கருத்தரங்குகள்

 ஒரு பல்லின சமுதாயத்தில் வாழும் முஸ்லிம் சிறுபான்மை பற்றியதும் பிற சமூகங்களுடனான அதன் உறவுகள் பற்றியதுமான ஷரீஆவின் கண்ணோட்டம்

இவ்வாய்வு பின்வரும் நான்கு உபதலைப்புகளைக் கொண்டதாக அமைகின்றது:

   1. சிறுபான்மை, முஸ்லிம் சிறுபான்மை பற்றிய எண்ணக்கருக்கள்.
   2. இன்றைய உலகளாவிய முஸ்லிம் சிறுபான்மையினர் பற்றிய விபரம்
   3. சிறுபான்மை முஸ்லிம்கள் பற்றிய ஷரீஆ நோக்கு
   4. பிற சமூகங்களுடனான உறவு பற்றிய ஷரீஆ கண்ணோட்டம்.

     1.சிறுபான்மை, முஸ்லிம் சிறுபான்மை பற்றிய எண்ணக்கருக்கள்.

எமது ஆய்வுக்குரிய பொருளை மிகச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு 'சிறுபான்மை' எனும் எண்ணக்கருவை வரைவிலக்கணப்படுத்துவது முக்கியத்துவம் பெறுகிறது.

   1. 'சிறுபான்மை' என்பதற்கு சமூகவியலாளர்கள் தந்துள்ள வரைவிலக்கணங்களுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்.

''ஓர் ஊரிலோ அல்லது நாட்டிலோ அல்லது பிரதேசத்திலோ வாழுகின்ற இன அல்லது மொழி அல்லது சமயரீதியாக அங்கு வாழும் பெரும்பான்மையிலிருந்து வேறுபடுகின்ற ஒரு சனக்குழுமத்தைக் குறிக்கும்.''
(அப்துல் வஹ்ஹாப் அல்கயாலி, நூல் : மவ்சூஅதுஸ் ஸியாஸா, 1/244)

''ஒரு நாட்டில் வாழும், இனத்தால் அல்லது மொழியால் அல்லது சமயத்தால் அந்நாட்டின் பெரும்பான்மை குடிமக்கள் சாராத ஒன்றை சார்ந்திருக்கும் பல நூறு குடிமக்களை குறிக்கும்.'' (அஹ்மத் அத்தியத்துல்லாஹ், நூல் : அல் காமூஸுஸ் ஸியாஸி, பக்கம் : 96)

''ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த குடிமக்கள்; ஏனைய குடிமக்களை விட தொகையில் குறைந்த இவர்கள் தமக்கென தனியான கலாசாரத்தையும் மொழியையும் சமயத்தையும் கொண்டிருப்பர். ஒரு குறிப்பிட்ட ஒழுங்கமைப்பில் தமது தனித்துவத்தையும் கலாசாரத்தையும் பேணிக்காப்பதில் கரிசனை காட்டுவர்.''
(அஹ்மத் சுவைலிம், நூல் : முஃஜமுல் உலூமுஸ்ஸியாஸிய்யா அல்முயஸ்ஸர், பக்கம்: 28)

''A small group of people separated from the rest of the community by a different in race, religion, language etc.."

'இனம், சமயம், மொழி முதலானவற்றில் சமூகத்தின் ஏனையோரி லிருந்து வேறுபட்ட ஒரு சிறு மனித குழுமம்''
(The Oxford English Dictionary)

"A part of population differing in some characteristics and often subjected to deferential treatment.''

''குடிமக்களில், சில பண்புகளில் பிறரிலிருந்து வேறுபடுகின்ற அவ்வப்போது பாகுபாடான கவனிப்புக்குட்படுகின்ற ஒரு பிரிவினரைக் குறிக்கும்'' (Webster’s 7th new collegiate dictionary)

மேற்குறிப்பிட்ட வரைவிலக்கணங்களில் இருந்து ஒரு சனக்கூட்டத்தை சிறுபான்மை சமூகம் என அடையாளப்படுத்துவதாயின் அது பின்வரும் பண்புகளைப் பெற்றிருத்தல் வேண்டுமென்பது தெளிவாகின்றது.

