ஜம்இய்யதுல் உலமா உட்பட அனைத்து தரப்புக்களையும் உள்ளடக்கிய தேசிய பொறிமுறை அவசியம்


ஜம்இய்யதுல் உலமா உட்பட அனைத்து தரப்புக்களையும் உள்ளடக்கிய தேசிய பொறிமுறை அவசியம்

அஷ்ஷெய்க் ஏ.ஸி.அகார் முஹம்மத்

 

ஜம்இய்யதுல் உலமா உட்பட இலங்கை முஸ்லிம் சமூகத்தில் உள்ள சிவில் சமூக நிறுவனங்கள், தரீக்காக்கள், இஸ்லாமிய அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகள் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதும், பொது இலக்குகளுக்காக அனைவரும் ஒன்றிணைந்து தேசிய மட்டத்தில் செயற்படுவதற்குமான ஒரு சிறந்த பொறிமுறை அடையாளம் காணப்பட்டு அதனைச் சாத்தியப்படுத்த வேண்டும் என்பது எனது மிகப்பெரும் எதிர்பார்ப்பாகும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் தெரிவித்தார். அவர் வழங்கிய முழுமையான நேர்காணலை கீழே வாசிக்கலாம்.

நேர்காணல்: அஷ்கர் தஸ்லீம்

கேள்வி: உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கை முஸ்லிம்களின் நிலை எவ்வாறு உள்ளது?

பதில்: எவரும் எதிர்பாராத விதத்தில் நடந்த இந்த துன்பியல் நிகழ்வு, நாட்டை உலுக்கியது போல, இலங்கை முஸ்லிம்களில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதை நாம் அறிவோம். இப்பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இலங்கை முஸ்லிம் சமூகம் ஒருமித்த குரலில் அதனை முற்றுமுழுதாக ஆட்சேபித்ததோடு, மனிதாபிமான கண்ணோட்டத்திலும் பண்பாட்டுக் கண்ணோட்டத்திலும் இஸ்லாமியக் கண்ணோட்டத்திலும் இந்த ஈனச் செயலை கண்டித்தது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உட்பட இஸ்லாமிய அமைப்புக்களின் அறிக்கைகள், செயற்பாடுகள், முன்னெடுப்புக்கள் என அனைத்து வழிமுறைகள் மூலமும் இவ்வீனச் செயலை முஸ்லிம் சமுகம் மிக வன்மையாகக் கண்டித்தது மட்டுமன்றி நாட்டின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட எல்லா விடயங்களிலும், முஸ்லிம் சமூகம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதை நாம் கடந்த காலங்களில் கண்டுகொண்டோம்.

 

ஆனால், முஸ்லிம் சமூகத்தின் இந்த நிலைப்பாட்டை பலர் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஒரு சிறிய கும்பல் அல்லது கோஷ்டி ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலுக்காக செய்த, இப்பயங்கரவாத தாக்குதலை வைத்து முழு முஸ்லிம் சமூகமும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, புனித மார்க்கமாகிய இஸ்லாத்தை தவறாகப் பார்க்கும் ஒரு நிலை தொடர்ந்தும் இருந்து வருவது கவலைக்குரியதாகும்.

 

கிறிஸ்தவ சமுகத்துக்கு தலைமைத்துவம் வழங்கும் பேராயர் மெல்கம் ரஞ்சித் அவர்கள்கூட இப்பயங்கரவாதச் செயலை கண்டித்ததோடு ஒரு சிறிய கும்பலினது நாசகார நடவடிக்கைகளுக்காக முழு முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் குற்றக் காண்பது தவறானது எனத் தெரிவித்த கருத்துக்களை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஏனெனில் பயங்கரவாதத்திற்கோ அல்லது தீவிரவாதத்திற்கோ மதம் கிடையாது.

கேள்வி:மொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிக் கூண்டில் வைத்துப் பார்க்கும் ஒரு போக்கு தற்காலத்தில் வலுவடைந்திருப்பதற்கான பிரதான காரணங்களாக எவற்றை அடையாளப்படுத்தலாம்?

