வணக்க வழிபாடுகள் தொடர்பானவை

Article Index
வணக்க வழிபாடுகள் தொடர்பானவை
பெண்ணின் உடம்பில் பட்டால் வுழு முறிதல்
நின்று கொண்டு சிறுநீர் கழித்தல்
மதி வெளிப்படல்
ஸ்கலிதமும் குளிப்பும்
அதானுக்குப் பதில் கூறல்
கழாத் தொழுகை
தொழுகையின் ஸுஜுதில் துஆ கேட்டல்
தொழுகையில் குனூத்
தொழுகையில் உமிழ்நீரை விழுங்குதல்
சில தொழுகைகளில் சத்தமாகவும் சிலவற்றில் மௌனமாகவும் ஓதுவதன் ரகசியம்
ஸஜ்தாக்கள் பற்றிய விபரம்
பெண்களுக்கு ஓர் ஆண் தொழுகை நடத்தல்
தஹஜ்ஜுத்துடைய நேரம்
ஜும்ஆவுக்கு முந்திய இரண்டு ரக்ஆத் ஸுன்னத் தொழுகை
ஜும்ஆவுக்குரிய எண்ணிக்கை
ஜும்ஆவும் லுஹர் தொழுகையும்
குத்பாவின் போது தொழுதல்
பெண்கள் பள்ளிவாசல் சென்று தொழுதல்
குல்லதைன்
துன்யாவுடைய விடயங்களை மஸ்ஜிதில் பேசுதல்
ஸக்காத்தும் தங்கத்தின் நிஸாபும்
ஸக்காத்தும் காலதாமதமும்
ஸக்காத்தை உடன் பிறப்புகளுக்கும் இனபந்துகளுக்கும் கொடுத்தல்
நோன்பைக் கழாச் செய்தல்
சிதைந்த உடலைக் குளிப்பாட்டல்
ஜனாஸாவைக் கொண்டு செல்லும் போது ஷஹாதா சொல்லுதல்
மஃமூம்கள் தொழுகையில் பாதிஹா ஸுராவை ஓதுதல்
அகீகா
மிருகங்களின் மலசலம்
அல்குர்ஆனை ஓதி கூலி வாங்குதல்
All Pages

 பெண்ணின் உடம்பில் பட்டால் வுழு முறிதல்

கேள்வி : வீட்டிலிருந்து வுழுவுடன் பள்ளிவாயலுக்குச் செல்லும் வழியில் ஒரு பெண்ணின் உடம்பில் எதிர்பாராத விதமாகப் பட்டுவிட்டால் அவருக்கு மீண்டும் வுழு செய்தல் கடமையாகுமா?

பதில் : ஷாபிஈ மத்ஹபின் படி அவர் மீண்டும் வுழு செய்தல் வேண்டும். திரையின்றி ஒரு பெண்ணைத் தொட்டாலும் வுழு முறியாது என்பதற்கு தகுந்த, உறுதியான ஆதாரங்கள் உண்டு. ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்: 'ரஸுல் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் என்னை முத்தமிட்டனர்.' பின்னர் கீழ்வருமாறு கூறினர்:

'நிச்சயமாக முத்தமிடுவது வுழுவையும் முறிக்காது. நோன்பையும் முறிக்காது.' (இஸ்ஹாக் பின் ராஹவைஹி, அல் பஸ்ஸார்) ஆயிஷா (ரலி) அறிவிக்கும் மேலும் ஓர் அறிவிப்பு வருமாறு:

'நபியவர்கள் தமது மனைவிமார்களுள் ஒருவரை முத்தமிட்டு விட்டு மீண்டும் வுழு செய்து கொள்ளாமலேயே தொழுகைக்காகச் சென்றார்கள்' (ஆதாரம்-அஹ்மத், திர்மிதி, நஸாயி, இப்னு மாஜா, அபூதாவூத்)

அவர்கள் அறிவிக்கும் இன்னுமோர் அறிவிப்பும் இங்கு குறிப்பிடத்தக்கது:

'நான் ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தூங்கிக் கொண்டிருந்தேன். எனது கால்கள் இரண்டும் (அவர்கள் தொழுது கொண்டிருந்த) கிப்லாவின் பக்கம் இருந்தன. எனவே, அவர்கள் ஸுஜுத் செய்யும் போது எனது காலைத் தொட்டு சாடை செய்வார்கள். நான் அப்போது எனது காலை மடித்துக்கொள்வேன்' (ஆதாரம் புகாரி, முஸ்லிம்)

இத்தகைய ஆதாரங்களை வைத்தே சில மத்ஹப்களும் முக்கிய சில இமாம்களும் பொதுவாக பெண்களைத் தொடுவது வுழுவை முறிக்காது என்ற கருத்தை கொண்டிருக்கின்றனர். ஆயினும், இச்சையோடு முத்த மிடுவது, தொடுவது வுழுவை முறிக்கும் என்ற கருத்தையுடைய இமாம்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நின்று கொண்டு சிறுநீர் கழித்தல்

கேள்வி : நீள் காற்சட்டை அணியும் போது நின்ற நிலையில் சிறு நீர் கழிக்க வேண்டியுள்ளது. இது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?

பதில் : நின்ற நிலையில் சிறுநீர் கழிப்பது இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் முறையற்ற, பண்பாடற்ற, அகௌரவமான ஒரு செயலாகக் கருதப்படுகின்றது. மேலும், நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும் போது தெறித்து உடல், உடை போன்றன அசுத்தமடையவும் இடமுண்டு.

'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்ற நிலையில் சிறுநீர் கழித்தார்கள் என எவரும் உங்களுக்கு அறிவித்தால், அதனை நீங்கள் நம்ப வேண்டாம். அன்னார் அமர்ந்த நிலையிலேயே சிறுநீர் கழிப்பவர்களாக இருந்தார்கள்' என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஆதாரம் புகாரி, முஸ்லிம்)

ஆயினும், ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் உட்பட இன்னும்; பல கிரந்தங்களிலும் பதிவாகியுள்ள ஒரு ஹதீஸில் ஹுதைபா(ரலி), நபி(ஸல்)அவர்கள் நின்றவாறு சிறுநீர் கழித்ததை தான் கண்;டதாகத் தெரிவித்துள்ளார். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தான் அறிந்து வைத்திருந்ததையே அறிவித்துள்ளார். அதற்கு மாற்றமாகவும் நபி (ஸல்) அவர்கள் நடந்திருக்கின்றார்கள் என்பது நபித்தோழர் ஹுதைபாவின் அறிவிப்பிலிருந்து தெளிவாகின்றது. இந்த வகையில் இரு அறிவிப்புகளுக்கிடையிலும் முரண்பாடு இருப்பதாகக் கூற முடியாது.

சிறுநீர் கழிப்பதன் ஒழுங்குபற்றி விளக்கவந்த இமாம் நவவி, 'அமர்ந்த நிலையில் சிறுநீர் கழிப்பது எனக்கு மிகவும் விருப்பமானது. அதனை நின்ற நிலையில் செய்வதும் ஆகுமானதே, இரண்டிற்கும் நபி வாழ்வில் ஆதாரங்களுண்டு என்கிறார்.

மதி வெளிப்படல்

கேள்வி : ஒருவருக்குச் சிறிதளவோ அல்லது அதிகமாகவோ 'மதி வெளியானால் அவருக்குக் குளிப்பு கடமையாகிவிடுமா? தொழுகை போன்ற இபாதத்களில் ஈடுபடுவதற்கு வுழு செய்தால் மாத்திரம் போதுமானதா? விளக்கம் தேவை.

பதில் : இந்திரியத்திற்கு முன்னர், சிற்றின்பத்தின் காரணமாக வெளியாகும் ஒருவகை நீரே மதி ஆகும். இது நஜீஸானது என்பது இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். ஆனால், 'மதி வெளியாகி அது உடம்பில் பட்டால் குளிக்க வேண்டிய அவசியம் இல்லை. மர்மஸ்தானத்தைக் கழுவிக் கொண்டால் போதுமானது. உடம்பில் பட்டாலும் கழுவிக்கொள்ள வேண்டும். மதி ஆடையில் பட்டால் கழுவ வேண்டியதில்லை. நீரைத் தெளித்துவிட்டால் போதுமானது. இது சிரமத்தைத் தவிர்ப்பதற்கு வழங்கப்பட்டுள்ள ஒரு சலுகையாகும்.

தொழுகை போன்ற வணக்கங்களை நிறைவேற்றுவதற்கு மேலே குறிப்பிட்ட விதத்தில் சுத்தம் செய்து விட்டு வுழு செய்து கொள்ள வேண்டும்;. குளிக்க வேண்டியதில்லை.

அலி (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்: 'எனக்கு அதிகம் 'மதி வெளிப்படுவதுண்டு. நான் நபி (ஸல்) அவர்களின் மகளைத் திருமணம் முடித்திருந்ததால், அன்னாரிடம் இது பற்றி கேட்டறியுமாறு ஒருவரைப் பணித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'உமது ஆண் உறுப்பைக் கழுவிக் கொண்டு வுழு செய்வீராக' என்றார்கள். (புகாரி)

மேலும் ஸஹ்ல் இப்னு ஹனீப் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்: 'நான் மதித் தொல்லையினால் பெரிதும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தேன். அதன் காரணமாக அதிகம் குளிப்பவனாகவும் இருந்தேன். இந்நிலை பற்றி றஸுலுல்லாஹ்விடம் நான் கூறிய போது அன்னார், 'நீர் வுழு செய்து கொண்டால் போதுமானது' என்றார்கள். 'ஆடையில் அது பட்டால் என்ன செய்வது?' என்று நான் கேட்டேன். அதற்கு, அன்னார் 'அது ஆடையில் பட்ட இடத்தில், படும் அளவுக்குக் கையில் நீரை எடுத்துத் தெளித்து விட்டால் போதுமானது' என்றார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)

 ஸ்கலிதமும் குளிப்பும்

கேள்வி : ஒருவருக்கு உடலுறவினாலன்றி வேறு வகைகளில் ஸ்கலிதமானால் அவருக்கு உடல் முழுவதும் குளித்தல் கடமையாகுமா? தலை நீங்கக் குளித்தால் போதுமாகாதா? தலையில் குளிப்பதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளும்படி ஒருவருக்கு வைத்தியர் எச்சரித்திருந்தால், அவர் மனைவியுடன் சேர்க்கையில் ஈடுபட்டபின் மேற்கண்டவாறு தலை நீங்கக் குளித்தால் போதுமானதா? விளக்கம் தரவும்.

பதில் : தலை உட்பட உடலில் அனைத்து உறுப்புக்களையும் நீரினால் கழுவுவதையே இஸ்லாமிய ஷரீஅத் 'அல்குஸ்லு (குளித்தல்) எனக் கூறுகிறது. ஒருவருக்கு உடலுறவினாலோ வேறு வழிகளில் இந்திரியம் வெளிப்பட்டால் அனைத்து உறுப்புகளும் நனையும்படி குளிப்பது கடமையாகும். இன்றேல் 'ஜனாபத் எனும் பெருந்தொடக்கு நீங்க மாட்டாது.

நம்பத்தகுந்த ஒரு மருத்துவர் குளிப்பதன் மூலம் பெரும் ஆபத்து ஏற்பட இடமுண்டு என ஒரு நோயாளியை எச்சரித்தால் குளிப்;பதற்குப் பதிலாக தயமமும் செய்து கொள்ள மார்க்கம் அவரை அனுமதிக்கின்றது.அதானுக்குப் பதில் கூறல்

கேள்வி : அதான் சொல்லப்படும் போது அதனைச் செவிமடுப்பவர் ஒவ்வொரு வசனத்திற்கும் எவ்வாறு பதில் சொல்ல வேண்டுமென்பதை விளக்குவீர்களா?

