நடுநிலைக் கொள்கையும் சமநிலைச் சமூகமும்!

கடந்த 24.07.2015 அன்று கொள்ளுப்பிட்டி ஜுமுஆப் பள்ளிவாசலில் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் நிகழ்த்திய குத்பா பிரசங்கத்தின் சாராம்சத்தை காலத்தின் தேவை கருதி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

-----------------------------------------

அல்லாஹுத் தஆலா இஸ்லாத்தை ஏற்று வாழ்கின்ற மிகப் பெரும் பாக்கியத்தை எமக்கு வழங்கியிருக்கின்றான். அல்லாஹ் எம்மீது சொரிந் திருக்கின்ற அருட்கொடைகளிலேயே மிகப் பெரும் அருள், நாம் சத்திய இஸ்லாத்தின் தூதைச் சுமந்திருப்பதாகும்.

இஸ்லாம் தனக்கேயுரிய பல தனித்துப் பண்புகளை, சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கின்றது. உலகத்தில் எந்தவொரு கொள்கைக்கும் இல்லாத சிறப்புகளும் தனித்துவமான பண்புகளும் இஸ்லாத்துக்கு இருக்கிறது. அந்த வகையில், தீனுல் இஸ்லாத்திற்கே உரிய ஒரு சிறப்பு பண்புதான் ரப்பானிய்யா என்ற பண்பு. இந்த மார்க்கம் தெய்வீகமானது இறைவ னிடமிருந்து மனிதர்களுக்கு கிடைக்கப் பெற்றது என்ற வகையில் இது ரப்பானி. இது மனிதர்களை இறுதியாக இறைவனிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் என்ற வகையிலும் இது ரப்பானி. அதாவது, இதன் ஆரம்பமும் ரப்பானி (ரப்பானியதுல் மஸ்தர்) இதன் முடிவும் ரப்பானி (ரப்பானியதுல் காயா) ஆகும்.

உலகத்தில் தோற்றம் பெற்ற கொள்கைகளும் கோட்பாடுகளும் சித்தாந்தங்களும் இறைவனால் அருளப்பட்டவையல்ல. அவை அனைத் திலிருந்தும் இந்த தீன் ரப்பானி என்ற வகையில் வேறுபடுகிறது. மனிதர் கள் எவ்வளவு அறிவாற்றல் கொண்டவர்களாக இருந்தாலும் திறமை படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களது சிந்தனைகளில், அவர்கள் வகுக்கின்ற கொள்கைகளில் குறைகளும் கோளாறுகளும் இருக்கும். நாம் பின்பற்றும் இஸ்லாமிய மார்க்கம் ரப்பானியாக இருப்பதனால் இது குறையற்ற, குற்றங்களற்ற ஒரு மார்க்கமாக திகழ்கிறது. ஏனென்றால், முக்காலங்களையும் அறிந்த, எந்தக் குறையும் இல்லாத அல்லாஹ்வி னால் இந்த மார்க்கம் எமக்குத் தரப்பட்டிருக்கிறது. இது இந்த மார்க் கத்தின் தனிப் பெரும் சிறப்பம்சம்.

இஸ்லாத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில், இது ஒரு நிலையான மார்க்கம். இது ஒருபோதும் காலாவதியாகாது. இவ்வுலகில் கடந்த 1,500 வருடங்களுக்குள் பல்வேறு சித்தாந் தங்கள் தோன்றி மறைந்துள்ளன. எத்தனை யோ கொள்கை, கோட்பாடுகள் வீச்சுடன் வளர்ந்து அதனைவிட வேகமாக செல் வாக்கு இழந்துள்ளதை நாம் பார்க்கின்றோம். ஆனால், அல்லாஹ்வின் இந்த தீன் யுக முடிவு வரை நிலைத்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அல்லாஹ் அதற்கான உத்தரவாதத்தையும் அளித்தி ருக்கின்றான்.

 

”இந்த தீனை நாமே இறக்கினோம். அதனை (இறுதி வரை) நாமே பாதுகாப் போம்.”