பதில்: முஸ்லிம் சமுகத்துடன் தொடர்புபட்ட மஸ்ஜித்கள், பாடப் புத்தகங்கள், மத்ரஸாக்கள், ஆடை, ஹலால், தொழில்;, தொழில்வாண்மையாளர்கள், அரசியல்வாதிகள் என எல்லாமே பிரச்சினைகளாகப் பார்க்கப்படுகின்ற துரதிஷ்டவசமான ஒரு சூழல் இன்று உருவாகியுள்ளது. ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள ஓரிரு விடயங்கள் பிரச்சினைகளாக இருக்கலாம் என்று கூறுவதில் நியாயமுண்டு. ஆனால், ஒரு சமூகத்தின் அனைத்து விடயங்களுமே பிரச்சினையாக சித்தரிக்கப்படுவதாயின், அச்சித்தரிப்பு முயற்சிக்குப் பின்னால் வேறு வகையான நிகழ்ச்சி நிரல்கள் இருக்கின்றன என்பது வெள்ளிடை மலை.

 

இதற்கு பிரதானமான சில காரணங்களைக் குறிப்பிடலாம். அவற்றில் இலங்கை முஸ்லிம்களுக்கு 1000 வருடங்களைத் தாண்டிய வரலாறு உள்ளபோதும், இஸ்லாத்தின் நம்பிக்கைகள், அடிப்படைகள், வாழ்வியல் கோட்பாடுகள், ஒழுக்க விழுமியங்கள், உலக நோக்கு போன்றவை தொடர்பான தெளிவு எமது நாட்டில் வாழும் ஏனைய சமூகத்தினருக்கு எம்மால் போதியளவு வங்கப்படாமையால் ஏற்பட்ட அறியாமையை ஒரு காரணமாகக் குறிப்பிடலாம். அவ்வாறே உலகளவில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எதிர்ப்பதற்காகவும், விமர்சிப்பதற்காகவும் பலகோடி டொலர்களை செலவு செய்து இயங்கிவரும் இஸ்லாமோபோபியாவை விதைக்கும் அணிகள் காலாகாலமாக மக்கள் மத்தியில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றி ஏற்படுத்தியுள்ள பீதியையும் மற்றுமொரு காரணியாகக் குறி;ப்பிடலாம்.

 

அது மட்டுமன்றி முஸ்லிம் சமுகத்துக்கெதிரான செயற்பாடுகள் என்றுமில்லாதவாறு அதிகரித்திருப்பதற்கான இன்னுமொரு காரணியாக எமது நாட்டின் அரசியல் கலாசாரத்தை அடையாளப்படுத்தலாம். அரசியல் கட்சிகள் தமது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, எந்தவொரு விழுமிய முரண் செயற்பாடுகளைச் செய்வதற்கும் தயங்குவதில்லை. நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எந்தவொரு தேவையும் இவ்வறான அரசியல்வாதிகளுக்கு தேவையில்லை. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எந்தவொரு நட்டம், அழிவு ஏற்பட்டாலும், இவர்களுக்கு அதுபற்றிக் கவலையில்லை.

 

அத்தோடு இனவாதிகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட எந்தவொரு முன்னெடுப்பும் வெற்றிபெறாத நிலையில், இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தமது இனவாத நிகழ்ச்சி நிரலை முன்கொண்டு செல்வதில்; உறுதியாக இருக்கிறார்கள். ஆதலால் இனவாதத்தையும் பிரதான காரணி ஒன்றாக இங்கு குறிப்பிட முடியும்.

 

இறுதியாக, முஸ்லிம் சமூகத்துக்குள் காணப்படும் உள்ளக முரண்பாடுகளும் தற்போதை நிலைக்கு பங்காற்றியுள்ளதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இது மிகவும் வருத்தமளிக்கின்ற ஒரு விடயமாகும். முஸ்லிம் சமூகத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் உள்ளக முரண்பாடுகள் காரணமாகவும், முஸ்லிம் சமூகம் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது.

கேள்வி: இலங்கை முஸ்லிம் சமூகத்தை சமய ரீதியில் பல கண்ணோட்டங்களில் வகைப்படுத்ததி நோக்கும் ஒரு போக்கை சமீபத்தில் பார்க்கிறோம். இது பற்றிய உங்கள் பார்வை என்ன?

