முஸ்லிம்களும் ஊடகமும்: வீழ்ச்சியின் எல்லையிலும் எழுச்சியின் துவக்கத்திலும்

அல்ஹஸனாத்: சமகால உலகில் ஊடகம் பெறும் முக்கியத்துவம் பற்றி சுருக்கமாகக் கூற முடியுமா?
அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்: இன்றைய உலகில் மூன்று வகையான படையெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இராணுவ ரீதியான படையெடுப்பு, சிந்தனா ரீதியான படையெடுப்பு, உள ரீதியான படையெடுப்பு ஆகியவையே அவை. பொதுவாக மக்கள் இராணுவ ரீதியான படையெடுப்பையே பெரிதுபடுத்துவர். ஆனால் முதல் வகை படையெடுப்பை விட சிந்தனா ரீதியான படையெடுப்பும் உள ரீதியான படையெடுப்பும் மிகவும் ஆபத்தானவை.
முதல் வகைப் படையெடுப்புக்கு துப்பாக்கி, குண்டு, பீரங்கி, தோட்டா முதலானவை ஆயுதங்களாக  விளங்குகின்றன. சிந்தனா, உள ரீதியான படையெடுப்புகளுக்கு ஆயுதமாக விளங்குவது ஒரு நவீன ஆயுதம் அது பலம்வாய்ந்த ஆயுதம் முதல் வகை ஆயுதங்களின் பலத்தை மிகைத்துவிட்ட ஆயுதம் என்று அதனை வர்ணித்தால் பிழையாகாது. அதுதான் ஊடகம் (Media) எனும் அதிசக்தி வாய்ந்த ஆயுதம். இங்கு ஊடகம் என்பதன் மூலம் அச்சு, இலத்திரனியல் ஆகிய இரண்டு வகை ஊடகங்களும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.


"கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என்று ஒரு புலவன் பாடினான். அந்தப் புலவன் இதன் மூலம் எதனை நாடியிருந்தாலும் இன்று கத்தியின்றி இரத்தமின்றி நடந்து கொண்டிருக்கும் யுத்தம்தான் ஊடகவியல் யுத்தம் (Media War/War through Media).
இன்று உலகளாவிய ரீதியில் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம், தீவிரவாதத்திற்கெதிரான யுத்தம், அடிப்படைவாதத்துக்கெதிரான யுத்தம் எனும் பெயர்களில் முடுக்கிவிடப்படிருக்கும் யுத்தங்கள் வெறுமனே இராணுவ ரீதியான படையெடுப்புக்கள் அல்ல. உண்மையில் சகல யுத்தங்களும் பெரும்பாலும் ஊடகத்தினூடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்றைய உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம் மீடியாதான். இதற்கு, மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மத் குறிப்பிட்ட ஒரு கருத்தை ஆதாரமாகச் சொல்லலாம். "யாரிடம் கடற்படை இருந்ததோ அவர்கள்தான் 19ம் நூற்றாண்டின் சக்தியாக விளங்கினார்கள். விமானப்படை எவர் வசமிருந்ததோ அவர்கள்தான் 20ம் நூற்றாண்டின் சக்தியாக திகழ்ந்தார்கள். யாரிடம் மீடியா இருக்கிறதோ அவர்கள்தான் 21ம் நூற்றாண்டின் சக்தியாக விளங்குவார்கள்".
மீடியா என்பது எவ்வளவு பெரிய சக்தி பெரும் ஆயுதம் என்பதை இந்த அற்புதமான, ஆழமான கருத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். உலகத்தில் நிகழும் ஆட்சி மாற்றங்கள், புரட்சிகள் சார்பான மக்கள் அபிப்பிரயாங்கள் என அனைத்தும் மீடியாவின் ஊடாகவே நடைபெற்று வருகின்றன. உலகில் முடுக்கிவிடப்பட்டிருக்கும் யுத்தங்களும் முடித்துவைக்கப்படும் யுத்தங்களும் மீடியாவிற்கூடாகத்தான் நடைபெறுகின்றன. அந்தளவுக்கு சக்திவாய்ந்த ஆயுதமாக மீடியா விளங்குகின்றது. எனவே, ஊடகத்தை 21ம் நூற்றாண்டின் சக்தி என வர்ணிக்க முடியும்.
சமூகவியல் அறிஞர் கோவிந்தநாத் வெளியிட்டுள்ள கருத்தும் இங்கு கோடிட்டுக் காட்டத்தக்கது. "இன்றைய உலகின் ஜான்பவான்கள் ஊடகத்துறையினரே. அவர்கள்தான் இந்த உலகில் கருத்துருவாக்கத்தைத் தீர்மானிப்பவர்கள் (opinion markers)" என அவர் குறிப்பிடுகின்றார்.

அலஹஸனாத்: 21ம் நூற்றாண்டின் பலமாக விளங்கும் மீடியா இன்று யாருடைய கரங்களில் இருக்கின்றது?