இஸ்லாத்தின் இன்னுமொரு தனிப்பெரும் சிறப்பம்சம்தான் ஆலமீய்யா. இது உலக ளாவிய மார்க்கம். இது ஓர் இனத்துக்கோ ஒரு சமூகத்துக்கோ ஒரு பிராந்தியத்துக் கோ சொந்தமான மார்க்கமல்ல. முழு மனித சமூகத்துக்கும் வழிகாட்ட வந்த மார்க்கம் என்ற வகையிலும் இஸ்லாம் தனிப் பெரும் பண்பைப் பெற்று விளங்குகிறது.

இவற்றோடு, இஸ்லாம் ஷுமூலிய்யா என்ற தனிப் பெரும் சிறப்பம்சத்தையும் கொண்டிருக்கிறது. இஸ்லாம் முழுமையான ஒரு மார்க்கம். இது ஒரு வெறுமையான ஒரு மதமோ ஆன்மிக கொள்கையோ அல்ல. மாறாக, தனி மனித குடும்ப சமூக வாழ்க்கை, நிதி, நீதி, நிர்வாகம் உட்பட மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டக்கூடிய ஒரு முழு மையான, சம்பூரணமான வாழ்க்கைத் திட்டம் என்பதும் இஸ்லாத்துக்கேயுரிய தனிப் பெரும் சிறப்பம்சம். உலகத்தில் ஆன்மிக வழிகாட்டலுக்கென சில கொள்கைகள் உள்ளன. பொருளாதார கொள்கைகள், அரசியல் சித்தாந்தங்கள் என ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், தீனுல் இஸ்லாத்தைப் பொறுத்தவரை இது முழுமையானது சம்பூரணமானது.

இஸ்லாத்துக்கேயுரிய தனிப் பெரும் சிறப்பம்சங்களுள் மற்றொன்றுதான் அல்வாகிஇய்யா. இஸ்லாம் நடைமுறைச் சாத்தியமான மார்க்கம். ஏழாம் நூற்றாண்டுக்கும் இந்த மார்க்கம் பொருத்தமாக இருந்தது. 20 ஆம் நூற்றாண்டுக்கும் இந்த மார்க்கம் பொருத்தமாக இருந்தது. 21ஆம் நூற்றாண் டுக்கும் இந்த மார்க்கம் பொருத்தமாக இருக்கிறது. மூவா யிரமாம் ஆண்டின்போதும் இந்த மார்க்கம் எல்லோராலும் ஏற்று பின்பற்றப்படுவதற்கு பொருத்தமானதாக இருக்கும் என்பது திண்ணம். ஏனெனில், இது நடைமுறைச் சாத்தியமான மார்க்கம்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற நாடுகளுக்கும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழுகின்ற இலங்கை போன்ற நாடுகளுக்கும் இந்த மார்க்கம் நடை முறைச் சாத்தியமானதாக இருக்கும். துருவப் பகுதிகளில் வசிக்கும் மனிதர்களும் பின்பற்றுவதற்கு ஏற்ற ஒரு மார்க்க மாக விளங்குகிறது இஸ்லாம்.

இஸ்லாத்துக்கே உரிய மற்றுமொரு தனிப் பெரும் சிறப்பு பண்புதான் வஸதிய்யா. இஸ்லாம் எப்போதும் நடுநிலைக் கொள்கையை, சமநிலைப் போக்கை கடைபிடித்து ஒழுகு மாறு போதிக்கின்றது.

"உங்களை நாம் நடுநிலையான சமுதாயமாக அமைத் திருக்கின்றோம்" என்று அல்குர்ஆன் முஸ்லிம் உம்மத்தை வர்ணிக்கிறது.

இஸ்லாம் பொடுபோக்கை வரவேற்காது கடும்போக் கையும் ஆதரிக்காது. பொடுபோக்கிற்கும் கடும் போக்கிற்கும் இடைப்பட்ட நடுநிலைப் போக்கையே ஆதரிக்கின்றது. இது இஸ்லாத்திற்கேயுரிய தனிப் பெரும் பண்பு. நடுநிலையான உம்மத் (சமூகம்) எப்போதும் மத்தியஸ்தம் வகிக்கும் உம்மத் தாக இருக்கும். மத்தியஸ்தம் வகிக்கும் உம்மத் நீதமான உம்மத்தாக இருக்கும். விளைவாக அந்த நீதமான உம்மத் மிகச் சிறந்த உம்மத்தாக (கைர உம்மத்) மிளிரும்.

