கடன் அட்டை (Credit Card) பாவனை - பொருளியல் பார்வையும் ஷரீஆ நோக்கும்


வட்டியை அடிப்படையாகக் கொண்ட இன்றைய உலகப் பொருளாதாரம் எந்தளவுதூரம் உலக மக்களின் பொருளாதார வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது என்பதை ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. வட்டி பூச்சிய நிலைக்குச் செல்லாதவரை உலகப் பொருளாதாரம் சீர்பெற முடியாது என்பது பொருளியல் ஆய்வாளர்கள் பலரின் கருத்தாகும். அதாவது வட்டி அமைப்பு முற்றாக ஒழிக்கப்படுவதன் ஊடாகவே உலகில் ஆரோக்கியமான ஒரு பொருளாதார ஒழுங்கு உருவாக முடியும் என்பதே உண்மையாகும். ஒரு பொருளியல் அறிஞர் வட்டியை 'வாழ்வின் எய்டஸ் என வர்ணித்துள்ளார். வட்டியானது பொருளாதாரம் எனும் உடலின் பலத்தைக் குன்றச் செய்து அழித்துவிடும் எய்ட்ஸாகவே இருக்கிறது. இதனையே அல்குர்ஆன், 'அல்லாஹ் வட்டியை அழிக்கிறான் எனக் கூறுகிறது.

வட்டி என்பது ஒரு வகையில் நவீன காலனித்துவமாகும். கடனின் கோரப் பிடியில் எவ்வாறு மூன்றாம் உலக நாடுகள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். மூன்றாம் உலக நாடுகள் பலவற்றில் நாளை பிறக்க இருக்கும் குழந்தையும் கூட பெருந்தொகைக் கடனுடன்தான் பிறக்கிறது. இதற்கு நமது நாடும் விதிவிலக்கல்ல. பல நாடுகளால் செல்வந்த நாடுகளினதும், உலக நிதி நிறுவனங்களினதும் கடன்களை அடைக்க முடிவதில்லை. வருடா வருடம் குட்டிபோடும் வட்டியைக் கட்டுவதே இந்த நாடுகளுக்குப் பெரும்பாடாக இருக்கிறது. பழைய கடனை அடைப்பதற்கே பல நாடுகள் புதிய கடன் வாங்கும் அவலமும் உலகில் தொடர்கிறது. சிலபோது புதிதாகப் பெற்ற கடனால் பழைய கடனை அடைக்க முடிவதில்லை. மாறாக, அதற்கான வட்டியைச் செலுத்துவதில் குறித்த தொகை தீர்ந்து விடுகிறது. உதவி என்ற பெயரில் வழங்கும் இத்தகைய கடன்கள் மூலமே மூன்றாம் உலக நாடுகளில் செல்வந்த நாடுகளின் ஆதிக்கம் நிறுவப்படுகிறது. அவர்களின் விருப்பு வெறுப்புகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவ்வாறுதான் வட்டி அமைப்பானது கலியுக காலனித்துவத்திற்கு வழியமைத்துக் கொடுக்கிறது.வட்டியின் பயங்கர விளைவுகளை கவனத்திற் கொண்டு அதனை ஹராமாக்கியுள்ள இஸ்லாம் அதற்குப் பிரதியீடாக பல்வேறு வர்த்தக, வாணிப ஒழுங்குகளையும் அமைப்புக்களையும் தந்துள்ளது. வட்டிக்கு மற்றுமொரு பதிலீடாக ஸதகா அமைப்பை இஸ்லாம் அறிமுகப்படுத்தியுள்ளது. இஸ்லாம் கூறும் ஸதகா சார்ந்த ஓர் அம்சம்தான் 'கர்ளுல் ஹஸன் எனும் வட்டியில்லா அழகிய கடனாகும். வர்த்தக, வாணிப, வியாபார நோக்கங்களுக்காக வட்டியை நாடவேண்டியுள்ளவர்களுக்கு இஸ்லாம் பல்வேறு பொருளீட்டல் முயற்சிகளை பிரதியீடாக வழங்கியிருக்கின்றது. தனது உணவுக்காக, அன்றாட அடிப்படை தேவைகளுக்காக வட்டியை நாட வேண்டி உள்ளவர்களுக்கு அது ஸதகாவையும், வட்டியில்லா அழகிய கடன் அமைப்பையும் பதிலீடாக வழங்கியிருக்கிறது.