பதில்:
இஸ்லாம் நடுநிலை சிந்தனையை வலியுறுத்தும் மார்க்கமாகும். இந்த வகையில் உலகளாவிய ரீதியில் வாழும் சுமார் 180 கோடி முஸ்லிம்களில் 99%க்கு அதிகமானோர் தீவிரவாதத்துடனும் பயங்கரவாதத்துடன் எந்தத் தொடர்புமற்றவர்கள். மட்டுமன்றி அதனை நிராகரிப்பவர்கள். அதிலும் குறிப்பாக, இலங்கை முஸ்லிம் சமுகமானது, சில மார்க்க விவகாரங்களில் தமக்கு மத்தியில் கருத்துவேறுபாடுகளைக் கொண்டிருந்நபோதிலும் பயங்கரவாதத்துக்கும் தீவிரவாதத்துக்கும் ஒருபோதும் தொடர்பில்லாதவர்கள் என்ற வகையில் முழு உலகுக்கும் சிறந்த முன்மாதிரி சமுகமாக திகழ்கின்றமை இங்கு வலியுறுத்திக் கூறப்படவேண்டியதாகும். இதற்கு ஆயிரம் வருடங்களைக் கடந்த இலங்கை முஸ்லிம்களின் வரலாறு சிறந்த சான்றாகும்.

உலகின் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம் சமூகங்களுடன் இலங்கை முஸ்லிம் சமூகத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில், எம் நாட்டு முஸ்லிம் சமூகமானது தனித்துவமான பல கூறுகளைக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். அதில் பிரதானமான ஒன்றாக தமக்கு மத்தியில் கருத்துவேறுபாடுகள் இருந்தபோதும், மாற்று அணியைச் சேர்ந்த அறிஞரையோ அல்லது பிரசாரகரையோ மதித்து அவர்களை கௌரவப்படுத்தும் உயர்ந்த பண்பாடு எமது நாட்டு முஸ்லிம்களிடத்தில் காணப்படுவதைக் குறிப்பிடலாம். இதற்கு சிறந்ந உதாரணமாக ஒரு அணியைச் சேர்ந்த அறிஞரொருவர் குத்பாவோ அல்லது உரைகளையோ நிகழ்த்தும்போது, வேறு அணிகளைச் சேர்ந்தவர்களும் அதில் கலந்துகொண்டு, பிரயோசனமடையும் வழக்கத்தை நாம் இலங்கையில் நன்றாக அவதானிக்கலாம். இவ்வாறானதொரு நிலை பல நாடுகளில் இல்லை என்பதை வெளிநாடுகளிலிருந்து எமது நாட்டுக்கு வருகை தந்ந அறிஞர்கள் எம்மிடம் புகழ்ந்து கூறியிருக்கிறார்கள்.

கேள்வி: இலங்கை முஸ்லிம் சமூகத்தில் நடுநிலைப் போக்கு எவ்வாறு வளர்க்கப்பட்டது? அதில் உங்கள் பங்களிப்பு என்ன?


பதில்: இலங்கை முஸ்லிம் சமூகம் இயல்பிலேயே நடுநிலைத்தன்மை கொண்டது. அதிலும் குறிப்பாக, கடந்த காலங்களைவிட அண்மைக் காலங்களில் இலங்கை முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை நடுநிலைத் தன்மையுடன் புரிந்துகொள்ளும் போக்கில் நேர்மறையான மாற்றம் ஏற்பட்டுள்ளதை நாம் அவதானிக்கின்றோம்.

