இலங்கையில் இகாமத்துத் தீன் பணி

 

கேள்வி: இஸ்லாம் ஏனைய மதங்களைப் போல தனி மனித விவகாரங்களில் மாத்திரம் கவனத்தைக் குவிக்காது சமூகத்தை உருவாக்குகின்ற பணியையே வரலாறு நெடுகிலும் மேற்கொண்டு வந்துள்ளது. இது பற்றி விரிவாகக் கூற முடியுமா?

பதில்: பொதுவாக மதம் தனிமனிதன் பற்றியும் மனிதனுக்கும் இறைவனுக்குமிடையிலான தொடர்புகள் குறித்தும் விரிவாக அலசும். ஆன்மிகம் குறித்து விரிவாகப் பேசுவதுதான் மதம் என்று பொதுவாக மதம் என்பதற்கு வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. அதுதான் யதார்த்தமும்கூட.

இந்த வகையில் இஸ்லாமும் ஒரு மதமாக இருக்குமென்றால் தனிமனித வாழ்க்கையை மாத்திரம் கவனத்திற்கொண்டு செயற்படுவதாகவே அமைதல் வேண்டும். ஆனால் இஸ்லாம் இத்தகைய ஒரு மதமல்ல. இஸ்லாத்தை மதம் என்று அழைக்க முடியாது. ஏனெனில் பொதுவாக மதத்துக்கு வழங்கப்படுகின்ற வரைவிலக்கணத்துக்கு மாற்றமாக இஸ்லாத்தில் மூன்று பெரும் இலக்குகள் உண்டு அவை:

தனி மனித உருவாக்கம்
குடும்ப உருவாக்கம்
சமூக உருவாக்கம்


தனிமனிதர்களை உருவாக்கி தனி மனிதர்களைக் கொண்ட சில குடும்பங்களை அமைத்து, குடும்பங்களை இணைத்த ஒரு சமுதாயத்தை தோற்றுவிப்பதுதான் இஸ்லாத்தின் இலக்கு.

எனவே, இஸ்லாத்தை மதம் என்று அழைக்கக் கூடாது. மதம் என்று கூறுவதாக இருந்தால் சில மேற்கத்தேய அறிஞர்கள் கூறுவதுபோன்று சில அடைமொழிகளுடன்தான் இஸ்லாத்தை மதம் என்று அழைக்க வேண்டும். உதாரணமாக, இஸ்லாம் என்பது குடும்பத்தை இலக்காகக் கொண்ட மதம் (Family Oriented Religion) சமூகத்தை இலக்காகக் கொண்ட மார்க்கம் (Community Oriented Religion) என்றே அழைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அடைமொழிகள் இன்றி இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதாக இருந்தால் இஸ்லாம் என்பது பூரண வாழ்க்கைத் திட்டம் அல்லது சம்பூரணமான வாழ்க்கை ஒழுங்கு எனக் கூறுவதுதான் பொருத்தமானது.

ஏனெனில், இஸ்லாத்தை மதம் என அறிமுகப்படுத்துகின்றபோது மதத்துக்கும் குடும்பத்துக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது? அல்லது மதம் ஏன் சமூகத்தைக் கவனத்திற் கொள்ள வேண்டும். மதத்துக்கும் நிதி, நீதி, நிர்வாகத்துக்கும் இடையிலான தொடர்புகள் என்ன? அன்றாட கொடுக்கல்-வாங்கலுடன் தொடர்புபட்ட சமூக வாழ்வுக்கும் மதத்துக்குமிடையிலான உறவு என்ன? போன்ற கேள்விகள் நிச்சயம் ஏற்படும்.

எனவே, இஸ்லாம் ஒரு மதமல்ல. மதம் என்று அடையாளப்படுத்துவதாயின் அடைமொழிகளோடு சேர்த்தே அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

கேள்வி: இஸ்லாமிய சமூகத்தை உருவாக்குகின்ற பணிக்கும் இகாமதுத் தீன் (மார்க்கத்தை நிலைநாட்டுதல்) எனும் பணிக்குமிடையிலான தொடர்பு என்ன? அது குறித்த விளக்கத்தைத் தர முடியுமா?

பதில்: உண்மையில் சமூக உருவாக்கத்துக்கும் இகாமதுத் தீன் எனப்படுகின்ற மார்க்கத்தை நிலைநாட்டுதல் எனும் பணிக்குமிடையில் மிகவும் இறுக்கமான தொடர்பிருக்கின்றது.

சமூக உருவாக்கம் எனும் கருப்பொருளை விளக்குகின்ற ஒரு கலைச் சொற் பிரயோகமே இகாமதுத் தீன் என்பதாகும். தீனை முழுமையாக நிலைநாட்டுதல் என்று குறிப்பிடலாம். இகாமதுத் தீன் என்பது வெறுமனே ஒரு கோஷமோ அல்லது ஒரு இயக்கத்தின் சுலோகமோ அல்ல. இது புனித அல்குர்ஆனின் பிரயோகம்.

உலகில் தோன்றிய எல்லா நபிமார்களும் ரஸுல்மார்களும் மேற்கொண்ட பணியே இது. இந்தப் பணியைத் தவிர வேறெதையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. இதனையே அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது.

நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் உட்பட அவருக்கு முன் வாழ்ந்த நூஹ், இப்றாஹீம், மூஸா, ஈஸா அலைஹிமுஸ்ஸலாம் போன்ற அனைத்து நபிமார்களுக்கும் இந்தப் பணியை மேற்கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளை பிறப்பித்தான். அவர்களும் அதற்கேற்ப இப்பணியை சீராக மேற்கொண்டார்கள்.

உலகில் தீன் எப்போதும் ஒன்றாகத்தான் இருந்து வந்துள்ளது. பலதாக இருந்ததில்லை. ஆதம் அலைஹிஸ்ஸலாம் தொடக்கம் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் வரை தோன்றிய நபிமார்களும் ரஸுல்மார்களும் போதித்த தீன் ஒன்றுதான் என்பதனை இவ்வசனத்தினூடாகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றி அல்குர்ஆன் இப்படிச் சொல்கின்றது:

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யஹூதியாகவோ நஸ்ரானியகவோ இருக்கவில்லை. அவர் தூய முஸ்லிமாகவே இருந்தார். (அவரது தீன் இஸ்லாமாகவே இருந்தது)
நூஹ் நபி குறித்து அல்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்
நான் முஸ்லிமாக இருக்க வேண்டும் என அல்லாஹ்வால் பணிக்கப்பட்டுள்ளேன் என நூஹ் நபியவர்கள் கூறியதாக அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது பிள்ளைகளிடத்தில் முஸ்லிம்களாகவே மரணிக்க வேண்டும் என்று கூறியதை அல்குர்ஆன் அழகாகத் தெளிவுபடுத்துகின்றது.
நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்க வேண்டாம். இதற்கு அரவது பிள்ளைகள்...
?????

கிறிஸ்தவர்களால் ஏசுநாதர் என அழைக்கப்படுகின்ற ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் இஸ்லாத்தைப் பின்பற்றுபவராகவே இருந்தார். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சீடர்கள் ஈஸா நபியைப் பார்த்து, நபியே! நாம் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று கூறிய அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

எனவே, உலகில் தோன்றிய எல்லா நபிமார்களும் போதித்த தீன் ஒன்று. அதனைத்தான் அனைத்து நபிமார்களும் நிலைநாட்டினார்கள் என்பதை மேற்சொன்ன வசனங்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம். மேலும் இந்த இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீன் என்பதையும் அல்குர்ஆன் விளக்குகின்றது.

அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீன் இஸ்லாம்தான். யார் இஸ்லாமல்லாத மார்க்கத்தை தனது கொள்கையாக ஏற்றுக் கொள்கிறாரோ அது அங்கீகரிக்கப்பட மாட்டாது. அவர் மறுமையில் நஷ்டவாளிகளில் ஒருவராகத்தான் இருப்பார்.

எனவே, உலகில் தீன் எப்பொழுதும் ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. ஷரீஅத் எனும் சட்ட விதிகள் மாறுபட்டு வந்திருக்கிறன. காலத்துக்கு காலம் பிரதேசத்துக்குப் பிரதேசம் நபிமார்களுக்கு நபிமார்களுக்கு நபிமார் ஷரீஅத் மாறுபட்டு வந்துள்ளபோதும் அல்லாஹ்வுடைய தீன் (இஸ்லாம்) ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.

உலகில் அந்த தீனை நிலைநாட்டும் பணிக்கு தமது முழுமையாகன ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று பொறுப்புச் சாட்டப்பட்டவர்களாக நபிமார்கள் மற்றும் ரஸூல்மார்கள் திகழ்ந்தார்கள். அந்தப் பணியைத்தான் இறுதி நபி முஹம்மத் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் நிறைவேற்றினார்கள். அந்தப் பணிதான் அவரின் உம்மத்துகளாகிய எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

எனவே, இந்த தீன் எனும் வார்த்தைப் பிரயோகம் அந்நியமானதால்ல, புதுமையானதல்ல. அது அல்குர்ஆனின் வார்த்தைப் பிரயோகம் இகாமதுத் தீன் என்பதை சுருக்கமாகக் கூறுவதாயின், இஸ்லாம் எதிர்பார்க்கும் சமூகத்தை உருவாக்குதல் அல்லது நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் உருவாக்கிய அல்குர்ஆனிய சமுதாயத்தை நோக்கி முன்னேறுகின்ற பணி என்று கூறலாம்.