தொழுகையில் ஒரு நாளைக்கு குறைந்தது பதினேழு தட வைகள் இந்த நடுநிலைப் போக்கை (வஸதிய்யா) எமக்குத் தந்தருளுமாறு அல்லாஹ்வை நாம் பிரார்த்திக்கின்றோம்.

"இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம்" (யா அல்லாஹ்! எங்க ளுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக!)

வஸதிய்யா என்பது நேரான பாதை மத்திமமான பாதை நடுநிலைப் பாதை பொடுபோக்கிற்கும் கடும்போக்கிற்கும் இடைப்பட்ட பாதை. அல்லாஹ்வின் கோபத்திற்கு உட்பட்டோர் சென்ற பாதையுமல்ல வழி தவறியோர் சென்ற பாதையுமல்ல. அந்த நேரான, சீரான பாதையை எமக்குக் காட்டித் தருமாறு நாம் நாளாந்தம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.

அந்த நடுநிலையான பாதைதான் நேரான, சீரான பாதையான அஸ்ஸிராதுல் முஸ்தகீம். உலகில் 'அஸ் ஸிராதுல் முஸ்தகீம்' எனும் பாதையில் பயணித்தவர் களுக்கே அல்லாஹ் மறுமையில் 'அஸ்ஸிராதுல் முஸ் தகீம்' எனும் பாலத்தையும் வெற்றிகரமாக கடந்து செல்லக்கூடிய பாக்கியத்தை அருளுவான்.

நடுநிலைப் போக்கை அல்குர்ஆன் மிகச் சிறந்த போக்கு என வர்ணிக்கின்றது. ஒரு மாலையை எடுத் துக் கொண்டால் அதன் நடுவில் இருக்கும் முத்தே பெறுமதியானது. அது நடுவில் இருக்கின்றபோது தான் அதற்கு பெருமை இருக்கிறது. அவ்வாறே இந்த உம்மத்தும் முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட் டக்கூடிய வகையில் மத்தியில் இருந்து மத்தியஸ்தம் வகிக்கும் நீதியை நிலைநாட்டும் நடுநிலைப் போக்கை கடைப்பிடிக்கும் அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற ஓர் உம்மத்தாக இருக்கும் என்ற கருத்தையே அல்குர்ஆன் எமக்கு அற்புதமாக முன்வைக்கிறது.

இந்த நடுநிலைப் போக்கு பாதுகாப்பானதும்கூட. முனையில், ஓரத்தில் இருப்போர் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள். மத்தியில் இருப்பவரே பாதுகாப்பாக இருப்பார். அவ்வாறே நடுநிலைப் போக்கைக் கொண்ட கொள்கையும் பாதுகாப்பானது. இஸ்லாம் அத்தகைய தொரு நடுநிலைப் போக்கைக் கொண்ட, மத்திமமான போக்கைக் கொண்ட, மிகவும் பாதுகாப்பான ஒரு கொள்கையாகும்.

தவிரவும், நடுநிலைப் போக்கு பலமான ஒரு போக்கு. எப்போதும் நடுவில் இருப்பதுதான் பலமாக, சக்திவாய்ந் ததாக இருக்கும். ஓரத்தில், முனையில் இருப்பது பலமா னதாக, சக்திவாய்ந்ததாக இருக்காது. மனிதனின் குழந் தைப் பருவம் பலவீனமானது மனிதனின் முதுமைப் பரு வமும் பலவீனமானது. இவற்றுக்கிடைப்பட்ட இளமைப் பருவம் மிகவும் பலமானது. இது ஒரு யதார்த்தம். இயற் கையும் கூட.