அந்தவகையில் இஸ்லாத்தின் நம்பிக்கைகள், வணக்க வழிபாடுகள் எனபவற்றோடு மாத்திரம் சுருக்கிக் கொள்ளாமல், இஸ்லாமிய போதனைகளின் சாரமான வேற்றுமையில் ஒற்றுமை, முரண்பாட்டில் உடன்பாடு போன்ற அடிப்படைகள் குறித்த பாரிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தும் வாய்ப்பு எமக்கு கிட்டியது. மட்டுமன்றி, இந்த நாட்டுக்கு முஸ்லிம்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்த விடயங்களையும் பேசும், எழுதும், பிரசாரம் செய்யும் வாய்ப்பும் எமக்கு கிடைத்தது. ஒரு நற்பிரஜையாக வாழ்தல், நாட்டுக்குப் பங்களிப்பு செய்தல், சகவாழ்வு, சமூக நல்லிணக்கம் என்பவற்றின் முக்கியத்துவம் குறித்த இஸ்லாமியப் பார்வையை மக்கள் மயப்படுத்தும் பணி போன்ற பல முயற்சிகளை எம்மால் தொடர்ந்தும் மேற்கொள்ள முடிந்ததோடு, எமது மூதாதையர்கள் இந்நாட்டை வளப்படுத்துவதற்காகவும் கட்டியெழுப்புவதற்காகவும் மேற்கொண்ட விடயங்களை விளக்கி, நாமும் இந்நாட்டை வளப்படுத்தும் பணியில் மிகக் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற சிந்தனையையும் மக்கள் மயப்படுத்தும் வாய்ப்பும் எமக்குக் கிட்டியது.

நடுநிலைத்தன்மை குறித்த ஒரு பாரிய விழிப்புணர்வு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பலராலும் உணரப்பட்டதன் விளைவாக, சவால்களும், சிக்கல்களும், பிரச்சினைகளும் நிறைந்த சமகால உலகமயமான சூழலில், நடுநிலையான ஒரு முஸ்லிம் சமூகத்தை வார்த்தெடுக்கும் பாரிய பணியை பலரது ஒத்துழைப்புடன் தொடர்ந்தும் கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பங்களும் வாய்ப்புக்களும் எமக்கு அமையப் பெற்றன.

 

இவ்வாறான எமது முயற்சிகளின் விளைவாகவே, இந்நாட்டில் முஸ்லிம் பெயர் தாங்கிய எமது சமுகத்தைச் சேர்ந்த ஒரு சிறிய குழுவினரால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காது இருந்தது மாத்திரமன்றி குறித்த குழுவை அடையாளம் காட்டி பாதுகாப்புத் தரப்புக்கு உதவி ஒத்தாசை புரியக்கூடிய ஒரு சமுகத்தை எம்மால் உருவாக்க முடிந்தது. இது கடந்த காலங்களில்; நடுநிலை சிந்தனை பரவ நாம் இந்நாட்டில் மேற்கொண்ட முயற்சிகளிள் அறுவடை. அல்ஹம்துலில்லாஹ்.

கேள்வி: இஸ்லாத்தை நடுநிலைமையாகவும், நாட்டின் சுபீட்சத்துக்கும், அபிவிருத்திக்குமான உந்துதல் கோட்பாடாகவும் முன்வைக்கும் சிந்தனைப் பின்புலம் உங்களுக்கு எவ்வாறு கிடைத்தது?


பதில்: நான் கல்வி கற்ற ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடத்தின் மூலமாகவே, இஸ்லாத்தை நடுநிலையாகப் புரிந்துகொள்ளும் சிந்தனைப் பின்னணி எனக்குக் கிடைத்தது. இச்சிந்தனைப் பின்னணி தான், இஸ்லாத்தை இந்த மண்ணுக்கேற்ற வகையில், இந்த நாட்டின் சகவாழ்வுக்கும் அபிவிருத்திக்கும் உந்துதல் வழங்கும் வகையில் முன்வைக்கும் ஆற்றலை எனக்குத் தந்தது. அந்த வகையில், ஜாமிஆ நளீமிய்யாவுக்கு என்றும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

கேள்வி: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவர் என்ற வகையில் இலங்கையில் இஸ்லாத்தை நடுநிலைத்தன்மையுடன் முன்வைக்கும் பணியில் ஜம்இய்யாவின் பங்களிப்பு தொடர்பாக விளக்க முடியுமா?

பதில்:
இலங்கை முஸ்லிம் சமூகத்தில் நடுநிலைத்தன்மையை பரவலாக்கம் செய்வதில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் பாரிய பங்களிப்பை செய்து வருகின்றது. அதனை சுருக்கமாகவேனும் விளக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு எனக்கிருக்கின்றது.