அஷ்ஷெய்க் அகார்: இன்று யார் பலசாலிகளாக இருக்கின்றார்களோ அவர்களது கையில்தான் மீடியா இருக்கின்றது. இன்று வல்லரசுகளாக, உலக விவகாரங்களை நகர்த்துபவர்களாக இருப்பவர்களிடம்தான் மீடியா இருக்கின்றது. உலகின் மிகப் பெரும் செய்தி ஸ்தாபனங்களான BBC, FOX NEWS, ABC, AFP, REUTER+ முதலானவை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றன? அவ்வாறே சர்வதேச மட்டத்தில் வெளிவருகின்ற சஞ்சிகையான Times, News Week என்பன யாருடைய கரங்களில் இருக்கின்றன? இவை அனைத்தும் முஸ்லிம் அல்லாதவர்களிடமே காணப்படுகின்றன. முஸ்லிம்கள் இத்துறையில் பின்தங்கியிருப்பதனால் பலவீனமடைந்திருக்கிறார்கள்.

அல்ஹஸனாத்: இன்று கொள்கை மற்றும் மார்க்க பிரசாரங்களுக்கு எந்தளவு தூரம் மீடியா பயன்படுத்தப்பட்டு வருகின்றது?
அஷ்ஷெய்க் அகார்: இன்று மதப் பிரசாரங்களுக்காக, குறிப்பாக கிறிஸ்தவ மதப் பிரசாரத்துக்காக ஊடகங்கள் உச்ச நிலையில் பயன்படுத்தப்படுகின்றன. இஸ்லாமிய இணையதளங்களுடன் ஒப்பிடுகின்றபோது கிறிஸ்தவ இணையதளங்கள் 1200 வீத வளர்ச்சியைக் கண்டிருக்கின்றன. மதப் பிரசாரங்களுக்கு எந்தளவு தூரம் ஊடகம் பயன்படுத்தப்படுகின்றதென்பதற்கு இவ்வுதாரணம் மட்டுமே போதுமென்று நினைக்கின்றேன்.
மற்றொரு தகவலின்படி, இன்றைய இணையதள ஊடகங்களுள் 62 ஆனவை கிறிஸ்தவ இணைய தளங்கள் 9 ஆனவை யூதர்களுக்குச் சொந்தமானவை இன்னும் 9 ஆனவை இஸ்லாமிய இணைய தளங்கள். ஆனால், யூதர்களின் சனத்தொகை சுமார் ஒரு கோடியே ஒன்பது இலட்சம் மாத்திரமே. முஸ்லிம்களின் சனத்தொகை 150 கோடி. அந்த சின்னஞ்சிறிய யூத சமூகமும் மிகப் பெரிய இஸ்லாமிய உலகமும் இணையதள பாவனையில் சம நிலையிலேயே இருக்கின்றன.
இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான கொள்கையைக் கொண்டுள்ள காதியானிகள் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களைப் பயன்படுத்துவதில் முன்னிலை வகின்றார்கள். கிறிஸ்தவ உலகின் தலைமைப்பீடமாக கருதப்படும் வத்திக்கான் கிறிஸ்த பிரசாரத்துக்காக மீடியாவை திட்டமிட்டுப் பயன்படுத்தி வருகிறது. வத்திக்கானில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தினசரிப் பத்திரிகைகள் வெளியிடப்படுகின்றன. 154 ஒலிபரப்பு நிலையங்களும் 49 தொலைக்காட்சி அலைவரிசைகளும் வத்திக்கானின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.
இத்தகைய மாபெரும் ஊடக வலைப்பின்னலுக்கு முன்னால் இஸ்லாமிய உலகம், குறிப்பாக இஸ்லாமிய தஃவா அமைப்புக்கள் எங்கிருக்கின்றன என்பது வெள்ளிடை மலை.
முஸ்லிம்கள் ஊடகத்தைப் பயன்படுத்துவதில் மிகவும் பின்தங்கியிருக்கின்ற அதேநேரம், இஸ்லாத்துக்கு எதிரான ஊடக வலையமைப்புக்கள், இணையதளங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 2003ம் ஆண்டு கருத்துக்கணிப்பீடு ஒன்றின்படி, இஸ்லாத்துக்கு எதிரான, இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளை கொச்சைப்படுத்துகின்ற பத்தாயிரம் இணையதளங்கள் இருப்பதாக அறிய முடிகிறது. தற்போது அத்தகைய இணைய தளங்கள் பன்மடங்காக அதிகரித்திருக்கும்.

அல்ஹஸனாத்: இஸ்லாமிய தஃவா முன்னெடுப்புக்கு மீடியாவை எந்தளவு தூரம் பயன்படுத்த வேண்டுமென்று நீங்கள் கருதுகிறீர்கள்?
அஷ்ஷெய்க் அகார்: மீடியாவின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, விளங்கி அதனூடாக உச்ச பயனை அடைபவர்களாக முஸ்லிம்கள் இல்லை என்பது கவலைதரும் விடயம். அண்மைக்காலம் வரை மீடியாவை தஃவா பணிக்கு பயன்படுத்துவதில் பல்வேறு கருத்து வேறுபாடுகளும் முரண்பட்ட நிலைப்பாடுகளும் இருந்து வந்திருக்கின்றன. இது மீடியாவின் மூலம் மேற்கொள்ளப்படும் தஃவாவுக்கு தடையாக அமைந்தது.