   1. இனம், மதம், மொழி முதலானவற்றில் சமூகத்தின் ஏனைய குடிமக்களில் இருந்து வேறுபட்ட ஒரு சனக்ககூட்டமாக இருத்தல்.
   2. தாம் வாழும் சமூகத்தில் பாகுபாடாகவும் சமத்துவமற்ற முறையிலும் நடாத்தப்படும் ஒரு பிரிவினராக இருத்தல்.

இன்று உலகின் பல பாகங்களிலும் இனரீதியாகவும், மொழிரீதியாகவும், சமயரீதியாகவும், சிறுபான்மை சமூகங்கள் வாழ்ந்து வருகின்றன. மொழிரீதியான சிறுபான்மை சமூகத்திற்கு உதாரணமாக கனடாவில் வாழும் பிரெஞ்சு மொழி பேசும் சமுதாயத்தை குறிப்பிடலாம். இராக், ஈரான், துருக்கி ஆகிய நாடுகளில் வாழும் குர்திஷ் இனத்தவர்களையும், அல்ஜீரியாவிலும், மொரோக்கோவிலும் வாழும் பர்பர் இனத்தவர்களையும் இனரீதியான சிறுபான்மையினருக்கு உதாரணங்களாக குறிப்பிட்ட முடியும். உலகில் சமயரீதியான சிறுபான்மையினராக இருப்போரே குறிப்பிடத்தக்க வர்களாக விளங்குகின்றனர். இவர்கள் தொடர்பிலேயே பல்வேறு பிரச்சினைகளும் சர்ச்சைகளும் தோன்றுவது உண்டு. சமய ரீதியான சிறுபான்மையினருக்கு உதாரணமாக இராக், எகிப்து, சிரியா, பாகிஸ்தான் முதலான நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களையும், மொரோக்கோ, ஈரான், துருக்கி போன்ற நாடுகளில் வாழும் யூதர்களையும் குறிப்பிடலாம்.

     2.உலக முஸ்லிம் சிறுபான்மையினர்

உலக முஸ்லிம்களை அவர்கள் வாழும் நாடுகளை பொறுத்து இரு பெரும் பிரிவுகளாக பிரித்து நோக்குவர்:

   1. தாருல் இஸ்லாத்தில் வாழ்வோர்


இன்று தாருல் இஸ்லாம் என்பது பொதுவாக முஸ்லிம் நாடுகளைக் குறிக்கும். அதாவது முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் நாடுகளைச் சுட்டும்.

   2. தாருல் இஸ்லாத்திற்கு வெளியே வாழ்வோர்

இஸ்லாமிய வழக்கில் தாருல் இஸ்லாம் அல்லாத பூமி தாருல் குப்ர் என அழைக்கப்படுகின்றது. இத்தகைய நாடுகளில் வாழ்வோரையே சிறுபான்மை முஸ்லிம்கள் என வழங்குகின்றோம்.

இன்றைய உலக முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களையும் இரு பிரிவுகளாகப் பிரித்து நோக்க முடியும்.

   1. பாரம்பரிய முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள்

இவர்கள் தாம் வாழும் நாட்டின் குடிமக்களாக இருப்பர்;.
பல நூற்றாண்டு காலமாக இஸ்லாத்தில வாழ்வோராகவும் இருப்பர். உதாரணமாக, இந்தியா, இலங்கை முஸ்லிம் சமூகங்கள், பொல்கன் நாடுகளான சேர்பியா, பல்கெரியா, மெஸடோனியா முதலான நாடுகளில் வாழும் முஸ்லிம் சமூகங்கள்.

   2. புலம்பெயர்ந்த முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள்

உதாரணமாக: 1950 களுக்குப் பின்னர் அரசியல், கல்வி, பொருளாதாரம் முதலான காரணங்களுக்காக அரபுலகிலிருந்தும் மற்றும் உலகின் நாலா பக்கங்களிலிருந்தும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து அங்கு உருவான முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களைக் குறிப்பிடலாம்.
உம்: இங்கிலாந்து, ஜேர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம் சிறுபான்மையினர்.