கேள்வி: இகாமதுத் தீன் பணி ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையானது. இது பற்றி மக்கள் மத்தியில் தெளிவு ஏற்பட்டிருக்கின்றதா? இதனை மக்கள் மார்க்கக் கடமையாக நோக்குகின்றார்களா? இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: சர்வதேச ரீதியில் அண்மைக் காலமாக குறிப்பாக 1970களுக்குப் பிற்பட்ட காலப் பகுதியில் பரவலான இஸ்லாமிய எழுச்சியை அவதானிக்க முடிகிறது. நமது நாட்டிலும் அதனது வெளிப்பாட்டை, தாக்கத்தை கண்கூடாகக் காண முடியுமாக இருக்கிறது.

இன்று யாராலும் தடுத்து நிறுத்த முடியாதளவு இஸ்லாமிய எழுச்சி மூலை முடுக்குகளிலெல்லாம் வேகமாகப் பரவி வருகிறது. எல்லா மட்டங்களிலும் இஸ்லாமிய எழுச்சிக் காற்று வீசுவதை கண்கூடாகக் காண்கின்றோம். இந்த எழுச்சியின் மிக முக்கியமான விளைவுகளுள் ஒன்றுதான் இன்று இஸ்லாமிய சிந்தனை சகல மட்டங்களிலும் உருவாகியிருப்பது. இன்று சமூகத்தில் இஸ்லாம் குறித்த பரவலான ஒரு விழிப்புணர்வும் தெளிவும் ஏற்பட்டிருக்கின்றது.

இபாதத், முஆமலாத், நிதி, நீதி, நிருவாகம் உட்பட அனைத்துத் துறைகளிலும் இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. முழு வாழ்வும் இஸ்லாமியமயப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணக்கரு சகல தரப்பினர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

அறிவை இஸ்லாமியமயப்படுத்தல் (Islamization of Knowledge) எனும் கோட்பாட்டை இஸ்மாயீல் பாரூக்கி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் முன்வைத்தனர். அமெரிக்காவிலுள்ள (International Institution of Islamic Thought - IIIT) எனும் நிறுவனம் இக்கோட்பாட்டை மக்கள்மயப்படுத்தியதன் விளைவாக அறிவை மாத்திரமல்ல வாழ்வின் சகல துறைகளையும் இஸ்லாமியமயப்படுத்த வேண்டும் என்ற கருத்து பரவலாகியுள்ளது.

சாதாரண ஒரு மனிதனுக்கும் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கின்றது. இது சிந்தனைப் பாங்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

கேள்வி: தனி மனித வாழ்விலும் குடும்ப வாழ்விலும் எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கின்றது?

பதில்: இகாமதுத் தீன் பணி வெறுமனே ஒரு சமூகத்தை உருவாக்குவது மாத்திரமல்ல சமூக உருவாக்கம் என்பது இகாமதுத் தீன் பணியில் இறுதி இலக்கு. இவ் இறுதி இலக்கு எட்டப்படுவதற்கு முன்னால் தனி மனிதர்கள், குடும்பங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இஸ்லாத்தின் அடிப்படையானதும் ஆரம்பமானதுமான இலக்கு தனிமனித உருவாக்கம். ஒவ்வொரு முஸ்லிம் தனிமனிதனும் இஸ்லாமிய அச்சில் வார்க்கப்பட வேண்டும். இஸ்லாம் எதிர்பார்க்கின்ற ஒழுக்க விழுமியங்கள், நற்பண்புகளை ஒரு முஸ்லிம் பேணி நடக்க வேண்டும் என்பது முதன்மையானது. தீனை நிலைநாட்டுதல் என்று பேசும்போது முதலில் தனிமனிதனில் தீன் நிலைநாட்டப்பட வேண்டும். இதனை ஓர் உதாரணம் மூலம் விளக்க முடியும்.

எகிப்தில் ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போர் நடைபெற்றுக் கொண்;டிருந்தபோது இஃவானுதல் முஸ்லிமீன் இயக்கத்தைச் சேர்ந்த அறிஞர்கள் போராட்டத்தில் பங்கெடுத்த மக்களைப் பார்த்து
ஆங்கிலேயரை உங்களது உள்ளங்களிலிருந்து வெளியேற்றுங்கள். அவர்கள் உங்கள் பூமியிலிருந்து வெளியேறி விடுவார்கள் எனக் கூறினார்கள்.

அவ்வாறே முஸ்லிம் பெரும்பான்மை நாடான எகிப்தில் இஸ்லாமிய ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோஷம் பலமாக எழுப்பப்பட்டபோது அங்கிருந்த இஸ்லாமிய அறிஞர்கள்
இஸ்லாமிய ஆட்சியை முதலில் உங்கள் உள்ளங்களில் நிலைநாட்டுங்கள், அப்போது உங்கள் பூமியில் அது உருவாகும் எனக் கூறினார்கள்.

ஆனால், இன்று இஸ்லாமிய சமூக உருவாக்கம் என்பது சிலபோது ஒரு கோஷமாக மாத்திரமே எழுப்பபடுகிறது. இஸ்லாமிய சமூக உருவாக்கம் பற்றிப் பேசுவதற்கு முன் இஸ்லாமிய சமூக அமைப்பில் வாழக்கூடிய தகுதியை நாம் பெற்றுள்ளோமோ என்பதனை முதலில் விளங்க வேண்டும். எனவே, ஆரம்பமாக இஸ்லாத்தை விளங்கிய சரியான அச்சில் வார்க்கப்பட்ட தனிநபர்கள் வருவாக்கப்பட வேண்டும். அந்த வகையில் இகாமதுத் தீன் பணியில் தனிமனித வாழ்க்கை நெறிப்படுத்தப்பட வேண்டும்.

இமாம் ஹஸனுல் பன்னா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இஸ்லாம் உருவாக்க விரும்புகின்ற தனிதனிதனின் பத்து பண்புகளை மிகவும் இரத்தினச் சுருக்கமாக விளக்கியுள்ளார்:

1. அகீதாவில் சீரானவனாக இருக்க வேண்டும்.
2. இபாதத்தில் சரியானவனாக இருக்க வேண்டும்.
3. பண்பாட்டில் பலமானவனாக இருத்தல் வேண்டும்.
4. கொள்கைத் தெளிவு
5. மனோஇச்சைக்கு கட்டுப்படாமல் தனது உள்ளத்துடன் போராடுகின்ற உறுதியான உள்ளம் படைத்தவனாக இருத்தல் வேண்டும்.
6. மற்றைய மனிதர்களுக்கு பயனுள்ள மனிதனாக இருத்தல் வேண்டும்.
7. சகல விவகாரங்களையும் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்பவனாக இருத்தல் வேண்டும்.
8. கால, நேரத்தை மிகச் சரியாக பேணி நடக்க வேண்டும்.
9. பிறரில் தங்கி வாழாமல் உழைத்து வாழக்கூடியவராக இருத்தல் வேண்டும்.

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் பெறப்பட்டிருக்கும் இந்த 10 பண்புகளையும் தனிமனிதனில் விதைக்கின்ற பணிதான் தனிமனிதனை உருவாக்குவதற்கான இகாமதுத் தீன் பணி இதுவல்லாமல் சில கருத்துக்களை வாழையடி வாழையாக பரப்புவது இகாமதுத் தீன் பணியாகாது. மற்றும் சில இணக்க வழிபாடுகளோடு மாத்திரம் சுருங்கிக் கொள்வதோ சில பண்பாடுகளைப் பேணி நடப்பதோ இகாமதுத் தீன் பணியாக மாட்டாது.

எனவே, தனிமனிதனின் சிந்தனைப் பாங்கிலும் செயற்பாட்டிலும் இஸ்லாம் மலர வேண்டும். அப்போதுதான் ஆளுமை மிக்க இஸ்லாமிய தனிமனிதர்கள் உருவாகுவார்கள். வெறும் சிந்தனையை மட்டும் இஸ்லாம் என ஒரு போதும் அல்குர்ஆன் போதிக்கவில்லை.

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் பிறருக்குச் சொல்கிறீர்கள். நீங்கள் செய்யாதவற்றை பிறருக்குச் சொல்வதுதான் அல்லாஹ்விடத்தில் மிகவும் வெறுப்புக்குரியது.

இஸ்லாமிய கருத்துக்களை அதிகமாகப் பேசி அதில் எதனையும் நடைமுறைப்படுத்த முயற்சிக்காத மனோநிலைதான் அல்லாஹ்விடத்தில் மிகவும் வெறுப்புக்குரியது. இன்று சிலர் சமூக உருவாக்கம் குறித்து காரசாரமாகப் பேசுகின்றார்கள். ஆனால், அவர்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் பிரதிபலிப்பதில்லை. அவர்களின் குடும்ப வாழ்வில் இஸ்லாமிய நடைமுறைகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒரு தனிமனிதனை இஸ்லாம் உருவாக்க விரும்பவில்லை.
எனவே, இஸ்லாத்தைச் சொல்கின்ற கேட்கின்ற ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்விலும் தீன் நிலைநாட்டப்பட வேண்டும்.