நவீன ஊடகங்களை தஃவா முன்னெடுப்புகளுக்கு பயன்படுத்துகின்றபோது நாம் சில அடிப்படையான உண்மைகளைப் புரிந்து வைத்திருக்க வேண்டும். இஸ்லாத்தின் இலக்குகள் குறிக்கோள்கள் நிலையானவை மாறாத்தன்மை கொண்டவை. அவற்றை அடைவதற்கான வழிமுறைகள், உத்திகள், வியூகங்கள் மாறும் தன்மை வாய்ந்தவை மாற வேண்டியவை.
அல்குர்ஆன் நபி(ஸல்) அவர்களைப் பார்த்து இப்படிச் சொல்கிறது: "நபியே! அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பீர்ராக!"
அல்லாஹ்வின்பால் அழைப்பது நிலையானது. அதற்கான வழிமுறைகள் மாறும் தன்மை மிக்கது. வழிமுறைகள் குறித்து அல்குர்ஆன் பொதுப்படையாக மூன்று அம்சங்களை சொல்கின்றது.
01.    ஞானம்அறிவு (அலஹிக்மா)
02.    சிறந்த உபதேசம் (அல்மவ்இழதுல் ஹஸனா)
03.    சிறந்த வழிமுறையினூடாக விவாதம் (அல்ஜிதால் பில்லதீ அஹ்ஸன்)
இந்த மூன்று அடிப்படை அம்சங்களும் பேணப்பட்ட நிலையிலேயே தஃவாவை முன்னெடுக்க வேண்டும். மௌலானா அபுல் ஹஸன் அலி அந்நத்வி அவர்கள் பாரம்பரிய வழிமுறைகளை மிகவும் கண்டிப்பாக பேணிவந்த ஓர் அறிஞர். அவர் அடிக்கடி இவ்வாறு சொல்வார்: "உலகில் மூன்று அம்சங்களுக்கு வரையறை கிடையாது, வரையறை இடவும் முடியாது. ஒன்று அன்பு அடுத்தது யுத்தம் மூன்றாவது தஃவா".
சந்தர்ப்ப சூழ்நிலைகள், கால மாற்றங்கள், தேவைகளுக்கேற்ப வித்தியாசமான வழிமுறைகளை, வௌவ்வேறு வியூகங்களைக் கொண்டு தஃவாவை முன்னெடுக்க முடியும். அல்குர்ஆன் மற்றnhரு வசனத்தில் மிக அற்புதமாக இந்த உண்மையைச் சொல்கிறது.
"(நபியே! ஒவ்வொரு சமூகத்தாருக்கும்) அவர்களுக்கு நம் தூதுத்துவத்தை அவர் விளக்கிக் கூறுவதற்காக எந்தவொரு தூதரையும் அவருடைய சமூகத்தாரின் மொழியைக் கொண்டேயல்லாது நாம் அனுப்பவில்லை." (இப்றாஹீம்: 04)
இந்த வசனத்திற்கு, அந்தச் சமூகத்தினர் பேசிய மொழியை அவ்வக்கால நபிமார்களும் அறிந்து வைத்திருந்தனர் என்று பொதுவாக விளக்கம் சொல்லப்படுகின்றது. உண்மையில் இவ்வசனத்தின் மூலம் விரிவான கருத்தை அல்குர்ஆன் சொல்ல வருகிறது.
ஒவ்வொரு நபியும் அவ்வக் காலத்து பாஷைகளில் புலமை பெற்றிருந்தனர். நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) காலத்துப் பாஷையாக இருந்த ஷசூனிய மொழியில் அவர் புலமை பெற்றிருந்தார். ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது காலத்து பாஷையான ஷமருத்துவப் பாஷையில் அவர் புலமையும் தேர்ச்சியும் பெற்றிருந்தார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்துப் பாஷை இலக்கிய பாஷை. அந்த பாஷையில் அக்கால மக்களுக்கு விளக்கம் சொல்லக்கூடிய ஆற்றலும் திறமையும் நபியவர்களிடம் காணப்பட்டது.
இப்படி அவ்வக்கால நடைமுறைகள், சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு காலத்துக்குக் காலம் வந்த நபிமார்கள் தமது அழைப்புப் பணியின் வழிமுறைகளில், வியூகங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். எமது தஃவா முயற்சிகள் காத்திரமான விளைவுகளைத் தரவேண்டுமெனில், நாம் வாழும் காலத்துப் பாஷையை தெளிவாகப் புரிந்து அதன்படி எமது செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இந்தக் காலத்துப் பாஷை அறிவியல் பாஷை அல்லது மீடியா பாஷை.
