இன்றைய தஃவாவில் முன்னுரிமை பெற வேண்டிய அம்சங்கள்


கடந்த மாதம் (20.05.2015) அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற விஷேட தேசிய மாநாட்டில் ஜம்இய்யதுல் உலமாவின் துணைத் தலைவரும் ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் ஆற்றிய உரையின் சாராம்சத்தை அல்ஹஸனாத் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

அவ்வக்கால பிரச்சினைகளுக்கு, சவால்களுக்கு முகங்கொடுத்து இஸ்லாத்தின் ஔியில், குர்ஆன், ஸுன்னாவின் வௌிச்சத்தில் தீர்வுகளை முன்வைக்கின்ற ஒரு செயற்பாடுதான் தஃவா. தூய இஸ்லாம் எதிர்நோக்குகின்ற சவால்களுக்கும் அறைகூவல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் முகங்கொடுப்பதுதான் தஃவா என்று வேறு வார்த்தைகளில் சொன்னாலும் பிழையாக இருக்க மாட்டாது. முன்னுரிமை என்ற அம்சம் இஸ்லாமிய ஷரீஆவில் குறிப்பாக, இஸ்லாமிய பிக்ஹில் முக்கியத்துவம் பெறுகின்ற விடயமாகும். எனவேதான் இது பிக்ஹுல் அவ்லவிய்யாத்  என ஒரு கலையாக தோற்றம் பெற்றிருக்கிறது.

இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய போதனைகள், வாழ்க்கை வழிமுறை, குலபாஉர் ராஷிதூன்களின் வாழ்க்கை வழிமுறை, பிற்பட்ட கால ஸலபுகளின் வாழ்க்கை வழிமுறை ஆகியவற்றை உற்றுநோக்குகின்றபோது அவர்கள் அவ்லவிய்யாத் என்ற முன்னுரிமைகளை கவனத்திற் கொண்டு தமது தஃவா பணியை எவ்வாறு அமைத்துக் கொண்டார்கள் என்பதனை அவதானிக்க முடியும்.

இறைதூதரின் மக்கா கால வாழ்க்கை அகீதாவுக்கு, இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டுக்கு அழுத்தம் கொடுக்கின்ற, முக்கியத்துவம் கொடுக்கின்ற, முன்னுரிமை கொடுக்கின்ற வகையிலேயே அமைந்தது. ஒப்பீட்டு ரீதியில் நபியவர்களின் மதீனா வாழ்க்கைக் காலத்தைப் பொறுத்தவரை, அதில் முஆமலாத் என்ற பகுதிகளுக்கும் ஏனைய பகுதிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கின்றோம். மக்காவில் இறக்கப்பட்ட அல்குர்ஆன் வசனங்கள், அத்தியாயங்கள் அகீதாவுக்கு அதிக முக்கியத்துவம் பேசுகின்றன. மதீனாவில் இறக்கப்பட்ட ஸூராக்களில் அகீதா சார்ந்த அம்சங்களோடு அஹ்காம், முஆமலாத் முதலான பகுதிகளுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வாறே மக்கா காலத்தில் நபியவர்கள் முஷ்ரிக்களுடைய விவகாரங்களை முன்னுரிமைப்படுத்தினார்கள்.

நபியவர்கள் மதீனாவுக்குச் சென்றதன் பின்னர் முஷ்ரிக்களுடைய விவகாரங்களை கவனத்திற் கொண்டது போலவே அஹ்லுல் கிதாப் சார்ந்த விவகாரங்களுக்கு குறிப்பாக யூதர்கள், நஸாராக்களுடைய விவகாரங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து செயற்பட்டதற்கு நபி (ஸல்லல்லாஹு0 அலைஹி வஸல்லம்) அவர்களின் ஸீரா தௌிவான சான்றாதாரம். சற்று ஆழமாக பார்க்கின்றபோது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அத்தனை செயற்பாடுகளிலும் முன்னுரிமை என்ற  கருத்தாழம் அவதானமாக கையாளப்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடியும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பங்கேற்ற போராட்டங்களிலும் முன்னுரிமை என்ற எண்ணக்கரு பிரயோகிக்கப்பட்டுள்ள நுட்பங்களைக் கற்றுக் கொள்ள முடியும். உதாரணமாக, பத்ர் யுத்தத்தில் சிறைபிடிக்கப்பட்ட கைதிகள் விவகாரத்தில் எத்தகையதொரு நிலைப்பாட்டுக்கு வருவது? எது மிகப் பொருத்தமான நிலைப்பாடு? எதில் அதிக நலன் (மஸ்லஹா) இருக்கிறது? எதில் குறைந்த தீங்கு (மப்ஸதா) இருக்கிறது? என்பதையெல்லாம்  நபியவர்கள் சீர்தூக்கிப் பார்த்து, ஸஹாபாக்களின் ஆலோசனைகளைப் பெற்று தீர்மானங்களை திறம்பட மேற்கொண்டார்கள்.

அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கைதிகள் விடயத்தில் ஒரு நிலைப்பாட்டை முன்வைத்த அதேநேரம், உமர் இப்னு கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மற்றுமொரு நிலைபாட்டை முன்மொழிகிறார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அது தொடர்பாக இறுதித் தீர்மானத்தை எடுக்கிறார்கள். அல்குர்ஆன் அது விடயத்தில் நபியவர்களுக்கு வேறோரு வழிகாட்டலை வழங்கியது. தீர்மானம் மேற்கொள்ளும் படிமுறைகளின்போது ‘‘நலன்களை முன்னுரிமைப்படுத்தி கேடுகளைத் தவிர்த்தல்’’ (ஜல்புல் மஸாலிஹ் வதர்குல் மபாஸித்) முதலான அம்சங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டிருப்பதை பார்க்கின்றோம்.

ஒரு விடயத்திலுள்ள நலன்கள், கெடுதிகள் என்பவற்றை ஒப்பிட்டுப் பார்த்து,  அலசி ஆராய்ந்து சிறிய நலனையும் பெரிய கெடுதிகளையும் ஏற்படுத்தக்கூடிய  நிலைப்பாட்டை தவிர்க்கவும் பெரிய நலனையும் சிறிய கெடுதிகளையும் ஏற்படுத்தக்கூடிய நிலைப்பாட்டை தெரிவுசெய்யவும்  துணைபுரிகின்ற ஒரு கலையே பிக்ஹுல் அவ்லவிய்யாத் ஆகும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முன்னுரிமை:

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நலன்கள், கெடுதிகளை தூரநோக்கோடு பார்த்து அதனடிப்படையில்  தீர்மானங்களை மேற்கொண்டமைக்கு ஹுதைபியா உடன்படிக்கை மிகச் சிறந்த சான்று. உடன்படிக்கையின்போது குறைஷிக் காபிர்கள் தரப்பில் பல ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டன.  உடன்படிக்கை எழுதும்போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று  ஆரம்பிக்கப்பட்டமை குறைஷிக் காபிர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியது. ‘‘பிஸ்மிக அல்லாஹும்ம’’ என்று மாத்திரமே எழுதப்பட வேண்டும் எனவும் ‘‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’’ என்ற வார்த்தைப் பிரயோகம் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் காட்டமாக கூறினர்.  நபியவர்கள் குறைஷிகளின் வேண்டுகோளுக்கு எவ்வித மறுப்புமின்றி செவிசாய்த்தார்கள்.

மேலோட்டமாக பார்க்கின்றபோது இது ஓர் இழுக்கு போல் தோற்றினாலும் இதனால் அடையப்பெற்ற நன்மைகளை வைத்து சீர்தூக்கிப் பார்ப்பின் இதுவே சாணக்கியமா தெரிவு என்ற முடிவுக்கு வரலாம். நபியவர்களின் தூரநோக்கு சில விட்டுக்கொடுப்புகளினூடாக நிலையான நன்மைகளை அடைய வழிவகுத்தது. இது பற்றி அல்குர்ஆன் ‘‘நபியே! மிகத் தௌிவான வெற்றியை உங்களுக்குத் தந்தோம்’’ என்று கூறுகின்றது.

கத்தியில்லாத, இரத்தமில்லாத யுத்தத்தில் கிடைத்த மாபெரும் வெற்றியாக ஹுதைபியா உடன்படிக்கையை எடுத்துக்கொள்ள முடியும். ஹுதைபியா உடன்படிக்கைதான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அழைப்புப் பணி வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாகும். அதன் விளைவு மக்கா வெற்றியும் அதனைத் தொடர்ந்து வந்த எல்லா வெற்றிகளும் என்றால் அதில் மிகையில்லை.

முஅத்தா போராட்டத்தின்போது காலித் இப்னு வலீத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு கட்டத்தில் படையை வாபஸ் பெறுகிறார்கள். போராட்டக் களத்திலிருந்து புறமுதுகு காட்டி பின்வாங்குதல் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக இருப்பினும்கூட,  இஸ்லாமிய படையினரின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய ஓர் இக்கட்டான, கட்டாயத் தேவை வரும் பட்சத்தில் பின்வாங்குவதை தவிர மாற்றுவழி இல்லை. அதுதான் இந்த கட்டத்திலே மிகப் பெரிய நலன் (மஸ்லஹா). ஒரு பெரிய நன்மையை அடைவதற்காக ஒரு சிறிய தீமையைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் சாணக்கியம். அதனையே காலித் இப்னு வலீத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் செய்தார்கள்.