கேள்வி: இகாமதுத் தீன் பணியில் இரண்டாவது இலக்காக இருக்கும் குடும்ப உருவாக்கத்தின்போது ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் வரையறைகள் குறித்து விளக்க முடியுமா?

பதில்: இகாமதுத் தீன் பணியின் இரண்டாவது இலக்கான குடும்ப உருவாக்கம் மிகவும் முக்கியமானது. இஸ்லாமிய சமூக அமைப்பு உருவாக வேண்டுமென்றால் முதலில் தனிமனிதர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக பல குடும்பங்கள் பயிற்றுவிக்கப்படுவதன் மூலம் ஒரு சமூகம் உருவாகும். எனவேதான், ஒரு குடும்பத்தை சிறிய சமூகம் (Micro Society) என சமூகவியலாளர்கள் வர்ணிக்கின்றனர். சிறிய சமூகமாக வர்ணிக்கப்படுகின்ற குடும்பம் சீராகாத வரை ஆரோக்கியமான சிறிய சமூகம் உருவாகப் போவதில்லை.

எனவேதான் இஸ்லாம் தனிமனிதனுக்கு எந்தளவு முக்கியத்துவம் வழங்குகின்றதோ அதே அளவு முக்கியத்துவத்தை குடும்பத்துக்கும் வழங்குகின்றது.

குடும்ப வாழ்வோடு தொடர்புபட்ட சட்ட திட்டங்கள், வரையறைகள், நெறிமுறைகள் அனைத்தையும் அணுஅணுவாகப் பேசும் மார்க்கம் இஸ்லாம் மாத்திரமே. குடும்ப வாழ்வோடு தொடர்புபட்ட இஸ்லாமிய சட்டங்கள் (Family Law) எனும் தனியான துறையை இஸ்லாம் வகுத்துத் தந்துள்ளது.

விவாகம், விவாகரத்து, குழந்தை வளர்ப்பு, பெற்றோர் பிள்ளைகளுக்கிடையிலான உரிமைகள், கடமைகள், உறவுகள் மற்றும் வாரிசுரிமைச் சட்டங்கள் உட்பட சகல விடயங்களையும் ஆராய்கின்ற மிகவும் வளமான சட்டத் தொகுப்பு இஸ்லாத்தில் மாத்திரமே இருக்கின்றது. இந்தளவு குடும்ப வாழ்க்கைக்கு இஸ்லாம் முக்கியத்துவம் வழங்குகின்றது.

ஒரு குடும்பத்திலுள்ள அனைத்து அங்கத்தவர்களும் இஸ்லாமிய வரையறைக்குள் வாழ வேண்டும் என வலியுறுத்துகின்ற இஸ்லாம், அவர்கள் ஒவ்வொருவருக்குமான வழிகாட்டல்களை, வரையறைகளை தெளிவுபடுத்தியிருக்கின்றது.

இன்று உலகிலுள்ள குறிப்பாக மேற்குலகில் எழுந்துள்ள மிக முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்றுதான் ஒற்றை பெற்றோர் பிரச்சினை (Single Parents Problem) அதாவது மேற்கில் பெரும்பாலான குழந்தைகளுக்கு தந்தை இல்லை. பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் தந்தையின் பெயர் குறிப்பிடப்படும் இடத்தில் கோடு போடுகின்ற சமுதாயம்தான் இன்று மேற்குலகில் உருவாகியிருக்கிறது. அதுதான் இன்றைய நாகரிகமாகவும் கருதப்படுகின்றது.

பிரான்ஸில் 55% ஆன குழந்தைகளுக்கு தந்தை யார் என்று தெரியாது. இங்கிலாந்தில் 45% ஆன குழந்தைகளுக்கு தந்தையைத் தெரியாது. மறுபக்கம் மேற்கில் விவாகரத்து நிகழும் விகிதம் மிகவும் அதிகரித்துள்ளது. அங்குள்ளவர்களில் மிகக் குறைந்த தொகையினரே திருமண பந்தத்தில் இணைகின்றார்கள்.

சில நாடுகளில் 15% ஆனோரே மணம் முடிக்கின்றனர். மிகுதி 75% ஆனோர் கணவன்-மனைவி உறவின்றி வாழ்க்கைத் தோழன்-தோழியாக (Life Partner) கூடி வாழ்கின்றனர். திருமணம் முடிக்கும் சிறு தொகையினரில் பெரும்பான்மையினர் விவாகரத்துச் செய்கின்றனர். இந்தளவுக்கு குடும்ப, சமூக வாழ்வு சீரழிந்து போயிருக்கின்றது.

இவ்வாறு இஸ்லாம் சொல்கின்ற குடும்ப உறவு முறைகள் இல்லாத சமூகம் சீரழிந்து சின்னாபின்னமடையும் என்பதில் சந்தேகமில்லை. அதுதான் இன்று மேற்குலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, தீன் தனிமனித வாழ்வில் எவ்வாறு நிலைநாட்டப்பட வேண்டுமோ அவ்வாறே குடும்பத்திலும் நிலைநாட்டப்பட வேண்டும். அந்த வகையில் குடும்ப வாழ்வின் நுழைவாயிலாக விளங்குகின்ற திருணத்திலிருந்தே இஸ்லாம் வழிகாட்டல்களை வழங்குகிறது.

வாழ்க்கைத் துணையை தெரிவு செய்வதற்கான வரையறைகள், ஒழுங்குள், கணவன்-மனைவிக்குள்ள உரிமைகள், பெற்றோர்-பிள்ளைகளுக்கான உரிமைகள், கடமைகள் மற்றும் குழந்தை வளர்ப்புக்கான நெறிமுறைகள் போன்ற குடும்ப ஒழுங்குள் குறித்து விரிவாகவும் தெளிவாகவும் பேசுகிறது இஸ்லாம்.

இவை தவிர குடும்ப வாழ்க்கையோடு தொர்புபட்ட பொதுவான வரையறைகளையும் இஸ்லாம் வகுத்துள்ளது. குடும்பத்தின் பொருளாதார நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும்? வீண்விரயம் எவ்வாறு தவிர்க்கப்பட வேண்டும்? ஆடம்பரத்தை எவ்வாறு தவிர்க்கலாம்? ஆடம்பர மோகத்தினால் ஏற்படும் விளைவுகள் போன்ற பல்வேறுபட்ட ஒழுங்குகளையும் வரையறைகளையும் தெளிவுபடுத்தியுள்ளது.

கேள்வி: சாதாரண ஒரு குடும்பத்துக்கும் இஸ்லாமியமயப்படுத்தப்பட்ட ஒரு குடும்பத்துக்கும் இடையிலுள்ள வித்தியாசங்கள் குறித்து சுருக்கமாக விளக்க முடியுமா?

பதில்: இன்று நடைமுறையில் இருக்கின்ற ஒரு குடும்பத்தின் போக்கு, நடைமுறை நோக்கு போன்ற அம்சங்களிலிருந்து வித்தியாசப்படுகின்ற ஒரு குடும்பமாகவே இஸ்லாமிய குடும்பம் திகழும்.

உதாரணமாக வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்கின்றபோது எம்மிடம் சில அளவுகோல்கள் இருக்கின்றன. அழகு, தொழில், குடும்ப அந்தஸ்து, வருமானம், பட்டம் பதவிகள், சமூக அந்தஸ்து என்பன நோக்கப்பட்டே வாழ்க்கைத் துணை தெரிவு நடைபெறுவது இன்றைய நடைமுறையாக மாறியிருக்கிறது.

ஆனால், மார்க்கம் இந்த நடைமுறைக்கு மாற்றமான கருத்தையே முன்வைக்கிறது.

ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக திருமணம் முடிக்கப்படுவாள். அவளது பணத்துக்காக, அவளது அழகுக்காக, அவளது குடும்ப அந்தஸ்த்திற்காக, அவளது தீனுக்காக மார்க்கப்பற்றுள்ள பெண்ணை நீ திருமணம் முடித்துக் கொள். இல்லாதபோது சீரழிந்து நாசமாகி விடுவாய்.

ஆனால், இன்றைய நடைமுறையில் வசதியுள்ள, அழகான, படித்த பெண்ணைத் தெரிவுசெய்து மணம் முடித்துக் கொள். இல்லாதபோது வாழ்க்கையில் துன்பப்படுவாய் என்ற வகையில் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது ஹதீஸுக்கு முற்றிலும் முரணானது.

இவ்வாறு குடும்ப வாழ்வின் சகல அம்சங்களையும் இஸ்லாமிய வட்டத்துக்குள் போட்டுப் பார்த்தால் இகாமதுத் தீன் எனும் பணி குடும்ப வாழ்வில் நிலைநாட்டப்படுகின்றதா? இல்லையா? என்பது வெளிச்சத்துக்கு வரும்.