"ஊடகங்கள் வாயிலான அழைப்புப் பணியே இன்றைய காலத்து ஜஹாத்" என்று கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி அவர்கள் சொல்லியிருப்பது எவ்வளவு உண்மையானது!
நவீன தொடர்பு சாதனங்களை தஃவாவுக்கு பயன்படுத்துகின்றபோது சில வரையறைகள் அவசியம் பேணப்பட வேண்டும்.
ஊடகங்களின் இலக்குகள் புனிதமானவையாக இருப்பதுபோல அவற்றை அடைவதற்கான வழிமுறைகளும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
இதனடிப்படையில் நாம் எந்தவொரு வழிமுறையை கடைபிடிப்பதாக இருந்தாலும் அது ஷரீஆவின் வரையறைக்குட்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதுடன் அது பொருத்தமான நியாயமான வழிமுறையாகவும் தார்மிக ஒழுக்கப் பண்பாடுகளுக்கு உட்பட்டதாக அமைந்திருக்கின்றதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
கட்டுப்பாடுகள், வரையறைகள் எதுவும் பேணப்படாத நிலையில் மீடியாவைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது. ஆனால் இன்று ஊடகவியல் ஒழுக்கம் சற்றேனும் பேணப்படாத ஒரு சூழ்நிலையும் மறுபக்கம் புதியவற்றை அனுமதிக்க முடியாது என்ற ஊடகவியல் தஃவாவுக்கான வாயில்கள் மூடப்படுகின்ற நிலையும் காணப்படுகின்றன. கட்டுப்பாடுகள், வரையறைகளுடன் கூடிய சகல சாதனங்களையும் தஃவாவுக்கு பயன்படுத்த முடியும்.
எனவே, அச்சு ஊடகங்கள் எனும் வட்டத்திற்குள் வருகின்ற பத்திரிகை, சஞ்சிகை, அவற்றில் வெளிவருகின்ற கதை, சிறுகதை, கவிதை, நாவல், உரைநடை, கட்டுரை ஆகிய இலக்கிய வடிவங்களும் இலத்திரனியல் ஊடகங்களான தொலைக்காட்சி, வானொலி மற்றும் அவற்றின் மூலம் ஒலி ஒளிபரப்பப்படும் பாடல், நாடகம், திரைப்படம் போன்ற கலை நிகழ்ச்சிகளிலும் இஸ்லாமிய வரையறைகள் பேணப்பட வேண்டும்.

அல்ஹஸனாத்: இன்று ஊடகத்துறையில் எந்தளவு ஆன்மிக, தார்மிக விடயங்கள் பேணப்படுகின்றன?
அஷ்ஷெய்க் அகார்: மீடியா என்பது ஒருபக்கம் அருளாக இருப்பது போல மறுபக்கம் ஒரு சாபக்கேடாகவும் இருக்கிறது. மீடியாவை ஒரு கத்திக்கு உவமிக்கலாம். கத்தியை ஆக்கத்திற்கும் அழிவிற்கும் பயன்படுத்தலாம். ஓர் அறுவை சிகிச்சை நிபுணரிடம் ஒரு கத்தியிருந்தால் அதனைக் கொண்டு அவர் ஓர் உயிரைக் காப்பாற்ற முயற்சிப்பார். அதே கத்தி ஒரு கொலைகாரனின் கையில் இருந்தால் அதனைக் கொண்டு அவன் ஓர் உயிரையே பறித்து விடுவான். இன்று மீடியாவை தம்வசம் வைத்திருப்பவர்கள் அறுவை சிகிச்சைப் பணியைச் செய்கிறார்களா? கொலைகாரர்களின் வேலையைச் செய்கிறார்களா?
இன்று நாளாந்தம் ஆயிரம் ஆயிரம் மனிதர்களை, மனித விழுமியங்களை, பண்பாட்டை ஊடகவியல் துறைசார்ந்தோர் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆன்மிக, தார்மிக விழுமியங்களை அசிங்கப்படுத்துகின்றார்கள். மீடியா தன்னளவில் ஒரு சாபக்கேடு அல்ல. அதனை யார் கையில் எடுத்திருக்கிறார்களோ அவர்கள்தான் அதனைத் துஷ்பிரயோகம் செய்து முழு உலகையும் அழிவின்பால் இட்டுச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.
இன்றைய மீடியாக்களில் எத்தகைய தார்மிக ஒழுக்கமும் பேணப்படுவதாய் தெரியவில்லை. சமூக சார்பெண்ணம், பக்கசார்பு, திரிபுகள், மிகைப்படுத்தல், குறைமதிப்பீடு செய்தல், பொய், உறுதிப்படுத்தப்படாத செய்திகள், ஊடகங்கள், காம உணர்வுகளைத் தூண்டும் வகையிலான தகவல்கள், படங்கள் முதலானவையே இன்றைய ஊடகங்களில் மலிந்து கிடக்கின்றன.