பதில் : முஅத்தின் கூறுகின்ற ஒவ்வொரு வசனத்தையும் திருப்பிக் கூறல் வேண்டும். 'ஹய்ய அலஸ்ஸலாஹ்', 'ஹய்ய அலல் பலாஹ்;' என்ற இரு வசனங்கள் கூறப்படும்போது மாத்திரம் 'லாஹவ்ல வலா குவத்த இல்லா பில்லாஹ்' என்று சொல்ல வேண்டும்.
'நீங்கள் அதான் ஒலியைச் செவிமடுத்தால் முஅத்தின் சொல்வது போன்று சொல்லுங்கள்' என்பது நபி வாக்காகும்.

மேலும் ஒரு நபி மொழி அதான் சொல்லக் கேட்பவர் அதற்கு எவ்வாறு பதில் சொல்ல வேண்டுமென்பதை விளக்கமாகக் கூறுகிறது. அது பின்வருமாறு:

'முஅத்தின், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் எனக் கூறும் போது நீங்களும் அல்லாஹுஅக்பர், அல்லாஹு அக்பர் எனச் சொல்ல வேண்டும். அவர் 'அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்' எனக் கூறும் போது நீங்களும் 'அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்' எனக் கூற வேண்டும். அவர் 'அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்' எனக் கூறும் போது நீங்களும் 'அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்' எனக் கூற வேண்டும். அவர் 'ஹய்ய அலஸ் ஸலாஹ்' எனக் கூறும்போது நீங்கள் 'லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ்' எனக் கூறல் வேண்டும். அவர் 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' எனக்கூறும்போது நீங்கள் 'அல்லாஹுஅக்பர், அல்லாஹுஅக்பர்' எனக் கூறல் வேண்டும். அவர் 'லாஇலாஹ இல்லல்லலாஹ்' என்று கூறும் போது நீங்களும் 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்று கூறல் வேண்டும். இவ்வாறு யார் தனது உள்ளத்தினால் கூறுகின்றாரோ அவர் சுவர்க்கம் நுழைவார்.' ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூத் அறிவிப்பவர் : உமர் (ரலி)

மேலே கூறப்பட்ட முறையில் அதானுக்குப் பதில் சொல்வது ஸுன்னத்தாகும். வுழுவுடன் இருப்பவர், வுழு இன்றி இருப்பவர், முழுக்குடன் இருப்பவர், ஹைழ் உடன் இருக்கும் பெண், பெரியவர், சிறியவர் உட்பட அனைவரும் அதானுக்குப் பதில் சொல்வது ஸுன்னத்தாகும். ஆயினும் தொழுகையில் இருப்பவர், உடலுறவில் ஈடுபட்டிருப்பவர் ஆகியோர் அதானுக்குப் பதில் சொல்லக்கூடாது. இத்தகையோர் குறித்த தம் கருமத்தை முடித்துக்கொண்டதன் பின்னர் மொத்தமாக பதில் சொல்லலாம்.

படித்தல், குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல் போன்ற விடயங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் அதான்; ஒலியைக் கேட்டால் உடனே அவற்றை நிறுத்தி விட்டு அதானுக்குப் பதில்கூற வேண்டும்.கழாத் தொழுகை

கேள்வி: ஐவேளைத் தொழுகையில் கழா தொழுகையுண்டா? அதை எப்படிச் செய்வது? கழாத் தொழாவிட்டால் குற்றமா? விளக்கம் தேவை

பதில் : மறதி, தூக்கம் ஆகிய இரண்டின் காரணத்தினால் ஒரு தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றத் தவறியவர் அதனைக் கழாச் செய்ய வேண்டும் எனும் விடயத்தில் உலமாக்கள் கருத்தொற்றுமை கொண்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக 'ஒருவர் ஒரு தொழுகையை மறந்து விட்டால் அல்லது தூக்கத்தின் காரணமாக விட்டால், ஞாபகம் வந்தவுடன் அதனை நிறைவேற்றல் வேண்டும் எனும் நபிமொழி கொள்ளப்படுக்கின்றது. மயக்கத்தில் இருந்தவரைப் பொறுத்த வரையில் மயக்க நேரத்தில் விடுபட்ட தொழுகையை அவர் கழாச் செய்ய வேண்டியதில்லை. இப்னு உமர் (ரலி) ஒருமுறை மயக்கத்திலிருந்தார். அதனால் ஒரு நேரத்தொழுகையை அவரால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. எனினும், அவர் அதனை மயக்கம் தெளிந்த பின்னரும் கழாச் செய்யவில்லை என நாபிஃ (ரலி) கூறுகின்றார். தாவூத், ஸுஹ்ரி, அல்ஹஸனுல் பஸரி, முஹம்மதிப்னு ஸீரீன் ஆகியோரும் மயக்கத்திலிருந்ததனால் தொழுகையை விட்டவர் அதனைப் பின்னர் கழாச்செய்ய வேண்டியதில்லை என்ற கருத்தையே கொண்டுள்ளனர்.

ஆனால் மேற்குறிப்பிட்ட காரணங்களின்றி வேண்டுமென்றே ஒரு தொழுகையை விட்டவர் அதனைக் கழாச் செய்ய வேண்டுமா என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. வேண்டுமென்றே தொழுகையை விட்டவர் பாவியாவார்;. அவர் விட்ட தொழுகையைக் கழாச் செய்வது அவர் மீது கடமையாகும் என்பதே ஷாபிஈ, ஹனபீ, மாலிகீ, ஹன்பலீ அகிய நான்கு மத்ஹபுகளினதும் கருத்தாகும். இமாம்களான இப்னு தைமியா, இப்னு ஹஸ்ம் போன்றோர் மனமுரண்டாகத் தொழுகையை விட்டவர் அதனைக் கழாச் செய்ய முடியாது என்றும், தொழுகையை விட்ட பாவத்துக்காக தௌபா செய்வதும் அதிகமான ஸுன்னத்தான தொழுகைகளைத் தொழுவதுமே முறையாகும் என்றும் கூறுகின்றனர். அவர்கள் தமது கருத்துக்குச் சார்பாகப் பல ஆதாரங்களையும் காட்டியுள்ளனர். குறிப்பாக இமாம் இப்னு ஹஸ்ம் இது பற்றித் தனது அல்-முஹல்லா எனும் நூலில் மிக விரிவாக எழுதியுள்ளார். குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டிலிருந்தும் மேற்கோள் காட்டியும் தர்க்க ரீதியாகவும் அவர் இக்கருத்தை நிறுவ முயன்றுள்ளார்.தொழுகையின் ஸுஜுதில் துஆ கேட்டல்

கேள்வி : தொழுகையின் ஸுஜுதில் கேட்கப்படும் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுமென்று கூறப்படுகின்றது. எனவே 'றப்பி ஸித்னீ இல்மா' போன்ற துஆக்களை ஓதலாமா?

பதில் : ஸுஜுதில் நாம் விரும்பிய பிரார்த்தனைகளை அல்லாஹ்விடம் கேட்கலாம். அது 'முஸ்தஹப் வரவேற்கத்தக்கதாகும். இதற்கு கீழ்வரும் நபி மொழி ஆதாரமாக கொள்ளப்படுகின்றது. 'உங்களில் ஒருவர் ஸுஜுதில் இருக்கும் நிலையில்தான், தனது இறைவனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார். எனவே, அதில் பிரார்த்தனைகளை அதிகரித்துக் கொள்ளுங்கள்' (ஆதாரம்-முஸ்லிம்) நபியவர்கள் ஸுஜுதில் ஓதிய துஆக்கள், பல ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளன. நாமும் அவற்றை ஓதுவதே சாலச் சிறந்ததாகும்.
தொழுகையில் குனூத்

கேள்வி : அசாதாரண சூழ்நிலைகள் நிலவும் சந்தர்ப்பங்களில் அவற்றின் விளைவுகளிலிருந்து பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ள ஐவேளை பர்ளுத் தொழுகைகளில் குனூத் ஓத ரஸுலுல்லாஹ்வின் ஸுன்னாவில் ஆதாரமுண்டா?

சுபஹ் தவிர மற்றைய பர்ளுத் தொழுகைகளில் குனூத் ஓதுவதினால் தொழுகையில் பாதிப்பு (முறிவு) நிகழாதா?

இக்குனூத்தின் போது ஒரு ஷாபிஈயை பின்பற்றித் தொழும் ஹனபியின் நிலை என்ன?

பதில் : நீங்கள் குறிப்பிட்டுள்ள குனூத் அமைப்பு இஸ்லாமிய சட்ட வழக்கில் குனூதுன்னவாஸில் என அழைக்கப்படுகிறது. கஷ்ட துன்பங்கள், அனர்தங்களின் போது ஓதப்படுகின்ற இந்தக் குனூத் சட்டபூர்வமானதென்பது இமாம்களின் கருத்தாகும். ஹனபியாக்கள், ஷாபியாக்கள் இரு தரப்பினரும் இக்கருத்தில் ஒத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இக்குனூத்தமைப்பு சட்ட ரீதியானதென்பதற்கு ஸுன்னாவிலும் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.

பனூஸுலைமெனும் கோத்திரத்தைச் சேர்ந்த ரிஃல்;, தக்வான், உஸையா என்ற பிரிவினர் தங்களுக்குப் போதனை செய்வதற்கு நபித் தோழர்களை அனுப்பி வைக்குமாறு நபியவர்களைக் கேட்டுக்கொண்டனர். நபியவர்களும் இக்கோத்திரத்தவரின் வேண்டுகோளை ஏற்று எழுபது ஸஹாபாக்களை அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். ஆனால் நயவஞ்சகர்களாகவிருந்த அவர்களோ நபித்தோழர்களைப் படுகொலை செய்து விட்டனர். இதனை அறிந்த நபி (ஸல்) அவர்கள் இப்பிரிவினருக்கு எதிராகத் தொடர்ந்து ஒரு மாதகாலமாக ஐங்காலத் தொழுகைகளில் குனூத் ஓதினார்கள். பின்னால் நின்று தொழுதோர் அதற்கு ஆமீன் கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (றழி), ஆதாரம்- புகாரி, அபூதாவூத், அஹ்மத்)

அபூஹுரைரா (றழி) அவர்கள் அறிவிக்கும் மேலும் ஒரு ஹதீஸ் கீழ் வருமாறு:

'ரஸுலுல்லாஹ் அவர்கள் ஒருவருக்கு சார்பாகவோ அல்லது எதிராகவோ பிரார்த்தனை செய்ய விரும்பினால் ருகூஉக்குப் பின்னால் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள்.' (ஆதாரம்: அஹ்மத், புகாரி)

எனவே ஸுப்ஹுத் தொழுகையில் வழமையாக ஓதப்படுகின்ற குனூத் விடயத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள், நீங்கள் கேட்கும் குனூத்துன்னவாஸில் தொடர்பாக இல்லை என்பதைக் கருத்திற் கொள்ளவும்.

 


 

 

தொழுகையில் உமிழ்நீரை விழுங்குதல்


கேள்வி: தொழுகையில் இருக்கும்போது உமிழ்நீர் சுரந்தால் அதை விழுங்கலாமா? விளக்கம் தரவும்.