எனவே, தஃவாப் பணியில் இத்தகைய முன்னுரிமைப் பார்வை இல்லாதபோது தஃவாவின் பெயரால் ஏற்படும் நன்மைகளைவிட தீமைகளே அதிகரிக்கும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய தஃவாப் பணியிலும் இதற்கான முன்மாதிரிகள் ஏராளம். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்கா காலத்தில் தர்பியா, தஸ்கியா பகுதிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள். பொறுமையை கடைபிடிக்குமாறும் முரண்படாமல் இருக்குமாறும் முஸ்லிம்களை அறிவுறுத்திக் கொண்டே வந்தார்கள். அநீததியிழைக்கும் மக்கத்து குறைஷிகள் விடயத்தில் ஒதுங்கிச் செல்லுமாறும் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ளுமாறும் வலியுறுத்தினார்கள். அக்காலகட்டத்தில் ஆயுதம் ஏந்துமாறு முஸ்லிம்களுக்கு வழிகாட்டல் வழங்கவில்லை. மக்கா காலத்தில் அந்த சிறிய நம்பிக்கையாளர் அணியை கட்டிக்காக்கின்ற, அவர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துகின்ற மிகப் பெரிய கடப்பாடு தனக்கிருப்பதாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கருதினார்கள்.

எனவே, ஆரம்ப காலத்தில் அமைதி காத்து முஸ்லிம்கள் மனதளவிலும் பொருளாதார ரீதியிலும் தயாரான பிறகுதான் போராட்டத்துக்கான அனுமதி வழங்கப்பட்டதை நாம் பார்க்கின்றோம். அதாவது நடைமுறை நிலைவரத்தை அறிந்து, சந்தர்ப்பங்கள், சவால்களை முன்னுரிமைப்படுத்தி அதற்கூடாக இறுதித் தீர்மானத்திற்கு வருவதுதான் உண்மையான தஃவாவாக இருக்க முடியும்.

பிக்ஹுல் அவ்லவிய்யாத், பிக்ஹுல் முவாஸனாத் என்பன முக்கியத்துவம் பெறுவது போல பிக்ஹுல் வாகிஇ (சமகாலம் பற்றிய அறிவு) அவசியமானது. அதாவது சமகால நிகழ்வுகள் பற்றிய அறிவுபூர்வமான, விஞ்ஞானபூர்வமான மதிப்பீடு இன்றியமையாதது. அந்த மதிப்பீடுகளுக்கூடாகத்தான் எமது அடுத்தக் கட்ட தஃவா நகர்வுகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இதனை ஆரம்பகால இமாம்கள் பிக்ஹுந் நவாஸிர் என்று அழைத்தார்கள். இவ்விதமான சாணக்கிய கண்ணோட்டம் இல்லாதபட்சத்தில் நிச்சயமாக தஃவாவின் பெயரில் பிரச்சினைகளையே நாம் சந்திக்க வேண்டி இருக்கும்.

முதல் ஹிஜ்ரத்துக்காக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஏன் அபீஸீனிய மண்ணைத் தெரிவுசெய்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்க்கும்போது பலவிதமான உண்மைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. அன்றைய கால சூழ்நிலையை வைத்து நோக்குகின்றபோது, அரசியல், பொருளாதார, புவியியல், இராஜ தந்திர கண்ணோட்டத்தில் ஆராயும்போது அபீஸீனியாதான் தன்னுடைய தோழர்களுக்கு மிகவும் பாதுகாப்பானது என்று நபியவர்கள் தீர்மானித்தார்கள். அபீஸீனியாவின் ஆட்சியாளர் நீதியானவர் நியாயமானவர் அவர் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டார் என்ற நம்பிக்கை நபியவர்களுக்கிருந்தது.

