இறுதித் தூதரும் உலகம் தழுவிய தூதுத்துவமும்!

 

முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நினைவுகூருவது என்பது சாதாரண ஒரு மனிதனை நினைவுகூர்வதல்ல. அது ஒரு நபியை, ரஸூலை நினைவுகூர்வது. சாதாரண ஒரு நபியை, ரஸூலை நினைவுகூர்வதல்ல. இறுதி நபியை (காதமுந் நபிய்யீன்) நினைவுகூர்வது. உலகில் தோன்றிய அத்தனை இறைதூதர்களுக்கும் தலைவராக (ஸய்யிதுல் முர்ஸலீன்) திகழ்ந்த ஒரு நபியை, ஒரு ரஸூலை நினைவுகூர்வதுதான் முஹம்மத் (ஸல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நினைவுகூர்வதாகும்.

முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நினைவுகூருவது என்பது அவர்கள் கொண்டு வந்த ரிஸாத்தை, வஹியை, தீனை நினைவுகூர்வதாகும்.

அந்த வகையில்நாம் நபி (ஸல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை, அவர்களது வாழ்வை, இறைதூதை, அவர்களுடைய அழைப்பை, அவர்கள் கொண்டு வந்த தீனை, வஹியை நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம். நபியவர்களின் வாழ்வும் வாக்கும் எமது உள்ளங்களில் எப்பொழுதும் பசுமையாக இருக்க வேண்டும். நாம் ஒவ்வொரு தொழுகையிலும், அத்தஹிய்யாத் அமர்விலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நேரடியாக விளித்து பின்வருமாறு ஸலாம்சொல்கிறோம்:

"உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தும் பரகத்தும் உங்கள் மீது இறங்கட்டும்."

1500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து மரணித்த அந்த நபியை படர்க்கையில் அல்லாமல் முன்னிலையில் விளித்து நாம் ஸலாம் சொல்கிறோம் என்றால் எந்தளவு தூரம் எமது இறுதித் தூதரின் வாழ்வும் வாக்கும் ஒவ்வோர் இறை அடியாரிடத்திலும் பசுமையாக இருக்க வேண்டும் என்பதை நாம் உணர கடமைப்பட்டிருக்கின்றோம்.

நபி (ஸல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனக்கே உரிய பல தனிப் பெரும் சிறப்பம்சங்களைப் பெற்றவர். மனித குலத்துக்கு வழிகாட்ட வந்த எந்தவொரு இறைதூதரும் பெற்றிருக்காத தன்னிகரற்ற சிறப்புகளை நபியவர்கள் பெற்றிருந்தார்கள் என்பதற்கு அவரது வாழ்க்கை வரலாறு தகுந்த சான்று. உலகில் தோன்றிய அத்தனை இறைதூதர்களும் குறிப்பிட்ட ஒரு சில பிரதேசங்களுக்கு, குறிப்பிட்ட சமூகங்களுக்கு மாத்திரமே இறைதூதர்களாக அனுப்பப்பட்டார்கள். ஆனால், முஹம்மத் நபியவர்கள் முழு மனித சமுதாயத்திற்கும் எல்லா இனத்தவர்களுக்குமான இறைதூதராக அனுப்பப்பட்டதை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:

"முஹம்மதே! அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்." (ஸூரதுல் அன்பியா: 107)

"முஹம்மதே! நற்செய்ததி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம்." (ஸூரா ஸபஃ :28)

"மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராவேன்." (ஸூரா அஃராப்: 158)

மனித இன வரலாற்றில் "நான் முழு மனித சமுதாயத்திற்கும் இறைதூதராவேன்" என்று முஹம்மத் நபியவர்களுக்கு முன்னர் எந்தவொரு இறைதூதரும் பிரகடனப்படுத்தவில்லை. 1 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறைதூதர்களில் நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தனது சமுதாயத்திற்காகவே அனுப்பப்பட்டார்கள். நபிமார்களான இப்றாஹீம, மூஸா, ஈஸா (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகியோரும் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கு, குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு, குறிப்பிட்ட ஒரு பிரதேசத்திற்கு மாத்திரம் இறைதூதர்களாக அனுப்பப்பட்டிருந்தமையை வரலாற்றின் ஊடாக நாம்அறிகின்றோம்.