கடன் வழங்குவது ஒருவகை உதவியும், ஒத்துழைப்புமே அன்றி உழைப்புக்கான வழியல்ல என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். எனவே, கடன் கொடுத்தவர் தான் கொடுத்த அளவையே கடன் வாங்கியவரிடமிருந்து திருப்பிப் பெற வேண்டும். கொடுத்த தொகையை விட கூடியதாக திருப்பித் தர வேண்டும் என எதிர்பார்ப்பதும் ஹராமாகும். இதனையே இஸ்லாம் வட்டி என்கிறது.

கடன் கொடுப்பது இஸ்லாத்தில் ஒரு பெரும் சமூகநலப் பணியாகக் கொள்ளப்படுகிறது. ஒருவர் கடன் வழங்கி செய்கின்ற உதவி அடுத்த சகோதரனின் கஷ்டங்களில் பங்கேற்கும் புண்ணிய காரியமாக இஸ்லாம் கருதுகிறது. இதுபற்றி கூறும் சில நபிமொழிகளை கீழே கவனிப்போம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு குறிப்பிடுகிறார்கள்.

'எவர் ஒரு முஸ்லிமுடைய உலகக் கஷ்டங்களில் ஒன்றை நீக்க உதவுகின்றாரோ அவரின் மறுமைநாள் கஷ்டங்களில் ஒன்றை அல்லாஹ் நீக்கிவிடுவான். மேலும் எவர் கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு (உதவி செய்து) அவருக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கின்றாரோ அல்லாஹ் உலகிலும், மறுமையிலும் அவருடைய (கஷடங்களை) இலேசாக்கிக் கொடுப்பான்.(முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக இப்னு மஸ்ஊத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். 'ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு இரு தடவைகள் கடன் வழங்கினால் அதில் ஒரு தடவை அவர் ஸதகா- தர்மம் செய்தவரைப் போன்றவராவார்.' (இப்னு மாஜா, இப்னு ஹிப்பான்)

அல்குர்ஆன் பின்வருமாறு தூண்டுகின்றது.
'அல்லாஹ்வுக்கு நீங்கள் அழகிய முறையில் கடன்கொடுப்பீர்களாயின் அதை அவன் உங்களுக்கு பன்மடங்காக்கி கொடுத்துக்கொண்டே செல்வான். உங்களு டைய பாவங்களையும் மன்னிப்பான்.' (அத்தகாபுன் : 17)

கடன் தொடர்பான ஷரீஆ வரையறைகள்:

கடன் தொடர்பான சில இஸ்லாமிய வரையறைகளும் சட்டதிட்டங்களும் இருக்கின்றன.

பொதுவாக கடனாகக் கொடுத்த தொகையை விட கூடுதலாகப் பெறப்படும் தொகை தடைசெய்யப்பட்ட வட்டியாக கொள்ளப்படுகின்றது. வட்டிக்கான வரை விலக்கணங்களும் அவ்வாறுதான் அமைந்துள்ளன. ஏதாவது ஒரு பயன்பாட்டைப் பெற்றுத்தரும் எந்தவொரு கடனும் வட்டியாகும் என்றே இஸ்லாமிய அறிஞர்கள் வரைவிலக்கணப்படுத்துகின்றார்கள். கொடுத்த தொகையை விட கூடுதலாகத் திருப்பித் தரவேண்டும் என நிபந்தனை இடுவதே ஹராமாகும்.