   3. சமகால உலகளாவிய முஸ்லிம் சிறுபான்மையினர் பற்றிய விபரம்:

இன்று உலகில் முஸ்லிம்கள் வாழாத எந்தவொரு நாடும் இல்லையெனலாம். உலகின் எந்த ஒரு நாட்டிலும் ஒரு சிறு சமூகமாகவேனும் முஸ்லிம்கள் வாழ்வதைக் காணமுடியும். இன்றைய உலக சனத்தொகை 6036.97 மில்லியன் ஆகும். இதில் முஸ்லிம்களின் சனத்தொகை1430.08 மில்லியன் என மதிப்பிடப்படுகின்றது. மற்றொரு கணிப்பீட்டின் படி உலக முஸ்லிம் சனத்தொகை 1484.71 மில்லியன் ஆகும். (பார்க்க: Romania fact book 2003  website.) ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அறிக்கையின் படி மொத்த உலக சனத்தொகையில் 25.12மூ முஸ்லிம்கள் ஆவர்.

உலக முஸ்லிம் சனத்தொகையில் சிறுபான்மையினராக வாழ்வோரின் எண்ணிக்கை சுமார், 450 மில்லியன் என மதிப்பிடப்படுகிறது. மற்றொரு மதிப்பீட்டின் படி உலக முஸ்லிம்களில் 1/3 பங்கினராக சிறுபான்மை முஸ்லிம்கள் விளங்குகின்றனர். முஸ்லிம் சனத்தொகையில் சிறுபான்மையினர் 45% என இன்னும் ஒரு கணிப்பீடு குறிப்பிடுகிறது. இன்றைய உலகில் ஒவ்வொரு நால்வரிலும் ஒருவர் முஸ்லிமாக இருக்க, ஒவ்வொரு 12 முஸ்லிம்களிலும் ஒருவர் சிறுபான்மையாக வாழும் முஸ்லிமாக இருக்கிறார் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய முஸ்லிம் சமூகத்தின் சனத்தொகைப் பற்றியும், உலக முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களின் சனத்தொகை விபரங்கள் பற்றியும் சரியானதும் துள்ளியமானதுமான புள்ளி விபரங்கள் கிடைப்பதற்கில்லை. சில நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் சனத்தொகை குறைமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே முஸ்லிம் சார்பு வட்டாரங்கள் சில நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் தொகையை மிகை மதிப்பீடு செய்துள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது. இந்நிலைக்கான காரணங்களை பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்.

     பல நாடுகள் சமய அடிப்படையில் சனத்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளாமை.
     பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக சமயரீதியான விபரங்களை வெளியிடாமை
     சில நாடுகளில் வாழும் முஸ்லிம்களில் சிலர் உத்தியோகபூர்வமாக தங்களை முஸ்லிம்கள் என இனங்காட்டிக் கொள்ளாமை.
     சில நாடுகளில் முஸ்லிம்களின் சனத்தொகையைத் திட்டமிட்டு குறைமதிப்பீடு செய்தல்.
     சனத்தொகை மதிப்பீட்டாளர்களின் ஆய்வுகளில் முரண்பாடுகள் காணப்படுகின்றமை.
     OIC முதலான முஸ்லிம் நிறுவனங்களின் முஸ்லிம்கள் பற்றிய சனத்தொகை மதிப்பீடுகள் விஞ்ஞான பூர்வமாக அமையாமை.
     முஸ்லிம்கள் வேகமாக வளர்ச்சியடையும் ஒரு
      சமூகமாக இருத்தல்.