கேள்வி: இஸ்லாமிய சமூகத்தை இரு கூறுகளாக வகுக்க முடியும். ஒன்று உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளிலுள்ள முஸ்லிம் சமூகம். மற்றயது, இன்னும் சில நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் சமூகம். இவ்விரு சமூகங்களுக்கும் மத்தியில் அணுகுமுறை வித்தியாசப்படுமா? என்பது பற்றி சுருக்கமாக விளக்க முடியுமா?


பதில்: இக்கருப்பொருள் மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் பேசப்பட வேண்டிய ஒன்று. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளில் இகாமதுத் தீன் பணியின் இலக்கு சமூகத்தையும் கடந்து செல்லும்.

தனிமனிதன்-குடும்பம்-சமூகம்-இஸ்லாமிய ஆட்சி என இதன் எல்லை விரிவடையும். ஆனால், முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளைப் பொறுத்தவரை இகாமதுத் தீன் பணியின் அணுகுமுறை சற்று வித்தியாசப்படும்.

இன்று சுமார் 65 நாடுகள் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். இலங்கை வாழ் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் 15 இலட்சத்தை கடந்த கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியாவில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களின் சனத்தொகை 15 கோடியைத் தாண்டிக் கொண்டிருக்கிறது.

உலகில் வாழ்கின்ற மிகப் பெரிய சிறுபான்மை சமூகம் என இந்திய முஸ்லிம் சிறுபான்மைச் சமூகம் வர்ணிக்கப்படுகிறது. எனவே, உலகில் சில இலட்சங்களைக் கொண்ட சிறுபான்மை முஸ்லிம்களையும் பல கோடிகளைக் கொண்ட சிறுபான்மை முஸ்லிம்களையும் அவதானிக்கலாம்.

அந்த வகையில் மிக அண்மைக் காலமாக முஸ்லிம் சிறுபான்மையினர் தொடர்பான தனியாக நோக்கப்பட வேண்டும் என்ற கருத்து உணரப்பட்டு அதற்கான சட்ட ஒழுங்கு குறித்தும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றது. சிறுபான்மையினருக்கான தனியான சட்ட ஒழுங்கு பிக்ஹுல் அகல்லிய்யாத் என அரபியில் அழைக்கப்படுகின்றது.

ஏனெனில் இதுகாலவரை பெரும்பான்மை முஸ்லிம்களை கவனத்திற்கொண்டு வகுக்கப்பட்ட சட்ட திட்டங்களே முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் பிரயோகிக்கப்பட்டன. ஆனால், இன்றைய காலத்தைப் பொறுத்தவரை எவ்வாறு உலகில் பெரும்பான்மை முஸ்லிம் சமூகங்கள் வாழ்ந்து வருவதைப்போல சற்று ஏறக்குறைய சிறுபான்மை முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றனர்.

உலக முஸ்லிம் சனத்தொகையில் சுமார் 40% ஆனவர்கள் மற்றொரு தகவலின்படி 45% ஆனோர் முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களாக வாழ்ந்து வருகின்றனர். மற்றைய 55% ஆனோரே பெரும்பான்மை முஸ்லிம் சமூகமாக வாழ்ந்து வருகின்றனர்.

எனவே, இந்த 45% ஆன முஸ்லிம்களின் அபிலாஷைகள், விருப்பு, வெறுப்புகள், தேவைகள், பிரச்சினைகள் தனியாக நோக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு இதற்கான பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏனெனில், சிறுபான்மை முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் வித்தியாசமானவை. பெரும்பான்மை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளாத புதிய புதிய பிரச்சினைகளெல்லாம் சிறுபான்மை முஸ்லிம்கள் எதிர்நோக்கி வருகின்றனர். அதற்கான சட்ட திட்டங்களும் வித்தியாசப்பட வேண்டும் என்ற வகையில் பிக்ஹுல் அகல்லிய்யாத் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து தீவிரமாக ஆராயப்படுகின்றது.

எனவே, இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் இகாமதுத் தீன் பணி தனிமனிதன்-குடும்பம்-சமூகம் வரை விரிந்து செல்லும் என்பதனையும் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் நாடுகளில் இகாமதுத் தீன் பணி தனிமனிதன்-குடும்பம்-சமூகம்-இஸ்லாமிய ஆட்சி என விரிவடையும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி: ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய நாம் இக்காலப் பகுதியில் மற்றைய சமூகத்தவர்களுக்கு இஸ்லாத்தை எத்திவைத்ததன் விளைவாக இஸ்லாத்தில் இணைந்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது.


உண்மையில் இலங்கையின் வரலாற்றில் சில வட்டங்களில் முஸ்லிம்கள் செல்வாக்கு மிக்கவர்களாகத் திகழ்ந்துள்ளனர். அப்படி இருந்தும் முஸ்லிமல்லாதவர்களிடம் இஸ்லாத்தை எத்தி வைப்பதில் நாம் ஏன் பின் நிற்கின்றோம்? எமது இகாமதுத் தீன் பணி சரியான முறையில் மேற்கொள்ளப்படாததன் விளைவாக அதனைக் கருத முடியுமா?

பதில்: ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டவர்களாக வாழ்ந்து வரும் நாம் முஸ்லிமல்லாத பெரும்பான்மை சமூகங்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென இஸ்லாம் எதிர்பார்க்கின்றதோ அந்த விடயத்தில் நாம் நியாயமான அளவு உடன்பாடாக நடந்து வந்துள்ளோம். முஸ்லிமல்லாதோருடன் மிகச் சிறந்த உறவைப் பேணி வந்திருக்கின்றோம்.

இந்நாட்டில் வரலாற்றில் பல்வேறுபட்ட பங்களிப்புக்களைச் செய்த பெருமை முஸ்லிம்களைச் சாரும். இதை யாராலும் மறுக்க முடியாது. இந்நாட்டில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக வாழும் நாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புக்களையும் செய்திருக்கின்றோம். குறிப்பாக நாட்டின் இறைமைக்காக சுதந்திரத்துக்காக எம்மாலான பங்களிப்புக்களை எமது விகிதாசாரத்துக்கேற்ப செய்து வந்துள்ளோம்.

ஆரம்ப காலங்களில் இந்நாட்டு மன்னர்களின் அரச சபையில் ஆலோசகர்களாகவும் அரண்மனை சமயலறையில் சமையற்காரர்களாகவும் அரசு குடும்ப மருத்துவர்களாகவும் முஸ்லிம்கள் இருந்துள்ளனர். முப்பெரும் பதவிகளில் முஸ்லிம்கள் இருந்து அரசர்களுக்கு விசுவாசமாக நடந்து வந்துள்ளனர். குறிப்பாக கண்டி இராச்சியத்திலே மிகத் தெளிவாக இதனைப் பார்க்கலாம்.

ஆனால், இலங்கையின் வரலாற்றில் முஸ்லிம்கள் இந்நாட்டுக்குச் செய்த அரும்பெரும் சேவைகள் குறித்து மிகச் சரியாகப் பேசப்படவில்லை. முஸ்லிமல்லாதவர்களும் இது குறித்து சிந்திப்பதாகத் தெரியவில்லை. எனினும், இந்நாட்டு முஸ்லிம்களின் வரலாற்றில் கரிசனை செலுத்தும் பேராசிரியர் லோனா தேவராஜா நன்றியுடன் நினைவூகூரப்பட வேண்டியவர்.

பேராசியர் லோனா தேவராஜா அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றி நன்கு அறிந்தவர். பக்கச்சார்பின்றி முஸ்லிகளின் வரலாற்றைப் பேசிவந்திருக்கிறார். பல்வேறுபட்ட ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். The Muslims of Sri Lanka one thousand Ethinic Harmany (ஆயிரம் வருட கால இலங்கை முஸ்லிம்களின் வாழ்வு) எனும் நூலை எழுதிய பெருமை அவரைச் சாரும்.

மற்றும் இந்நாட்டின் பொருளாதாரத் துறைக்கும் முஸ்லிம்கள் நியாயமான பங்களிப்புக்களை வழங்கியுள்ளனர். 1950களின் பிற்பகுதியில் நடைபெற்ற முஸ்லிம்களின் மாநாட்டிலே அன்று இலங்கையின் பிரதமராகவிருந்த டீ.எஸ். சேனாநாயக்க அவர்கள் ஆற்றிய உரையில் இந்த நாட்டின் முதுகெழும்பு முஸ்லிம்கள், இந்த நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தியவர்கள் முஸ்லிம்கள் எனக் குறிப்பிட்டார்கள்.

தவிரவும் ஏற்றுமதி, இறக்குமதியின் ஏகபோக உரிமை முஸ்லிம்களின் கைவசம் இருந்தது. மாணிக்க வியாபாரம் நகை வியாபாரத்தில் முஸ்லிம்கள் கொடிகட்டிப் பறந்தார்கள். நாட்டிலிருந்த மொத்த வர்;த்தக நிலையங்களில் 55% ஆனவை முஸ்லிம்களுக்குச் சொந்தமானவையாக இருந்தது. 1985ம் ஆண்டளவில் புறக்கோட்டை ஓல்கோட் மாவத்தையிலிருந்த கடைகளில் சுமார் 75 கடைகள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை. இலங்கையின் வெளிநாட்டுத் தூதுவர்களாக முஸ்லிம்கள் கடமை புரிந்து இந்நாட்டுக்குச் சேவை புரிந்துள்ளார்கள்.