ஆனால் நிபந்தனை இடப்படாத நிலையில் கடன்பெற்றவர் சுய விருப்பத்தின் பேரில் கடனைத் திருப்பிச் செலுத்தும்போது பெற்ற தொகையைவிட கூடுதலாக கொடுக்க முடியும். அந்த மேலதிக தொகையை கடன் கொடுத்தவர் பெற்றுக் கொள்வது பிழையானதல்ல. இவ்வாறு கடனை திருப்பி அடைக்கும்போது ஒரு தொகையைக் கூடுதலாகக் கொடுப்பது வரவேற்கத்தக்கதாகும்.
ஜாபிர் இப்னு அப்தில்லா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். 'அல்லாஹ்வுடைய தூதர் எனக்குத் தரவேண்டிய ஒரு கடன் இருந்தது. அன்னார் அதனை திருப்பிச் செலுத்தியதோடு தொகையைக் கூட்டியும் தந்தார்.' (புகாரி, முஸ்லிம்)

அபூ ராபி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். ஒருமுறை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவரிடம் ஓர் இளம் ஒட்டகத்தைக் கடனாகப் பெற்றார்கள். அவர்களுக்கு ஸதகாவாக சில ஒட்டகங்கள் கிடைத்தபோது என்னை அழைத்து அந்த மனிதருக்கு ஓர் இளம் ஒட்டகத்தை கொடுத்து கடனை அடைக்குமாறு என்னை வேண்டினார்கள். அதற்கு நான் ஆறு வயதைப் பூர்த்தி செய்த நல்ல தரமான ஓர் ஒட்டகமே இருக்கிறது எனக் கூறினேன். அப்போது அன்னார், அதை அவருக்கு கொடுத்து விடும். உண்மையில் உங்களில் சிறந்தவர் தான் பெற்ற கடனை சிறந்த முறையில் திருப்பிச் செலுத்தியவரே என்றார்கள். (முஸ்லிம், அஹ்மத்)

பொருளாதார நோக்கில் கிரடிட் கார்ட்:

வட்டிக்கு கடன் வழங்கும் முறை இன்று பல வடிவங்களைப் பெற்றுள்ளது. Mortgage, Finance, Leasing போன்றன அவற்றில் சில வடிவங்களாகும். அவற்றுள் ஒரு வடிவமே Credit Card என வழங்கப்படுகின்ற கடன் அட்டை ஒழுங்காகும். ஆரம்பத்தில் மேற்குலகில் அறிமுகமான கடன் அட்டை இப்போது உலக மயப்படுத்தப்பட்டு உலகின் மூலை முடுக்குகளிலும் சந்து பொந்துகளிலும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒன்றாக மாறியிருக்கின்றது. தேவையுடையோரும் தேவையற்றோரும் இதனை உபயோகிக்கும் நிலை இன்று உருவாகியுள்ளது.

நிதி நிறுவனங்களும் வங்கிகளும் வீட்டுக் கதவுகளைத் தட்டி கவர்ச்சியான விளம்பரங்களையும் சந்தைப்படுத்தும் உத்திகளையும் கையாண்டு இதற்கான வாடிக்கையாளர்களை பெற்று வருகின்றன. பலர் இதனால் ஏற்படும் மோசமான விளைவுகளை உணராத நிலையில் இதற்குப் பலியாகி வருகின்றனர். கடன் அட்டையை வைத்திருப்பதை ஒரு பெருமையாகவும் நாகரிகமாகவும் கருதும் நிலையும் தோன்றியுள்ளது.