எது எப்படியாயினும் உலக முஸ்லிம் சனத்தொகையில் குறிப்பிடத்தக்க, கணிசமான தொகையினர் சிறுபான்மையினராக உள்ளனர் என்பது தெளிவானதாகும். பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் சனத்தொகையை விட சில நாடுகளில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களின் சனத்தொகை பல மடங்கு கூடியதாகும். உதாரணமாக: இந்திய முஸ்லிம் சிறுபான்மை சமூகம் உலகின் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமாக விளங்குகின்றது. அதன் சனத்தொகை சுமார் 12 கோடியாகும். சீனாவில் சுமார் 11 கோடி முஸ்லிம்கள் சிறுபான்மை என்ற நிலையில் வாழ்கின்றனர். இதே வேளையில் உலகின் மிகச்சிறிய முஸ்லிம் சிறுபான்மை சமூகமாக ஹெய்ட்டி நாட்டில் வாழும் முஸ்லிம்கள் கருதப்படுகின்றனர். இங்கு சில நூறு முஸ்லிம்கள் வாழ்வதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 60 நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் போது 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் அவர்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். உலக சிறுபான்மை முஸ்லிம்களில் 90% ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் மையம் கொண்டுள்ளனர். ஆசியாவில் மொத்தம் 251 மில்லியன் முஸ்லிம் சிறுபான்மையினரும், ஆபிரிக்காவில் 24 மில்லியன் முஸ்லிம் சிறுபான்மையினரும் இருப்பதாக நம்பப்படுகின்றது.

அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவலாக முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள் வாழ்ந்து வருகின்றன. அமெரிக்காவில் சுமார் 7 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். பிரான்ஸ், ஐக்கிய ராச்சியம் , ஜேர்மனி ஆகிய நாடுகளில் முறையே 2.2 மில்லியன், 3 மில்லியன், 2.5 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். மொத்தமாக, ஐரோப்பாவில் முஸ்லிம்களின் சனத்தொகை 15 மில்லியன் என மதிப்பிடப்படுகிறது.

     சிறுபான்மை முஸ்லிம்கள் பற்றிய ஷரீஆ நோக்கு

இஸ்லாமிய ஷரீஆ நோக்கில் நாடுகளை இரு பெரும் பிரிவுகளாக வகுத்து நோக்குவர். அவையாவன:

   1. தாருல் இஸ்லாம்
   2. தாருல் குப்ர்

   1. தாருல் இஸ்லாம்:

தாருல் இஸ்லாத்தை வரைவிலக்கணப்படுத்துவதில் இஸ்லாமிய சட்ட மேதைகள் மத்தியில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அக்கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து நோக்குகின்ற போது தாருல் இஸ்லாம் என்பது பின்வரும் இரு நிபந்தனைகளைக் கொண்ட பூமியைக் குறிக்கும் எனும் முடிவைப் பெறமுடிகின்றது.

     முஸ்லிம்களின் அதிகாரமும் ஆட்சியும் உள்ள பூமி
     ஷரீஅத் சட்டம் அமுலாக்கப்படும் பூமி

பொதுவாக மேற்கண்ட இரு நிபந்தனைகளையும் வைத்து நோக்குகின்ற போது தாருல் இஸ்லாம் என்ற வரையறைக்குள் ஓரிரு நாடுகளையேனும் அடக்க முடியுமா எனும் கேள்வி பிறப்பது தவிர்க்க முடியாததாகும். ஆயினும் இமாம் அபூ ஹனீபாவின் (ரஹ்) கருத்துப்படி முஸ்லிம்கள் அச்சமின்றி பாதுகாப்பாக, பெரும்பான்மையாக வாழும் எந்த ஒரு நாட்டையும் தாருல் இஸ்லாமாக கருத முடியும். இந்த வகையில் இன்றைய பெரும்பாலான முஸ்லிம் நாடுகளை தாருல் இஸ்லாமாக கொள்ள முடிகின்றது.

   2. தாருல் குப்ர்:

தாருல் குப்ரை வரைவிலக்கணப்படுத்துவதிலும் சட்ட அறிஞர்கள் மத்தியில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. பொதுவாக நோக்குமிடத்து பின்வரும் பண்புகளைக் கொண்ட பூமியை தாருல் குப்ர் என அடையாளப்படுத்தலாம்.

