக்கு ஒரு ஹதீஸை வழங்கி அதன் மூலம் ஒரு ஸுன்னத் நிலைநாட்டப்படும் போது அல்லது ஒரு பித்அத் ஒழியும் போது அவருக்கு சுவர்க்கம் கிட்டுகின்றது'. அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரழி) (ஆதாரம் : அல்ஹுஜ்ஜா அல்மக்திஸி)

'ஒருவர் இரு நபிமொழிகளைக் கற்றுத் தான் பயன்பெறுவதானது அல்லது பிறருக்குக் கற்பித்து அவர்கள் அதன் மூலம் பயனடைவதானது அவருக்கு அறுபது வருட வணக்கத்தை விடச் சிறந்ததாக அமையும்.' அறிவிப்பவர் அல்பர்ரா இப்னு ஆதிப் (ஆதாரம் : அல்ஹுஜ்ஜா அல்மக்திஸி)

இவைதவிர நபி (ஸல்) அவர்கள் தமது நபிமொழிகளை மக்கள் மத்தியில் பரப்பும் முயற்சியில் ஈடுபடுவோரை தமது பிரதிநிதிகள் என்றும் அத்தகையோர் மறுமையில் அறிஞர்களுடன் எழுப்பப்படுவார்கள். நபிமார்களுடன் இருப்பார்கள். தமது ஷபாஅத்தை பெறுவார்கள் என்றெல்லாம் கூறியுள்ள ஆதாரபூர்வமான பல ஹதீஸ்கள் உள்ளன.

இந்த வகையில் ஸுன்னாவுக்கு பணிபுரிந்து குறித்த பேறுகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும் எனும் தூய நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறு முயற்சியாகவே இந்நூல் அமைந்துள்ளது.

இன்று பலரால் பிழையாக விளங்கப்பட்டுள்ள இஸ்லாத்தின் பல அடிப்படைகளிற் சிலவற்றை நபிமொழிகளினதும் அவற்றுக்கான இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கங்களினதும் வெளிச்சத்தில் சரியாக புரியவைப்பதற்கும் ஒருவர் தனது வாழ்வை இஸ்லாமிய அடிப்படையில் அமைத்துக்கொள்வதற்குத் தேவையான சில முக்கிய வழிகாட்டல்களை வழங்குவதற்கும் இந்நூலில் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான விளக்கங்கள் 'இஸ்லாமிய சிந்தனையில் ' ஏற்கனவே பிரசுரமானவையாகும்.

 


கல்வி கற்றல் கற்பித்தல்


இஸ்லாத்தில் அறிவின் முக்கியத்துவம் பற்றி பொதுப்படையாகப் பேசும் ஓரிரு நூல்கள் தமிழில் வெளிவந்துள்ள போதிலும் கல்வி பற்றியும் கற்றல், கற்பித்தல் தொழிற்பாடு தொடர்பாகவும் இஸ்லாமிய நோக்கில் விளக்குகின்ற நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளதாகத் தெரியவில்லை. இக்குறையை ஓரளவேனும் நிவர்த்தி செய்வதே இச்சிறு நூலின் நோக்கமாகும்.

முஸ்லிம் ஆசிரியர்களுக்குப் பொதுவாகவும் பாடசாலைகளிலும் அஹதிய்யா முதலான சன்மார்க்க வகுப்புகளிலும் இஸ்லாம் போதிக்கின்ற ஆசிரியர்களுக்குக் குறிப்பாகவும் கற்றல், கற்பித்தல் பற்றி இஸ்லாமிய அடிப்படையில் சில வழிகாட்டல்களை வழங்குவது இந்நூலின் பிரதான குறிக்கோளாகும். இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கும் இந்நூல் பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றேன். அரபுக்கலாசாலைகளின் போதனாசிரியர்களுக்கும் இது ஒரு வழிகாட்டியாக அமைதல் வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

 

 


 

நபிவழி - 02

அல்குர்ஆனுக்கு நடைமுறை விளக்கமாக அமைந்திருப்பது ஸுன்னா. முஸ்லிம் தனிமனிதனுக்கும் இஸ்லாமிய சமூகத்துக்குமான செயல்முறையுடன் கூடிய விரிவான வாழ்க்கை நெறியை வகுத்துக் கொடுப்பது அதுவே.