உண்மையில் கடன் அட்டை என்பது நுகர்வோரை வீணாக கடன் காரராக மாற்றும் ஒரு நவீன கால சமூக கொடுமையாகும். கையில் பணம் இல்லாத நிலையிலும் உளரீதியாக ஒருவரை செலவு செய்யத் தூண்டும் ஒரு உத்தியாகவே இது காணப்படுகின்றது. பண அட்டையை வைத்திருக்காதவர் கையில் உள்ள காசை கொண்டு அவசியமான பொருட்களை மட்டுமே கொள்வனவு செய்வார். பண அட்டையை வைத்திருப்போரோ அத்தியவசியமற்ற பொருட்களையும் வாங்குவதற்கு தூண்டப்படுவார். அவ்வாறே கையிலுள்ள பணத்தை வைத்து பொருள் வாங்குபவர் ஏலவே திட்டமிட்ட பொருட்களையே கொள்வனவு செய்வார். கடன் அட்டை வைத்திருப்போரோ பலபோது அட்டையிலுள்ள பணத்தை தனது பணமாக நினைத்து செலவு செய்ய முற்படுவார். இத்தகைய உளநிலையை அது உருவாக்குகின்றது என்பது இன்று நிறுவப்பட்ட ஒரு உண்மையாகும். இதனால் தனது நுகர்வுச் சக்திக்கு மேல் செலவு செய்து கடன் பழுவினால் வாடும் பல மில்லியன் பேரை இன்று உலகில் காணமுடிகின்றது. கடன் அட்டைக்கு பலியான பலர் அதன் மோசமான விளைவுகளை உணர்ந்துள்ள போதிலும் அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வகையில் இது ஒருவகை அடிமைத் தளையாகும். அமெரிக்காவில் ஒருவர் தன்னிடம் இருந்த கடன் அட்டையின் தொல்லையிலிருந்து விடுபடும் நோக்குடன் அதனை தூக்கி எறிந்து விட்டு, இன்று நான் இந்த அடிமைத் தளையிலிருந்து விடுதலைப் பெற்றுவிட்டேன் என்றார்.

கடன் பெறுவது ஓர் ஆரோக்கியமான விடயமல்ல. ஒருவர் கடன்பெறும் நிலைக்குத் தள்ளப்படுவது ஒரு பெரும் அவலமாகும். இதனாலேயே நபி (ஸல்) அவர்கள் கூட கடன் சுமையில் இருந்து பாதுகாப்புத் தேடினார்கள். ஆனால் இன்று Credit Card உலகில் பல மில்லியன் கணக்கானோர் பெரும் கடன்காரர்களாக மாறியுள்ளனர்.

பெரும்தொகை பணத்தை கையில் வைத்திருப்பது ஆபத்தானது. அந்த வகையில் கடன் அட்டையை வைத்திருப்பது பாதுகாப்பானது என்பது அதனை பயன்படுத்தோரின் ஒரு முக்கியமான வாதமாகும். இது ஒரு நியாயமான வாதம் என்பதனை மறுப்பதற்கில்லை. ஆனால் குறித்த பிரச்சினைக்கான ஒரே பரிகாரம் கடன் அட்டை மட்டுமே என்பது பிழையான வாதமாகும். ஏன் காசோலைகளை பயன்படுத்த முடியாது.

அவ்வாறே Debit Card என்று அழைக்கப்படுகின்ற அட்டைகளும் Credit Card களுக்கு சிறந்த ஒரு மாற்றீடாகும். Debit Card என்பது ஒருவரது வங்கிக் கணக்கில் உள்ள வைப்பின் அளவுக்குப் பயன்படுத்தக் கூடிய ஓர் அட்டையாகும். ஒப்பீட்டு ரீதியில் பொருளாதார நோக்கிலும் சரி இஸ்லாமிய கண்ணோட்டத்திலும் சரி இது ஒரு பாதுகாப்பான ஒழுங்காகும். இன்று உலகில் உள்ள நுகர்வோர் நலன் காக்கும் அமைப்புக்கள் கடன் அட்டைக்குப் பதிலாக கையிலுள்ள பணம் (Cash), காசோலை (Cheque), பெறுகடன் அட்டை (Debit) முதலானவற்றைப் பயன்படுத்துமாறு நுகர்வோருக்கு ஆலோசனை கூறுகின்றன. இன்றும் அமெரிக்காவில் வளர்ந்தோரில் சுமார் 29% மானோர் கடன் அட்டையை பயன்படுத்துவதில்லை என்பது இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.