இவ்வாறு நாட்டின் முன்னேற்றத்துக்கு சகல துறைகளிலும் தம்மால் முடியுமான பங்களிப்பைச் செய்தவர்கள். ஆனால், இந்த உண்மை இன்று மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. இந்த உண்மையை இன்றைய முஸ்லிம்களே அறியாதிருப்பது ஒருபுறமிருக்க பெரும்பான்மையின் மக்களுக்கு இந்த உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம்கள் இந்நாட்டுக்கு ஆற்றிய சேவைகளை அறியாதிருக்கின்றார்கள்.

எனவே, இகாமதுத் தீன் பணி என்ற வகையில் பொது விடயங்களில் முஸ்லிமல்லாதவர்களுடன் எமது உறவு, தொடர்பு, பங்களிப்பு எவ்வாறிருக்க வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கும் விடயத்தில் நாம் நியாயமாக கடந்து வந்திருக்கின்றோம். இந்நாட்டுக்கு மிகவும் விசுவாசமாக நடந்து வந்திருக்கின்றோம்.

இந்நாட்டின் இறைமைக்கு சவால் விடுபவர்களாக ஒருபோதும் முஸ்லிம்கள் இருந்ததில்லை. நேரடியாகவோ மறைமுகமாகவோ அன்று முதல் இன்றுவரை பெரும்பான்மையினத்தவருக்கு சவாலாக முஸ்லிம்கள் இருக்கவில்லை. இதனை முதலில் இன்றைய முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிமல்லாதவர்களுக்கு இது பற்றிய விளக்கத்தை அளிப்பது எங்களது பொறுப்பு.

முஃமின் என்பவன் எல்லா நன்மைகளுக்கும் திறவுகோல். சகல தீமைகளுக்கும் பூட்டு என நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதற்கிணங்க இலங்கை முஸ்லிம்கள் அன்று வாழ்ந்திருக்கிறார்கள். இது பற்றி விரிவாக ஆராயப்பட வேண்டும்.
இலங்கை வளங்களை சூறையாடுவதற்காக வந்த போர்த்துக்கேயர்களுக்கெதிராக முஸ்லிம்கள் போராடியுள்ளார்கள். இப்போராட்டத்தின் விளைவாக மாத்தறையில் மாத்திரம் சுமார் 500 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

ஒரு மன்னன் மறுத்தபோது இன்னொரு மன்னனோடு இணைந்து போர்த்துக்கேயரை வெளியேற்றும்வரை போராடிய பெருமை முஸ்லிம்களைச் சாரும். வரலாற்றாசிரியர்கள் அனைவரும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

மற்றும் ஒல்லாந்தருக்கெதிரான போராட்டத்துக்கு பெரும்பான்மையின மக்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியவர்கள் முஸ்லிம்கள். பிரிட்டிஷ்காரர்கள் இலங்கையை ஆக்கிரமித்தபோது அவர்களுக்கெதிரான போராட்டத்தில் மிகத் தீவிரமாக பங்கெடுத்து இந்நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை போராடியவர்கள் முஸ்லிம்கள் என்பதை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கின்றது. இதனை யாரும் மறுக்க முடியாது.

இன்றுவரை எமது போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. காத்தான்குடி பள்ளிவாயலில் ஸுஜுதில் இருந்தவேளை முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் ஏறாவூர் மற்றும் கிழக்குப் பிரதேச மக்கள் கடத்தப்பட்டு கொல்லப்படுவதற்கும் மற்றும் வடமாகாண மக்கள் தமது இருப்பிடத்தை விட்டு இரண்டு மணி நேரத்துக்குள் துரத்தப்பட்டதற்கும் காரணம் முஸ்லிம்கள் இந்நாட்டில் இறைமைக்காகப் போராடியமைதான்.

இவ்வாறு முஸ்லிமல்லாதவர்களோடு இணைந்து பொது நலன்களுக்காகப் பாடுபடுகின்ற நாட்டு நலன்களுக்காக சுயநலமின்றி முஸ்லிமல்லாதோருக்கு சகல துறைகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய நாம் தீனை அறிமுகப்படுத்துகின்ற பணியை மாத்திரம் மேற்கொள்ளவில்லை. அவர்களுக்கு இஸ்லாத்தைச் சொல்லவில்லை. அதிலும் கவலையான விடயம் என்னவென்றால் இஸ்லாம் குறித்த பிழையான புரிதல்களையே அவர்களுக்கு வழங்கியிருக்கின்றோம். இஸ்லாத்தின் யதார்த்தத்தை உரிய முறையில் அவர்களுக்கு புரியச் செய்யாததன் விளைவாக ஒரு சிலர் மார்க்கமென அடையாளப்படுத்தியதை முஸ்லிமல்லாதவர்கள் மார்க்கம் என எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே, அந்த வகையில் எமது நாட்டின் பிற சமூகத்தவர் மத்தியில் இகாமதுத் தீன் எனும் பணியை நிலைநாட்டத் தவறிவிட்டோம்.
முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில் மார்க்கத்தைச் சொல்லத் தவறியமை என்று கருதுவது வெறுமனே மார்க்கத்தைப் பரப்புவது மாத்திரமல்ல. அபூபக்கர்களும் ஹதீஜாக்களும் உருவாக்கப்படுவதற்கு முன்னால் ஆயிரம் ஆயிரம் அபூதாலிப்கள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இவர்கள் புனித இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் இஸ்லாம் உயிர் வாழ்வதற்கு எப்போதும் துணை நிற்பார்கள். பக்கபலமாக இருப்பார்கள்.

உண்மையில் இந்நாட்டில் இஸ்லாம் மிகச் சரியாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் ஆயிரமாயிரம் அபூதாலிப்கள் தானாகவே உருவாகியிருப்பார்கள். இவ்விடயத்தில் நாம் பெரும் தவறிழைத்து விட்டோம்.

ஒரு புறம் முஸ்லிம்கள் இந்நாட்டு நலன்களுக்காக பல சேவைகள் செய்தபோதும் மறுபக்கம் முஸ்லிமல்லாதவர்கள் குறித்த எமது பார்வை ஆரோக்கியமற்றதாகவே இன்றுவரை இருந்துவருகிறது. முஸ்லிமல்லாதோரை குறைமதிப்பீடு செய்து அவர்களை தாழ்த்திப் பார்ப்பது, முஸ்லிம்களை விட்டும் ஒதுக்கிப் பார்ப்பது போன்ற இஸ்லாத்துக்கு முரணான தவறுகளைச் செய்திருக்கின்றோம். செய்து கொண்டிருக்கின்றோம்.

ஒரு முஸ்லிம் முஸ்லிமல்லாதவர்களுடனான உறவை எவ்வாறு பேண வேண்டும் என்பது பற்றி பல இடங்களில் வலியுறுத்தும் அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.

தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விடயத்தில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ உங்களை உங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும் நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களைத் தடுப்பதில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான். (அல்மும்தஹினா: 08)

இங்கு நன்மை செய்தல் என்பதற்கு அல்லாஹ் பிர் எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளான். பிர் எனும் சொல் அரபு மொழியில் பெற்றோருக்கு உபகாரம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒரு சொல். நன்மை செய்தல் என்பதைக் குறித்துக்காட்ட அரபு மொழியின் பல சொற்கள் இருந்தபோதிலும் இச்சொல்லைப் பயன்படுத்தி உங்கள் பெற்றோருக்கு எவ்வாறு மனமுவந்து நன்மை செய்கின்றீர்களோ அவ்வாறே முஸ்லிமல்லாதோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அல்லாஹ் வலியுறுத்துகின்றான்.

மற்றும் நீதியோடு நடந்து கொள்ளுதல் என்பதைக் குறிக்க அரபு மொழியில் சாதாரணமாக கிஸத் எனும் சொல்லை பயன்படுத்தப்படும். எனினும் அதனை விட ஆழமான கருத்தைப் பொதிந்துள்ள பிர் எனும் சொல்லைப் பயன்படுத்தி மிக மிக நீதியாக நடந்து கொள்ள வேண்டும் என இவ்வசனம் வலியுறுத்துகின்றது. அல்லாஹ் தான் விரும்புவதாகக் கூறும் இவ்விடயம் ஓர் இபாதத். எனவே, இது விடயத்தில் நாம் மிகக் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

இதற்கு மாற்றமாக காபிரின் சொத்து கருப்பட்டி என எண்ணுகின்ற மனப்பாங்கு ஜாஹிலிய்ய சிந்தனைப்பாங்கு. இஸ்லாத்துக்கு விரோதமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மற்றும் நீதி, நியாயம், நேர்மை, அன்பு பாராட்டுதல், நட்புக் கொள்ளுதல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் முஸ்லிம்களோடு மாத்திரம் சுருக்கிக் கொண்டு முஸ்லிமல்லாதோரை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நோக்குவது இஸ்லாத்துக்கு முரணானது.