தமது சொல்லாலும் செயலாலும் தமது வாழ்க்கைப் போக்கினாலும் அல்குர்ஆனுக்கு நடைமுறை விளக்கம் கொடுத்தவர்கள் நபி (ஸல்) அவர்கள். அன்னாரின் அந்தரங்கம், பகிரங்கம், தூக்கம், விழிப்பு, சொந்த வாழ்வு, பொது வாழ்வு, அல்லாஹ்வுடனான தொடர்பு, உறவினர்கள், அந்நியர்கள், நண்பர்கள், பகைவர்கள் ஆகியோருடனான நிலைப்பாடுகள் உட்பட பிற நடவடிக்கைகள் அனைத்தும் அல்குர்ஆனைப் பிரதிபலிப்பனவாக அமைந்தன.

எனவே, ஒருவர் ஸுன்னா வகுத்துக் காட்டும் வாழ்க்கை நெறியை அறிந்து கடைப்பிடிக்க முன்வரும் போதே அவர் இஸ்லாத்தை ஏற்று வாழ அருகதையுடையவராகின்றார். இவ்வகையில், ஸுன்னாவை அதன் மூல உருவில் விளங்குவது ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் முதல் தரக் கடமைகளில் ஒன்றாக அமைகின்றது. அப்போதுதான் அவரால் ஸுன்னாவை முறையாகப் பின்பற்ற முடியும்.

ஆனால், நடைமுறையில், ஸுன்னாவின் முக்கியத்துவமும் அவசியமும் உணரப்பட்டாலும் பலர் ஹதீஸ்களை நபி (ஸல்) அவர்கள் அவற்றின் மூலம் கருதியதைப் புரிந்து கொள்வதில் தவறிவிடுவது அவதானிக்கப்படுகின்றது.

இன்று ஸுன்னாவைப் பொறுத்தவரையில் திரிபுகள், இடைச்செருகல்கள், பிழையான விளக்கங்கள் பரவலாக இடம்பெறுகின்றன. பிற்பட்ட காலத்தில் ஸுன்னாவுக்கு ஏற்படக் கூடிய இத்தகைய ஆபத்துக்களிலிருந்து அதனைப் பாதுகாப்பது அவ்வக்கால அறிஞர்களின் கடமை என முன்னறிவிப்புச் செய்யும் ஒரு ஹதீஸும் உண்டு. அது கீழ்வருமாறு:

'இந்த (ஸுன்னா என்ற) அறிவை ஒவ்வொரு சந்ததியிலும் நியாயமானவர்கள் (அறிஞர்கள்) சுமப்பர். அவர்கள் அதனை வரம்பு மீறியோரின் திரிபு, குழப்பவாதிகளின் இடைச்செருகல், அறிவீனர்களின் விளக்கம் ஆகியவற்றிலிருந்து காப்பர்.' (இப்னு ஜரீர், இப்னு அதீ)

மேற்குறிப்பிட்ட குறைகள் ஏற்படுவதனைக் தவிர்ப்பதற்கு ஸுன்னாவைக் கையாளும் ஒருவர், சில அம்சங்களைப் பற்றிய தெளிவைப் பெற்றிருப்பது முக்கியம். அவற்றில் பிரதானமானவை பின்வருமாறு:

   1. ஸுன்னா என்ற பதப்பிரயோகமும் அதற்குரிய வரைவிலக்கணங்களும்
   2. இஸ்லாத்தில் ஸுன்னாவுக்குரிய இடம்
   3. ஸுன்னாவின் வகைகள், தராதரங்கள்
   4. ஸுன்னா தொடர்பான மூலாதார நூல்கள்
   5. ஸுன்னாவைச் சரியாக விளங்கிக் கொள்வதற்கான விதிமுறைகள்

ஸுன்னாவைப் படிக்க விரும்பும் எவரைப் பொறுத்தவரையிலும், இவ்வம்சங்கள் பற்றிய தெளிவை அவர் பெற்றிருப்பது இன்றியமையாததாகும்.