பதில்: தொழும்போது வாயில் சுரக்கும் உமிழ்நீரை விழுங்குவதில் தவறில்லை. தொழுகையில் இருக்கும் போது வேண்டுமென்றே உண்பதும் பருகுவதுமே தொழுகையை முறிக்கும். இமாம் இப்னுல் முன்திர் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: பர்ளான தொழுகையில் வேண்டுமென்றே உண்பவரினதோ அல்லது பருகியவரினதோ தொழுகை முறிந்து விடும்;. அவர் அத்தொழுகையை மீட்டி நிறைவேற்ற வேண்டும் என்பது உலமாக்களின் ஏகோபித்த முடிவாகும். ஸுன்னத்தான தொழுகையைப் பொறுத்த வரையில், அதிலும் இச்சட்டமே செல்லுபடியாகும்;. ஏனெனில், 'பர்ளை முறிக்கக்கூடியது ஸுன்னத்தானதையும் முறிக்கும் என்பது பெரும்பாலான உலமாக்களின் அபிப்பிராயமாகும்.
சில தொழுகைகளில் சத்தமாகவும் சிலவற்றில் மௌனமாகவும் ஓதுவதன் ரகசியம்

கேள்வி : ஐங்காலத் தொழுகைகளில் ஸுபஹ், மஃரிப், இஷா ஆகியவற்றில் இமாம் ஸூறாக்களைச் சத்தமிட்டு ஓதுகிறார். ஆனால், ளுஹர், அஸர் ஆகிய இரு நேரத் தொழுகைகளிலும் அவ்வாறு சத்தமிட்டு ஓதுவதில்லை. அத்துடன் ஜும்ஆத் தொழுகையின் போதும் ஸூறாக்கள் இமாமினால் சத்தமிட்டே ஓதப்படுகின்றன. இவற்றுக்கான காரணம் யாது? விளக்கம் தரவும்.

பதில் : நபி (ஸல்) அவர்கள் ஆரம்பகாலப்பிரிவில் அனைத்துத் தொழுகைளிலும் ஸூறாக்களைச் சப்தமாகவே ஓதி வந்தார்கள். ஆயினும், முஷ்ரிக்கீன்களோ தொழுகைகளையும் ஓதல்களையும் குழப்பும் விதத்தில் நடக்க ஆரம்பித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஓத ஆரம்பிக்கும் போது அவர்கள் உரத்த குரலில் கவிதைகள் பாடவும், மோசமான வார்த்தைகளைப் பேசவும் முற்பட்டதுடன் அல்குர்ஆனையும் அதனை இறக்கிய இறைவனையும் அது இறக்கப்பட்ட நபியையும் ஏசவும் தூற்றவும் ஆரம்பித்தார்கள். இச்சந்தர்ப்பத்திலேயே கீழ்வரும் குர்ஆன் வசனம் இறங்கியது, 'நபியே, உம்முடைய தொழுகையில் நீர் மிக்க சத்தமிட்டும் ஓதாதீர், அதிக மெதுவாகவும் ஓதாதீர்' (17:110) இதன் பின்னரே நபியவர்கள் ளுஹர், அஸர் ஆகிய தொழுகைகளில் எதிரிகளின் அட்டகாசங்களைத் தவிர்க்கும் விதத்தில் சத்தமிடாது மௌனமாக ஓதலானார்கள். மஃரிப் தொழுகைக்குரிய நேரத்தைப் பொறுத்தவரையில், அது எதிரிகள் உணவு உட்கொள்ளும் நேரமாகவும், ஸுபஹ், இஷா ஆகியவற்றுக்குரிய நேரங்கள் அவர்கள் தூங்கும் நேரங்களாகவும் இருந்தமையினால் இத்தொழுகைகளில் நபியவர்கள் உரத்த குரலில் ஓதலானார்கள்.

ஜும்ஆத் தொழுகையும், இரு பெருநாள் தொழுகையும் அவை மதீனாவிலே ஆரம்பித்து வைக்கப்பட்டமையினால் அவற்றில் ஸுராக்கள் சத்தமாகவே ஓதப்பட்டு வரலாயின.

சில அறிஞர்களின் கருத்துப்படி ளுஹரிலும் அஸரிலும் தாழ்ந்த குரலில் ஸூறாக்கள் ஓதப்படுவதன் இரகசியம், அவை நிறைவேற்றப்படும் நேரம் சத்தமும், சந்தடியும் உள்ளதாக இருப்பதினால் ஆகும். ஏனைய தொழுகைகளின் நேரங்கள் அமைதியானதாக இருப்பதனால், அவ்வேளைகளில் சத்தமாக ஓதுவது செவிமடுப்போருக்குப் படிப்பினை பெறவும் நல்லுணர்ச்சி பெறவும் துணைபுரியும்.

'பகற் காலத் தொழுகைகளைச் சத்தமாக அமைத்துக்கொள்ளாதீர், இரவு காலத் தொழுகைகளை அமைதியாக அமைத்துக்கொள்ளாதீர்' என்ற இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்கள் ஒரு சக்தியாக மாறி, எவரையிட்டும் அஞ்ச வேண்டிய அவசியமற்றவர்களாக ஆகிய பின்னரும் நபியவர்கள் குறித்த அமைப்பைத் தொடர்ந்தும் கடைப்பிடித்து வந்தமை, எங்களை இரண்டாவதாகக் கூறப்பட்ட கருத்தை மிகப் பொருத்தமானதாகக் கருத வைக்கின்றது.

எப்படியாயினும், வணக்க, வழிபாடுகளில் காரணங்களையும், நியாயங்களையும் தேடுவதனை விடுத்து, ஸுன்னாவைக் கருத்திற் கொள்வதே முறையாகும் என்பது மாத்திரமன்றி அதுவே சட்ட விதியுமாகும்.
ஸஜ்தாக்கள் பற்றிய விபரம்

கேள்வி: ஸஜ்தா திலாவத், ஸஜ்தா ஷுக்ர், ஸஜ்தா ஸஹ்வு ஆகிய ஸஜ்தாக்கள் பற்றிப் பூரண விளக்கம் ஒன்றை எதிர்பார்க்கின்றேன்.

பதில்: அல்குர்ஆனில் ஸஜ்தாவுடைய வசனங்கள் பதினைந்து காணப்படுகின்றன. அவற்றிலொன்றை ஓதியவரும், ஓதக் கேட்டவரும் தக்பீர் சொல்லி ஒரு ஸுஜுத் செய்வது ஸுன்னத்தாகும். இதனையே ஸஜ்தா திலாவத் என வழங்குகின்றோம். இதில் தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்), ஸலாம் ஆகிய இரண்டும் இடம் பெறுவதில்லை. ஸுஜுது செய்யும் போது தக்பீர் சொல்வது போன்றே அதிலிருந்து எழும்போது அல்லாஹு அக்பர் எனக் கூறவேண்டும். 'ஸஜ்தாவுடைய வசனமொன்றை நீர் ஓதினால் தக்பீர் கூறி ஸுஜுது செய்ய வேண்டும். அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் சொல்ல வேண்டும்' என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) கூறியுள்ளார்.

தொழுகைக்குரிய அனைத்து நிபந்தனைகளும் ஸஜ்தா திலாவத்திற்குரிய நிபந்தனைகளாகக் கொள்ளப்படுகின்றன. இந்த வகையில் வுழுவுடன் இருப்பதுவும், கிப்லாவை முன்னோக்குவதும் அவ்ரத்தை மறைத்திருப்பதுவும் குறிப்பிடத்தக்க நிபந்தனைகளாகும்.

மேற்கண்ட ஸஜ்தாவில் விரும்பிய துஆக்களை ஓதலாம். வழமையாக ஸுஜுதில் ஓதுகின்ற 'ஸுப்ஹான ரப்பியல் அஃலா' என்பதனையும் 'ஸஜத வஜ்ஹிய லில்லதீ கலகஹு வ ஷக்க ஸம்அஹு வ பஸரஹு பிஹவ்லிஹீ பி குவ்வத்திஹீ வ தபாரகள்ளாஹு அஹ்ஸனுல் காலிகீன்' என்பதனையும் ஓதுவது சிறந்ததாகும்.

தொழுகையில் ஸஜ்தாவுடைய வசனங்களை ஓதினால் இமாமும் மஃமூமும் இருவரும் ஸஜ்தா செய்யலாம்.

ஸஜ்தாவுடைய ஒரு வசனத்தைப் பலமுறை ஓதும் போதும் அத்தகைய ஒரு வசனத்தைத் தொடர்ந்து பல தடவைகள் செவிமடுக்கும் போதும் ஒரு ஸஜ்தா செய்வது போதுமானதாகும்.

தனக்குக் கிட்டிய ஒரு பாக்கியத்துக்காகவோ அல்லது தன்னை விட்டகன்ற ஓர் அனர்த்;தத்துக்காகவோ அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்து ஒரு ஸஜ்தா செய்வது முஸ்தஹப் ஆகும். இத்தகைய ஸஜ்தாவே ஸஜ்ததுஷ்ஷுக்ர்; என வழங்கப்படுகிறது. 'நபியவர்கள் தமக்கு மகிழ்வூட்டும் ஒரு நிகழ்ச்சி இடம் பெற்றாலும் ஒரு சுப செய்தி கூறப்பெற்றாலும் அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிப்பான் வேண்டி ஸுஜுதில் விழுபவர்களாய் இருந்தார்கள்' என அபூபக்கர் (ரலி) அறிவிக்கிறார். (ஆதாரம் : அபூதாவூத், இப்னுமாஜா , திர்மிதி)

தொழுகையில் ஏற்படும் மறதிக்காகச் செய்யும் ஸுஜுத் ஸஜ்ததுஸ் ஸஹ்வ் எனப்படும். இது இரண்டு ஸுஜுதுகளைக் கொண்டது. இதனை ஸலாம் கொடுக்க முன்னரோ பின்னரோ செய்யலாம்.

தொழுகையை முடிக்க முன்னர் ஸலாம் கொடுத்தல், ரகஅத்துக்களைக் கூட்டித் தொழுதல், முதலாம் அத்தஹிய்யாத்தை விடல், தொழுகையில் ஏதாவது ஒரு ஸுன்னத் விடுபடல் ஆகிய சந்தர்ப்பங்களிலும் தொழுகையில் ஏதும் சந்தேகம் ஏற்படும் வேளைகளிலும் ஸஜ்தா ஸஹ்வு செய்தல் வேண்டும். இந்த ஸஜ்தாவைச் செய்யாது விடுவதனால் தொழுகை செல்லுபடியற்றதாக ஆகமாட்டாது என்பதனைக் கருத்தில் கொள்க.
பெண்களுக்கு ஓர் ஆண் தொழுகை நடத்தல்

கேள்வி: ஓர் ஆண் பெண்களுக்கு மாத்திரம் தனியாகத் தொழுகை நடத்தலாமா? ஒரு தந்தை தனது வயது வந்த பெண் மக்கள், மனைவி, தாய் போன்றோருக்குத் திரையின்றித் தொழுகை நடாத்தலாமா? விளக்கம் தேவை.

பதில்: ஓர் ஆண் பெண்களுக்கு மாத்திரம் இமாமாக நின்று தொழுகை நடத்துவதற்கு ஷரீஅத்தில் தடை ஏதும் இல்லை. ஒருபோது உபை இப்னு கஃப் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அல்லாஹ்வின் தூதரே நேற்றிரவு நான் ஒரு வேலை செய்தேன்' என்றார். அதற்கு அன்னார் 'அது என்ன?' என்று வினவவே, உபை இப்னு கஃப் 'வீட்டில் என்னுடனிருக்கும் பெண்கள், 'நீர் ஓதக் கூடியவராக இருக்கின்றீர். நாங்களோ ஓதக்கூடியவர்களல்லர். ஆகவே இமாமாக நின்று எங்களுக்குத் தொழுகை நடாத்துவீராக' என்று என்னிடம் கூறினர். நான் (அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க) எட்டு ரக்அத்துக்களைத் தொழுவித்து வித்ரையும் தொழுவித்தேன்' என்றார். அதற்கு நபியவர்கள் எதுவும் கூறாது மௌனம் சாதித்தார்கள். 'நபியவர்களின் மௌனத்தை நாம் அங்கீகாரமாகக் கருதினோம்' என்றும் உபை இப்னு கஃப் (ரழி) கூறுகிறார்.
இதிலிருந்து ஓர் ஆண் தனியாக பெண்களுக்கு மாத்திரம் தொழுகை நடாத்தலாம் என்பது தெரிகின்றது. இத்தகைய சந்தர்ப்பங்களில் அவசியம் திரையிட்டுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. ஒருவகையில் திரையிட்டுக் கொள்வது பாதுகாப்பானதே.
தஹஜ்ஜுத்துடைய நேரம்

கேள்வி: 'தஹஜ்ஜுத் தொழுகைக்குரிய நேரம் என்ன? தூக்கத்தில் இருந்து விழித்துத் தொழும் தொழுகையே தஹஜ்ஜுத் என அறிகின்றோம். இதன் உண்மை யாது? தெளிவான விளக்கமொன்றை எதிர்பார்க்கின்றேன்.