கிரடிட் கார்ட் பற்றிய ஷரீஆ நோக்கு

பொதுவாக வட்டியுடன் தொடர்புடைய எத்தகையதொரு கொடுக்கல் வாங்கலாக இருப்பினும் அது இஸ்லாமிய நோக்கில் ஹராமானது என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை என்பதை அனைவரும் அறிவர். ஆயினும் தற்கால வங்கிகள் வழங்கும் கடன் அட்டைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக சமகால அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. கடனட்டையைப் பெறும் ஒருவர் அதில் குறிக்கப்பட்டுள்ள தவணைக்கு முன்பாக தாம் பெற்ற கணக்கை செலுத்தி விட்டால் தாமதக் கட்டணத்தினால் விளையும் வட்டியின் பாதிப்பில் இருந்து விடுபட முடியும் என்பதை வைத்தே கருத்து வேறுபாடு தோன்றியுள்ளது.

இந்த வகையில் குறிக்கப்பட்டுள்ள தவணைக்கு முன்பாக கணக்கைச் செலுத்தி கால தாமதம் காரணமாக கொடுக்க வேண்டியிருக்கும் வட்டித் தொகையை தவிர்க்கும் நிலையில் ஒருவர் கடனட்டையைப் பயன்படுத்த முடியும் என சில அறிஞர்கள் கருதுகின்றனர். கடனட்டையைப் பெற்றவர் காலதாமதமின்றி கணக்கை செலுத்தி வட்டி கொடுக்கும் நிலையைத் தவிர்த்த போதிலும் காலதாமதம் ஏற்பட்டால் குறித்த வட்டித் தொகையை செலுத்துவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடுகின்றார் என்ற வகையில் இது ஹராமானதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் என்ற கருத்தை மற்றும் சில அறிஞர்கள் முன்வைக்கின்றனர்.

ஷரீஆ நோக்கில் மட்டுமன்றி ஏலவே விளக்கியது போல பொருளாதார நோக்கிலும் கடனட்டைப் பயன்பாடு பிரச்சினைக்குரிய ஒன்றாகவே விளங்குகின்றது. கடன் அட்டையைப் பயன்படுத்தும் ஒரு முஸ்லிம் ஆரம்பத்தில் வட்டி கொடுப்பதில் இருந்து விடுபடும் வகையில் உரிய தவணைக்கு முன்னர் கணக்கைச் செலுத்தினாலும் காலப் போக்கில் கவனக்குறைவினால் உரிய காலத்தில் பணத்தை செலுத்த முடியாமல் போய் வட்டி செலுத்தும் நிலைக்குத் தள்ளப்படும் ஆபத்து உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது. மேலும் கடனட்டை அடிப்படையில் வட்டியை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஓர் ஒழுங்காகும்.

ஒரு சிலர் உரிய தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்தி வட்டியில் இருந்து விடுபட்டாலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் காலதாமதத்தின் காரணமாக ஒரு சிறு தொகை வட்டியையேனும் செலுத்துபவர்களாகவே இருப்பர். எனவே ஒரு முஸ்லிம் நேரடியாக இல்லாத போதிலும் மறைமுகமாக வட்டியை அடிப்படையாகக் கொண்ட ஒரு கொடுக்கல் வாங்கல் ஒழுங்கு வளர்வதற்கு துணை புரிகின்றார் என்ற வகையில் குற்றவாளியாக கருதப்படும் நிலை காணப்படுகின்றது.

எனவே, ஒரு பேணுதலான முஸ்லிம் கடனட்டைப் பாவனையை தவிர்த்துக் கொள்வதே பொருத்தமான நிலைப்பாடாக கொள்ளப்படுகின்றது. இதற்கு மாற்றீடாக காசோலையை (Cheque) அல்லது பெறுகடன் அட்டையை (Debit Card) பயன்படுத்துவதே பொருத்தமானதாகும்.

அல்லாஹ்வே யாவற்றையும் நன்கறிந்தவன்.

We have 10 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player