முதல் ஹிஜ்ரத்துக்காக அபீஸீனியா தெரிவுசெய்யப்பட்டதும், இரண்டாம் ஹிஜ்ரத்துக்காக மதீனா தெரிவு செய்யப்பட்டதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய அவ்லவிய்யாத் பார்வைக்கும் முவாஸனாத் பார்வைக்கும் வாகிஇ பார்வைக்கும் மிகச் சிறந்த உதாரணங்கள் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். நபியவர்களின் அழைப்புப் பணியில் அல்மஆலாத் எனப்படும் பின்விளைவுகளை கவனத்திற் கொண்டு தீர்மானங்களை எடுத்தல் எனும் கண்ணோட்டம் மிகைத்திருந்தது. குறித்ததொரு நகர்வு எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று முன்கூட்டியே சிந்தித்து முடிவுகளைப் பெறும் கலையே இன்று பிக்ஹுல் மஆலாத் என்று அழைக்கப்படுகிறது. எனவே, அழைப்புப் பணியில் ஈடுபடுகின்ற ஓர் ஆலிம், ஒரு தாஇ கண்டிப்பாக இந்தக் கலைகள் பற்றிய அறிவைப் பெற்றிருப்பது இன்றியமையாதது மாத்திரமல்ல, மிகப் பெரிய அமானிதமும் கூட.

மதீனாவில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பல பணிகள், பொறுப்புகள் காணப்பட்டன. ஆனால், நபியவர்கள் ஒரு மஸ்ஜித்தை நிறுவுவதற்கு முதல்தர முன்னுரிமை கொடுத்தார்கள். ஏனென்றால், தனக்கென்று ஒரு தலைமை பீடம், தளம், களம் இருப்பது இன்றியமையாதது எனவும் அதற்குப் பிறகுதான் அடுத்த கட்டங்களை நோக்கி நகர வேண்டும் எனவும் கருதினார்கள். நபியவர்களின் முழு வாழ்விலும் இத்தகைய பார்வை இருந்திருக்கிறது என்பதை ஸீராவை நுணுக்கமாகப் படிக்கும் எவரும் ஏற்றுக் கொள்வர்.

நபித் தோழர்கள் வாழ்வில் முன்னுரிமை:

குலபாஉர் ராஷிதூன்கள் தமது அனைத்து விதமான நகர்வுகளின்போதும் முன்னுரிமை எண்ணக்கருவை மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள்.

அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கலீபாவாக நியமிக்கப்பட்டபோது ஏக காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தார்கள். அத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றபோது அவ்லவிய்யாத் அடிப்படையில் அவரது நடவடிக்கைகள் அமைந்திருந்தன. மதம் மாறியோரின் பிரச்சினை, ஸகாத் தர மறுப்பவர்கள், போலி நபிமார்கள் என திக்கெங்கும் பிரச்சினைகள் சூழ்ந்திருந்த காலப்பகுதி அது. இவற்றுக்கு மத்தியில் அபூபக்ர் ஸித்தீக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்  ஏற்கனவே தயார்படுத்தி வைத்திருந்த உஸாமா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் படையை போருக்காக அனுப்பிவைக்க தீர்மானித்தார்கள். உள்நாட்டிலேயே தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் இருக்கின்ற நிலையில், இஸ்லாமிய படை அயல் நாட்டுக்குச் சென்று போர் புரிவது பொருத்தமானதல்ல என்று பல நபித் தோழர்கள் தமது  எதிர்ப்பை வௌியிட்டனர்.  எனினும், தற்போதைய நிலையில் முதல்தர முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது இறைத் தூதரின்  முடிவை அமுல்படுத்துவது என்ற நிலைப்பாட்டை  அபூபக்ர் ஸித்தீக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் எடுத்தார்கள்.

ஸகாத் கொடுக்க மறுத்தவர்களோடு போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தும் அந்த சமூகத்தில் நிலவியது. ஆனால், அபூபக்ர் ஸித்தீக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள், ‘‘அல்லாஹ்வும் ரஸூலும் இணைத்துச் சொன்ன தொழுகையையும் ஸகாத்தையும் யார் பிரிக்க விரும்புகிறாரோ அவரோடு நான் இறுதிவரை போராடுவேன். எந்தளவுக்கென்றால், அல்லாஹ்வின் ரஸூல் வாழ்ந்த காலத்தில் ஒருவர் ஸகாத்தாக ஒட்டகத்தையும் ஒட்டகத்தினுடைய கயிற்றையும் சேர்த்து கொடுத்தவர், இப்போது ஒட்டகத்தை மாத்திரம் தந்து அதன் கயிற்றைத் தர மறுத்தால் அந்தக் கயிற்றை அவர் தரும் வரைக்கும் நான் அவரோடு போராடுவேன்’’ என்ற மிக உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார்கள்.