பதில்: இரவில் நின்று வணங்கும் தொழுகையே கியாமுல் லைல் என்றும்'தஹஜ்ஜுத் என்றும் கூறப்படுகின்றது. இதற்குக் கண்டிப்பாகத் தூங்கி எழ வேண்டும் என்பது நிபந்தனையல்ல. இஷாத் தொழுகையின் பின்னர் இரவின் ஆரம்பத்திலோ, நடுப்பகுதியிலோ அல்லது இறுதிப் பகுதியிலோ இரவு நேரத்தொழுகையை நிறைவேற்றலாம்.

'நபி (ஸல்) அவர்களின் தஹஜ்ஜுத்துக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்கவில்லை. அவர்கள் தமது வசதியையும் சௌகரியத்தையும் பொறுத்து அதனை அமைத்துக் கொண்டார்கள்' என்கிறார் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்).

ஆயினும், தஹஜ்ஜுத்தை இரவின் மூன்றாம் பகுதியில் தொழுவது மிகச் சிறப்புடையதாகும். இதற்குப் பல ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

'எங்களது இறைவன் ஒவ்வொரு நாள் இரவிலும் அதன் மூன்றாம் பகுதியில் கீழ் வானத்திற்கு இறங்கி, 'என்னை அழைப்பவர் இருக்கின்றாரா? நான் அவருக்குப் பதில் அளிக்கின்றேன். என்னிடம் கேட்பவர் இருக்கின்றாரா? நான் அவருக்குக் கொடுக்கின்றேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் இருக்கின்றாரா? நான் அவருக்கு மன்னிப்பு அளிக்கின்றேன்' என்று கூறுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைறா (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

'அடியான் ரப்புக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது இரவின் கடைசிப்பகுதியிலாகும். எனவே, அவ்வேளையில் அல்லாஹ்வை திக்ர் செய்பவர்களில் ஒருவராக உம்மால் இருக்க முடியுமாயின் அப்படிச் செய்வீராக' என்று தனக்கு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் இப்னு அப்ஸா (றலி) குறிப்பிடுகின்றார். (அல்ஹாகிம், அத்திர்மிதி, அந்நஸாஈ)

அபூமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் அபூதர் (றழி) அவர்களிடம் 'கியாமுல் லைலில் சிறந்தது எது?' என்று வினவினார். அதற்கு அவர், 'நீர் என்னிடம் இதனைக் கேட்பது போலவே நானும் இது பற்றி ரஸுலுல்லாஹ்விடம் வினவினேன். அதற்கு அவர்கள் 'நடுநிசியின் மீதமுள்ள பகுதியாகும். இதனைச் சிலரே செய்பவர்களாக இருப்பர்;' எனக்கூறினார். (அஹ்மத்)

மேலும் தஹஜ்ஜுத் தொழுகைக்கு வரையறுக்கப்பட்ட ரக்அத்துக்கள் இல்லை என்பதனையும் கவனத்திற் கொள்க.ஜும்ஆவுக்கு முந்திய இரண்டு ரக்ஆத் ஸுன்னத் தொழுகை

கேள்வி: ஜும்மா தினத்தில் கதீப் குத்பாப் பிரசங்கம் செய்யத் தொடங்க முன் நம்நாட்டில் பெரும்பாலான மஸ்ஜிதுகளில் ஜும்மாவுக்கான ஸுன்னத் என்று இரண்டு ரக்அத்துக்கள் தொழப்படுகின்றன. இத்தகையதொரு தொழுகை இருக்கின்றதா? விளக்கம் தரவும்.

பதில்: சில இஸ்லாமிய அறிஞர்கள் ஜும்மாத் தொழுகைக்கு முந்திய ஸுன்னத் என்றவகையில் இரு ரக்அத்துகள் உண்டு எனக் கூறியிருப்பினும் இத்தொழுகைக்கு ஸஹீஹான ஹதீஸ்களை ஆதாரமாய்க் காண முடியவில்லை. ஜும்மா தொடர்பான ஹதீஸ்களை நோக்குகின்றபோது, ஜும்ஆவுக்கான அதான், குத்பா, தொழுகை ஆகிய மூன்றும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்தேர்ச்சியாக நடைபெற்றிருப்பதையே காண முடிகிறது. அங்கே இரு ரக்அத்துகள் ஸுன்னத்தாகத் தொழுவதற்கு நேரமோ, சந்தர்ப்பமோ இருந்ததாகத் தெரியவில்லை. இதனை இமாம் அல்-இறாகீ விளக்குகையில் 'ரஸுலுல்லாஹ் ஜும்ஆத் தொழுகைக்கு முன்னர் தொழுதிருக்கிறார்கள் என்பதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. ஏனெனில், அவர்கள் ஜும்ஆவுக்காக மஸ்ஜிதுக்கு வந்தவுடன் அதான் சொல்லப்பட்டு அதனைத் தொடர்ந்து குத்பாப் பிரசங்கத்தைச் செய்திருக்கிறார்கள் என்றே தெரிய வருகிறது' என்கிறார். (நூல், நைலுல் ஒளதார்-பாகம் 3, பக்-216) இதே கருத்தை இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானியும் கொண்டிருக்கிறார். (பக்ஹுல் பாரீ, பாகம் 2 பக்-341) இமாம் இப்னுல் கையிம் கீழ்வருமாறு கூறுகிறார்:

'பிலால் (ரழி) அவர்கள் (ஜும்ஆவுக்காக) அதான் கூறி முடிவுற்றதும், அனைவரும் இரண்டு ரக்அத்துக்ள் தொழுதார்கள் என நினைப்பவர் ஸுன்னாவை அறியாதவரே' (பார்க்க: ஸாதுல் முஆத்)

'இதனால்தான் பிழையான ஸுன்னத் என விளங்கப்பட்ட இத் தொழுகையைப் பற்றி இமாம் ஷாபிஈயின் 'உம்மு'விலோ இமாம் அஹ்மதின் 'அல்-மஸாயில்'லிலோ நான் அறிந்தவரை ஏனைய ஆரம்பகால இமாம்களின் நூல்களிலோ எத்தகைய குறிப்பும் இடம்பெறவில்லை' என்கிறார் இமாம் அல்-மனாவி, (பார்க்க- பைளுள் கதீர்)

ஜும்ஆவுடைய பிந்திய ஸுன்னத் தொழுகையைப் பொறுத்த வரையில், அதற்குத் தெளிவான, ஸஹீஹான ஆதாரங்களுண்டு. உதாரணத்திற்கு கீழ்வரும் நபிமொழியைக் குறிப்பிடலாம். 'உங்களில் ஒருவர் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றிவிட்டால் அதன்பின் நான்கு ரக்அத்துகள் தொழட்டும்.' (ஆதாரம்-முஸ்லிம், நஸாயீ, திர்மிதி)

ஜும்ஆத் தினத்தில் மஸ்ஜிதுக்கு வந்தவர் 'நபில் முத்லக்' எனும் நேரம், ரக்அத்துகள் வரையறுக்கப்படாத ஸுன்னத் தொழுகையை நிறைவேற்றலாம் என்பதனைக் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.ஜும்ஆவுக்குரிய எண்ணிக்கை

கேள்வி : ஜும்ஆ நிறைவேறுவதற்குரிய நிபந்தனைகளில் ஜும்ஆவுக்குக் குறைந்தது நாற்பது பேர் சமூகமளித்திருத்தல் வேண்டும் என்பதும் ஒன்றாகுமா? குறித்த தொகையினர் இல்லாதபோது ஜும்ஆத் தொழுகையுடன் லுஹர் தொழுகையையும் நிறைவேற்ற வேண்டுமா? விளக்கம் தேவை.

பதில்: ஜும்ஆ நிறைவேறுவதற்குரிய நிபந்தனைகளில், அது ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும். இதில் அறிஞர்கள் மத்தியில் அபிப்பிராயபேதம் இல்லை. தாரிக் இப்னு ஷிஹாப் (ரலி) நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கீழ்வருமாறு அறிவிக்கிறார்: 'ஜும்ஆவானது ஒவ்வொரு முஸ்லிமும் ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டிய ஒரு கடமையாகும்.'

ஆயினும், ஜும்ஆ நிறைவேறுவதற்கு அவசியமான தொகையினர் விடயத்தில் இமாம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. எண்ணிக்கையைக் குறிப்பிடுவதில் வித்தியாசமான பதினைந்து கருத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றை இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) தனது பத்ஹுல் பாரியில் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்துக்களில் இரண்டு பேரைக் கொண்டும் ஜும்ஆ நிறைவேற்ற முடியும் என்பதே பலமானதாகக் கொள்ளப்பட முடிகிறது. 'இருவரும், அதற்கு மேற்பட்டோரும் ஒரு ஜமாஅத்தாகக் கொள்ளப்படும்' எனும் நபி மொழி இக்கருத்துக்குரிய தெளிவான ஆதாரமாகும். இமாம் ஷவ்கானி கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: இருவரைக் கொண்டு ஏனைய தொழுகைகள் நிறைவேறும் என்பது இஜ்மாவான முடிவாகும். ஜும்ஆவும் ஒரு தொழுகையே. ஏனைய தொழுகைகளை விட்டும் முரண்படும் விதத்தில் அவற்றிற்கு இல்லாத ஒரு பிரத்தியேகமான சட்டம்-தக்க ஆதாரம் இல்லாத போது- இருத்தல் முடியாது. உண்மையில் ஜும்ஆவில், பிறதொழுகைகளில் கவனத்தில் கொள்ளப்படும் தொகையை விட அதிகமான ஓர் எண்ணிக்கையைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை.

'ஜும்ஆவில் கலந்து கொள்ள வேண்டியவர்களின் தொகைபற்றிக் குறிப்பிடும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் இல்லை' என இமாம் அப்துல் ஹக் கூறுகிறார். இக்கருத்தை இமாம் ஸுயூத்தியும் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தையே இமாம்களான அத்தபரி, அன்னகயீ, இப்னு ஹஸ்ம் போன்றோரும் கொண்டுள்ளனர்.ஜும்ஆவும் லுஹர் தொழுகையும்

கேள்வி: ஜும்ஆத் தொழுகையில் இரண்டாம் ரக்அத்தில் அத்தஹிய்யாத்தில் இமாம் இருக்கும் போது, தொழுகையில் வந்து சேர்ந்த ஒருவரின் நிலை என்ன? அவர் ஜும்ஆவுக்கு நிய்யத் வைத்து ளுஹர் தொழ வேண்டுமா? அல்லது ளுஹருக்கு நிய்யத் வைத்து ஜும்ஆ தொழுவதா? ஆதாரங்களுடன் விளக்கம் தருக.

பதில்: ஒருவர் ஜும்ஆத் தொழுகையில் முதல் ரக்அத்தைத் தவற விட்டபோதிலும், இரண்டாம் ரக்அத்தை அடைந்து கொண்டால் ஜும்ஆவை முழுமையாகப் பெற்றுக்கொண்டவராக கருதப்படுவார். எனவே அவர் தனது தொழுகையைப் பூரணப்படுத்துவதற்காக மேலும் ஒரு ரக்அத் மாத்திரம் தொழுதால் போதுமானதாகும். இதுவே பெரும்பாலான அறிஞர்களின் அபிப்பிராயமாகும். இக்கருத்துக்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸ்கள் காணப்படுகின்றன.