அவ்வாறே அவர்களோடு முகஸ்துதிக்காகப் பழகுமாறும் இஸ்லாம் கூறவில்லை. தூய்மையாக அவர்களுடன் நட்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்றே இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

எனவே, தனிமனிதர்களாகவும் சமூகமாகவும் சேர்ந்து முஸ்லிமல்லாதவர்களுடன் சேர்ந்து நல்லுறவைப் பேணுவதும் இகாமதுத் தீன் எனும் பணியில் உள்ளடங்கும்.

ஒரு மாதிரி முஸ்லிம் கிராமம் உருவாக்கப்பட வேண்டுமாயின் அக்கிராமத்திலுள்ள முஸ்லிமல்லாதவர்களோடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குரிய உரிமைகள் எப்படி பேணப்பட வேண்டும் என்பதையெல்லாம் இஸ்லாம் அழகாக கற்பித்துத் தருகின்றது.

ஒரு தடவை மதீனா நகரில் திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுவிட்டது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள மதீனாவில் குறித்த திருட்டு வேலையைச் செய்தவன் ஒரு முஸ்லிம். ஆனால், பெரும்பாலான முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து குறித்த திருட்டு வேலையைச் செய்தவன் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த யூதன் என நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களிடம் இவன்தான் திருடன் என்றும் திட்டமாக கூறிவிட்டார்கள். உண்மையில் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களுக்கும் நடந்த எதனையும் அறிந்திருக்கவில்லை.

இந்த சந்தர்ப்பத்தில் அந்த யூதன் திருடனல்ல. அவன் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்காக அல்லாஹ் அல்குர்ஆன் வசனங்களை இறக்கினான். ஸுரதுந் நிஸாவின் 107-113 வரையான வசனங்கள் அந்த யூதன் நிரபராதி நிரூபிக்கின்றன.

ஒரு யூதனின் உரிமைக்காக அல்லாஹுத் தஆலா குர்ஆன் வசனத்தை இறக்கி சதிசெய்தவர்களைக் கண்டித்தான் என்றால் முஸ்லிமல்லாதோர் விடயத்தில் எந்தளவு கரிசனையோடும் பேணுதலோடும் நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஒரு தடவை நஜ்ரான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு தூதுக்குழு நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களைச் சந்திக்க வந்தபோது நபியவர்கள் மஸ்ஜிதுந் நபவியில் வைத்து அவர்களை வரவேற்றார்கள். அது மட்டுமன்றி மஸ்ஜிதுந் நபவியில் அவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கையில் அவர்களின் பிரார்த்தனை நேரம் வந்தபோது அவர்களின் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காக மஸ்ஜிதுந் நபவியிலேயே ஓரிடத்தை தயார்படுத்திக் கொடுத்தார்கள்.

இது நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் முஸ்லிமல்லாதோருக்கு வழங்கிய கௌரவம் இவ்வாறுதான் முன்மாதிரியாக நடந்து காட்டியுள்ளார்கள்.

ஒரு தடவை கலீபா உமர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் நாட்டு நிலைமையை அறிந்து கொள்ளும் நோக்கில் வீதியோரமாக உலா வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு யூத வயோதிபர் யாசகம் கேட்டுக் கொண்டிருப்பதை அவதானித்த உமர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் மிகவும் மனவேதனையடைந்து எனது ஆட்சியில் முஸ்லிமல்லாத ஒரு யூதனுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றதே இதுபற்றி நான் மறுமையில் விசாரிக்கப்படுவேன் என மனதுக்குள் கூறியவராக அந்த வயோதிபரை மறுநாள் திறைசேரிக்கு வருமாறு அழைத்தார்கள்.

மறுநாள் திறைசேரிக்கு வந்த அந்த வயோதிபரிடம் ஓ மனிதனே! உனது இளமையை நாம் பயன்படுத்தினோம். உனது முதுமைக் காலத்தில் உன்னைக் கவனிக்காமல் விட்டுவிட்டோம். இது மாபெரும் அநியாயம். அதிகமாக உம்மிடம் மன்னிப்புக் கோருகின்றேன். இன்று முதல் உனக்கு பைதுல்மால் நிதியிலிருந்து மாதாந்த உதவிக் கொடுப்பனவு கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றேன் எனக் கூறி அம்மனிதருக்கு ஆறுதலளித்தார்கள்.

முஸ்லிமல்லாதோர் விடயத்தில் இந்தளவு கரிசனை செலுத்திய உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணப்படுக்கையில் இருக்கும் வேளையில் செய்த வஸிய்யத்துகளில் நமது சாம்ராஜ்யத்திலிருக்கின்ற முஸ்லிமல்லாதோர் விடயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்பது பிரதானமான ஒன்று.

மேலும் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு தடவை
எம்மோடு கூடி வாழ்கின்ற ஒரு முஸ்லிமல்லாதவனை நோவினை செய்தவன் என்னை நோவினை செய்தவனாவான். என்னை நோவித்தவன் அல்லாஹ்வை நோவினை செய்தவனாவான் என மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்கள்.

ஒரு முஸ்லிமல்லாத மனிதனிடம் அவனால் சுமக்க முடியாத வேலையைக் கொடுத்து நிர்ப்பந்திக்கும் முஸ்லிமுக்கு எதிராக நான் மறுமையில் வாதிடுவேன் என நபியவர்கள் கடுமையாகக் கூறியுள்ளதையும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

எனவே, இஸ்லாம் முஸ்லிமல்லாதோருக்கு வழங்குகின்ற உரிமைகள், அவர்களுடன் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் என்பன இன்றைய ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு சொல்லப்பட வேண்டும். உஸ்மானிய சாம்ராஜ்யத்தில் ஸ்பெய்னிய சாம்ராஜ்யத்தில் எவ்வாறு முஸ்லிமல்லாதோரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வந்தது என்பது பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருப்பதோடு முஸ்லிமல்லாதோருக்கும் இதனை எத்தி வைக்க வேண்டும்.

கேள்வி: பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளிலுள்ள சிறுபான்மை முஸ்லிமல்லாதோரின் உரிமைகள் குறித்து விளக்கம் தந்தீர்கள். இலங்கை போன்ற சிறுபான்மை முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் முஸ்லிமல்லாதோரில் இனவாத செயற்பாடுகளால் முஸ்லிம்களிடத்தில் பகையுணர்வு தோன்றியிருக்கலாம் என்று கூற முடியுமா?

பதில்: இனவாதிகள், இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் சிந்தனைப் பாங்குடையவர்கள் வரலாற்றில் எல்லாக் காலங்களிலும் இருந்துவந்துள்ளனர். அப்படிப்பட்ட இனவாதிகள் இன்று சற்று அதிகமாக இருப்பதுபோல் தெரிகிறது. அது ஒருபுறமிருக்க இந்நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் நல்ல மனப்பாங்குடையவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பெரும்பான்மையான நல்ல மனப்பாங்குடைய முஸ்லிமல்லாதவர்களுடன் இஸ்லாமிய முறைப்படி அவர்களின் உரிமைகளைப் பேணி நடந்திருந்தால் இனவாத சிந்தனைகளை நியாயமானளவு குறைந்திருக்க முடியும். எம்மைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமையும் தெளிவில்லாமையுமே முஸ்லிமல்லாதோர் மத்தியில் எம்மீது வெறுப்ப வரக் காரணமாக இருக்கலாம்.

முஸ்லிம்களோடு நெருக்கமாகப் பழகுகின்ற முஸ்லிமல்லா தோருக்குக்கூட முஸ்லிம்களின் நம்பிக்கைகள் கோட்பாடு, பழக்கவழக்கங்கள், போக்குகள், கொள்கை, கலாசாரம் என்பன சரியாகத் தெரியாது. இவற்றை அறிமுகப்படுத்தாதது எமது தவறு.

எனவேதான், அபூதாலிப்கள் இந்நாட்டில் உருவாக்கப்படவில்லை என்று குறிப்பிட்டேன். இன்றும் அத்தகைய அபூதாலிப்கள் மிகச் சொற்ப அளவிலேயே காணப்படுகின்றனர். எமது நடத்தைகள், பண்பாடுகளின் மூலமும் இஸ்லாம் குறித்த சரியான கண்ணோட்டத்தை, மனப் பதிவை ஏற்படுத்துவதன் மூலமும் இத்தகைய அபூதாலிப்களை இந்நாட்டில் உருவாக்க முடியும். ஆனால், இது விடயத்தில் நாம் கூடிய கரிசனை செலுத்தவில்லை.

இந்நாட்டில் முஸ்லிம்கள் 8மூ ஆக வாழ்கின்றனர். 92மூ ஆனோர் முஸ்லிமல்லாதோர். இவர்களில் 65மூ ற்கும் மேற்பட்டோர் சிங்கள மொழி பேசுகின்றவர்கள். ஆனால் எமது இஸ்லாமிய நிகழ்ச்சிகள், வகுப்புகள், உரைகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே நடைபெறுகின்றன. மற்றும் எமது வெளியீடுகளான புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், இறுவட்டுகள், துண்டுப் பிரசுரங்கள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே வெளியிடப்படுகின்றன.