அனைவரையும் சந்திக்கின்ற பிரதான புள்ளியாக திகழ்வதும் நடுநிலைப் போக்குதான். ஓரத்தில் நின்று அல்லது ஒரு முனையில் இருந்து அனைவரையும் சந்திக்க முடியாது. எனவே, எல்லோரும் வந்து இணைகின்ற, சேருகின்ற நடுநிலைப் புள்ளியில் நின்று கொண்டுதான் அனைவரையும் நாம் அழைக்க வேண்டும். ஒரு கதீப் பள்ளிவாசலின் ஓர் ஓரத்தில் இருக்க மாட்டார். அவர் நடுவில்தான் இருப்பார். ஒரு சமூகத்தின் தலைவரும் மத்தியில் இருப்பார்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது தோழர்களை வழிநடத்தும்போதெல்லாம் கடும் போக்காகவோ பொடுபோக்காகவோ இன்றி நடுநிலைப் போக்கை கையாள்வதில் அதிகூடிய கவனம் செலுத்தி னார்கள்.

"தீவிரப் போக்கை விட்டும் நான் உங்களை எச்சரிக் கின்றேன். மார்க்க விடயத்தில் கடும்போக்கை கடைப் பிடித்த காரணத்தினால்தான் உங்களுக்கு முன்பு வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தார்கள்" என்று நபியவர்கள் ஸஹாபாக்களுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

"கடும்போக்கு கொண்டவர்கள், தீவிரப் போக்குடை யவர்கள் அழியக் கூடியவர்கள்" என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மிகவும் கடுமையாக சாடி யிருக்கிறார்கள். நபித் தோழர்கள் அவ்வப்போது தங்கள் வாழ்வில் கடும்போக்கை கடைப்பிடிக்க முற்பட்டபோ தெல்லாம் நபியவர்கள் அவர்களை நெறிப்படுத்தியிருக் கிறார்கள்.

இன்றைய உலகில் அனைவரும் மத தீவிரவாதம் பற்றி பேசுகிறார்கள். ஒரு பக்கம் மத தீவிரவாதம் இருக்கின்ற அதேநேரம், மறுபக்கம் மத மறுப்புத் தீவிரவாதமும் மத எதிர்ப்புத் தீவிரவாதமும் தலைதூக்கியிருக்கின்றன. மத தீவிரவாதம் பற்றி பேசுகின்றவர்கள் மத எதிர்ப்புத் தீவிர வாதம், மத மறுப்புத் தீவிரவாதம், மதச்சார்பற்ற தீவிரவாதம் பற்றியும் பேச வேண்டும். எப்போதும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மாத்திரம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, இஸ்லாம் என்றால் தீவிரவாதம், முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள், சகிப்புத் தன்மை அற்றவர்கள் என்ற கருத்து அதிகமாக பேசப்படுகின்ற கவலைக்குரிய ஒரு நிலையை நாம் பார்க்கிறோம்.

முதலாம் உலக மகா யுத்தத்தில் ஏழு மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 21 மில்லியன் மக்கள் படுகாயமடைந்தார்கள். இந்த மாபெரும் மனித அழிப் புக்கு காரணமாக இருந்தவர்கள் முஸ்லிம்களா? இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஐம்பது மில்லியன் பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். முந்நூறு மில்லியன் பேர் படுகாய மடைந்தார்கள். இந்தப் பயங்கர பேரழிவை ஏற்படுத்திய வர்கள் முஸ்லிம்களா என்று நாம் கேட்க வேண்டியிருக்கிறது.

ஜப்பானில் அணுகுண்டுகளைப் பொழிந்து ஐந்து லட்சம் பேரை படுகொலை செய்தார்கள். இன்றுவரை அந்த அணுகுண்டுத் தாக்கத்திலிருந்து அந்த மக்கள் முற்றிலும் விடுபட்டதாகத் தெரியவில்லை. வியட்நாமில் 34 இலட் சம் பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். பலஸ்தீனில் அப்பாவி பொது மக்களில் ஏழு மில்லியன் பேரை அகதிக ளாக்கினார்கள். இன்று உலகில் பல நாடுகளில் அவர்கள் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பயங்கரமான அநீதியை இழைத்தவர்கள் முஸ்லிம்களா?