இலங்கையில் உள்ள இஸ்லாமிய அணிகளுக்கு மத்தியில் காணப்படும் வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று, அவற்றுக்கு மத்தியில் ஒற்றுமையையும், ஒத்துழைப்பையும் ஏற்படுத்தும் பாரிய பணியை ஜம்இய்யதுல் உலமாக மேற்கொண்டிருக்கின்றது.

ஜம்இய்யதுல் உலமாவுக்கு கீழால் இயங்கும் ஒருங்கிணைப்புக்கும் ஒத்துழைப்புக்குமான கவுன்ஸில் இப்பாரிய பணியை மேற்கொண்டு வருகின்றது. அதனது உருவாக்கம் முதல் இன்றுவரை தொடர்ந்தும் எனது முழுமையான வழிகாட்டலுடன் அது இயங்கிவருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை காணல், முரண்பாட்டில் உடன்பாடு காணல் என்ற மையப் பொருளில் ஒரு பிரகடனத்தை ஜம்இய்யதுல் உலமாவின் இப்பிரிவு செய்தது. இது இலங்கை இஸ்லாமிய அணிகளுக்கும், அவ்வணிகளைச் சேர்ந்த பொது மக்களுக்கும் மத்தியில் நெருக்கத்தை ஏற்படுத்தும் அச்சாணியாக அமைகின்றது.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் நெருக்கத்தை ஏற்படுத்தி, உள்ளக முரண்பாடுகளை புரிந்துணர்வுடன் முகாமை செய்வதற்கான ஒரு சிறந்த வழிகாட்டலை வழங்கியது மட்டுமன்றி, முஸ்லிம் சமூகத்தின் பெயரால் உருவான தீவிரவாதப் போக்குகளை மிகத் தெளிவாகவும், பகிரங்கமாகவும் நிராகரிக்கும் பணியையும் ஜம்இய்யதுல் உலமா மேற்கொண்டது.

ஜம்இய்யதுல் உலமாவும், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஏனைய இஸ்லாமிய அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள் என்று எல்லா வகையான அமைப்புக்களும் இணைந்து, 2015 இல், ஐ.எஸ். பய்ஙகரவாத இயக்கத்துக்கு எதிரான ஒரு பிரகடனத்தை நிறைவேற்றி, வெளியிட்டமையை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அந்தப் பிரகடனமானது இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு தீவிரவாத அமைப்புக்களின் ஆபத்தை உணர்த்தியதோடு, அவற்றை புறக்கணிப்பதற்கான கோட்பாட்டு தளத்தையும், நடைமுறை வடிவத்தையும் வழங்கியது. எனவே, இலங்கை முஸ்லிம் சமூகம் தீவிரவாதத்தை நெருங்காமல் பாதுகாக்கப்பட்டது.

இவ்வாறு இலங்கை முஸ்லிம் சமூகத்தை சிந்தனை ரீதியாகவும், கட்டுக்கோப்பு ரீதியாகவும் நடுநிலைத்தன்மையின் பால் வழிநடத்துவதற்கான பணியை ஜம்இய்யதுல் உலமா தொடர்ந்தும் மேற்கொண்டு வந்துள்;ளது. ஜம்இய்யதுல் உலமாவின் ஒற்றுமைப் பிரகடனமாகட்டும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான ஜம்இய்யதுல் உலமா உட்பட்ட மொத்த முஸ்லிம் அமைப்புக்களின் பிரகடமாகட்டும், இவ்வனைத்தும் வெறும் பிரகடனங்களாக மட்டுமே இருக்கவில்லை. மாறாக, இப்பிரகடனங்களை மக்கள் மயப்படுத்தி, அவற்றின் முக்கியத்துவ்தை மக்களுக்கு எடுத்தியம்பும் பாரிய பிரசாரப் பணியையும் ஜம்இய்யதுல் உலமா மேற்கொண்டது. இதற்காக நாட்டின் எல்லாப் பகுதிகளும் கருத்தரங்குகளும், பயிற்சிப்பட்டறைகளும் நடாத்தப்பட்டன.