எனவே, காலம் காலமாக 8மூ முஸ்லிம்களுக்குத்தான் எமது இகாமதுத் தீன் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழ் பேசும் மற்றைய சமூகத்துக்குக்கூட எமது செய்தி சரியாகப் போய் சேரவில்லை.

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டுகின்ற ஒரு சமூகமாகவுத்தான் நாம் இன்னும் இருந்துகொண்டிருக்கின்றோமே தவிர 92% ஆன முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு எம்மை அறிமுகப்படுத்துகின்ற பணியில் ஈடுபடவில்லை. எம்மைப் பற்றிய தப்பபிப்பிராயங்களை நீக்க முயற்சிக்கவில்லை.

இன்று வெகுசனத் தொடர்பு சாதனங்களான அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் இஸ்லாத்தைப் பற்றிய பல்வேறுபட்ட விமரிசனங்கள் முன்வைக்கப்படுகின்றன. முஸ்லிம்களுக்கெதிரான பரவலான குற்றச்சாட்டுகள் மிகவும் ஸீரியஸாக ஊடகங்களில் அலசப்பட்டு வருகின்றன. ஆனால், இவற்றுக்கு மிகச் சரியான விளக்கத்தை அளிக்க நாம் தயாரின்றி இருக்கின்றோம். இது விடயத்தில் எவ்வித பிரக்ஞையுமின்றி நாம் இருப்பது மிகவும் ஆபத்தானது.

எனவே, இஸ்லாத்தைப் பற்றிய அதன் நடைமுறைகள் குறித்த நல்லபிப்பிராயத்தை வளர்ப்பது இந்நாட்டு முஸ்லிமல்லாதவர் மத்தியில் நாம் மேற்கொள்கின்ற இகாமதுத் தீன் பணியாகும். எனவே, சமூகத்தை உருவாக்குதல் அல்லது சமூக மட்டத்தில் தீனை நிலைநாட்டுதல் என்று சொல்லும்போது இலங்கை போன்ற சிறுபான்மை முஸ்லிம்கள் வாழும் நாடுகளைப் பொறுத்தவரை அங்கு வாழ்கின்ற முஸ்லிமல்லாதோருக்கு இஸ்லாத்தை சரியாகப் புரிய வைக்க வேண்டிய தேவையுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ் இந்நாட்டைப் பொறுத்தவரை இஸ்லாத்தை எத்திவைப்பதற்கான சகல வாய்ப்புகளும் இருக்கின்றன. இந்நாட்டின் உத்தியோகபூர்வ ஊடகங்களே இஸ்லாத்தைப் பற்றி விளக்கமளிப்பதற்கு எமக்கு பல சந்தர்ப்பங்களை வழங்கியுள்ளன. ஆனால், அவற்றை நாம் எவ்வளவு தூரம் பயன்படுத்துகின்றோம் என்பதுதான் கேள்விக்குறி.

பத்திரிகையோ, வானொலியோ, தொலைக்காட்சியோ எதுவாக இருப்பினும் ஏனைய நாடுகளோடு ஒப்பிட்டு நோக்குகின்றபோது இந்நாட்டில் அரச ஊடகங்களில் இஸ்லாம் குறித்து பேசுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நாட்டில் அரச ஊடகங்களில்தான் இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிகத் தெளிவான உண்மை. ஆனால், நாம் அந்த நேரங்களை எதற்காகப் பயன்படுத்துகின்றோம்? எவ்வாறான செய்திகளை அதனூடாக வழங்குகின்றோம்?

இஸ்லாத்தின் செய்தியைச் சொல்வதற்கான அத்தனை வாயில்களும் இந்நாட்டில் திறந்துவிடப்பட்டிருக்கின்றன. அதனூடாக இகாமதுத் தீன் பணியை மேற்கொள்வதுதான் எமது கடமை.

கேள்வி: தனிமனித, குடும்ப மற்றும் சமூக வாழ்வில் முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியிலும் பிற சமூகங்களுக்கு மத்தியிலும் தீனை நிலைநாட்டுகின்ற பணிக்கு சமூகத்திலுள்ள சகல தரப்பினரும் எவ்வாறான பங்களிப்புக்களைச் செய்யலாம் என்பது பற்றி தெளிவுபடுத்த முடியுமா?

பதில்: இலங்கையைப் பொறுத்தவரை இகாமதுத் தீன் பணியை சரியாகவும் மிகச் சிறப்பாகவும் மேற்கொள்வதற்கான அனைத்து வாயில்களும் திறந்துவிடப்பட்டிருக்கின்றன. அப்பணியை தாராளமாக மேற்கொள்வதற்கான வளமும் களமும் ஆரோக்கியமாகவே இருக்கின்றது. இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கென்று தனியான பிரத்தியேகமான நிறைய நிறுவனங்கள் உத்தியோகபூர்வமாக இயங்கி வருகின்றன. உத்தியோகப்பற்றற்ற முறையில் இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.

உதாரணமாக இந்நாட்டில் முஸ்லிம்களுக்கென்று 750 பாடசாலைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. 801 முஸ்லிம் பாடசாலைகளில் வடக்கு, கிழக்கிலுள்ள 51 முஸ்லிம் பாடசாலைகள் யுத்த சூழ்நிலை காரணமாக இயங்காமலிருக்கின்றன. தேசிய பாடசாலைகள், மத்திய கல்லூரிகள், மகா வித்தியாலயங்கள், வித்தியாலயங்கள், கனிஷ்ட வித்தியாலயங்கள் என்று 750 முஸ்லிம் பாடசாலைகள் இயங்கி வருகின்றன.

இந்நாட்டு முஸ்லிம்களின் தேவைக்கதிகமாக முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன என்று கூறுவதில் தவறிருக்காது. அந்தளவு பாடசாலைகள் காணப்படுகின்றன. தவிரவும் சர்வதேசப் பாடசாலைகளும் தனியாக இயங்கி வருகின்றமை இன்னுமொரு குறிப்பிடத்தக்க விடயம்.

முஸ்லிம்கள் ஒரு தனித்துவமான சமூகம், அவர்களுக்கென்று ஒரு மார்க்கம், கலாசாரம், பண்பாடு என அனைத்தும் பிரத்தியேகமாக இருக்கின்றமையினால் அந்த தனித்துவத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கான முஸ்லிம்களுக்கென்று தனியான பாடசாலைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மற்றும் முஸ்லிம் பெண் பிள்ளைகள் ஹிஜாப் அணிகின்றமையினால் அதற்கேற்ற வகையில் இலவசச் சீருடைகள் அதிகளவில் வழங்கப்படுகின்றன. இதற்கெல்லாம் காரணம் முஸ்லிம்கள் தமது மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதே இச்சூழ்நிலையில் எமது பெண் பிள்ளைகள் ஹிஜாப் அணியத் தயாரில்லையாயின் இகாமதுத் தீன் பணிக்கு நாம் தயாரில்லை என்பதுதான் பொருள்.

எனவே, எமது நாட்டிலுள்ள 750 முஸ்லிம் பாடசாலை மாணவ-மாணவிகளும் அடுத்த தலைமுறையினருக்கு இஸ்லாத்தை எத்தி வைக்கின்ற அனைத்து வழிவகைகளையும் மேற்கொள்ள முடியும். உத்தியோகபூர்வமாகவே அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த நாட்டில் இஸ்லாம் பாடத்தை ஆரம்ப வகுப்பு முதல் M.A. MPhil   வரை கற்பதற்கான விஷேட துறையாக தெரிவுசெய்து படிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சில வளைகுடா அரபு நாடுகளில் இஸ்லாமிய கற்கை நெறித் துறையில் M.A. MPhil போன்ற மேற்படிப்புக்களை கற்க முடியாது. நிலையே இன்றுவரை காணப்படுகின்றது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரபுத் துறை கற்கைக்கான பகுதி பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த நாட்டில் எமது தனித்துவத்தைப் பேணுவதற்கான வாய்ப்புக்களை நிறையவே பெற்றிருக்கின்றோம். கல்வித் துறையில் இகாமதுத் தீனை நிலைநாட்டுவதற்கான நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

அரபு மொழிப் பாடம் தரம் 06 இலிருந்து மேல் வகுப்பு வரை ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டு வருகின்றது. இஸ்லாமிய கலாசாரத்தை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தி இகாமதுத் தீன் பணியை நிலைநாட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஏன் இவற்றுக்கூடாக இகாமதுத் தீன் பணியை மேற்கொள்ள முடியாது? இது குறித்து வினயமாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

அதற்காக இந்த நாட்டில் 250 அரபு மத்ரஸாக்கள் காணப்படுகின்றன. இவற்றிலிருந்து வெளியாகிய சுமார் 5000-6000 வரையான உலமாக்கள் இந்நாட்டில் இருக்கின்றார்கள். இந்த உலமாக்களால் இகாமதுத் தீன் பணிக்கு தமது பங்களிப்பைச் செய்ய முடியும். அவ்வாறே 2500 குர்ஆன் மத்ரஸாக்கள் இருக்கின்றன. இவற்றுக்கூடாக எவ்வாறு இகாமதுத் தீன் பணியில் மஸ்ஜிதுகளின் பங்களிப்பு எவ்வாறு அமைதல் வேண்டும் என்ற ஒழுங்கு வகுக்கப்பட்டு அதன் மூலம் காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்கலாம். பள்ளிவாயல் மிகச் சிறந்த களம். அதனை உரிய முறையில் பயன்படுத்துவது எமது பொறுப்பு.