     முஸ்லிம்களின் ஆட்சியதிகாரம் இல்லாத பூமி
     ஷரீஅத் சட்டங்கள் அமுலில்லாத பூமி

தற்கால உலகில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகள் அனைத்தும் தாருல் குப்ர் எனும் வட்டத்திற்குள் அடங்குபவையாகவே அமைந்துள்ளன. இத்தகைய தாருல் குப்ரில் அல்லது முஸ்லிமல்லாத நாட்டில் அல்லது சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழ்வது தொடர்பாக ஷரீஆவின் நோக்கு என்ன என்பது தொடர்ந்து ஆராயப்படுகின்றது. பொதுவாக தாருல் குப்ரில் வாழ்வது தொடர்பாக ஆரம்பகால சட்ட அறிஞர்கள் மத்தியில் எதிரும் புதிருமான நிலைப்பாடுகள் நிலவிவந்துள்ளன. மாலிகி மத்ஹபை சார்ந்தோரும் இமாம் இப்னு ஹஸ்ம் முதலான அறிஞர்கள் தாருல் குப்ரில் வாழ்வதை ஹராம் என்றும், தாருல் இஸ்லாத்தை நோக்கி ஹிஜ்ரத் மேற்கொள்வது வாஜிப் என்றும் கருதுகின்றனர். (பார்க்க: அல்பயான் வத்தஹ்ஸீல், அபுல்வலீத் இப்னு ருஷ்த்) ஆயினும் ஹனபிய்யாக்கள், ஷாபிஇய்யாக்கள், ஹன்பலி மத்ஹபை சார்ந்தோர் உட்பட பெரும்பாலான சட்டமேதைகள் இதற்கு மாற்றமான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். (பார்க்க: அஹ்காமுல் குர்ஆன், அல்ஜஸ்ஸாஸ்)

ஒரு முஸ்லிம் தனது மார்க்கத்தை வெளிப்படுத்த முடியாத அளவுக்கு பலயீனனாக இருக்கும் நிலையிலேயே அவர் தாருல் குப்ரில் வாழ்வது ஹராமானதாக கொள்ளப்படும். மாறாக தனது மார்க்கத்தை வெளிப்படுத்தக்கூடிய நிலையிலும் தனக்கான பாதுகாப்பைப் பெற்ற நிலையிலும் இருக்கின்ற ஒருவர் தாருல் குப்ரில் வாழ்வதற்கு எத்தகைய ஷரீஅத் ரீதியான தடையும் இல்லையென்பதே மேற்கண்ட சட்ட மேதைகளின் நிலைப்பாடாகும். இவர்கள் தமது வாதத்திற்கு சார்ப்பாக பின்வரும் சான்றாதாரங்களை முன்வைக்கின்றனர்.

1. ''யார் (தங்கள் மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாதவாறு தாருல் குப்ரில் இருந்து கொண்டு) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனரோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும் போது (அவர்களை நோக்கி மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற முடியாத நாட்டில்) 'நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்;' என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள் 'அந்த பூமியில் நாங்கள் பலயீனமானவர்களாகவே இருந்தோம்' என்று பதில் கூறுவார்கள். (அதற்கு மலக்குகள்) 'அல்லாஹ்வுடைய பூமி விசாலமுடையதல்லவா? நீங்கள் அவ்விடத்தை விட்டு வெளிப்பட்டிருக்க வேண்டாமா?' என்று கேட்பார்கள். இத்தகையோர் தங்குமிடம் நரகம் தான். செல்லுமிடங்களில் அது மிகவும் கெட்டது. எனினும் ஆண், பெண், குழந்தைகள் ஆகியவர்களில் பலயீனமானவர்கள் எத்தகைய வழியும் தேடிக்கொள்ள முடியாமல் (அதைவிட்டு வெளிப்படவும்) வழிகாணாமல் இருந்தால் அத்தகையோரை அல்லாஹ் மன்னித்துவிடக் கூடும். ஏனெனில் அல்லாஹ் மிக மன்னிப்போனும் பிழைபொறுப்போனுமாயும் இருக்கின்றான்.''(5 : 97-99)

இவ்வசனம், தனது சன்மார்க்கத்தை நிலைநாட்ட முடியாத இடத்திலிருந்து ஒருவர் ஹிஜ்ரத் செய்ய வேண்டுமென்பதற்கு ஆதாரமாக விளங்குகின்றதென இமாம் பைழாவி விளக்குகின்றார்.