கண்டிப்பை வௌிப்படுத்த வேண்டிய இடத்தில் கண்டிப்பாகவும் நளினமாக இருக்க வேண்டிய இடத்தில் நளினமாகவும் நடந்து கொள்ளும் நடைமுறையை ஸலபுகள் பின்பற்றியிருக்கிறார்கள். தனக்குப் பிறகு உமர் இப்னு கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்தான் கலீபாவாக நியமிக்கப்பட வேண்டும் என்பதில் அபூபக்ர் ஸித்தீக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இஸ்லாமிய ஆட்சி வலுவூட்டப்பட வேண்டியதன் கட்டாயத் தேவையை உணர்ந்த அபூபக்ர் ஸித்தீக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள், அதற்கு மிகப் பொருத்தமானவர் உமர் இப்னு கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்தான் என்பதை நன்கு புரிந்து வைத்திருந்தார்கள்.

அக்காலகட்டத்தில் இஸ்லாமிய கிலாபத் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற தேவை இல்லாதிருந்தால் இன்னொருவர் ஆட்சிக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பார். ஆனால், அந்த சந்தர்ப்பத்தில் முன்னுரிமைக் கண்ணோட்டத்தில் நடைமுறை நிலைமைகளைக் கவனத்திற் கொண்டு, பின்விளைவுகளை ஆராய்ந்து உமர் இப்னு கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களே தனக்குப் பிறகு கலீபாவாக  ஆகுவதற்கு எல்லா வகையிலும் தகுதியானவர் என்ற முடிவை அபூபக்ர் ஸித்தீக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் எடுத்தார்கள்.

உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களும் அவ்லவிய்யாத் அடிப்படையில் மேற்கொண்ட  தீர்மானங்கள் ஏராளம். அவரது ஆட்சிக் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டில் கடுமையான பட்டினி நிலை ஏற்பட்டது. அப்போது திருடிய குற்றத்துக்கு வழங்கப்படும் ஹத் உடைய (கரத்தை துண்டித்தல்) சட்டத்தை இடை நிறுத்தினார்கள். நபியவர்களின் வழிகாட்டலை அடிப்படையாக கொண்டு கடுமையான பட்டினி நிலவும் சந்தர்ப்பத்தில் திருட்டுக் குற்றத்திற்கு கையைத் துண்டிக்கும் தண்டனை நிறைவேற்றப்படுவது பொருத்தமானதாக அமையாது எனக் கருதி அதனை தற்காலிகமாக இடைநிறுத்தி நாட்டின் பொருளாதார நிலை சீரடைந்த பின்னர் மீண்டும் அதனை அமுல்படுத்துவது என்ற நிலைப்பாட்டுக்கு வந்தார்கள் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்.

நான்காவது கலீபா அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குப் பின் ஹஸன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கிலாபத்துக்கு தகுதியானவராக இருந்தபோதிலும் முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அதற்கு சவால் விடுகிறார்கள். இந்தக் கட்டத்தில் ஹஸன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்  முவாஸனாவில் ஈடுபடுகிறார்கள். எனக்குரிய இந்த ‘‘கிலாபத்’’ பதவியை தொடர்வது முக்கியமா அல்லது முஸ்லிம்களின் இரத்தம் ஓட்டப்படுவதை தடுப்பது முக்கியமா? கிலாபத் பதவியை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வதை விட முஸ்லிம்களைப் பாதுகாப்பதுதான் அல்குர்ஆன், ஸுன்னாவின் வழிகாட்டலாக இருக்க முடியும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்து தனக்குரிய கிலாபத்தை அவர்கள் விட்டுக்கொடுத்து வரலாறு படைத்தார்கள். இதுவும் அவ்லவிய்யாத் பார்வைக்கு மிகத் தௌிவான சான்றாதாரம்.

உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய ஹதீஸ்களை, ஸுன்னாவைப் பாதுகாக்க வேண்டிய, அவற்றைத் தொகுத்து நூலுருப்படுத்த வேண்டிய ஒரு கடப்பாடு இருப்பதை இனங்கண்டார்கள். முதல்தர தஃவாப் பணியாக அதனை தெரிவு செய்தார்கள். இமாம் ஹஸனுல் பஸரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் வாழ்ந்த காலப் பகுதியில் ஆன்மிக வீழ்ச்சி பரவலாக இருப்பதை அடையாளம் கண்டு அவர்களுடைய தஃவாவில் தஸ்கியா, தர்பியா பகுதிகளுக்கு  அதிக முக்கியத்துவம் கொடுத்ததை வரலாறு பதிந்து வைத்திருக்கிறது.