ஹூத் (அலைஹிஸ்ஸலாம்) ஆத் சமூகத்திற்கும் ஸாலிஹ் (அலைஹிஸ்ஸலாம்) ஸமூத் சமூகத்திற்கும் ஷுஐப் (அலைஹிஸ்ஸலாம்) மத்யன்வாசிகளுக்கும் இறைதூதர்களாக அனுப்பப்பட்டார்கள். ஆனால், முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எல்லா சமூகத்தினருக்கும் எல்லா இனத்தவர்களுக்கும் உலகத்தார் அனைவருக்கும் இறைதூதராக அனுப்பப்பட்டவர்.

அவரை அல்லாஹ் யுக முடிவு வரை உலகத்தின் ஏக தூதராகவும் தெரிவு செய்திருக்கிறான். அவர்கள் இறுதி நபியாகவும் அவருடைய நுபுவ்வத் இறுதி நுபுவ்வத்தாகவும் அவருடைய ரிஸாலத் இறுதி ரிஸாலத்தாகவும் மிளிர்கின்றமை அவரின் மகத்துவத்தை மேலும் மெருகூட்ட போதுமானது.

எனவே, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கொண்டுவந்த இஸ்லாத்திற்குப் பிறகு மற்றமொரு தீன்இல்லை. அல்குர்ஆனுக்குப் பிறகு மற்றுமொரு வேதம் இல்லை. அவரின் வருகைக்குப் பின்னர் மற்றுமொரு நபியின், ரஸூலின் வருகை அவசியமில்லை என்பது தீர்க்கமானமுடிவாகும். இதனை நாம் ஆழமாக உணர கடமைப்பட்டிருக்கிறோம். இதனை குர்ஆன் பறைசாற்றுவதைப் பாருங்கள்:

"(மனிதர்களே!) முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உங்களுடைய ஆண்களில் எவருக்கும் தந்தையல்லர் ஆயினும், அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் நபிமார்களில் இறுதி முத்திரையும் ஆவார்கள். மேலும் இறைவன் யாவற்றையும் நன்கு அறிந்தோனாக இருக்கின்றான்." (33: 40)

இந்த சந்தர்ப்பத்தில் خاتم எனும் சொல்அரபு மொழியில் கையாளப்படும் விதம், அதன்அர்த்தங்களை தெளிவுபடுத்துவது பொருத்தம் எனக் கருதுகின்றேன்.

அரபு மொழியில் خَاتَمَ النَّبِيّنَ என்றால் நபிமார்களில் இறுதியாக, கடைசியாக, முடிவாக வந்தவர் என்று பொருள்படும். خَتم العمل என்றால் ஒரு வேலையை செய்துமுடித்து விட்டு ஓய்வு பெற்றான் என்று பொருள்.

ختَم الإناء என்றால் பாத்திரத்தின் வாயை மூடிவிட்டான். எப்பொருளும் அதிலிருந்து வெளியாகாதவாறும் எப்பொருளும் அதன் உட்புகாதவாறும் அதன் மீது முத்திரை வைத்தான் என்று பொருள்.

خَتم على القَلب உள்ளத்தின் மீது முத்திரையிட்டான். அதாவது எந்த விடயமும் அவனது உள்ளத்தில் புகாமலும் ஏற்கனவே இடம்பெற்றிருந்த எந்த விடயமும் உள்ளத்திலிருந்து வெளியேறாமலும் இருக்கும் வண்ணம் உள்ளத்தின் மீது முத்திரையிடப்பட்டுள்ளது என்பதே அதன்அர்த்தம்.