மேலும், ஒருவர் நடைமுறையில் ஒரு ஹதீஸை அணுகும் போது முதலில் அதன் நம்பகத்தன்மையையும் தரத்தையும் உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

அடுத்த கட்டமாக குறித்த ஹதீஸ் அதனை விடத் தரத்தில், பலத்தில் கூடிய ஒரு சட்ட வசனத்துடன் முரண்படுகின்றதா என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளல் வேண்டும்.

இறுதியாக, உரிய விதிமுறைகளினடியாக அந்த ஹதீஸ் முன்வைக்கும் கருத்தை - உள்ளடக்கத்தை முடியுமான வரை மிகச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு முனைய வேண்டும்.

உண்மையில், ஒவ்வொரு ஹதீஸின் மூலமும் நபி (ஸல்) அவர்கள் கூற வந்த கருத்து எது என்பதனைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. வெறுமனே மொழி ரீதியாக மாத்திரம் ஹதீஸ் ஒன்றை விளங்க முற்படுவது பாரதூரமான பிழைகளுக்கு இட்டுச் செல்லக் கூடியதாகும்.

ஒரு ஹதீஸை அணுகும் போது, அதனை மொழி ரீதியில் நோக்குவது போன்றே அதன் வசனப் போக்கு, அது சொல்லப்பட்ட பின்னணி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும் அல்குர்ஆன் வசனங்கள், பிற நபிமொழிகள், பொதுவான சன்மார்க்க விதிகள் முதலியவற்றின் ஒளியிலும் நோக்கியே விளங்க வேண்டும்.

ஹதீஸ்களில் சட்டவாக்கத்திற்குட்பட்டவை, உட்படாதவை, பொதுப்படையாக வந்தவை, குறிப்பாக (ஒரு சந்தர்ப்பத்திற்காக) வந்தவை ஆகியவற்றைப் பிரித்து அறிந்து கொள்வதும் தேவையான ஒன்றாகும்.

ஸுன்னாவைச் சரியாக விளங்கிக் கொள்வதற்கு கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி அவர்கள் சில அடிப்படையான வழிகாட்டல்களை முன்வைக்கின்றார்கள். அவற்றின் சுருக்கம் பின்வருமாறு:

   1. ஸுன்னாவை அல்குர்ஆனின் ஒளியில் விளங்க வேண்டும்
   2. ஒரு ஹதீஸை விளங்கிக் கொள்வதற்கு, அது பேசும் விடயம் தொடர்பான எல்லா ஹதீஸ்களையும் திரட்டி இணைத்து நோக்கல் வேண்டும்
   3. முரண்படும் ஹதீஸ்களுக்கிடையில் இணக்கம் காணல்வேண்டும். அல்லது பலமானதைத் தெரிவு செய்தல் வேண்டும்
   4. ஹதீஸ்களை, அவை கூறப்பட்ட பின்னணிகள், நோக்கங்கள் ஆகியவற்றை வைத்து அணுகுதல் வேண்டும்
   5. ஹதீஸகள் கூற வரும் அடிப்படைக் கருத்துக்களையும் அவற்றுக்குக் கூறப்படும் சந்தர்ப்ப உதாரணங்களையும் பிரித்து விளங்கல் வேண்டும்
   6. ஹதீஸ்களில் வெளிப்படையான பொருளில் கூறப்பட்ட கருத்துக்களையும் உருவகமாகக் கூறப்பட்டுள்ளவற்றையும் பகுத்தறிதல் வேண்டும்
   7. ஹதீஸகளில் இடம்பெற்றுள்ள சொற்பிரயோகங்கள் உணர்த்தும் கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

இத்தகைய வழிகாட்டல்களைப் பேணி ஹதீஸ்களைக் கையாளும் போதே அவற்றின் மூலம் நாடப்பட்ட கருத்துக்களை விளங்கிப் பயனடைய முடியும்.