இங்கு இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது, இலங்கை உலமாக்களுக்கு மத்தியில் இஸ்லாத்தை நடுநிலைமைத்தன்மையுடன் முன்வைப்பதற்கான ஒரு பயிற்சித்திட்டத்தை ஜம்இய்யதுல் உலமா வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது. இலங்கையில் நற்பிரஜையாக வாழ்தல், ஏனைய சமூகங்களுடனான சகவாழ்வு , தாய் நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு பங்களிப்புச் செய்தல், தேச நிர்மாணத்தில் எமது மூதாதையரின் பங்களிப்பு போன்ற காலத்துக்குத் தேவையான பல தலைப்புக்களை உள்ளடக்கிய 250 மணித்தியால பயிற்சி நெறியொன்று இளம் உலமாக்களை மையப்படுத்தி நடாத்தப்பட்டு வருகின்றது.

மேலும், முழு நாட்டிலும் ஏனைய சமுகங்களுடன் சமாதான சகவாழ்வு பேணி நடக்கவேண்டும் என்ற வகையில் நெசனல் நெட்வர்க் ப்ரொஜக்ட் (NNP) எனும் பெயரில் மஸ்ஜித்களை மையப்படுத்தி முழு நாட்டிலும் பிரதேசங்களை 8 பகுதிகளாக பிரித்து தனியான வேலைத்திட்டம் ஒன்றையும் ஜம்இய்யா முன்னெடுத்து வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 75 விகாரைகள் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக தொடர்புபட்டிருந்தன.

இவ்வாறான செயற்றிட்டங்கள் மூலம் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் நடுநிலைத்தன்மையை ஊக்குவிக்கும், பரவலாக்கும் பணியை ஜம்இய்யதுல் உலமா மேற்கொண்டு வருகின்றது.

கேள்வி: ஜம்இய்யதுல் உலமாவின் பதவி தாங்குனர்களை உள்ளடக்கிய புதிய செயற்குழுத் தெரிவு அண்மையில் நடைபெற்று முடிந்துள்ளது. அது பற்றிய உங்கள் கருத்து?

பதில்:
ஜம்இய்யதுல் உலமாவின் செயற்குழு உட்பட பதவி; தாங்குனர்களின் தவணைக் காலம் மூன்று வருடங்களாகும். அதன் இறுதித் தவணை இம்மாதம் முடிவடைய இருந்ததால் கடந்ந 13ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மத்திய சபை கூடி, புதிய செயற்குழுவை தேர்ந்தெடுத்தது. அதன் பி;ன்னர் செயற்குழு கூடி தலைவர், பிரதித் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாhளர் உட்பட மற்றும் ஏனைய பதவி தாங்குனர்களை தெரிவு செய்தது.

மிகவும் சுமுகமாக இடம்பெற்ற இந்தத் தெரிவில் பொருத்தமான உலமாக்களே தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்பது எனது அவதானம். முஸ்லிம்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள இச்சூழலில் புதிய செயற்குழுவானது தனது பணிகளை மிகவும் திறம்படவும் வினைத்திறனுடம் முன்னெடுத்துச் செல்ல எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.கேள்வி: ஜம்இய்யதுல் உலமாவின் அடுத்த கட்ட நகர்வுகளில் முன்னுரிமை பெறும் அம்சங்களாக எவற்றைக் கருதுகிறீர்கள்?