இமாம் புகாரி உட்பட ஆறு இமாம்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த அறிஞர்கள் தாம் வாழ்ந்த  காலகட்டத்தில் ஹதீஸ்களைத் தொகுத்து இஸ்லாத்தின் இரண்டாவது அடிப்படை மூலாதாரமான ஸுன்னாவைப் பாதுகாக்கின்ற பணியை முதல் தர முன்னுரிமைப் பணியாக அடையாளம் கண்டு அதற்காக தமது முழு வாழ்வையும் அர்ப்பணம் செய்தார்கள். இமாம் அபூ ஹனீபா (ரஹிமஹுல்லாஹ்) முதல் இமாம் ஷாபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் வரை தமது காலத்து பணியாக குர்ஆன், ஸுன்னாவின் ஔியில் மக்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை, மார்க்க விளக்கங்களை கற்றுக் கொடுக்கின்ற பணிக்கு முன்னுரிமை அளித்து அதனை கச்சிதமாக நிறைவேற்றினார்கள்.

மற்றோரு புறம் இஸ்லாமிய அகீதாவுக்கு சவால்கள் விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அபுல் ஹஸன் அல்அஷ்அரி (ரஹிமஹுல்லாஹ்), மன்ஸூர் மாதுரூதி (ரஹிமஹுல்லாஹ்) முதலானோர் இஸ்லாமிய அகீதாவைப் பாதுகாக்கின்ற மிகப் பெரிய ஒரு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.  அவ்வக்கால சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்ற இந்த அவ்லவிய்யாத் பார்வையின் அடிப்படையில் கிரேக்க சிந்தனைகளுடைய செல்வாக்கை தமது இஸ்லாமிய அறிவின் ஔி கொண்டு தவிடு பொடியாக்கினார்கள். வழிகெட்ட சிந்தனைகளின் பாரதூரத்தை வௌிச்சம் போட்டுக்காட்ட வேண்டிய ஒரு தேவை இருப்பதை உணர்ந்து அதற்கேற்ப தங்களுடைய பணியை முன்னுரிமை அடிப்படையில் அமைத்துக் கொண்டார்கள்.

அவ்வாறே இமாம் கஸ்ஸாலி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இஸ்லாமிய கலைகளை ஒரு பாடத்திட்டமாக வகுத்து வழங்க வேண்டிய தேவையை உணர்கிறார்கள்.  அந்த வகையில் இஸ்லாமிய கல்வித் திட்டம், கலைத் திட்டம், பாட நூல் என்ற ஒழுங்கை உலகத்துக்கு அறிமுகப்படுத்திய பெருமை இமாம் கஸ்ஸாலி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களைச் சாரும். ஆனால், கவலைக்குரிய நிலைமை என்னவென்றால், இன்றைய கல்வியியலாளர்கள் மத்தியில் இமாம் கஸ்ஸாலி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களது பெயர் பேசப்படுவதில்லை. கல்வித் திட்டம், கலைத் திட்டம், பாட நூல் என்ற ஒழுங்கை அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய இமாம் கஸ்ஸாலி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்துகின்ற அந்தப் பணியை செய்ய தவறியிருக்கின்றோம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தவ்ஹீதின், வஹியின், ஈமானின் பிரகாசத்திற்கூடாக சடவாத, உலகாயத சிந்தனைச் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டிருந்த ஆயிரம் ஆயிரம் உள்ளங்களை ஔிமயமாக்கிய மிகப் பெரிய கிராமத்தின் சொந்தக்காரர் அப்துல் காதிர் ஜீலானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள். அவர் தன் காலத்து சவாலை மிகச் சரியாக அடையாளம் கண்டு மார்க்கத்தின் எழுச்சிக்கு மகத்தான பணியை  ஆற்றினார்.

இமாம் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களது காலத்தில் தாத்தாரியர்கள் இஸ்லாமிய உலகத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் நிலைமை தோன்றியது. அந்தக் கட்டத்தில் தாத்தாரியரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுவதுதான் தஃவாவின் முதல்தர முன்னுரிமை என்பதை அடையாளம் கண்ட இமாம் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், அவர்களுக்கு எதிராக படை திரட்டிப் போராடினார்கள். மறுபக்கம் பல்வேறு வழிகெட்ட சிந்தனைகள் முஸ்லிம் சமூகத்தைப் பாதித்தபோது அவற்றுக்கெதிராக போராடுவதை, இஸ்லாமிய அகீதாவை அதன் தூய வடிவில் முன்வைப்பதை தன்னுடைய தஃவாவில் மற்றுமொரு முக்கிய முன்னுரிமையாகக் கருதி செயற்பட்டார்கள்.