மற்றும் இன்றைய மீடியாவில் மேற்குலகின் மேலாதிக்கம் பாரிய செல்வாக்குச் செலுத்தி வருகின்றது. யூதர்களின் வல்லாதிக்கமும் பரவிக் காணப்படுகின்றது. இன்று சர்வதேச மட்டத்தில் இயங்கி வருகின்ற பெரும்பாலான சக்திவாய்ந்த செய்தி ஸ்தாபனங்கள் தொலைக்காட்சி அலைவரிசைகள், இணைய தளங்கள் என்பன யூதர்களால் இயக்கப்படுபவை என்பது கசப்பான ஓர் உண்மை.
இன்றைய மீடியாவில் மேற்குலகின் மேலாதிக்கமும் அடுத்த சமூகத்தவர்களை அழித்தொழிப்பதை இலக்காகக் கொண்ட யூதர்களின் மேலாதிக்கமும் வேரூன்றிப் போயிருப்பதனால் மிகவும் பிழையான, ஒழுக்கப் பண்பாடுகளுக்கு வேட்டு வைக்கின்ற கொள்கை கோட்பாடுகள் உலகின் சந்து பொந்துகள் எங்கும் மக்கள் மயப்படுத்தப்படுகின்றன. மதசார்பற்ற கொள்கை (Secularism), சடவாத சிந்தனை (materialism) என்பன இன்று உலக மயப்படுத்தப்பட்டு வருகின்றன. உலக மயமாக்கல் எனும் சிந்தனையும் இன்றைய மீடியாவின் மூலமே மக்கள் மயப்படுத்தப்படுகின்றது.
தவிரவும் இன்றைய சினிமாவின் கூறுகளாக வக்கிரம், வன்முறை, காமம், திகில், வேடிக்கை முதலானவையே அமைந்துள்ளன. மேற்குலகின் சினிமா ஆபாசம் நிறைந்ததாகவும் வன்முறையைத் தூண்டக்கூடியதாகவும் அமைந்திருப்பதைப் போலவே கிழக்குலகின் சினிமாப் பாணியும் அமைந்திருக்கின்றது. சிலபோது ஹொலிவூட் சினிமாவை விஞ்சுமளவுக்கு பொலிவூட் சினிமாவின் மையக்கரு காணப்படுகின்றது.
இன்றைய உலகளாவிய மீடியா இஸ்லாத்துக்கெதிரான, முஸ்லிம்களுக்கெதிரான முனைப்போடு செயற்பட்டு வருகின்றது. 'இஸ்லாமோபோபியா' எனும் இஸ்லாம் பற்றிய அச்சம் உலகளாவிய ரீதியில் எல்லா மட்டங்களிலும் விதைக்கப்படுவதற்கு இந்த மீடியாதான் உச்ச நிலையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இன்றைய சினிமாவில் படிப்பினையூட்டும் கரு, அழகிய மொழி என எதையும் காண முடியாமல் இருக்கின்றது. தரக்குறைவான பாடல்கள், ஆபாசமான வசனங்கள், விரசமான காட்சிகள், இளைஞர்கள் யுவதிகளை வழிகேட்டின் பால் அழைத்துச் செல்கின்ற கருப்பொருள்களே இன்றைய திரைப்படங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் அதிகம் செல்வாக்குச் செலுத்துகின்றன.
இன்று இணையதளத்தினால் ஏற்படுகின்ற நன்மைகளைவிட தீமைகளே அதிகரித்துள்ளன. ஒரு நாளைக்கு சுமார் இருநூற்றைம்பது ஆபாச வீடியோப் படங்கள் இணையதளத்திற்கு பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஒரு வினாடியில் சுமார் 28 ஆயிரம் பேர் இணையதளத்தினூடாக ஆபாசப் படங்களை பார்வையிடுகின்றனர். உலகில் ஆகக்கூடுதலாக பார்வையிடப்படுபவை ஆபாச இணையதளங்களே. சிறார்களும் இளைஞர்களுமே இவ்இணையதளங்களை அதிகம் பார்வையிடுவதாக புள்ளிவிபரங்கள் மூலம் அறியக் கிடைக்கிறது.
இலங்கையில் திரையிடப்படுகின்ற ஒவ்வொரு நான்கு திரைப்படங்களில் மூன்று திரைப்படங்கள் ஆபாசமானவை என சில ஆண்டுகளுக்கு முன்னுள்ள தரவுகள் குறிப்பிடுகின்றன. இப்போது அந்நான்கு திரைப்படங்களுமே ஆபாசமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
எனவே, மொத்தமாகப் பார்க்கின்றபோது இன்றைய ஊடகங்கள் ஆக்கபூர்வமான பணிக்கு பயன்படுத்தப்படுவதைவிட நாசகார, அழிவு வேலைகளுக்கே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றுதான் குறிப்பிட வேண்டும்.

அல்ஹஸனாத்: இலங்கையின் தஃவாப் பணியில் மீடியா எந்தளவு தூரம் பயன்படுத்தப்படுகின்றது?
