நூற்கள் - நபிவழி - 01
Last Updated (Saturday, 01 November 2008 07:34) Thursday, 30 October 2008 07:45
நபிவழி - 01
ஸுன்னா, ஹதீஸ் இஸ்லாத்தின் இரண்டாவது சட்ட மூலாதாரமாகும். அதனை முதல் மூலாதாரமான அல்குர்ஆனுடன் சம தரத்தில் வைத்து நோக்கும் அறிஞர்களும் உளர்.
ஸுன்னாவானது அகீதா, ஷரீஆ, அஃலாக் உட்பட இஸ்லாத்தின் அனைத்துத் துறைகளுக்குமான மூலாதாரமாகக் கொள்ளப்படுகிறது. இந்தவகையில் அது வாழ்வின் எல்லாத் துறைகளுக்குமான வழிகாட்டல்களைத் தன்னகத்தே பொதிந்ததாக காணப்படுகிறது.
உண்மையில் ஸுன்னா நீளத்தால் அகலத்தால் ஆழத்தால் முழுமை பெற்றதாகத் திகழ்கின்றது. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கையை, ஏன் பிறப்புக்கு முன்னர் கருவாக, சிசுவாக இருந்தது முதல் இறப்புக்குப் பிந்திய வாழ்வையும் கவனத்திற் கொண்டதாக அமைந்துள்ளது என்ற வகையில் அது காலத்தால் நீண்டதாகக் காணப்படுகின்றது.
வீடு, கடை, வீதி, பள்ளிவாயல், வேலைத்தளம் உட்பட இறைவனுட னான தொடர்பு, குடும்பத்துடனான தொடர்பு, பிறருடனான தொடர்பு முதல் மிருகங்கள், சடப்பொருட்கள் வரையிலான அம்சங்கள் பற்றியெல்லாம் சுன்னா பேசுகின்றது. தேவையான வழிகாட்டல்களை வழங்குகின்றது. இந்த வைகயில் அது வாழ்வின் எல்லாப் பாகங்க ளையும் தழுவி அகலமாகத் திகழ்கின்றது.
ஸுன்னா மனித வாழ்வின் ஆழத்திற்கும் செல்கின்றது. அது மனிதனின் உடல், உள்ளம், அறிவு, ஆன்மா அனைத்தையும் வியாபித்து நிற்கின்றது. இக்காரணத்தால் ஸுன்னா ஆழமானது என்றும் வர்ணிக்கப்படுகின்றது.
இத்தகைய சிறப்புக்குரிய நபிவழியை தாமும் கற்றுப் பிறருக்கும் கற்பிப்பது ஒரு முஸ்லிமின் தலையாய கடமையாகும். ஸுன்னாவுக்குப் பணி செய்வோர் பற்றிக் குறிப்பிடும் நபி மொழிகளைக் காணும் போது அவர்கள் எத்தகைய மகத்தான பாக்கியத்தைப் பெறுகின்றனர் என்பதனை அறிய முடியும்.
'ஒருவர் எனது உம்மத்தினருக்கு ஒரு ஹதீஸை வழங்கி அதன் மூலம் ஒரு ஸுன்னத் நிலைநாட்டப்படும் போது அல்லது ஒரு பித்அத் ஒழியும் போது அவருக்கு சுவர்க்கம் கிட்டுகின்றது'. அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரழி) (ஆதாரம் : அல்ஹுஜ்ஜா அல்மக்திஸி)
'ஒருவர் இரு நபிமொழிகளைக் கற்றுத் தான் பயன்பெறுவதானது அல்லது பிறருக்குக் கற்பித்து அவர்கள் அதன் மூலம் பயனடைவதானது அவருக்கு அறுபது வருட வணக்கத்தை விடச் சிறந்ததாக அமையும்.' அறிவிப்பவர் அல்பர்ரா இப்னு ஆதிப் (ஆதாரம் : அல்ஹுஜ்ஜா அல்மக்திஸி)
இவைதவிர நபி (ஸல்) அவர்கள் தமது நபிமொழிகளை மக்கள் மத்தியில் பரப்பும் முயற்சியில் ஈடுபடுவோரை தமது பிரதிநிதிகள் என்றும் அத்தகையோர் மறுமையில் அறிஞர்களுடன் எழுப்பப்படுவார்கள். நபிமார்களுடன் இருப்பார்கள். தமது ஷபாஅத்தை பெறுவார்கள் என்றெல்லாம் கூறியுள்ள ஆதாரபூர்வமான பல ஹதீஸ்கள் உள்ளன.
இந்த வகையில் ஸுன்னாவுக்கு பணிபுரிந்து குறித்த பேறுகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும் எனும் தூய நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறு முயற்சியாகவே இந்நூல் அமைந்துள்ளது.
இன்று பலரால் பிழையாக விளங்கப்பட்டுள்ள இஸ்லாத்தின் பல அடிப்படைகளிற் சிலவற்றை நபிமொழிகளினதும் அவற்றுக்கான இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கங்களினதும் வெளிச்சத்தில் சரியாக புரியவைப்பதற்கும் ஒருவர் தனது வாழ்வை இஸ்லாமிய அடிப்படையில் அமைத்துக்கொள்வதற்குத் தேவையான சில முக்கிய வழிகாட்டல்களை வழங்குவதற்கும் இந்நூலில் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான விளக்கங்கள் 'இஸ்லாமிய சிந்தனையில் ' ஏற்கனவே பிரசுரமானவையாகும்.