இந்திய உபகண்டத்தில் அக்பர் மன்னர் தீனே இலாஹி என்ற பெயரில் வழிகெட்ட ஒரு கொள்கையை உருவாக்கி, அதுவே உண்மையான கொள்கை என்று முன்வைத்தபோது அதற்கு எதிராக அஷ்ஷெய்க் அஹமத் ஸிர்ஹின்தி அவர்கள் மிகப் பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். அதுதான் அந்தக் காலத்து தஃவாவில் தன்னுடைய பங்களிப்பு என்பதை அவர் நன்கு உணர்ந்து செயற்பட்டார். அதேபோல் இந்திய உபகண்டத்திலே அஹ்மத் அரபான் ஷஹீத், இஸ்மாயீல் ஷஹீத் ஆகியோர் இஸ்லாமிய கிலாபத்தை மீண்டும் கட்டியெழுப்புவதுதான் தமது முதன்மைப் பணி என்பதை உணர்ந்து இந்தியாவில் மீண்டும் இஸ்லாமிய கிலாபத்தை கொண்டு வருவதற்காக மிகப் பெரிய ஒரு போராட்டத்தை நடத்தி இருவருமே ஷஹீதானார்கள்.

இலங்கை தஃவா வரலாற்றில் முன்னுரிமை:

இலங்கை தஃவா வரலாற்றில் எமது மூதாதையர்கள், உலமாக்கள் அவ்வப்போது இந்த நாட்டில் இஸ்லாமிய தஃவாவிற்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை மிகவும் வெற்றிகரமாக முகங்கொடுத்திருக்கிறார்கள். அவர்களிடம் இந்த முன்னுரிமைப் பார்வை சிறப்பாக இருந்திருக்கிறது. வழிகெட்ட சிந்தனை முன்வைக்கப்பட்டபோது  அதற்கு ஜம்இய்யதுல் உலமா அக்காலத்தில் முன்னுரிமை கொடுத்து அதனை எதிர்கொண்டது. இறுதி நபித்துவ விவகாரத்தில் கைவைத்து அதற்கு சவால்விடுக்கப்பட்ட நிலையில் அந்தப் பிரச்சினையை ஜம்இய்யாதுல் உலமா துணிவுடன் எதிர்கொண்டது. அல்குர்ஆன் மாத்திரம்தான் இஸ்லாத்தின் சட்ட மூலாதாரம் ஹதீஸை சட்ட மூலாதாரமாக ஏற்க முடியாது என்ற வழிகெட்ட சிந்தனை முன்வைக்கப்பட்டபோது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அதற்கு முன்னுரிமை கொடுத்து அதனை எதிர்கொண்டதைப் பார்க்கின்றோம்.

இப்போது ஸஹாபாக்கள் விடயத்தில் மாத்திரமல்ல, அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆவின் அகீதா விடயத்தில் கை வைக்கின்ற ஒரு நிலையையும் இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான கருத்துக்களைப் பரப்புகின்ற சில தோற்றப்பாடுகளையும் பார்க்கின்றோம். இவற்றுக்கு முகம் கொடுக்கின்ற கடப்பாடு தற்போது எமக்கிருக்கிறது. இதுதான் இன்றைய அவ்லவிய்யாத். எமது தஃவாவின் முன்னுரிமைப் பட்டியலில் முக்கியத்துவம் பெறுகிற அம்சம் என்பதனால் இத்தகைய ஒரு மாநாட்டின் தேவையை ஜம்இய்யதுல் உலமா உணர்ந்தது.

அதாவது சமகாலத்தில் இஸ்லாமிய தஃவாவிற்கான அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு  சரியான தௌிவைக் கொடுக்கின்ற தார்மிக, ஆன்மிக  மார்க்கக் கடப்பாடு எமக்கு இருக்கின்றது என்ற வகையில்தான் இத்தகைய முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஸஹாபாக்கள் விடயத்திலும் இமாமத், கிலாபத், இஸ்மத், தக்கிய்யா முதலான இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான சிந்தனைகள் கடந்த மூன்று தசாப்த காலமாக அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆவைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்ற இந்த நாட்டிலே மிகக் கவனமாக பரப்பப்பட்டு வருகிற ஒரு நிலையைப் பார்க்கின்றோம். 1990இல் இந்த ஆபத்தை நாம் அடையாளம் கண்டோம். அந்த வகையில் 1990களின் நடுப் பகுதிகளில் மீரானியா ஜுமுஆ பள்ளிவாயலில் இலங்கை அரபுக் கலாசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள், விரிவுரையாளர்கள் அனைவரையும் அழைத்து இந்தக் கொள்கையின் ஆபத்தையும் அச்சுறுத்தலையும் தௌிவாக விளக்கினோம்.