ختام كل شيء عاقبته واخرته ஒரு பொருளின் முடிவு அதாவது அப்பொருளின் இறுதியும் கடைசியும்ஆகும். ختم شيء بلغ اخره என்றால் ஒரு விடயத்தை முடித்தான். அதாவது அதன் இறுதி வரை சென்றடைந்தான் என்று பொருள்படும். خاتم القوم اخره என்றால் கோத்திரத்தைச் சேர்ந்த கடைசி மனிதன் என்று பொருள்.

خَتم الكتاب والخطاب என்றால் ஒரு கடிதத்தைத் திறக்க முடியாதவாறு அதன் மீது முத்திரை பதித்தான் என்று பொருள். ختام كل شيء என்றால் ஒன்றின் முடிவு அல்லது இறுதி என்று பொருள். خاتم القوم என்றால் சமுதாயத்தில் கடைசியாக, இறுதியாக, முடிவாக வந்தவர் என்று பொருள்படும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இறுதி நபித்துவத்தை மறுப்பவர்கள் குறித்த சொல்லின் பதப்பிரயோகத்திற்கு வேறு விதமான விளக்கம் கொடுக்க முயற்சிக்கின்றனர். خَاتَمَ النَّبِيّنَ என்பதற்கு நபிமார்களில் சிறந்தவர், நபிமார்களில் உயர்ந்தவர் என்று அர்த்தம் கற்பிக்கின்றனர். அது எல்லா கண்ணோட்டங்களிலும் பிழையானது மாத்திரமல்ல, மிகப் பெரும் வழிகேடும் தெளிவான குப்ரும் ஆகும் என்பதை நாம் ஆழமாக புரிந்து வைத்திருக்க வேண்டும்.

முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தனிப் பெரும் பண்பே அவர்கள் இறுதித் தூதராக இருப்பதுதான். இதனை பல ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

"நான்தான் நபிமார்களில் இறுதியானவன். நீங்கள்தான் உலகில் தோன்றிய சமுதாயங்களில் இறுதியான சமூகமாக இருக்கிறீர்கள்." (இப்னுமாஜா, ஹாகிம்)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஓர் அற்புதமான உதாரணத்தின் மூலம் தானே இறுதி நபி என்பதை உறுதிப்படுத்துகிறார்கள்.

"எனக்கும் எனக்கு முன்சென்று போன நபிமார்களுக்கும் உவமை ஒரு மனிதன் கட்டிய வீட்டைப் போன்றதாகும். அவனோ ஒரு வீட்டைக் கட்டி அதனை நன்கு அலங்கரித்தான். ஆனால், அவ்வீட்டின் ஒரு மூலையில் செங்கல் ஒன்று வைக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறது. மக்கள் அவ்வீட்டைச் சுற்றிசுற்றி வந்து அதன் எழிலைப் பற்றி வியப்புறுகின்றார்கள். ஆயினும் அந்த இடத்தில் ஒரு செங்கல் மட்டும் வைக்கப்படாமல் விடப்பட்டது ஏன்? என்று அவர்கள் கேட்கிறார்கள். எனவே, அந்தச் செங்கல் நான்தான்! நான் நபிமார்களில் இறுதியானவரும் ஆவேன்! (அதாவது எனது வருகையோடு நபித்துவம் எனும் மாளிகை முற்றுப்பெற்று விட்டது. எனவே, குறையாக இருந்துவிட்ட இடத்தைப் பூர்த்திசெய்வதற்கு இனி எந்த நபியும் வர வேண்டியதில்லை.)" (அல்புகாரி)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "தூதுத்துவம் (ரிஸாலத்), நபித்துவம் (நுபூவத்) ஆகியவற்றின் தொடர் முற்றுப்பெற்று விட்டது. எனக்குப் பின் இனி எந்த ரஸூலும் இல்லை நபியும்இல்லை." (அத்திர்மிதி, முஸ்னத் அஹ்மத்)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பல முன்னறிவிப்புக்களைச் செய்துள்ளார்கள். ஒரு முறை நபியவர்கள் "எனக்குப் பிறகு எனது சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். அதில் ஒவ்வொருவரும் தான் நபி என வாதிடுவார்கள். நிச்சயமாக நான் தான் இறுதியானவராக இருக்கின்றேன். எனக்குப் பிறகு எந்தவொரு நபியும் வரப்போவதில்லை" என்று கூறினார்கள்.