அஷ்ஷெய்க் அகார்: உலகத்திலேயே மீடியா தஃவாவுக்குப் பயன்படுத்தப்படுவது குறைவாகவே இருக்கிறது. இந்நிலையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்ற, பாரம்பரிய முறையில் சிந்திக்கின்ற மக்கள் வாழும் இலங்கையில் மீடியா தஃவாவுக்கு மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
எனினும், இந்த நாட்டில் மீடியாவை தஃவாப் பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டிய முன்னோடி அமைப்பு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிதான் என்பதை காய்தல் உவத்தல் இன்றி சொல்ல முடியும். கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக ஜமாத்தே இஸ்லாமி ஊடகத்தை தஃவாவுக்காக பயன்படுத்தி வருகிறது. எந்தளவுக்கென்றால் ஆரம்பகால கட்டத்தில் ஊடகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளாத சிலர் ஜமாஅத்தே இஸ்லாமிக்காரர் இஸ்லாத்துக்கு முரணான இஸ்லாம் அங்கீகரிக்காத ஊடகங்களையெல்லாம் தஃவாவுக்கு பயன்படுத்துகிறார்கள் என்று விமர்சித்தனர். ஏனென்றால் ஒரு காலத்தில் எழுத்துத்துறை மோசமாக கொச்சைப்படுத்தப்பட்டது. ஜமாஅத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் ஜமாஅத்தின் பத்திரிகை வெளியீடும் ஒன்றாகக் கருதப்பட்டது.
இலங்கை ஜமாத்தே இஸ்லாமி பல விடயங்களுக்கு முன்மாதிரியாக அமைந்த இயக்கம். இந்த நாட்டின் இஸ்லாமிய அழைப்புப் பணியின் தாய் இயக்கம் ஜமாஅத்தே இஸ்லாமிதான்.
முஸ்லிம் சமூகத்தில் எழுத்துத்துறைக்கு எவ்வித முக்கியத்துவமும் வழங்கப்படாத ஒரு காலகட்டத்தில்... ஊடகத்தை இஸ்லாமியப் பணிக்கு பயன்படுத்துவதை பலர் எதிர்த்துக்கொண்டிருந்த சூழ்நிலையில்... துணிச்சலுடன் 1954 இல் ஷஅருள்ஜோதி| எனும் பத்திரிகையை ஜமாஅத் வெளியிட்டது. அதன்பின்னர் ஷவழிகாட்டி| எனும் பெயரில் மாதாந்த சஞ்சிகையை வெளிக்கொணர்ந்தது ஜமாஅத்.
இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) மற்றும் அல்இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பைச் சேர்ந்த பல அறிஞர்களின் கட்டுரைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வழிகாட்டியில் பிரசுரமகின. இஸ்லாமிய உலகின் பெரும் பெரும் அறிஞர்களின் கட்டுரைகள், அரிதான தகவல்கள், விளக்கங்களை அதில் வெளியிட்டு காத்திரமான பங்களிப்பைச் செய்தது ஜமாஅத். அதன் பின் அலஹஸனாத் பல்வேறுபட்ட சவால்கள், அறைகூவல்களுக்கு மத்தியில் கடந்த நாற்பது வருடங்களாக வெளிவருகின்றது. கடந்த ஒன்பது வருடங்களாக 'எங்கள் தேசம்' எனும் பெயரில் பத்திரிகை ஒன்றையும் ஜமாஅத் வெளியிடுகின்றது.
இந்த நாட்டின் தமிழ்மொழிமூல முன்னோடி இஸ்லாமிய சஞ்சிகையாக அல்ஹஸனாத் விளங்கும் அதேவேளை, சிங்கள மொழிமூல முன்னோடி இஸ்லாமிய சஞ்சிகையாக ப்ரபோதய விளங்குகிறது. இந்தப் பெருமையும் ஜமாஅத்தே இஸ்லாமியைச் சாரும். தவிரவும் அகரம் போன்ற சிறுவர்களுக்கான துணை சஞ்சிகைகளையும் ஜமாஅத் வெளியிடுகிறது. மிக ஆரம்ப காலம் முதல் பல்வேறுபட்ட இஸ்லாமிய நூல்களை ஜமாஅத் வெளியிட்டு வருகிறது. மறை நிழலில் மனிதன், ஐயமும் தெளிவும், இறை நீதியும் மனித நீதியும் என்பன அவற்றுள் குறிப்பிடத்தக்க சில நூல்கள்.
இன்று ஜமாஅதே இஸ்லாமி மீடியாவை, குறிப்பாக அச்சு ஊடகத்தை மிக உச்சளவில் தஃவாவுக்காகப் பயன்படுத்தி வருகிறது. ஜமாஅத் இத்துறையில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியிருக்கிறது.
ஏனைய இஸ்லாமிய அமைப்புகளும் தஃவாவுக்கு அச்சு ஊடகங்களை முனைப்புடன் பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஜம்இய்யது அன்ஸாரிஸ் ஸுன்னத்தில் முஹம்மதிய்யா அமைப்பு மிக ஆரம்பகாலம் முதல் 'உண்மை உதயம்' எனும் சஞ்சிகையை வெளியிட்டு வருகின்றது. இன்றுவரை அந்த சஞ்சிகை தொடராக வெளிவந்து கொண்டிருப்பது பாராட்டத்தக்க ஒரு முயற்சி. அதேபோல் தவ்ஹீத் ஜமாத் எனும் பெயரில் இயங்கிய இஸ்லாமிய அமைப்பு மிக ஆரம்பம் முதல் 'வான்சுடர்' எனும் சஞ்சிகையை வெளியிட்டு வந்தது.