'ஒருவர் ஜும்ஆத் தொழுகையின் ஒரு ரக்அத்தை (இமாமுடன்) அடைந்து கொண்டால், அவர் அத்துடன் மற்றுமொரு ரக்அத்தைச் சேர்த்துக் கொள்ளட்டும். (அதனைக் கொண்டு) அவரது தொழுகை சம்பூரணமாகிவிடும்.' (நஸாஈ, இப்னு மாஜா, தாரகுத்னி, அறிவிப்பாளர், இப்னு உமர் (றழி)

'தொழுகையின் ஒரு ரக்கஅத்தைப் பெற்றுக்கொண்டவர் அதனை முழுமையாக அடைந்து கொண்டவராவார்.' (புகாரி, முஸ்லிம்)

ஆனால் ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை விடக் குறைந்த அளவைப் பெற்றவர் (இரண்டாம் ரக்அத்தில் இமாம் ருகூஇலிருந்து எழுந்ததன் பின்னர் வந்து சேர்ந்து கொண்டவர்) ஜும்ஆத் தொழுகையை அடைந்து கொண்டவர் அல்ல. அவர் தனது தொழுகையை ளுஹர்த்தொழுகை என்ற அடிப்படையில் நான்கு ரக்கஅத்துக்களாகத் தொழ வேண்டும். நிய்யத்தைப் பொறுத்த வரையில் ஜும்ஆவுக்கு நிய்யத் வைத்தல் வேண்டும். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி) கூறுகின்றார்:

'எவர் ஜும்ஆவின் ஒரு ரக்அத்தைப் பெற்றுக்கொள்கின்றாரோ, அவர் மற்றுமொரு ரக்அத்தைச் சேர்த்துக்கொள்ளட்டும். எவருக்கு இரண்டு ரக்கஅத்துக்களும் தவறிப்போய்விடுகின்றனவோ, அவர் நான்கு ரக்கஅத்துகள் தொழட்டும்.' (அத்தபரானி)

இப்னு உமர் (றழி) அவர்களின் கருத்துப் பின்வருமாறு: 'நீர் ஜும்ஆவின் ஒரு ரக்அத்தைப் பெற்றுக் கொண்டால், அதனோடு மற்றுமொன்றைச் சேர்த்துக்கொள்வீராக. அவர்கள் (ஜும்ஆத் தொழும் ஜமாஅத்தினர்) இருப்பில் (அத்தஹிய்யாத்தில்) இருக்கும் போது நீர் அவர்களுடன் இணைந்து கொண்டால் நான்கு ரக்அத்துக்கள் தொழுவீராக' (அல்பைஹகி)

இதுவே, ஷாபிஈ, மாலிகி, ஹன்பலி மத்ஹபுகளின் கருத்தாகும்.குத்பாவின் போது தொழுதல்

கேள்வி : வெள்ளிக்கிழமை ஜும்ஆவின்போது இமாம் குத்பாப் பிரசங்கம் செய்யும் நேரத்தில் தொழலாமா?

பதில்: ஜும்ஆ தினத்தில் இமாம் குத்பாப் பிரசங்கத்துக்காக வரமுன்னர் நபில் தொழுவது ஸுன்னத்தாகும். சந்தர்ப்பத்தைப் பொறுத்து எவ்வளவும் தொழலாம். ஆனால், இமாம் குத்பா நிகழ்த்துவதற்காக வந்துவிட்டால் அவ்வாறு தொழுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்நிலையிலும் 'தஹிய்யத்துல் மஸ்ஜித்' தொழுகையை நிறைவேற்றலாம். பிரசங்கம் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் போதும் இதனைத் தொழலாம். ஆனால் தொழுகையை நீட்டிக் கொண்டிராது அவசரமாக முடித்துக் கொள்ளல் வேண்டும். குத்பா முடியும் தறுவாயில் ஒருவர் வந்தால், தஹிய்யத்துல் மஸ்ஜிதைத் தொழும் வாய்ப்புக் குறைவாக இருப்பின், அதனை நிறைவேற்ற வேண்டியதில்லை.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) ஜும்ஆவுக்கு முன் நீண்டநேரம் தொழுபவராகவும், ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழுபவராகவும் இருந்தார். றஸுலுல்லாஹ் அவர்களும் இவ்வாறு செய்து வந்தார்கள் என அறிவிப்பவராகவும் அவர் இருந்தார். (ஆதாரம்: அபூதாவூத்)

நபி (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு குறிப்பிட்டார்கள்: 'எவர் ஜும்ஆ தினத்தில் குளித்து, பின்னர் ஜும்ஆவுக்காக வந்து சில ரக்அத்துகள் தொழுது, தொடர்ந்து இமாம் குத்பாவை முடிக்கும் வரை அதனைக் காது தாழ்த்திக் கேட்டு, பின்னர் அவருடன் (ஜும்ஆவையும்) தொழுகிறாரோ, அவரது அந்த ஜும்ஆவுக்கும், அடுத்துவரும் ஜும்ஆவுக்கும் மேலதிகமாக மேலும் மூன்று நாட்களுக்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்.' (ஆதாரம்: முஸ்லிம்)

மேலும் ஒரு நபிமொழி கீழ்வருமாறு அமைந்துள்ளது. 'ஜும்ஆத் தினத்தன்று ஒருவர் வந்தால், இமாம் குத்பாவுக்காக வந்திருப்பின் இரண்டு ரக்அத்துக்கள் தொழட்டும்.' (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

இங்கு நாம் ஜும்ஆவுக்கு முந்திய தொழுகை எனக் குறிப்பிட்டது, குத்பாவுக்கு முந்திய, ரக்அத்துக்கள் வரையறுக்கப்படாத, நபிலான தொழுகையேயன்றி ஜும்ஆவுக்கு முந்திய ஸுன்னத் எனப் பலர் வழங்கும் இரண்டு ரக்அத்துகளும் அல்ல. அத்தொழுகைக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை.பெண்கள் பள்ளிவாசல் சென்று தொழுதல்

கேள்வி : பெண்கள் பள்ளிவாயிலுக்குச் சென்று ஜும்ஆத் தொழுகை யிலும், கூட்டுத்தொழுகையிலும் கலந்து கொள்வது பற்றிய ஷரீஅத்தின் கண்ணோட்டம் என்ன?

பதில்: பெண்களுக்கு ஜும்ஆத் தொழுகை கடமையானதல்ல என்பது ஏகோபித்த முடிவாகும். இவர்கள் ஜும்ஆவுக்குப் பதிலாக ளுஹர் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். ஆயினும் ஒரு பெண் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றினால் அது செல்லுபடியாகும். இந்நிலையில் அவர் ளுஹர்த் தொழுகையை நிறைவேற்ற வேண்டியதில்லை. நபியவர்களின் காலத்தில் பெண்கள் பள்ளிவாயிலுக்குச் சென்று ஜும்ஆத் தொழுகையில் பங்கு பற்றினார்கள்.

பெண்கள் பள்ளிவாயிலுக்கு வந்து ஐங்காலக் கூட்டுத் தொழுகை களிலும் கலந்துகொள்ள அனுமதியுண்டு. ஆனால் இச்சையைத் தூண்டக்கூடியவை, கவர்ச்சியான அலங்காரம் போன்றவற்றிலிருந்தும், வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு வருவதிலிருந்தும் கண்டிப்பாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

'பெண்கள் பள்ளிவாயிலுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள். ஆயினும் அவர்களுக்கு அவர்களது வீடுகளே (தொழுகைகளை நிறைவேற்றுவதற்கு) மிகவும் சிறந்ததாகும்' என நபியவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்.

அபூஹுரைறா (ரலி) அறிவிக்கும் ஒரு நபிமொழி கீழ்வருமாறு:
'அல்லாஹ்வின் அடிமைகளான பெண்களை அல்லாஹ்வின் மாளிகைக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள். அவர்கள் அங்கு வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ளாது செல்லட்டும்.' (ஆதாரம்-அஹ்மத், அபூதாவூத்)

பொதுவாக பெண்கள் வீடுகளில் தொழுவதே சிறந்ததாகும். இக்கருத்துக்கு ஆதாரமாக முஸ்னத் அஹ்மத், அத்தபரானி ஆகிய கிரந்தங்களில் காணப்படும் கீழ்வரும் ஹதீஸைக் குறிப்பிடலாம்;:

உம்மு ஹுமைத் அஸ்ஸாயிதிய்யா என்ற பெண்மணி நபிகளாரிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுடன் தொழ விரும்புகிறேன்' என்றார். அதற்கு நபியவர்கள் 'நீர் உமது வீட்டறையில் தொழுவது உமது சமூகத்தவரின் பள்ளிவாயிலில் தொழுவதை விடச் சிறந்தது. நீர் உமது சமூகத்தவரின் பள்ளிவாயிலில் தொழுவது பொதுப் பள்ளிவாயிலில் தொழுவதை விடச் சிறந்ததாகும்.' எனக் கூறினார்கள்.குல்லதைன்

கேள்வி : குல்லதைனுக்குக் குறைவாக உள்ள நீரிலும் கைகளைப் பாத்திரமாகக் கொண்டு வுளு செய்கின்றேன் என்ற நிய்யத்துடன் கைகளை அந்த நீரினுள் விட்டு அள்ளி வுழு செய்ய முடியும் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு ஆதாரங்கள் ஏதேனும் உண்டா? தெளிவான விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன்.

பதில்: இக்கருத்துச் சரியானதே. இதனை ஷாபி மத்ஹப் அங்கீகரிக்கிறது. இரண்டு குல்லத்துக்குக் குறைந்த நீரில் இத்தகைய நிய்யத் இன்றியே கைகளை இட்டு வுளுச் செய்யவும் பல ஆதாரங்கள் உள்ளன. ஒரு வுளு செய்வதற்காக உபயோகிக்கப்பட்ட நீரை மேலும் இரு வுளு செய்வதற்கு (அது குல்லதைனுக்குக் குறைந்ததாக இருப்பினும்) பயன்படுத்தலாம் எனப் பல இமாம்கள் கருதுகின்றனர்.

'நபியவர்கள் (வுளுவுக்காக) தனது கைகளைக் கழுவிய நீரிலிருந்து தனது தலையை மஸ்ஹ் செய்துள்ளார்கள்' என அர்ருபய்யஃ பின்த் முஅவ்வித் (ரலி) அறிவித்துள்ளார்கள். (அபூதாவூத், அஹ்மத்)

'அலி (ரலி), அபூ உமாமா (ரலி), அதா (ரஹ்), அல்-ஹஸன் (ரஹ்), மக்ஹுல் (ரஹ்), அன்நகயி (ரஹ்) போன்றோர், தலையை மஸ்ஹ் செய்ய மறந்தவர் தனது தாடியில் படிந்திருக்கும் நீரைக் கொண்டு மஸ்ஹ் செய்து கொள்ள முடியும் எனக் கூறியுள்ளனர்' என்கிறார் இமாம் இப்னுல் முன்ஸிர் (ரஹ்). இது, உபயோகிக்கப்பட்ட நீர் (மாஉன் முஸ்தஃமல்) தன்னிலும் சுத்தமானது, பிறவற்றையும் சுத்தம் செய்யக்கூடியது என்பதையே காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இமாம்களான மாலிக், ஷாபி ஆகிய இருவரினதும் அறிவிப்பொன்றில் இக்கருத்துக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸுப்யானுஸ்ஸவ்ரீ (ரஹ்), அபூஸவ்ர் (ரஹ்) போன்றோர் உட்பட ழாஹிரி மத்ஹபைச் சேர்ந்த இமாம்களும் இக்கருத்துக்குச் சார்பாக உள்ளனர் என இமாம் இப்னு ஹாம் கூறுகின்றார்.துன்யாவுடைய விடயங்களை மஸ்ஜிதில் பேசுதல்

கேள்வி: துன்யாவுடைய விடயங்களைப் பள்ளிவாயலில் பேசக்கூடாது என்பது சரிதானா?