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

"இவ்வுலகில் முப்பது பொய்யர்கள் உருவாகுவார்கள். அவர்கள் உருவாகாத வரை மறுமை நாள் வர மாட்டாது. அவர்கள் ஒவ்வொரு வரும் தம்மை அல்லாஹ்வின் தூதர்கள் என்று வாதிடுவார்கள். உண்மையில் நான்தான் இறுதியான நபி. எனக்குப் பிறகு எந்தவொரு நபியும் வரப்போவதில்லை." (அபூதாவூத், அத்திர்மிதி)

ஸூரதுல் பகராவின் ஆரம்ப வசனங்களில் இந்த உண்மை மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. நேர்வழியைப் பின்பற்றுகின்ற முத்தகீன்கள் யார் என்பதை தெளிவுபடுத்தும்போது அல்குர்ஆன் இதனை அழகாக முன்வைக்கிறது.

"அவர்கள் மறைவான அம்சங்களை விசுவாசிப்பார்கள். தொழுகையை உரிய நேரத்தில் நிலைநாட்டுவார்கள். நாம் கொடுத்தவற்றிலிருந்து நல்ல முறையில் செலவு செய்வார்கள். உங்களுக்கு இறக்கி அருளப்பட்டதையும் உங்களுக்கு முன்னைய இறைதூதருக்கும் ரஸூல்மார்களுக்கும் நபிமார்களுக்கும் இறக்கி அருளப்பட்டதையும் அவர்கள் விசுவாசிப்பார்கள். மேலும் அவர்கள் மறுமையையும் நம்புவார்கள். அவர்கள் தான் நேர்வழியில் இருப்பவர்கள். அவர்கள்தான் வெற்றியாளர்கள்."

இங்கு அல்குர்ஆன் "உங்களுக்கு முன்வந்த இறைதூதர்களையும் விசுவாசிப்பார்கள்" என்று மாத்திரமே குறிப்பிடுகிறது. இதற்குப் பிறகு வரவிருக்கின்ற இறைதூதர்கள் பற்றி அல்குர்ஆன் குறிப்பிடவில்லை. உங்களுக்குப் பிறகு எந்தவொரு நபியும் வரப்போவதில்லை. நீங்கள்தான் இறுதி நபி என்பதை அல்குர்ஆன் தெளிவாகவே பறைசாற்றுகிறது.