இஸ்ராவும் மிஃராஜும் : ஒரு புதிய பார்வை


சில வருடங்களுக்கு முன்னர் மிஃராஜ் தினத்தை முன்னிட்டு இலங்கை வானொலியின் முஸ்லிம் நிகழ்ச்சியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு ஓர் உரை நிகழ்த்துமாறு வேண்டப்பட்டேன். இவ்விடயம் பற்றி இவ்வளவு நேரம் பேசுவதற்கு என்ன இருக்கின்றது என்றே எனக்கு ஆரம்பத்தில் தோன்றியது. ஆயினும், இஸ்ரா, மிஃராஜ் தொடர்பான நூல்களை எடுத்து வாசித்த போதே இது, எவ்வளவு விரிவாக நோக்கப்படத்தக்க, ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கைக்குத் தேவையான பயனுள்ள பல வழிகாட்டல்களைக் கொண்ட ஒரு மகத்தான நிகழ்வு என்பதை என்னால் உணர முடிந்தது.

பலரின் பார்வையில் நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட இவ்விண்ணுலக யாத்திரை ஓர் அற்புத நிகழ்ச்சியாக மாத்திரமே நோக்கப்படுகின்றது. ஒரு முஸ்லிமின் இஸ்லாமிய வாழ்வுக்கான ஒரு முழுமையான திட்டத்தையே இது வகுத்தளிக்கின்றது. அதனைச் செய்முறையில் படம்பிடித்துக் காட்டுகின்றது என்ற உண்மையை உணர்ந்தவர்கள் ஒரு சிலரே இருக்க முடியும்.

இஸ்ராவையும் மிஃராஜையும் இத்தகைய பரந்ததொரு கண்ணோட்டத்தில் அணுகி குறித்த எனது வானொலி உரையை அமைத்துக்கொள்ள அல்லாஹுத்தஆலா தௌபீக் செய்தான்.

 

 


சன்மார்க்க சட்ட விளக்கங்கள் - (கேள்வி - பதில்)

 

ஒரு முஸ்லிம் தனது வாழ்வை இஸ்லாமிய மயப்படுத்திக் கொள்வதாயின் சிறிய, பெரிய விடயங்கள் அனைத்திலும் இஸ்லாத்தின் நிலைப்பாட்டை, ஹலால், ஹராம் பற்றிய விபரங்களை அறிந்து வைத்திருப்பது இன்றியமையாததாகும். அவ்வாறில்லாத போது அவர் இஸ்லாத்தின் பேரிலேயே பல பாவங்களையும் தவறுகளையும் செய்வது தவிர்க்க முடியாதவொன்றாய் இருக்கும்.

இன்று நாம் காணும் உலகளாவிய இஸ்லாமிய எழுச்சியின் விளைவாக முஸ்லிம்கள் மத்தியில் எந்தவொரு பிரச்சினையின் போதும் அது பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பை அறிந்து கொள்வதில் ஒரு வகை முனைப்பு காணப்படுவது தெளிவாக அவதானிக்கப்படுகின்றது. சில வருடங்களுக்கு முன்னால் நளீமிய்யா வெளியீட்டுப் பணியகத்தின் பருவ வெளியீடான இஸ்லாமிய சிந்தனையில் பிக்ஹுஷ்ஷரீஆ என்ற பேரில் கேள்வி - பதில் பகுதியொன்றை அறிமுகப்படுத்தி ஆரம்பித்தபோது வந்து குவிந்த கேள்விகள் இதற்கு சிறந்த சான்றாகும்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள சட்ட விளக்கங்கள் எனது சொந்த ஆய்வினடிப்படையில் பிறந்தவையல்ல. மாறாக அல்குர்ஆன், அஸ்ஸுன்னா ஆகியவற்றின் ஒளியிலும் ஆரம்பகால இமாம்களின் தீர்ப்புகளைத்தழுவியும் அமைந்தவையாகும். மேலும், பல சட்ட விளக்கங்களை எழுதுவதில் குறிப்பாக நவீன கால பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதில் ஆரம்பகால அறிஞர்களின் ஆக்கங்களைப் போலவே அஷ்ஷெய்க் யூஸுப் அல்கர்ளாவி, அஷஷெய்க் முஹம்து அல்கஸ்ஸாலி, மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி, ஸெய்யித் ஸாபிக் உட்பட மற்றும் பல பிற்பட்டகால, சமகால அறிஞர்களின் எழுத்துக்கள் எமக்கு பேருதவியாக அமைந்தன என்பதையும் இங்கு நன்றியுடன் நினைவு கூற விரும்புகின்றேன்.

We have 22 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player