லிபியாவில் ஏழு இலட்சம் பேர் படுகொலை செய் யப்பட்டார்கள். அல்ஜீரியாவில் பல மில்லியன் கணக் கான மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பொஸ்னி யாவில் அப்பாவிப் பெண்களும் குழந்தைகளும் வயோ திபர்களும் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்யப் பட்டார்கள். ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா... என மில் லியன் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் செய்தவர்கள் முஸ்லிம்களா? என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டி யிருக்கிறது.

எனவே, மதத் தீவிரவாதத்தை கண்டிக்கத் துணிபவர்கள் மதச்சார்பற்ற, மத எதிர்ப்புத் தீவிரவாதத்தையும் கண்டிக்க வேண்டும். உலகத்திற்குத் தேவை நடுநிலைப் போக்கு. நடுநிலைப் போக்கு எல்லோர் மத்தியிலும், எல்லா தரப் பினர் மத்தியிலும் வர வேண்டும் எல்லா நாடுகள் மட்டத்திலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

 

இஸ்லாம் முழு உலகிற்கும் அருளாக வந்த மார்க்கம் சாந்தியையும் சமாதானத்தையும் அமைதியையும் வழங்க வந்த மார்க்கம். அல்லாஹ்வுக்கு பல திருநாமங்கள் இருந் தாலும் 'அல்லாஹ்' என்ற திருநாமத்திற்கு நிகராக மற்றொரு திருநாமம் இல்லை. அப்படியொன்று இருக்கின்ற தென்றால் அதுதான் 'அர்ரஹ்மான்' (அளவற்ற அருளாளன்) எனும் திருநாமம்.

"நபியே கூறுவீராக! அல்லாஹ் என்று நீங்கள் அழையுங்கள் அல்லது ரஹ்மான் என்று நீங்கள் அழையுங்கள்" என்கிறது அல்குர்ஆன்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முழு மனித சமுதாயத்திற்கும் அருளாக (நபிய்யுர் ரஹ்மா) வந்தவர்கள். இன்று இஸ்லாம் குற்றவாளிக் கூண்டில் நிறுத் தப்பட்டு, விசாரிக்கப்படுகிற ஒரு துர்ப்பாக்கிய நிலையை நாம் காண்கிற்றோம்.

நாம் சமாதான விரும்பிகள் நாம் அருள் மிக்கவர்கள். நாம் பின்பற்றுகின்ற மார்க்கம் அத்தகையதொரு வழிகாட்டலையே வழங்குகிறது என்பதற்கு சிறந்த சான் றாக இலங்கை முஸ்லிம்கள் திகழ்கிறார்கள். இந்த நாட்டில் எமக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு இருக்கிறது. எந்தவொரு காலகட்டத்திலும் இலங்கைவாழ் முஸ் லிம்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த தில்லை நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தல் விடுத்ததில்லை நாட்டுக்கு துரோகமிழைத்தது கிடையாது. ஒல்லாந்தர்கள், போர்த்துக்கேயர்கள், ஆங்கிலேயர்கள்... என அனை வரும் இந்த நாட்டை ஆக்கிரமித்து நாட்டின் வளங்களைச் சுரண்டிச் சென்றார்கள். ஆனால், இந்த நாட்டில் காலா காலமாக வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டுக்கு விசுவாசமாக, நாட்டுப்பற்றுள்ள, நாட்டு நலன்களில் கரிச னையுள்ள, நாட்டின் வளங்களைப் பாதுகாக்கின்ற ஒரு சமூகமாக வாழ்ந்து வருகின்றமை மிகப் பெரிய உண்மை.

நாட்டை வளப்படுத்துகின்ற, பொருளாதார, அரசியல் துறைகளுக்கு பங்களிப்புச் செய்கின்ற சமூகமாகவே வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள் இந்த நாட்டுக்காக தியாகம் செய்திருக்கிறார்கள் தமது உயிரை அர்ப்பணம் செய்திருக் கிறார்கள் என்ற உண்மை உரத்துச் சொல்லப்பட வேண்டும்.