பதில்: 'பள்ளிவாயிலில் ஆகுமான பேச்சுக்களைப் பேசுவதும் (துன்யாவுடைய விவகாரங்களையும் அவை போன்ற ஆகுமானவற்றையும் பேசுவது) ஆகுமானதாகும். இத்தகைய பேச்சுக்கள் சிரிப்புடன் கலந்ததாக இருப்பினும் சரியே, என இமாம் நவவீ கூறுகிறார். 'நபியவர்களின் காலத்தில் மக்கள் பள்ளிவாயலில் ஜாஹிலிய்யக் காலத்தில் நடந்த விடயங்களை எடுத்துக் கூறிச் சிரிப்போராய் இருந்தனர். நபிகளாரும் புன்முறுவல் பூப்பவர்களாய் இருந்தார்கள்.' (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு சமுறா, ஆதாரம்: முஸ்லிம்) ஆயினும் பள்ளிவாயலில் வீண் பேச்சுக்களைப் பேசுவது தவிர்க்கப்படல் வேண்டும். தொழுபவர்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் உரத்த குரலில் பேசுவதும், அல்குர்ஆனை ஓதுவதும் கூட ஹராமானதாகும். ஆயினும், பள்ளிவாயலில் கற்பித்தலின் போது சத்தமிடுவது தவறானதல்ல என அறிஞர்கள் கருதுகின்றனர்.ஸக்காத்தும் தங்கத்தின் நிஸாபும்

கேள்வி: ஸக்காத்தில் தங்கத்திற்குரிய 'நிஸாப்' குறைந்த பட்ச அளவினை விளக்குக?

பதில்: நவீன அளவை முறைப்படி எண்பத்தி ஐந்து கிராம் தங்கமே அதற்குரிய நிஸாபாகக் கொள்ளப்படுகிறது. எனவே குறித்த அளவிற்கு மேல் தங்கம் வைத்திருக்கும் ஒருவர் அதற்குரிய ஸகாத்தைச் செலுத்த வேண்டிய வேளையில் பணமாக வழங்குவதாயின் அச்சந்தர்ப்பத்தில் எண்பத்தைந்து கிராம் தங்கத்துக்குரிய விலையை அறிந்து மொத்தத் தொகையில் இரண்டரை வீதம் கொடுக்க வேண்டும்.

பணத்திற்குரிய நிஸாப் அளவையும் தங்கத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயிப்பதே மிகப் பொருத்தமானதாகும் என்பதையும் கருத்திற்கொள்க. எண்பத்தைந்து கிராம் தங்கம் சுமார் பத்தரைப் பவுண் தங்கத்திற்குச் சமனானதாகும். பணத்திற்குரிய நிஸாப் அளவை வெள்ளியை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்க வேண்டும் எனக்கூறும் அறிஞர்களும் உளர்.ஸக்காத்தும் காலதாமதமும்

கேள்வி: ஒருவர் தனது கணக்கிடப்பட்ட ஸக்காத் பணத்தை கணக்கிடப்பட்டதும் உடனே கொடுத்து முடித்து விட வேண்டுமா? சில காரணங்களுக்காக அதனைக் காலம் தாழ்த்திக் கொடுக்கலாமா? சிறிது காலத்துக்கு அதனைத் தனது முதலுடன் இணைத்துத் தொழிலில் ஈடுபடுத்தலாமா? தெளிவான விளக்கம் தேவை.

பதில்: ஒருவர் தனது பொருளில் ஸக்காத்தாகக் கொடுக்கப்பட வேண்டிய தொகையை அதனைக் கணக்கிட்டவுடன் தாமதமின்றி விநியோகித்துவிட வேண்டுமா அல்லது தாமதித்துக் கொடுக்கவும் அனுமதியுண்டா என்ற விடயத்தில் கருத்து வேறுபாடு உண்டு.

கடமையான ஸக்காத்துக்குரிய தொகையைத் தாமதிக்காது உடன் நிறைவேற்றி விட வேண்டும் என்பதே இமாம்களான ஷாபிஈ, மாலிக், அஹ்மத் ஆகியோர் உட்பட ஹனபி மத்ஹபைச் சேர்ந்த சில உலமாக்களினதும் கருத்தாகும்.

ஒருவருக்கு ஸக்காத் கடமையை நிறைவேற்றுவதற்கான எல்லா நிபந்தனைகளும் அமையப் பெற்றிருந்து அதனை உடனே நிறைவேற்றுவதற்கு முடியுமான நிலையிலும் அவர் இருந்தால், அதனைப் பிற்படுத்துவது கூடாது.

ஸக்காத்தைத் தாமதித்து, பிற்படுத்தி நிறைவேற்றலாம் என்பது இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்களினதும் பெரும்பாலான ஹனபியாக்களினதும் அபிப்பிராயமாகும்.

ஆயினும், முதல் தரப்பினரின் கருத்தே பலமானதாகக் கொள்ளப் படுகின்றது. அவர்கள் தமது முடிவுக்கு ஆதாரங்களாகப் பின்வரு வனவற்றை முன்வைத்துள்ளனர்.

   1. ஸக்காத்தைக் கொடுங்கள் என்ற அல்லாஹ்வின் கட்டளை உடன் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதையே வேண்டி நிற்கிறது.

   2. கடமையான ஒன்றை விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அத்தகைய கடமையொன்றைத் தாமதித்துச் செய்ய முடியும் என்றிருப்பின், அக்கடமையை நிறைவேற்றாத ஒருவரை இறுதிவரை தண்டிப்பது என்பது சாத்தியமற்றதாகிவிடும்.

   3. ஏழையின் தேவை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று. எனவே அதற்காக வகுக்கப்பட்டுள்ள ஸக்காத்தும் உடன் நிறைவேற்றப்பட வேண்டியதாகும்.

   4. செல்வத்தை நேசிப்பது, அதனை இழக்க விரும்பாதிருப்பது மனிதனின் சுபாவமாகும். இந்நிலையில் ஸக்காத்தைப் பிற்படுத்தித் தாமதமாகவும் நிறைவேற்றலாம் என்றிருப்பின் ஒருவர் அதனைத் தொடர்ந்தும் பிற்படுத்தி இறுதியில் அவர் மரணித்துவிட இடமுண்டு. அல்லது செல்வமானது அவர் கையிலிருந்து அழிந்து விடவும் சாத்தியமுண்டு.

   5. ஸக்காத் என்பது தொழுகை, நோன்பு ஆகியன போன்ற மீண்டும் மீண்டும் (உ-ம் வருடாந்தம்) தொடர்ந்து நிறைவேற்ற வேண்டிய ஒரு வணக்கமாகும். எனவே ஒரு முறைக்குரிய ஸக்காத்தை அடுத்த முறைவரை பிற்போடுவது கூடாது.

ஒருவர் தன்மீது ஸக்காத் வாஜிபான நிலையில் அதனை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கிடைத்தும் நிறைவேற்றாது மரணித்து விட்டால், அது அவரது வாரிசுச் சொத்திலிருந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்பது இமாம்களான ஷாபிஈ, அஹ்மத் ஆகியோரின் கருத்தாகும்.

'மனிதருக்குரிய கடன்களே நிறைவேற்றப்பட வேண்டும் என்றிருக்கும் போது அல்லாஹ்வுக்குரிய கடன் (அவற்றைவிட) நிறைவேற்றத்தக்கதாகும்' என்ற ஹதீஸ் இக்கருத்துக்கு ஆதாரமாக கொள்ளப்படுகின்றது.

மேலே கண்டவாறு ஸக்காத் என்பது தாமதமின்றி அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என்றிருப்பினும் அதனை உடனடியாக நிறைவேற்றுவதில் தனக்கோ அல்லது தனது பொருளுக்கோ கேடேதும் ஏற்படும் என்று அஞ்சும் போது அதனைப் பிற்படுத்துவதில் தவறில்லை. அவ்வாறே, மிகப் பொருத்தமானவரைக் கண்டறியும் வரை அல்லது இதுபோன்ற பிற நியாயமான நலன்களைக் கருத்திற் கொண்டு ஸக்காத் கடமையை உடன் நிறைவேற்றாது பிற்படுத்துவதற்கு அனுமதியுண்டு.

மேலும் ஒருவர் தனது சொந்தத் தேவைக்காகத் தான் ஸக்காத்தாகக் கொடுக்க வேண்டிய தொகையைச் செலவு செய்து விட்டு பின்னர் அதனை உரியவர்களுக்கு வழங்கவும் இடமுண்டு. ஆனால், அத்தொகை அவரின் பொறுப்பிலுள்ள மிகப் பெரியதொரு கடனாகும் என்பதனை அவர் உணர வேண்டும். பொதுவாக எந்த அமலையும் தாமதப்படுத்தாது விரைவாக நிறைவேற்றும் படியே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இந்த வகையில் ஸக்காத் போன்ற ஒரு கடமையை முடியுமானவரை துரிதமாக நிறைவேற்ற முயல்வது ஒரு முஸ்லிமின் கடமையாகும்.ஸக்காத்தை உடன் பிறப்புகளுக்கும் இனபந்துகளுக்கும் கொடுத்தல்

கேள்வி: ஸக்காத் விதியாக்கப்பட்ட ஒருவர் தன் ஸகாத்திலிருந்து தன் உடன் பிறப்புகளுக்கும் இனபந்துக்களுக்கும் வழங்குவது ஆகுமா?

பதில்: ஒருவர் தனது ஸக்காத்தைத் தூரத்து உறவினர்களுக்கு வழங்கலாம் என்பதில் கருத்துவேறுபாடு இல்லை. ஆனால், நெருங்கிய இனபந்துக்களான பெற்றோர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள், பெரிய, சிறிய தந்தைமார்-தாய்மார், மாமிமார், மாமாமார் போன்றோருக்கு ஒருவர் தனது ஸக்காத்தைக் கொடுக்கலாமா, என்பது விரிவாக விளக்கப்படவேண்டியதொன்றாகும்.

ஸக்காத் கொடுக்கும் ஒருவர் தனது நெருங்கிய உறவினரொருவர்க்கு ஆமில் அல்லது இறைபாதையில் போராடுபவர் அல்லது கடன்காரர் அல்லது பிரயாணி என்ற வகையில் தனது ஸக்காத்தைக் கொடுத்துதவ முடியும். ஆனால், இத்தகைய நெருங்கிய இனபந்துக்களுக்கு பக்கீர், மிஸ்கீன் பங்கிலிருந்து வழங்குவதே சர்ச்சைக்குரியதாக உள்ளது. இங்கும் ஒருவரின் ஸக்காத்தை, அவர் அதனை ஒப்படைத்த அரசோ அல்லது நிறுவனமோ அவரது இனபந்துக்களுக்குக் கொடுப்பது பிழையானதல்ல. ஆனால், ஒருவர் தனது ஸக்காத்தைத் தானே பகிர்வதாக இருப்பின், தனது நெருங்கிய இனபந்துகளுக்கு வழங்கலாமா எனும் விடயத்தில் விரிவான விபரங்கள் கூறப்படுகின்றன.

ஒருவர் தனது ஸக்காத் நிதியிலிருந்து தனது பெற்றோருக்கோ, பிள்ளைகளுக்கோ கொடுக்க முடியாது என்பது தெளிவான தீர்ப்பாகும். ஏனெனில், மகனின் சொத்து பெற்றோரினதும் சொத்தாகக் கொள்ளப்படுகிறது. அவ்வாறே தந்தையின் ஓர் அங்கமாகவே பிள்ளைகள் இருக்கின்றனர்.