முஸ்லிம் இதழியலில் முன்னோடியாகத் திகழ்ந்த 'முஸ்லிம் நேசன்' ஆற்றிய பங்கு மகத்தானது. இஸ்லாம் மித்திரன், ஸவ்வாப், முஸ்லிம் பாதுகாவலன் என்ற பெயர்களில் பல முஸ்லிம் பத்திரிகைகள் ஆரம்பத்தில் வெளிவந்திருக்கின்றன. ஆனால் முழுக்க முழுக்க தஃவாவை மையப்படுத்திய பத்திரிகை அல்லது சஞ்சிகை என்ற வகையில் அதன் முன்னோடி 'அலஹஸனாத்'தான்.
தவிரவும் மீள்பார்வை, பயணம், வைகறை, சர்வதேசப் பார்வை என்பனவும் மகத்தான பங்காற்றி வருகின்றன. ஜாமிஆ நளீமிய்யாவின் வெளியீட்டுப் பணியகத்தினால் வெளியிடப்படும் ஆய்வு சஞ்சிகையான 'இஸ்லாமிய சிந்தனை' இந்த நாட்டில் சிந்தனா ரீதியான புரட்சியை ஏற்படுத்தியது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
ஆனால், நாம் இலத்திரனியல் ஊடகங்களைப் பயன்படுத்துவதில் சற்றுப் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறNhம். எமது தஃவாப் பணிக்கு வானொலியும் தொலைக்காட்சியும் மிகக் குறைந்தளவே பயன்படுத்தப்படுகின்றன.
எனினும், மிக அண்மைக் காலமாக இஸ்லாமிய உலகின் ஏற்பட்டிருக்கும் மறுமலர்ச்சியின் விளைவாக மீடியாவின் முக்கியத்துவம் பரவலாக உணரப்படுகின்றது. இஸ்லாமிய உலகம் மீடியா எனும் சக்தியை கரம்பற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை என்ற சுபசெய்தியையும் இந்த இடத்தில் கோடிட்டுக் காட்ட வேண்டும்.
அந்த வகையில் அல்ஜஸீரா மிகப்பெரும் பணியை செய்து வருகின்றது. நான் அண்மையில் கட்டார் சென்றபோது அல்ஜஸீராவின் தலைமையகத்துக்கு சென்றிருந்தேன். அல்ஜஸீராவின் நோக்கம், இலக்கு, எதிர்காலத் திட்டங்கள், அடைவுகள் குறித்து ஒரு நூலையே வெளியிட்டுள்ளார்கள். அதன்படி அல்ஜஸீராவின் வலையமைப்பு மிக விசாலமடைந்து செல்கின்றது. உலகின் மிக சக்திவாய்ந்த மாற்று ஊடகமாக அது பரிணாமமடைந்திருக்கின்றது. அரபு, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அதன் சேவை விரிவடைந்திருக்கின்றது. சில குறைபாடுகள், இஸ்லாமிய மயப்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள் இருந்தாலும், மிகச் சிறந்ததோர் ஊடகமாக அல்ஜஸீரா வளர்ந்து வருகின்றது, அலஹம்துலில்லாஹ்.
அல்அரபிய்யா, அல்முஸ்தகில்லா, அலஹிவார், அல்இக்ரஃ, அர்ரிஸாலா, Peace Channel, Islam Channel, அல்ஹாபிழ் என்று இஸ்லாமிய இலத்திரனியல் ஊடகங்கள் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகின்றன.
அவ்வாறே அரபு, ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகளில் இஸ்லாமிய இணையதளங்களும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. இஸ்லாமிய ஊடகம் பற்றிய பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.
அலஹஸனாத்: நீங்கள் எந்தளவு தூரம் மீடியாவைப் பயன்படுத்தி தஃவாப் பணியில் ஈடுபடுகிறீர்கள்?
அஷ்ஷெய்க் அகார்: மீடியாவின் முக்கியத்துவத்தை உணரக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு சந்தோஷமடைகிறேன், அலஹம்துலில்லாஹ். இந்த நாட்டில் உரைகளை கெஸட் வடிவில் பரவலாக கொண்டு செல்லக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவ்வாறே வீடியோ கெஸட் வடிவிலும் இறுவட்டு வடிவிலும் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்ற ஒவ்வோர் ஊடகத்தினூடாகவும் எனது உரைகள், கருத்துக்கள் சமூகத்தை சென்றடைவதற்கான வாய்ப்புக் கிட்டியது,            அலஹம்துலில்லாஹ்.