‘‘இலங்கையில் ஷீஆக் கொள்கையின் ஊடுருவல்’’ எனும் தலைப்பில்  அந்த மாநாட்டில் நான் உரையாற்றியது நினைவிருக்கிறது. ஷெய்க் அலியார் ரியாதி அவர்கள் அந்த மாநாட்டில் ஷீஆ கொள்கைகளின் விபரீதம் பற்றி நீண்டதோர் உரை நிகழ்த்தினார். அதே போல் அவ்வப்போது இந்த நாட்டு அறிஞர்கள், உலமாக்கள், தாஇகள் எப்போதும் இது பற்றி விழிப்புணர்வூட்டி  வந்திருக்கிறார்கள்.

1990இன் நடுப்பகுதியில் ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் ஷீஆ அகீதாவின் பாரதூரத்தை விளக்கும் வகையில், அதிலுள்ள அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆவுக்கு எதிரான கருத்துக்களை, கொள்கைகளை மிகத் தௌிவாக விளக்கும் வகையிலே கல்வி முகாம் ஒன்றை மிகவும் வெற்றிகரமாக நடத்தியது. அதனை இஸ்லாமிய சிந்தனை காலண்டிதழ் மூலம் ஆவணப்படுத்தியது.

இந்த வகையில் அண்மைக் காலமாக சிலர் வரலாறு தெரியாத காரணத்தினால், பின்புலம் தெரியாத காரணத்தினால் சிலபோது பிழையான கருத்துக்களை, பிழையான புரிதல்களை, பிழையான விளக்கங்கள் கொடுப்பதை பார்க்கின்றோம். சிலபோது கட்சி அரசியலை மிகைத்ததாக தஃவா அரசியல் மாறிவிட்டதோ என்ற ஆதங்கமும் கவலையும் ஏற்படுகிறது. என்றாலும், எமது இந்தத் தூய பயணத்தை நாம் தொடர்வதை தவிர இதற்கு மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருப்பது எமது இந்தக் குறுகிய கால வாழ்வில் ஆரோக்கியமான தஃவா அணுகுமுறையாக இருக்காது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்.

இன்று நாம் எமது தஃவா பணிகளை, ஆக்கபூர்வமான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வது போல அவற்றுக்கெதிராக விடுக்கப்படுகின்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தேவையும் இருக்கிறது. இத்தகைய பிரச்சினைளை அல்குர்ஆன், ஸுன்னாவின் ஔியில், ஸஹாபாக்களின் வழிகாட்டலின் கீழ் நின்று எதிர்கொள்ள வேண்டும். அந்த வகையில்தான் ஜம்இய்யதுல் உலமா இந்த விழிப்புணர்வு மாநாட்டை ஒழுங்கு செய்திருக்கிறது. விழிப்புணர்வால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். இதனூடாக பிழையான சிந்தனைகளில் இருந்து சமூகத்தை மீட்டெடுக்க முடியும்.

கலந்துரையாடல் மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். தேவைப்பட்டால் மாத்திரம் அந்த விவகாரத்தின் நிலையைப் பொறுத்து அழகான விவாதத்திலும் ஈடுபடலாம்.  நாம்புளுவ, பஸ்யாலயில் ஸுன்னாவை மறுத்த அஹ்லுல் குர்ஆன் என்ற சாராருடன் ஜம்இய்யத் உலமா கலந்து கொண்ட விவாதத்தில் அன்றைய ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளரும் நானும் ஜம்இய்யதுல் உலமாவைச் சார்ந்த ஐந்து பேரும் கலந்து கொண்டோம். அந்த விவாதத்தோடு அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஒரு விவாதம் நடைபெற்றால் அதன் மூலம் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டுமே தவிர பிரச்சினை மேலும் வளர்ந்துவிடக் கூடாது. பிரச்சினையை மேலும் கிளறிவிடும் என்றிருந்தால் அந்த விவாதம் தேவையில்லை. வன்முறையைத் தவிர்த்து, அழகான அணுகுமுறையினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

எனவே, அஹ்லுஸ் ஸுன்னாவைச் சார்ந்த நாம் அஹ்லுஸ் ஸுன்னா கொள்கையில் நிலைத்திருப்பதுதான் எம்மிடமுள்ள மிகப் பெரிய பலமும் சக்தியுமாகும். அந்த சக்தியை, பலத்தைக் குறைப்பதற்கு, தகர்ப்பதற்கு எந்தக் காரணம் கொண்டும் எவரும் அதற்கு பங்களிப்புச் செய்துவிடக் கூடாது.

எமக்கு மத்தியிலுள்ள சாதாரண பிரச்சினைகளை மறந்து வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, முரண்பாட்டில் உடன்பாடு கண்டு, பொதுவான பிரச்சினைகளை துணிவுடன் எதிர்கொள்ள வல்ல இறைவன் துணை புரிவானாக!

We have 43 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player