இஸ்லாம் எல்லாக் காலத்திற்கும், எல்லா இடங்களுக்கும் பொருத்தமான மார்க்கம். பெரும்பான்மை சமூகத்திற்கும் அது பொருந்தும் சிறுபான்மை சமூகத்திற்கும் அது பொருந்தும். ஆனால், அது இடத்துக்கேற்ப, சூழ்நிலைகளுக்கேற்ப நெகிழ்ந்து கொடுக்கும் மார்க்கத்தின் முன்னுரிமைகள் மாறுபடும். இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழு கின்ற நாட்டிலே எமக்குள்ள முன்னுரிமைகள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் நாட்டிலுள்ள முன்னு ரிமைகளை விடவும் வேறுபடும்.

ஷரீஆவின் குறிக்கோள்கள் (மகாஸிதுஷ் ஷரீஆ) கண் ணோட்டத்தில் நோக்கினாலும் தஃவா கண்ணோட்டத்தில் (பிக்ஹுத் தஃவா) நோக்கினாலும் சிறுபான்மையினருக்கான சட்ட ஒழுங்கின் (பிக்ஹுல் அவ்லவிய்யாத்) ஒளியில் நோக் கினாலும் பின்விளைவுகளை வைத்து நிலைப்பாடுகளை மேற்கொள்கின்ற (பிக்ஹுல் மஆலாத்) கண்ணோட்டத்தில் நோக்கினாலும் நாம் எங்கு இருக்கிறோம், எத்தகைய சூழ்நி லையில் இருக்கிறோம், எத்தகைய சமூகங்களோடு, இனங் களோடு வாழ்ந்து வருகின்றோம் என்பதைப் பொறுத்து எமது முன்னுரிமைகள் மாறும் என்பதுதான் இஸ்லாத்தின் வழிகாட்டல்.

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில், மேற்சொன்ன பிக்ஹுகளது விளக்கங்களின் வெளிச்சத்தில் எமக்குள்ள முதலாவது அடிப்படையான ஆன்மிக, தார்மிக, சமூக, பண்பாட்டுக் கடமை என்னவென்றால், இந்த சிறுபான்மை சமூகத்தை பலமாக வைத்துக் கொள் வதும் மார்க்க விடயத்தில் ஒற்றுமையாக இருப்பது மாகும். ஐக்கியப்பட்ட சிறுபான்மை சமூகம் மிகவும் பலமானது சக்தி வாய்ந்தது.

மார்க்க விடயங்கள், நம்பிக்கைகள், வணக்க வழி பாடுகள், சிந்தனைகள், போக்குகள், செல்நெறிகள்... அனைத்திலும் நாம் ஐக்கியப்பட வேண்டியிருக்கிறது.

அரசியலில்கூட எமக்கென்று ஓர் உடன்பாடான, ஓர் ஏகோபித்த நிலைப்பாடு தேவை. ஒரு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் இருப்பு, மார்க்கத்தின் இருப்பு இந்த அம்சத்தில் தங்கியிருக்கிறது என்ற உண்மை மிக ஆழமாகப் புரியப்பட வேண்டும். எமக்கு மத்தியில் சகோதரத்துவ வாஞ்சை வளர்க்கப்பட வேண்டும். வெறுப்பும் பகைமையும் வளர்க்கப்படக் கூடாது. காட் டிக்கொடுப்புகளும் கழுத்தறுப்புகளும் நடக்கக் கூடாது. எப்போதும் விட்டுக் கொடுக்கின்ற, சகிப்புத் தன்மை யோடு நடந்து கொள்கின்ற அனைவரையும் அரவ ணைத்துச் செல்கின்ற, பரஸ்பரம் திருத்திக் கொள்கின்ற மனப்பான்மை நம் மத்தியில் வளர வேண்டும்.

”முஃமின்கள் தங்களுக்கு மத்தியில் கிருபையோடு நடந்து கொள்வார்கள்” என்கிறது அல்குர்ஆன்.