பதில்:
காலத்தின் தேவை கருதி நாட்டுக்கு விசுவாசமாகவும் அதன் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் சமுகமாகவும் இந்நாட்டு முஸ்லிம்கள் இருப்பர் என்பதைத் தெளிவுபடுத்தும் தாய் நாட்டுக்கான முஸ்லிம் சமுகத்தின் கூட்டுப் கொள்கைப் பிரகடனம் ஒன்றை வெளியிடுவது, முஸ்லிம் சமுகம் இந்நாட்டு மக்களுக்கு சான்று பகரும் சமுகமாகத் திகழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் சமுகத்தின் ஒருமித்த சன்மார்க்க நிலைப்பாட்டை விளக்கும் கூட்டுப் கொள்கைப் பிரகடனம் ஒன்றை வெளியிடுவது, சமுகத்தின் அனைத்து விவகாரங்களுக்கும் வழிகாட்டும் வகையில் துறைசார் நிபுணர்களைக் கொண்ட ஓர் ஆலோசனை சபையை அமைப்பது ஆகிய மூன்று பிரதான அம்சங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி அதற்கான முன்னெடுப்புக்களையும் ஜம்இய்யா மேற்கொண்டு வருகின்றது. அவற்றை ஜம்இய்யாவின் அடுத்த கட்ட பிரதான செயற்பாடுகள் எனலாம்.

கேள்வி: தற்போதைய சூழ்நிலையில் இலங்கை முஸ்லிம்கள் முற்படுத்தி முன்னுரிமை வழங்க வேண்டிய விடயங்களாக நீங்கள் கருதுபவை?

பதில்:
இலங்கை முஸ்லிம் சமூகம் முன்னுரிமை வழங்க வேண்டிய மிகவும் முக்கியமான அம்சங்களாக பின்வருவனவற்றை நான் கருதுகிறேன்.

முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை


முஸ்லிம் சமூகத்தில் பல இஸ்லாமிய அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கு மத்தியிலான ஒற்றுமை மிகவும் முக்கியமாகும். இவ்வமைப்புக்கள் ஒற்றுமையாக செயற்படும்போதே, மொத்த முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியிலும் நெருக்கமும், ஒற்றுமையும் ஏற்படும்.

 

எனது வாழ்வின் கடந்த மூன்று தசாப்தமாக நான் இந்தப் பணியையே அதிகம் வலியுறுத்தியும், மேற்கொண்டும் வருகின்றேன். இன்றைய சூழலிலும் இப்பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தில் மார்க்க ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் காணப்படும் முரண்பாடுகள் களையப்பட்டு, அல்லது குறைக்கப்பட்டு, அனைவரும் ஐக்கியமாக வேண்டும். சமூகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாகவும், சன்மார்க்கக் கடமையாகவும் உள்ளது. இதனை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

 

அந்த வகையில் ஜம்இய்யதுல் உலமா உட்பட இலங்கை முஸ்லிம் சமூகத்தில் உள்ள சிவில் சமூக நிறுவனங்கள், தரீக்காக்கள், இஸ்லாமிய அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகள் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தையும் உள்ளடக்கி பொது இலக்குகளுக்காக அனைவரும் ஒன்றிணைந்து தேசிய மட்டத்தில் செயற்படுவதற்கான ஒரு சிறந்த பொறிமுறை அடையாளம் காணப்பட்டு அதனைச் சாத்தியப்படுத்த வேண்டும் என்பது எனது மிகப்பெரும் எதிர்பார்ப்பாகும்.

சகவாழ்வு

இலங்கை என்பது பல இன, மதங்களைச் சேர்ந்தோர் வாழும் ஒரு நாடாகும். எனவே, இவ்வனைத்து பிரிவினருக்கு மத்தியிலும் சகவாழ்வும், நல்லிணக்கமும் நிலவுகின்றபோதுதான், இந்நாட்டை சுபீட்சப்படுத்தலாம். இதை நாம் மிகச் சரியாகப் புரிந்ததனாலேயே, கடந்த ஆயிரம் வருடங்களாக இந்நாட்டில் சகவாழ்வைக் கடைப்பிடித்து வந்திருக்கிறோம்.

 

தற்போதைய சூழலில் சகவாழ்வும், நல்லிணக்கமும் இன்னும் வலியுறுத்தப்பட வேண்டிய விடயங்களாகும். சகவாழ்வின், நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை அறிவுபூர்வமாகவும், விஞ்ஞானபூர்வமாகவும், நடைமுறை ரீதியாகவும் விளக்கி, அதன்பால் சமூகத்தை வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு சமூகத்தின் மீது இருக்கின்றது.