கேள்வி: நீங்கள் கூறியதுபோல் சமூகத்தில் இகாமதுத் தீன் பணிக்கு பங்களிப்புச் செய்யக்கூடிய நிறுவனங்கள் பல உள்ளன. குறிப்பாக பாடசாலைகள், அரபு கலாசாலைகள், அல்குர்ஆன் மத்ஸாக்கள், மஸ்ஜிதுகள் இருக்கின்றன. உலமாக்கள், ஆசிரியர்கள், புத்திஜீவிகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கூடாகவும் தனிமனித, குடும்ப மற்றும் சமூக வாழ்வில் தீனை நிலைநாட்டுதல் என்று கூறும்போது இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து தலைமைத்துவம் வழங்குகின்ற பணியை யார் மேற்கொள்ள வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?

பதில்: உண்மையில் மேற்கூறிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி இகாமதுத் தீன் பணியை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பை இஸ்லாமிய இயக்கங்கள்தான் சுமக்க வேண்டும். அதுதான் இஸ்லாமிய அமைப்புக்களின் பணி இகாமதுத் தீன் பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்த அவ்வமைப்புகள் உழைக்க வேண்டும்.

பாடசாலை, பல்கலைக்கழகம், அரபு மத்ரஸாக்கள் மட்டத்தில் மற்றும் சமூகத்திலுள்ள சகல நிறுவனங்களின் மட்டத்திலும் இகாமதுத் தீன் பணியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி அதற்கான செயற்திட்டத்தை நிகழ்;ச்சி நிரலை தாயர்படுத்தி, ஒருங்கிணைத்து இதனை முன்னெடுக்கின்ற பணியை இஸ்லாமிய இயக்கங்கள் மேற்கொள்ள வேண்டும். இஸ்லாமிய இயக்கங்களின் நோக்கமே அல்லாஹ்வின் தீனை நிலைநாட்டுவதுதான்.

எனவே, அந்த வகையில் இஸ்லாமிய இயக்கங்களின் பணி மிகவும் மகத்தானது. இஸ்லாமிய இயக்கங்களின் சரியாக, முறையாக இயங்குகின்றபோதுதான் இந்தப் பணி சீராக நடைபெறுவது சாத்தியப்படும்.

கேள்வி: சமூகத்தில் பல்வேறுபட்ட இஸ்லாமிய இயக்கங்கள் தமது பணிகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுவாகவெ இவ்வியக்கங்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் சீர்திருத்தப் பணிகளையே மேற்கொண்டு வருகின்றன. பிற சமூகத்தவர் மத்தியில் இகாமதுத் தீன் பணியை நிலைநாட்டுவதில் இஸ்லாமிய இயக்கங்களின் பணி எவ்வாறு அமைய வேண்டும்?

பதில்: உண்மையில் தஃவா என்பது வேறு. இஸ்லாஹ் (சீர்திருத்தம்) என்பது வேறு. நமது சமூகத்தை சீர்திருத்துவது ஒரு அம்சம். ஏனைய சமூகத்தை இஸ்லாத்தின் பால் அழைப்பது என்பது மற்றொரு அம்சம்.

வரலாறு நெடுகிலும் பார்க்கின்றபோது பொதுவாகவே இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தும் நமது சமுதாயத்துக்குள் மறுசீரமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதில் முனைப்புடன் செயற்பட்டு வந்திருக்கின்றனவே தவிர இகாமதுத் தீன் பணியை இந்நாட்டில் மேற்கொள்வது பற்றிய எண்ணக்கருவை சரியாகப் புரிந்துகொண்டதாகவோ அதற்காக உழைத்ததாகவோ தெரியவில்லை.

எனினும் இன்று இந்நாட்டில் முஸ்லிமல்லாதவர் மத்தியில் இகாமத்துத் தீன் பணியை நிலைநாட்ட வேண்டிய அவசியமும் அந்தப் பகுதிக்கு கூடுதலான அழுத்தமும் கொடுக்கப்பட வேண்டியிருக்கிறது. ஏனெனில் குறைந்தபட்சம் எம்மைப் புரிந்து கொண்ட சமூகமாகவது இந்நாட்டில் உருவாக்கப்பட வேண்டும்.

மறுமையில் அல்லாஹ்வுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக மாத்திரமல்லாது, நமது இருப்பை உறுதிசெய்வதற்காகவும் இந்நாட்டில் இகாமதுத் தீன் பணி மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையுள்ளது.
அந்த வகையில் அண்மைக்காலமாக இது குறித்த ஒரு சுமாரான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சில இஸ்லாமிய அமைப்புகள் இது விடயத்தில் கூடிய கரிசனை எடுத்திருக்கின்றன.

இந்த நாட்டில் முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில் இஸ்லாத்தையும் அதன் கலை, கலாசார, ஒழுக்கவியல் தத்துவங்களைப் பற்றி அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இஸ்லாமிய இயக்கங்கள் பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஒரு இஸ்லாமிய அமைப்பு சிங்கள மொழி பேசும் மக்கள் மத்தியில் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் சிங்கள மொழி மூலம் சிறுகதைப் போட்டியொன்றை நடத்தியது. இதில் அதிகமான முஸ்லிமல்லாத போட்டியாளர்கள் பங்குபற்றினார்;கள். இது ஒரு சிறிய முயற்சித்தான். என்றாலும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய முன்மாதிரியான அம்சமே.

இவ்வாறு பரவலாக பல கோணங்களில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். ஓர் அமைப்பு அல்லது இரண்டு அமைப்புகள் சேர்ந்து ஒருங்கிணைக்கின்ற பணியை மேற்கொள்கின்றபோது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மஸ்ஜிதுகள், மத்ரஸாக்கள் மட்டுமன்றி சமுகத்திலுள்ள பல நிறுவனங்களிடமிருந்தும் அந்தந்த துறைகளிலிருந்து இகாமதுத் தீன் பணிக்காக பங்களிப்புக்களை மேற்கொள்ள முடியுமாக இருக்கும். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இகாமதுத் தீன் பற்றிய இந்தப் பார்வை சகலரிடமும் இருக்க வேண்டும் என்பதே.

ஓர் ஆசிரியராகவோ, துறைசார்;ந்த நிபுணராகவோ, ஆலிமாகவோ, வியாபாரியாகவோ, ஒரு தொழிலதிபராகவோ எந்தத் துறை சார்ந்தவராகவும் இருக்கலாம். அவர் எந்தத் தளத்தில் இருக்கின்றார் என்பது முக்கியமல்ல. ஒரு முஸ்லிமுக்கு தனிமனிதனாக எவ்வாறு வாழ வேண்டும், குடும்ப விவகாரத்தில் சமூக உருவாக்கத்தில் தனது இகாமதுத் தீன் பணி எப்படி இருக்க வேண்டும் என்ற விளக்கமும் தெளிவும் இருக்குமாக இருந்தால் சமூகத்தில் காத்திரமான மாற்றங்கள் நிகழும்.

எனினும் இகாமதுத் தீன் பணியை தெளிவுபடுத்துகின்ற பொறுப்பை இதன்பால் மக்களைத் தூண்டுகின்ற ஊக்குவிக்கின்ற பொறுப்பை இஸ்லாமிய இயக்கங்கள் சுமக்க வேண்டும். இஸ்லாமிய இயக்கங்கள் இப்பணியையே மேற்கொண்டு வருகின்றபோதிலும் இதில் இன்னும் அழுத்தம் கொடுக்கின்றபோது சமூகத்திலுள்ள முரண்பாடுகளைக் களைந்து பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.

மீண்டும் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் மையப்படுத்தி எமது பணிகளைச் செய்கின்றபோதுதான் இஸ்லாமிய இயக்கங்களுக்கிடையில் உட்பூசல்கள் அதிகரிக்கின்றன. எனவே, இகாமதுத் தீன் பற்றிய இத்தகைய பரந்த ஒரு கண்ணோட்டம் ஏற்படுமாக இருந்தால் ஆரோக்கியமானதொரு சூழ்நிலை இஸ்லாமிய சமூகத்துக்குள் உருவாகும்.

இஸ்லாமிய இயக்கங்கள் மத்தியில் புரிந்துணர்வு ஏற்படும். இஸ்லாமிய இயக்கங்கள் மத்தியில் புரிந்துணர்வு ஏற்படாமல் இகாமதுத் தீன் பணி ஒருபோதும் வெற்றியளிக்கப்போவதில்லை.

தொகுப்பு: ஜெம்ஸித் அஸீஸ்

We have 18 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player