அழகிய அறிவுரைகள், ஆலோசனைகள், நெறிப் படுத்தல்கள் மூலமாக அனைவரையும் வழிகாட்டுகின்ற கடப்பாடு உலமாக்கள், தாஇகள் அனைவருக்கும் இருக்கிறது. நபியவர்கள் அன்று அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ், உஸ்மான் இப்னு மழ்ஊன் (ரழியல் லாஹு அன்ஹுமா) ஆகியோரை, தனது வணக்க வழிபாடுகளைத் தெரிந்து கொள்ள வந்த மூன்று ஸஹா பிகளையும் எவ்வாறு நெறிப்படுத்தினார்களோ அவ்வாறு நமது சமூகத்தை வழிப்படுத்துகின்ற கடப்பாடு நமக்கு இருக்கிறது.

இவற்றோடு சிறுபான்மை சமூகம் என்ற வகையில் எமது சமூகத்தை எந்தவொரு அபாய நேர்வுக்கும் உட் படுத்திவிடக் கூடாது. எமது இருப்புதான் இந்த மார்க் கத்தின் இருப்பு. இந்த மார்க்கதத்தின் இருப்பை நாம் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றால், இங்கு வாழு கின்ற சமுதாயத்தின் இருப்பை நாம் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

எமது சமூகத்தை அபாய நேர்வுக்கு உட்படுத்தாத வகையில் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாதுகாப்பான சூழலை வழங்க வேண்டும் என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டிய மிகப் பெரிய ஆன்மிக, தார்மிக கடப்பாடு எம் அனைவருக்கும் இருக்கிறது.

இவை மாத்திரமல்ல, இஸ்லாத்தை கருவறுக்க, இஸ் லாத்தை விமர்சிக்க, முஸ்லிம்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கும் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு நாம் ஒருபோதும் வாய்ப்புகளை வழங்கி விடக் கூடாது. இது இந்த தீனுக்கு, எமது உம்மத்துக்குச் இஸ்லாத்தின் இருப்புக்குச் செய்கின்ற, மிகப் பெரும் பங்களிப்பாக இருக்கும்.

இவை அனைத்திற்கும் மேலாக இந்த மார்க்கத்தின் செய்தியை இந்த நாட்டு மக்களுக்கு எத்திவைக்கின்ற, இஸ்லாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதிலை வழங்க வேண்டிய கடப்பாடும் எமக்கிருக்கிறது. அபூஜஹ்ல்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அபூதா லிப்களின் எண்ணிகையை அதிகரிக்கச் செய்கின்ற பணி யையும் அப்துல்லாக்கள், அபூபக்ர்கள், உமர்கள், ஆயி ஷாக்கள், அஸ்மாக்களை (ரழியல்லாஹு அன்ஹும்) உருவாக்குகின்ற பணியையும் நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

"மார்க்கத்தை இலகுபடுத்துங்கள் சிரமப்படுத்தாதீர் கள். இந்த தீனை இலகுவானதாக முன்வையுங்கள் சுமையானதாக முன்வைக்காதீர்கள். மார்க்கத்தின் மீது ஆர்வமூட்டுங்கள் வெறுப்பை ஏற்படுத்தாதீர்கள்" என்பது நபி (ஸலல்லல்லாஹு அலைஹி வஸர்ரம்) அவர்களது வழிகாட்டல்.

எனவே, எமக்கு மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வை வளர்த்து, பரஸ்பரம் ஒருவரை ஒருவர் நெறிப்படுத்தி, பரஸ்பரம் எல்லோரும் கலந்துரையாடி முழு சமூகத் தையும் பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்ற கனதியான பொறுப்பை நாம் அனைவரும் சுமந்திருக்கிக்கின்றோம். யாரும் இதில் பார்வையாளர்களாக இருக்க முடியாது. பங்காளிகளாக மாற வேண்டும். நாம் அனைவரும் ஓரணியாக நின்று இந்த மார்க்கத்தை வாழ வைக்கின்ற பணியில் உழைப்பதற்கு வல்ல அல்லாஹ் துணை புரிவானாக!

We have 19 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player