ஒருவர் தனது ஸக்காத்தைத் தன் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கொடுக்க முடியாதது போலவே தன் மனைவிக்கும் வழங்க முடியாது. ஏனெனில், ஒருவரது மனைவியும் அவரின் ஒரு பகுதியாகவே கொள்ளப்படுகின்றாள்.

ஒரு கணவன் தன் மனைவிக்குத் தனது ஸக்காத்தைக் கொடுக்க முடியாது என்றிருப்பினும், ஒரு மனைவிக்குத் தனது ஸக்காத் நிதியிலிருந்து தன் கணவனுக்கு உதவ முடியும் என்ற கருத்து பல அறிஞர்களாலும் வலியுறுத்தப்படுகின்றது. இக்கருத்துக்கு நம்பகமானதும் உறுதியானதுமான பல ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஒருவரது பெற்றோர், பிள்ளைகள், மனைவி ஆகியோரல்லாத பிற இனபந்துகளுக்கு (உம்: சகோதர, சகோதரிகள், மாமா, மாமி போன்றோர்); அவரது ஸக்காத்தைக் கொடுக்கலாமா, என்பதில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

ஒருவர் தனது ஸக்காத் பொருளிலிருந்து குறித்த இனபந்துகளுக்கு வழங்க முடியும் என்பதே பலமான கருத்தாகக்கொள்ளத்தக்கதாகும். ஹனபி மத்ஹபின் இமாம்கள், இமாம் யஹ்யா, இமாம் அஹ்மத் போன்றோரும் இன்னும் பலரும் இக்கருத்தையே கொண்டுள்ளனர். இப்னு அப்பாஸ், இப்னு மஸ்ஊத் போன்ற ஸஹாபாக்களும், ஸயீத் இப்னு முஸய்யிய், அல்-ஹஸன், இப்ராஹீம், முஜாஹித், அல்-ழஹ்ஹாக் போன்ற தாபிஈன்களும் மேற்படி கருத்தை ஆதரிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

'ஏழைக்குக் கொடுக்கப்படும் ஸதகா (ஸக்காத்) வெறும் ஸதகா மாத்திரமே. ஆனால், இனபந்துகளுக்குக் கொடுக்கப்படுகின்ற ஸதகாவோ இரண்டு கூலிகளைத் தரக்கூடியதாகும். ஏனெனில், அது ஸதகாவாகவும் இனபந்துக்களுடன் கொண்ட உறவாகவும் உள்ளது.' (அஹ்மத், நஸாயி, திர்மிதி) எனும் நபிமொழியும் மேற்போந்த கருத்துக்கு ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது.

ஸக்காத் பெறத்தகுதியுடையோர் பற்றிக் குறிப்பிடுகின்ற சட்ட வசனங்கள், பக்கீர்களை, உறவினர்கள், அந்நியர்கள் என்று பிரித்துக் காட்டாது பொதுப்படையாகவே வந்துள்ளன. மனைவி, பெற்றோர், குழந்தைகள் ஆகியோரைப் பொறுத்தவரை ஒருவரது ஸக்காத்திலிருந்து அவர்களுக்குக் கொடுக்க முடியாது என்பது இஜ்மாவினது அடிப்படையிலும் மற்றும் பல ஆதாரங்களின் அடிப்படையிலும் நிறுவப்பட்டுள்ளது.நோன்பைக் கழாச் செய்தல்

கேள்வி: இந்த வருடம் விடுபட்ட நோன்பை அடுத்த ஷஃபான் 15ம் நாள் பிந்தியதன் பின்னர் நோற்பதன் மூலம் கழாவான அந்த நோன்பு நிவர்த்தியாகுமா? அல்லது அதற்கு முன் நோற்றால்த்தான் நிவர்த்தியாகுமா?

பதில்: ஒரு வருடத்தில் விடுபட்ட ரமழான் நோன்பை அடுத்த ஷஃபான் மாதம் பதினைந்தாம் தினத்துக்கு முன் நோற்றால்தான் கழா நிறைவேற வேண்டுமென்பதில்லை. குறித்த தினத்துக்கு பின்னரும் குறித்த நோன்பை நோற்க முடியும். அடுத்த ரமழான் நோன்பு வந்து விடினும், அதனை நோற்று முடிந்த பின் முன்னைய வருடம் விடுபட்ட நோன்பைக் கழா செய்ய முடியும். ஆயினும், தக்க காரணமின்றி அடுத்த ரமழான் வரை கழாவை நிறைவேற்றாது, பின்னர் நிறைவேற்றுபவர் விட்ட ஒவ்வொரு நோன்பிற்காகவும் இரண்டு கைப்பிடியளவு உணவை பித்யாவாகக் கொடுக்க வேண்டுமென இமாம்களான ஷாபிஈ, மாலிக், அஹ்மத் போன்றோர் கருதுகின்றனர். எந்நிலையிலும் பித்யாக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், நோன்பை நோற்றால் மாத்திரம் போதுமானது என்றும் ஹனபிய்யாக்கள் கருதுகின்றனர். ஹனபிய்யாக்களின் இக்கருத்தே இவ்விடயத்தில் உறுதியானதென நவீன கால அறிஞர்கள் பலர் கூறுகின்றனர்.சிதைந்த உடலைக் குளிப்பாட்டல்

கேள்வி: ஒரு முஸ்லிமின் உடல் எரிக்கப்பட்டு எலும்பு மாத்திரம் எஞ்சி இருக்கும் போதும், உடல் எரிகாயத்துடன் இருக்கும் போதும் அதனைக் குளிப்பாட்டுவது போன்ற ஜனாஸாவுக்கான கடமைகளை நிறைவேற்ற வேண்டுமா?

பதில்: உடலின் ஒரு பகுதி எஞ்சி இருப்பினும் அதனைக்குளிப்பாட்ட வேண்டும், கபனிடவும் தொழுவிக்கவும் வேண்டும் என்பது இமாம்களான ஷாபிஈ, அஹ்மத், இப்னு ஹஸ்ம் போன்றோரின் கருத்தாகும். ஒரு முஸ்லிமான மையித்தின் கை,கால் போன்ற ஓர் உறுப்பு மாத்திரமே காணப்படினும், அதனைக் கழுவியே அடக்கம் செய்யவேண்டும் என்பது அறிஞர்கள் பலரின் தீர்ப்பாகும். ஜமல் யுத்தத்தின்போது இறந்த ஒரு மனிதரின் கையொன்றை ஒரு பறவை தூக்கிச் சென்று மக்காவில் எறிந்தது. அதிலிருந்த மோதிரத்தைக் கொண்டு குறித்த நபரை இனங்கண்டு, அதனைக் கழுவி, தொழுவித்து அடக்கம் செய்தனர். இது பல ஸஹாபாக்கள் முன்னிலையில் இடம் பெற்றது. இச்சம்பவத்தைத் தான் கேள்விப்பட்டதாக இமாம் ஷாபிஈ அறிவிக்கின்றார்.

அபூ அய்யூப் (ரலி) அவர்கள் ஒரு காலுக்கும், உமர் (ரலி) அவர்கள் ஓர் எலும்புக்கும் தொழுகை நடத்தியுள்ளார்கள் எனத் தெரிய வருகின்றது. (ஆதாரம்-அஹ்மத்)

உடலின் அரைப்பாகத்துக்கு மேல் எஞ்சி இருந்தாலேயே அதனைக் குளிப்பாட்டவும், அதற்காகத் தொழுகை நடாத்தவும் வேண்டும் என்பது இமாம்களான அபூஹனீபா, மாலிக் ஆகியோரினது அபிப்பிராயமாகும்.

நீர் கொண்டு கழுவுவதனால் உடல் சிதையும் என்றிருப்பின் தயமமும் செய்விக்கலாம் என்று கருதும் அறிஞர்களும் உள்ளனர்.ஜனாஸாவைக் கொண்டு செல்லும் போது ஷஹாதா சொல்லுதல்

கேள்வி: எங்களுரில் இரண்டு வகையாக ஜனாஸாவைக் கொண்டு செல்கின்றனர். சிலர் கலிமாவைச் சத்தமிட்டுக் கூறியவாறு கொண்டு செல்கின்றனர். இன்னும் சிலர் மௌனமாகக் கொண்டு செல்கின்றனர். இவ்விரு அமைப்பிலும் எது சரியானது என்பது பற்றி விளக்கம் தாருங்கள்.

பதில்: ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காகக் கொண்டு செல்லும் வேளையில் மௌனமாகச் செல்வதே ஸுன்னத்தாகும். நான்கு மத்ஹப்களினதும் சட்டங்களைக் கூறுகின்ற 'அல்-பிக்ஹு அலல் மதாஹிபில் அர்பஆ' எனும் நூலும் இக்கருத்தையே கூறுகின்றது. இதற்கு மாறாக, சத்தமாக திக்ரு செய்வதோ, குர்ஆன் போன்றவற்றை ஓதுவதோ கூடாது. அது மக்ரூஹாகும். ஸஈதுப்னுல் முஸையிப், ஸஈதுப்னு ஜுபைர், அல்ஹஸன், அந்நகஈ, அஹ்மத், இஸ்ஹாக் போன்ற பல தாபிஈன்களும் இக்கருத்தையே கொண்டுள்ளனர். ஷாபிஈ மத்ஹபின் முக்கிய இமாமாகக் கருதப்படும் நவவியும் தனது 'அல்-அத்கார்' எனும் நூலில் ஜனாஸாவைச் சுமந்து செல்லும் வேளையில் சத்தமாக திக்ரு செய்வதோ, ஓதுவதோ கூடாது என்றும், மௌனமாகச் செல்வதே சரியானதும், ஸலபிக்களின் வழிமுறையுமாகும் என்றும் குறிப்பிடுகின்றார்.

ஜனாஸாவைக் கொண்டு செல்லும் போது திக்ருகளைக் கூறிச் சத்தமிடும் அமைப்பு நபியவர்களின் காலத்திலோ அல்லது ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தாபஉத் தாபிஈன்கள் காலத்திலோ இருந்த ஒன்றல்ல என்று இமாம் முஹம்மது அப்துஹு 'அல்-பத்ஹ்' என்ற நூலை மேற்கோள்காட்டிக் கூறுகின்றார். இப்னு நுஐம் போன்ற பல இமாம்கள் சத்தமிடுவதை 'மக்ரூஹ் தஹ்ரீம்' என்று குறிப்பிடுகின்றனர்.

'நெருப்புடனோ சத்தத்துடனோ ஜனாஸாவைத் தொடர' வேண்டாம் எனும் அஹ்மத், அபூதாவூத், அல்பைஹகீ ஆகியோர் தத்தமது கிரந்தங்களில் பதிவு செய்துள்ள நபி மொழியும், 'அல்லாஹ் மூன்று சந்தர்ப்பங்களில் மௌனமாக இருப்பதை விரும்புகிறான்;. குர்ஆன் ஓதும் போதும், யுத்தம் நடைபெறும் போதும், ஜனாஸாவைக் கொண்டு செல்லும் போதும் மௌனம் சாதிப்பதே அம்மூன்று சந்தர்ப்பங்களுமாகும்' எனும் தபரானி பதிவு செய்துள்ள நபி மொழியும் மேற்குறித்த முடிவுக்கு ஆதாரங்களாகக் கொள்ளப்படுகின்றன.மஃமூம்கள் தொழுகையில் பாதிஹா ஸுராவை ஓதுதல்

கேள்வி: ஐங்காலத்தொழுகையில் இமாம் ஃபாதிஹா ஸுராவை ஓதும்போது அதனை மஃமூம்கள் செவிமடுத்தால் போதுமானதல்லவா? அதனை அவர்கள் பின்னர் ஓத வேண்டிய தேவை இல்லையல்லவா?