இன்றுஅல்குர்ஆன், ஹதீஸ், ரிஸாலத், நுபுவ்வத் முதலான இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைக் கோட்பாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற ஒரு தோற்றப்பாடு இருக்கவே செய்கிறது. வரலாற்றில் இறுதி நபித்துவத்திற்கு அவ்வப்போது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்திருக்கிறது. பல்வேறு போலி வாதங்களை முன்வைத்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வருகைக்குப் பின்னரும் ரஸூல்மார்கள், தீர்க்கதரிசிகள் வரலாம் என்ற பகிரங்கமான, குப்ரியத்தான சிந்தனை இன்றும் உலகளாவிய ரீதியில் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அண்மைக் காலமாக எமது நாட்டிலும் இந்த சிந்தனையைக் கொண்டவர்கள், இந்த சிந்தனையால் கவரப்பட்டவர்களை ஆங்காங்கே காண முடிகிறது. எனவே, இவர்களது இவ்விடயத்தில் மிகவும் விளிப்பாக, எச்சரிக்கையாக இருக்க வேண்டியது காலத்தின் தேவை. இந்த ஆபத்தான கொள்கை குறித்து அடுத்த தலைமுறையினருக்கு அறிவூட்டி அவர்களின் நம்பிக்கைக் கோட்பாட்டைப் பாதுகாக்க வேண்டியது எமது சன்மார்க்கக் கடமை.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மனித வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்ட வந்தவர்கள். அவர் வெறுமனே ஒரு மதத்தையோ மார்க்கத்தையோ கொண்டு வரவில்லை. மாறாக, ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டத்தையும் இவ்வுலகிற்கும் மறுமைக்கும் ஆன்மிகத்திற்கும் லௌகிகத்திற்கும் தேவையான வழிகாட்டல்களை, தனி மனித, குடும்ப, சமூக வாழ்க்கைக்கான வழிகாட்டல்களையே அவர் வழங்கியிருக்கிறார்.

அனைத்திற்கும் வழிகாட்டியாக அல்குர்ஆனை இறக்கி வைத்திருப்பதாக அல்லாஹுத் தஆலா கூறுகிறான். இஸ்லாமிய வாழ்க்கைநெறிக்கு வெளியே சென்று எந்த ஒரு வழிகாட்டலையும் பெற வேண்டிய தேவை ஒரு முஃமினுக்கு கிடையாது.

"இந்த வேதத்தின் ஒரு பகுதியை நம்பி அடுத்த பகுதியை நிராகரிக்கிறீர்களா?" என்று அல்லாஹுத் தஆலா மற்றுமோர் இடத்தில் கேட்கிறான்.

"நீங்கள் இந்த தீனுக்குள் முழுமையாக நுழைந்து விடுங்கள்" என்று அல்லாஹ் எம் அனைவரையும் விளித்து கட்டளையிடுகிறான். எனவே, ஓர் இறைவிசுவாசியைப் பொறுத்தவரையில் அவன் இஸ்லாத்தையே தனது ஏக கொள்கையாக ஏற்க வேண்டும். எந்தவொரு புதிய கொள்கைக்குப் பின்னாலும் அவன் சென்றுவிடக் கூடாது.

இன்று மதச்சார்பின்மை, சடவாதம், நவநாகரிக மௌட்டீக சிந்தனைக் கோட்பாடுகள் முதலான வழிகெட்ட சிந்தனைகள் தோன்றியிருப்பதை பார்க்கிறோம். புத்திஜீவிகள் என்று தம்மை சொல்லிக் கொள்பவர்கள் குறிப்பாக, எமது இளைஞர் யுவதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒரு தருணம் இது.

இத்தகைய நச்சுக் கருத்துகள், கொள்கை, கோட்பாடுகளால் பலர் கவரப்பட்டு அவற்றின் பின்னால் அள்ளுண்டு செல்கிறார்கள். தொழுகை, நோன்பு மற்றும் சில வணக்க வழிபாடுகளில் மாத்திரம் இஸ்லாத்தைப் பின்பற்றி தனிப்பட்ட, குடும்ப வாழ்க்கைக்கு, குடும்ப உறவுகளுக்கு, கொடுக்கல் வாங்கலுக்கு திருமண வாழ்க்கைக்கு ஏனைய விவகாரங்களுக்கான வழிகாட்டல்களைப் பெற அல்லாஹ்வின் தீனை விட்டு ஏனைய நச்சுக் கொள்கைகளை நாடிச் செல்கின்ற ஒரு பயங்கர நிலையை காண முடிகிறது. அல்லாஹ்வின் தூதர் கொண்டு வந்த மார்க்கம் எவ்வித குறையும் இல்லாத முழுமையான, பரிபூரணமான மார்க்கமாகும். இஸ்லாத்தைத் தவிர எந்தவொரு சிந்தனையையும் கொள்கையையும் கருத்தியல் இலட்சியவாதத்தையும் ஓர் உண்மை முஃமின் ஏற்கவோ அதன்படி வாழவோ முடியாது. இதனை அல்குர்ஆன் அழகிய முறையில் பறைசாற்றுகின்றது.

"இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவுசெய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்." (ஸூரதுல் மாஇதா: 03)

இவை அனைத்துக்கும் மேலாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கே உரிய தனிப் பெரும் சிறப்பம்சம்தான், அவர் முழு மனித சமுதாயத்தின் மீதும் அன்பு செலுத்தி அவர்களை அரவணைத்து மனிதாபிமானத்தையும் மனிதநேயத்தையும் இவ்வுலகில் நிலைநாட்டியமை ஆகும். நபியவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்று முதலாவது வருடத்திலேயே அவர் செய்த ஆரம்ப பணிகளில் ஒன்றுதான் மதீனா சாசனத்தை உருவாக்கியமை. அதுதான் மனித இன வரலாற்றிலேயே உருவாக்கப்பட்ட முதலாவது மனித உரிமை சாசனமாக நோக்கப்படுகின்றது. இந்த மதீனா சாசனத்திலே 52 சரத்துக்கள் காணப்படுகின்றன. இவற்றில் 25 சரத்துகள் முஸ்லிம்களின் விவகாரங்கள் தொடர்பாகவும் மிகுதி 27 சரத்துக்கள் முஸ்லிம், முஸ்லிமல்லாத உறவுகள் பற்றியும் பேசுகின்றன. குறிப்பாக இவை முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்குமிடையிலான உறவு, முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையிலான உறவு பற்றி பேசுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முஃமின்களுக்கு மாத்திரம் சொந்தமானவர் அல்ல. முழு மனித சமுதாயத்திற்கும் அவர்கள் அருளாக, வழிகாட்டியாக வந்தவர்கள். எனவேதான், நபியவர்கள் மதீனா சாசனத்திற்கூடாக மாத்திரம் மனித உரிமையை, மத உரிமையை ஏனைய சமூகத்திற்குள்ள உரிமைகளை, வரப்பிரசாதங்களை உத்தரவாதப்படுத்தவில்லை. மாற்றமாக, மதீனாவைச் சூழவிருந்த கோத்திரங்களோடு கிறிஸ்தவர்கள், மக்காவாசிகள், முஃமின்களோடு நபியவர்கள் வெவ்வேறு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டார்கள். அன்றைய சமூகத்திற்கு நபியவர்கள் ஸூரா காபிரூனை ஓதிக் காண்பித்தார்கள்.

இந்த ஸூரா உண்மையில் இஸ்லாம் கூறுகின்ற சர்வதேச தொடர்புகள் பற்றி பேசும் ஒரு ஸூராவாகும். இஸ்லாம் மாற்றுக் கருத்துக்களுக்கு சவால் விடுக்க மாட்டாது என இந்த ஸூறா சுட்டிக்காட்டுகிறது.

"உங்களுக்குஉங்களுடையமார்க்கம்எனக்குஎன்னுடையமார்க்கம்." (ஸூரதுல் காபிரூன்: 06)

நீங்கள் உங்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றுங்கள் உங்களுடைய சமய கிரியைகளை, கொள்கைகளைப் பின்பற்றுங்கள் உங்களுடைய வணக்க வழிபாடுகளிலும் ஈடுபடுங்கள். ஆனால், நீங்கள் வணங்குவதை நாங்கள் வணங்க மாட்டோம். நாங்கள் வணங்குவதை நீங்கள் வணங்க வேண்டிய தேவையும் இல்லை. நாங்கள் வற்புறுத்தவும் மாட்டோம் என்ற செய்தியை அல்குர்ஆன் இங்கு சுட்டிக்காட்டுகிறது.