இன்று மிகவும் நவீன முறையாகக் கருதப்படுகின்ற  External Hard Disk மூலம் எனது உரைகள், கலந்துரையாடல்கள், கருத்துக்கள், நேர்காணல்கள் சமூகத்தைச் சென்றடைந்துள்ளன. 500 மணித்தியாலங்கள் கொண்ட அந்த Hard Disk இல் சுமார் 400 மணித்தியாலங்கள் கொண்ட உரைகள் என்னுடையது, அலஹம்துலில்லாஹ். இந்த External Hard Disk ஐ லண்டனிலுள்ள Knowledge Box எனும் இஸ்லாமிய நிறுவனம் வெளியிட்டுள்ளது. அல்லாஹ்வின் அருளால் நான் மீடியாவைப் பயன்படுத்தினேனோ இல்லையோ, என்னை மீடியா பயன்படுத்தியிருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்.
இது தவிர கால் நூற்றாண்டு காலமாக இலங்கை வானொலி ஊடாக தஃவாப் பணியில் ஈடுபட்டேன். ஆரம்ப காலத்தில் அல்குர்ஆன் விளக்கம், ஹதீஸ் விளக்கம் மற்றும் உரைகளை நிகழ்த்தி வந்தேன். பின்பு சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக 'உலகளாவிய முஸ்லிம் உம்மத்' எனும் தலைப்பில் தொடர் உரை நிகழ்த்தினேன். பின்னர் 'அன்றாட வாழ்வில் இஸ்லாம்' எனும் தலைப்பிலும் ஒரு சில வருடங்கள் தொடர் உரை நிகழ்த்தினேன்.
அலஹம்துலில்லாஹ் தற்போது எனது பல்வேறு உரைகள் இலங்கை வானொலியினூடாக ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. தவிரவும் இலங்கை ரூபவாஹினி, ஐ.டீ.என் ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகடாக தஃவாப் பணியை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தை அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ளான். அந்தவகையில் நானும் கலாநிதி ஷுக்ரி அவர்களும் சேர்ந்து நடத்திய 'பைதுல் ஹிக்மா' நிகழ்ச்சியும் வரவேற்பைப் பெற்றது.
கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக வேறு சில நாடுகளிலுள்ள தொலைக்காட்சி நிலையங்களும் எனது உரைகளை ஒளிபரப்பி வருகின்றன. குறிப்பாக தமிழ் நாட்டிலே பரவலாக எனது உரைகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. மலேசியாவிலும் அவ்வப்போது எனது உரைகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இணையதளத்தின் மூலம் தஃவாப் பணியை முன்னெடுக்கும் வாய்ப்பும் கிட்டியுள்ளது.www.sheikagar.org எனது பெயரில் இயங்கிவரும் இணையதளத்தின் மூலம் பெரும்பாலானவர்கள் பயனடைகின்றனர். மற்றும் எனது இணையத்திலுள்ள உரைகள், கட்டுரைகள், நேர்காணல் என்பன sljicircle.com, tamilbayan.com, slmuslim.com, tamilmuslimtube.com, Peace London Dawa Center இன் இணையதளம் முதலானவற்றிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த நாட்டில் தமிழ் மொழிமூலம் வெளிவருகின்ற தேசிய பத்திரிகைகளில் ஒன்றான தினகரன், வாரந்த முஸ்லிம் பத்திரிகையான நவமணி ஆகியவற்றில் எழுதி வந்திருக்கிறேன். நீண்ட காலமாக அலஹஸனாத் சஞ்சிகை மூலமாக எனது எழுத்துமூல தஃவாப் பணியை மேற்கொண்டுள்ளேன். மற்றும் ஜாமிஆ நளீமிய்யா வெளியீட்டுப் பணியகத்தினால் வெளியிடப்பட்டு வரும் இஸ்லாமிய சிந்தனை எனும் ஆய்வு சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியராக கடமையாற்றியிருக்கிறேன். கடந்த 25 வருட காலமாக எனது ஆக்கங்கள் தொடர்ந்தேர்ச்சியாகப் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. மற்றும் சமரசம், நம்பிக்கை போன்ற சஞ்சிகைகளிலும் எனது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
எனது சக்திக்குட்பட்ட வகையில் நான் இலத்திரனியல், அச்சு ஊடகங்களைப் பயன்படுத்தி வருகிறேன். எம்மைப்போல பல இஸ்லாமிய அழைப்பாளர்கள் மீடியாவின் மூலம் தஃவாப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாம் அண்மைக்காலமாக மீடியா வலைப்பின்னலை, குறிப்பாக இலத்திரனியல் ஊடக வலையமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அதுதான் Knowledge Box எனும் வலையமைப்பு. அதன் பரீட்சார்த்த நிகழ்ச்சியாக கடந்த ரமழான் மாதத்தில் EYE- அலைவரிசையினூடாக 30 நிமிடங்கள் கொண்ட நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம். இன்ஷா அல்லாஹ், அதன் மூலம் இன்னும் பல காத்திரமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.

 

நேர்காணல்: ஜெம்ஸித் அஸீஸ்

We have 56 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player