பதில்: ஸுரத்துல் ஃபாதிஹா ஓதப்படாத தொழுகை நிறைவேறாது என்பதே அடிப்படையாகும். பர்ளான, ஸுன்னத்தான எல்லாத் தொழுகைகளிலும் ஒவ்வொரு ரக்அத்திலும் ஃபாதிஹாவை ஓதுவது கடமையாகும். ஆனால், ஜமாஅத்தாகத் தொழும்போது இமாம் சத்தமாக ஓதும் தொழுகைகளில் (உம்: இஷா) மஃமூம் ஃபாதிஹாவை ஓதவேண்டியதில்லை. மாறாக அவர் இமாமின் ஓதலுக்குச் செவிமடுக்க வேண்டும். 'அல்குர்ஆன் ஓதப்பட்டால் மௌனமாக இருந்து அதற்குக் காது கொடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்' என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

இமாம் சத்தமாக ஓதாத தொழுகைகளைப் பொறுத்தவரையில் (உம்: ளுஹர்) மஃமூம் ஃபாதிஹாவை ஓதுவது வாஜிப் ஆகும்.

சத்தமாக ஓதப்படும் தொழுகைகளிலும் இமாம் ஸுரதுல் ஃபாதிஹா ஓதி முடிந்த பின்னர் மஃமூம் (முடியுமானவரை) அதனை ஓதவேண்டும் என்பது ஷாபிஈ மத்ஹபின் கருத்தாகும்.அகீகா

கேள்வி: அகீகா கொடுப்பது யார் மீது கடமையாகின்றது? அகீகா கொடுக்க வசதியுண்டா இல்லையா என்பதை எவ்வாறு நிர்ணயிக்கலாம்? தனது பெற்றோர் தனக்காக அகீகா கொடுக்கவில்லையென்பதைத் தெரிந்து கொள்ளும் பிள்ளை, தனக்காகத் தானே அகீகா கொடுக்க வேண்டுமா? தனது மனைவியின் பெற்றோர் அவளுக்காக அகீகா கொடுக்கவில்லை என்பதைக் கணவன் தெரிந்து கொண்டால் தனது மனைவிக்காக அவன் அகீகா கொடுக்க வேண்டுமென இஸ்லாம் கட்டாயப்படுத்துகின்றதா?

பதில்: அகீகா கொடுப்பது ஸுன்னா முஅக்கதாவே (பலவந்தமான சுன்னத்தே) அன்றி வாஜிப் அல்ல. குழந்தையின் தந்தை வசதிபடைத்தவராக இருப்பினும், வசதியற்றவராக இருப்பினும் அவர் தனது குழந்தைக்காக அகீகா கொடுப்பது ஸுன்னத்தாகும். தனது பெற்றோர் தனக்காக அகீகா கொடுக்கவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளும் பிள்ளை, தனக்காகத்தானே அகீகா கொடுக்க வேண்டுமெனும் விடயத்தில் கருத்து வேறுபாடுண்டு. இமாம் நவவி தனது 'றெளளத்துத் தாலிபீன்' எனும் நூலில் இவ்விடயம் பிள்ளையின் தெரிவுக்கு விடப்பட்டவொன்றாகும் என்றும், அவன் விரும்பியபடி கொடுக்கவோ, கொடுக்காமலிருக்கவோ முடியுமென்றும் கூறுகின்றார். அதாஃ, ஹஸனுல் பஸரி ஆகிய தாபிஈன்கள் கொடுப்பதே சிறந்தது எனக் கருதுகின்றனர். இமாம் இப்னு குதாமா, அகீகா கொடுப்பது தந்தையின் பொறுப்பேயன்றி பிள்ளையின் பொறுப்பல்ல எனக் குறிப்பிடுகின்றார்.

அகீகா கொடுக்கப்படாத தனது மனைவிக்காக அதனைக் கொடுக்க வேண்டிய கடமை கணவனுக்கு இல்லை.
மிருகங்களின் மலசலம்

கேள்வி: மாடு போன்ற தாவர பட்சினிகளின் மலம் நஜீஸானதா? தயவுசெய்து தெளிவான விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன்.

பதில்: எம்மிருகங்களின் மாமிசத்தை உண்பதற்கு ஷரீஅத்தில் அனுமதி இல்லையோ, அவற்றின் மலசலமும் நஜீஸாகும்.

உண்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள மிருகங்களின் மலசலத்தைப் பொறுத்த வரையில் அவை நஜீஸாவை அல்ல என்பதே இமாம்களான மாலிக், அஹ்மத் போன்றோரினதும் சில ஷாபியாக்களினதும் அபிப்பிராயமாகும். 'இவற்றின் மலசலம் நஜீஸானவை என ஸஹாபாக்களில் எவரும் கருத்துக் கொண்டிருக்கவில்லை. உண்மையில், இவை நஜீஸானவை எனக் கூறும் கருத்து நூதனமான ஒன்றாகும். இதற்குச் சார்ப்பாக எந்த ஒரு நபித்தோழரும் இருந்ததில்லை' என்கிறார் இமாம் இப்னு தைமியா (ரஹ்).

அனஸ் (ரலி) கீழ்வருமாறு அறிவிக்கிறார் 'ஒரு தடவை உகல், அல்லது உறைனா எனும் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் மதீனாவுக்கு வந்த வேளையில் ஒருவகை வயிற்று வலியினால் பீடிக்கப்பட்டனர். அதற்கு நபியவர்கள் ஒட்டகததின் பாலையும் சலத்தையும் பெற்றுப்பருகுமாறு அம்மக்களைப் பணித்தார்கள்.' (ஆதாரம்: அஹ்மத், புகாரி, முஸ்லிம்)

இந்நபிமொழியில் இருந்து ஒட்டகத்தின் சிறுநீர் சுத்தமானது என்பதனை விளங்க முடிகிறது. இதனை அடிப்படையாக வைத்து, அறுத்து உண்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள மிருகங்களினது சிறுநீர் போன்றவையும் சுத்தமானவையாகும் எனும் கருத்தைக் கியாஸின் அடிப்படையில் பெற முடிகிறது.

'இது குறித்த அம்மனிதர்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமாகக் கூறப்பட்ட ஒரு சடடமாகும் எனக் கூறும் வாதம் ஏற்புடையதல்ல, ஏனெனில், உரிய ஆதாரம் இன்றி எதுவும் பிரத்தியேகமான குறிப்பான சட்டங்களாவதில்லை' எனக்கூறும் இமாம் இப்னுல் முன்திர், தொடர்ந்து கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: 'எத்தகைய ஆட்சேபனையும் இன்றி சந்தைகளில் ஆட்டின் மலத்தை விற்பனை செய்வதற்கு அறிஞர்கள் அனுமதி அளித்து வந்துள்ளமையும் ஒட்டகத்தின் கழிவுப்பொருட்களை மக்கள் அன்றும் இன்றும் தமது மருந்து வகையில் சேர்த்துப் பாவித்து வருகின்றமையும் அவை சுத்தமானவை என்பதனையே காட்டுகிறது' என்கிறார்.

இவ்விடயம் பற்றி இமாம் ஷவ்கானி கூறும் கருத்தை இறுதியாகக் குறிப்பிட முடியும்: அடிப்படையைக் கருத்திற் கொண்டு, உணவாக உட்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து மிருகங்களினதும் கழிவுகள் அதாவது மலசலம் சுத்தமானது என்பதே வலுவான கருத்தாகக் கொள்ளப்பட முடியும்.அல்குர்ஆனை ஓதி கூலி வாங்குதல்

கேள்வி: அல்குர்ஆனை ஓதி அதற்குக் கூலி வாங்க அனுமதி உண்டா? பூரண விளக்கம் தேவை.

பதில்: 'கூலிக்குக் குர்ஆனை ஓதுவதனால் இறந்தவருக்கோ அல்லது ஓதுபவருக்கோ எத்தகைய நன்மையும் கிட்ட முடியாது' என்கிறார்கள் ஹனபி மத்ஹபுடைய இமாம்கள். இதனை மஹ்மூத் இப்னு அஹ்மத் (ரஹ்) தனது 'ஷர்ஹுத் திராயா' வில் குறிப்பிடுகின்றார்.

இது பற்றிக் கூற வந்த இமாம் அல்-அய்னி (ரஹ்), 'கூலி எடுப்பவரும் கொடுப்பவரும் இருவருமே பாவிகள் என்றும் இன்று எம்மத்தியில் பரவலாக உள்ள, அல்குர்ஆனைக் கூலிக்கு ஓதும் முறையானது ஆகுமான ஒன்றல்ல என்றும் குறிப்பிடுகின்றார்.' (பார்க்க: பிதாயா ஷர்ஹுல் ஹிதாயா)

'இவ்வமைப்பு இஸ்லாத்தின் எந்தவொரு மத்ஹபிலும் அனுமதிக்கப்பட்டதில்லை. எந்தவொரு இறை மார்க்கத்திலும் (உம்: தவ்றாத், இன்ஜீல்) அனுமதிக்கப்பட்டதுமல்ல, இதனால் எத்தகைய ஸவாபும் கிடைக்காது' என்கிறார் இமாம் முஹம்மத் அல் பரகவி (பார்க்க: மஜ்மூஅது ரஸாஇல்-இப்னு ஆபிதீன்)

அல்குர்ஆன் ஓத எவரையும் கூலிக்கு அமர்த்தி, ஓதியதை இறந்தவர்க்குச் சேர்ப்பிப்பது செல்லுபடியாகாது. இதற்கு எந்தவொரு இமாமும் அனுமதி கொடுத்ததாகத் தெரியவில்லை. உலமாக்களின் கருத்துயாதெனில், 'ஒருவர் பணத்திற்காக அல்குர்ஆனை ஓதினால் அவருக்கு எதுவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை. இப்படியிருக்க இறந்தவருக்கு இவர் எதனைக் கொடுக்கப் போகிறார்! உண்மையில் மரணித்தவரை அடைவதெல்லாம் நற்கருமங்களே ஆகும். அல்குர்ஆனை ஓதக் கூலிக்கு ஆளை அமர்த்;;துவதையிட்டு எந்தவொரு இமாமும் கூறியதில்லை' என்கிறார் இப்னு தைமியா (பார்க்க: மஜ்முஅது ரஸாஇல்-இப்னு ஆபிதீன்)

குறித்த அமைப்பு ஹராமானது என்பதற்கு அறிஞர்கள் கீழ்வரும் அல்குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் காட்டுவர்.

'எனது வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்' (241) இவ்வசனத்திற்கு அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் 'அல்குர்ஆனுக்கு கூலி எடுக்காதீர்கள்' எனப் பொருள் கொடுக்;கிறார்கள். (பார்க்க தப்ஸீர் அத்தபரீ, இப்னு கதீர், அல்குர்துபி )

இறுதியாக இதுபற்றி 'ஷர்ஹு அகீதத்தித் தஹாவிய்யா' எனும் நூலில் இடம்றெ;றுள்ள கருத்தை கீழே தருகின்றோம்.

'சிலரைக் கூலிக்கமர்த்தி அல்குர்ஆனை ஓத வைத்து, அதனை இறந்தவருக்கு அன்பளிப்புச் செய்யும் அமைப்பை ஸலபுஸ்ஸாலிஹீன்கள் எவரும் செய்ததில்லை, இமாம்கள் எவரும் இதனை ஏவியதாகவும் இல்லை. இது விடயத்தில் அவர்களில் எவரும் சலுகை வழங்கியதாகவும் தெரியவில்லை. அல்குர்ஆனை ஓதுவதற்காகவே கூலிக்கு அமர்த்துவது கூடாத ஒன்றாகும்' என்பதில் கருத்து வேறுபாடில்லை.

We have 57 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player