"மார்க்கத்தில் நிர்ப்பந்தம் கிடையாது." (ஸூரதுல் பகரா: 256)

அந்த வகையில் மாற்று மதத்தவர்களை இஸ்லாத்தின்பால் நிர்ப்பந்திப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

"யார் எம்மோடு கூடி வாழ்கின்ற முஸ்லிம் அல்லாத ஒருவரை இம்சிக்கின்றானோ அவன் என்னை இம்சித்தவனாவான். யார் என்னை இம்சிக்கிறானோ அவன் அல்லாஹ்வை இம்சித்தவனாவான்."

மற்றுமொரு சந்தர்ப்பத்தில், "எம்மோடு கூடிவாழ்கின்ற முஸ்லிமல்லாத ஒருவரை யார் இம்சிக்கின்றாரோ மறுமையில் அவருக்கு எதிராக நான் வாதிடுவேன்" என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இத்தகைய அற்புதமான மார்க்கத்தையே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எமக்கு கொண்டு வந்தார்கள். அந்த வகையில் நாம் ஏற்றிருக்கிற அல்லாஹ் எமக்கு மாத்திரம் உரிய இறைவன் அல்ல. அவன் "ரப்புந்நாஸ்" "இலாஹுந் நாஸ்" (முழு மனித சமூகத்திற்குமான இறைவன்). அவன் "மலிகுந்நாஸ்" (முழு மனித சமூகத்திற்குமான அரசன்). நாம் ஏற்றிருக்கின்ற அல்குர்ஆன் "ஹுதன்லின்னாஸ்" (முழு மனித சமூகத்திற்குமான வழிகாட்டி) நாம் ஏற்று நம்புகின்ற ரஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "காப்பதுந்லின்னாஸ்" (முழு மனித சமூகத்திற்கும் உரியவர்)

நாம் ஏற்றிருக்கின்ற ரப்பு, ரப்புந் நாஸ். நாம் ஏற்றிருக்கின்ற அல்குர்ஆன் ஹுதன் லின்னாஸ். நாம் ஏற்று விசுவாசித்திருக்கின்ற முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காப்பதுந் லின்னாஸ். முஸ்லிம் உம்மத் உக்ரிஜத் லின்னாஸ்.

எனவே, முஸ்லிம் உம்மத் முழு மனிதச முதாயத்திற்கும் வழிகாட்டுகின்ற, நன்மையை ஏவுகின்ற, மற்றவரின் நலனுக்காக வாழுகின்ற ஒரு சமூகமாகும். அது தீங்கு செய்கின்ற, தீங்கை விரும்புகின்ற உம்மத்அல்ல. நன்மையைப் போதிக்கின்ற, அதன்வழி வாழுகின்ற, உலகத்தில் நன்மை வாழ வேண்டும் என்பதற்காக உழைக்கின்ற உம்மத் ஆகும். இந்த உண்மையை நாம் ஆழமாக உணர வேண்டும். இதனை அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

"நீங்கள் மனித குலத்துக்காக தேர்வுசெய்யப்பட்ட சிறந்தச முதாயமாகவே இருக்கிறீர்கள் நன்மையை ஏவுகிறீர்கள் தீமையைத் தடுக்கிறீர்கள்." (ஸூரதுல் மாஇதா: 03)

இஸ்லாம் மகத்தானதொரு மார்க்கம். எமது அல்குர்ஆன் மகத்தானதொரு வேதம். எமது தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மகத்தானதோர் இறைதூதர். எனவே, முழு மனித சமூகத்திற்கும் அல்லாஹ்வை, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை, தீனை எடுத்து சொல்லுகின்ற மிகப் பெரிய பொறுப்பு எம்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த உண்மையை உணர்ந்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையும் அவரது வாழ்வையும் போதனைகளையும் எப்போதும் உள்ளத்தில் பசுமையாக வைத்திருக்க முயற்சிப்போமாக!

 

We have 86 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player