நடுநிலையை சிந்தனையை வளர்த்தல்

நான் ஏற்கனவே கூறியது போல, இஸ்லாம் இயல்பிலேயே நடுநிலையைப் போதிக்கும் ஒரு மார்க்கம். இஸ்லாத்தில் பொடுபோக்குக்கும் இடமில்லை. கடும்போக்குக்கும் இடமில்லை. எனவே, கடந்த காலத்தில் நடுநிலை சிந்தனை பரவலாக்கப்பட்டு வந்தது போல, தொடர்ந்தும் இப்பணி முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரும் உழைக்க வேண்டும்.

இளைஞர்களை வழிநடாத்தல்

முஸ்லிம் இளைஞர்களை சரியான பாதையில் வழிநடத்தும் பாரிய பணி தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆன்மீக ரீதியாக, சிந்தனை ரீதியாக, கல்வி ரீதியாக, தொழில் ரீதியாக என அனைத்து வகையிலும் இவர்கள் மிகச் சரியாக வழிநடாத்தப்படல் வேண்டும். ஆன்மீக ரீதியான வழிகாட்டலை மேற்கொண்டு விட்டு, சிந்தனை, கல்வி, தொழில் ரீதியான வழிகாட்டல்களை நாம் வழங்காது விட்டால், சமநிலையற்ற ஒரு மனிதனை நாம் சமூகத்துக்கு வழங்கியதாக ஆகி விடும். எனவே, அனைத்து துறையிலுமான வழிகாட்டல்களை இளைஞாகளுக்கு வழங்கி, அவர்களை சரியான பாதையில் வழிநடாத்துவது முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய ஒரு முக்கியமான விடயமாகும்.

நாட்டுக்கான பங்களிப்பு

இந்த நாட்டை வளப்படுத்தி வந்த பெருமை மிகு வரலாறு முஸ்லிம்களுக்கு உள்ளது. மன்னர் காலங்களிலும் சரி, காலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்ற பின்னும் சரி, இந்த நாட்டை வளப்படுத்தும் பாரிய பணியில் முஸ்லிம்கள் பங்கெடுத்து வந்திருக்கின்றனர். இந்தப் பணியை நாம் தொடர வேண்டும். இன்னும் இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.

கேள்வி: இறுதியாக, இன்னும் சில தினங்களில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் எம்மை வந்தடையவுள்ளது. இவ்வாறான ஒரு சூழலில் உழ்ஹிய்யா தொடர்பான முஸ்லிம்களின் நடைமுறை எவ்வாறிருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?

பதில்:
இது தொடர்பான வழிகாட்டல் ஜம்இய்யதுல் உலமாவினால் வழங்கப்பட்டுள்ளதால் மிகச் சுருக்கமாக பதில் வழங்குகிறேன். உழ்ஹி;ய்யா என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னாவாகும். சில அறிஞர்கள் அது வாஜிப் எனவும் கருதுகி;ன்றனர். உழ்ஹிய்யாவுக்குரிய பிராணிகள் ஆடு, மாடு மற்றும் ஒட்டகம் ஆகும். எமது நாட்டைப் பொறுத்தவரையில் ஆடு அல்லது மாடு ஆகிய பிராணிகளே இங்கு உள்ளன என்ற வகையில் நாட்டின் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டும், பிரதேசத்துக்குப் பிரதேசம் நிலைமை வித்தியாசப்படுவதாலும், உலமாக்களின் வழிகாட்டலுடன் இந்த அமலை நிறைவேற்றுமாறு முஸ்லிம்களை வேண்டிக் கொள்கிறோம். குறிப்பிட்ட சில பிரதேசங்களில் உழ்ஹிய்யா பிராணிகளை அறுப்பது வீணான சர்ச்சைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் இட்டுச்செல்லும் எனும் நிலை காணப்பட்டால், உரிய நபர்களை தொடர்புகொண்டு அவற்றின் பெறுமதியை அனுப்பி, பொருத்தமான பிரதேசங்களில் அக்கடமையை நிறைவேற்றலாம். கடந்த காலங்களிலும் இவ்வாறான நடைமுறையை எமது சகோதரர்கள் பின்பற்றியிருந்தனர் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

We have 11 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player