'மார்க்கத்தை நிலைநாட்ட முடியாமல் இருந்து, ஹிஜ்ரத் செய்யக் கூடிய வாய்ப்பு இருந்தும் அவ்வாறு ஹிஜ்ரத் மேற்கொள்ளாமல் முஷ்ரிக்குகள் மத்தியில் தொடர்ந்தும் வாழ்ந்து வருபவரைப் பற்றியே இவ்வசனம் பேசுகின்றது. இத்தகையோர் தமக்குத்தாமே, தீங்கிழைத்துக் கொண்டு பெரும் பாவத்தை செய்தவர்கள் என்பதை இவ்வசனம் முடிவாகச் சொல்லுகின்றது' என இமாம் இப்னு கஸீர் கூறுகின்றார்.

தனது சன்மார்க்கத்தை வெளிக்காட்டுமளவுக்கும் அதன் கடமைகளை நிறைவேற்றக் கூடிய வகையிலும் பலம் பெற்றிருப்போர் தாருல் குப்ரில் வாழலாம் என்பதற்கு இந்த அல்குர்ஆன் வசனம் ஆதாரமாகக் கொள்ளத்தக்கதாகும்.

2. நபியவர்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொள்ளக்கூடிய வசதியிருந்தும் அவ்வாறு செல்லாமல் மக்காவில் தங்கிய சில சஹாபாக்களை ஆட்சேபிக்காமல் அங்கீகரித்தார்கள். இவ்வேளையில் மக்கா தாருல் குப்ராகவே விளங்கியது. இது பற்றி இமாம் ஷாபிஈ (ரஹ்) பின்வருமாறு விளக்குகின்றார்: ''ஹிஜ்ரத், அதனை மேற்கொள்ளக்கூடிய சக்தியுள்ளவருக்கே கடமையாகும்;. அதிலும் அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பூமியில் தனது தீனை நிலைநாட்ட முடியாத நிலையில் இருத்தல் வேண்டும் என்பதையே நபியவர்களின் ஸுன்னா உணர்த்தி நிற்கின்றது. ஏனெனில் அன்னார் இஸ்லாத்தை தழுவிய பின்னரும் சிலரை மக்காவில் தொடர்ந்தும் வாழ்வதற்கு அனுமதித்தார்கள். இந்த வகையிலேயே பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் அச்சுறுத்தல் காணப்படாத அப்பாஸ் (ரழி) முதலானோர் மக்காவில் தொடர்ந்தும் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.''

3. நுஅய்ம் இப்னு அப்தில்லாஹ் அந்நஹ்ஹாம் என்ற நபித்தோழர் ஹிஜ்ரத் மேற்கொள்ள இருந்த வேளையில் அவருடைய கோத்திரத்தவர்களான பனூ அதீ கோத்திரத்தவர்கள் அவரிடம் வந்து 'நீர் உமது மார்க்கத்தை பின்பற்றிக் கொண்டு எம்முடன் வாழலாம். உமக்கு எத்தீங்கும் வராதவண்ணம் நாம் பாதுகாப்போம். நீர் எமது கோத்திரத்தவர்களில் அநாதைகளையும், விதவைகளையும் பராமரித்து வந்தமைக்கு பிரதியுபகாரமாக இதை நாம் செய்கின்றோம் என்று கூறினர். இதனால் அவரும் சற்று காலம் தன் ஊரிலேயே தங்கினார். சிறிது காலத்தின் பின்னர் ஹிஜ்ரத் மேற்கொண்டு மதீனாவைப் போய் அடைந்தார். அவரை வரவேற்ற நபியவர்கள், 'எனது சமூகத்தை விட உமது சமூகம் மேலானவர்களாவர். எனது சமூகத்தவர்களோ என்னை ஊரிலிருந்து வெளியேற்றினர். என்னைக் கொலை செய்யவும் முயன்றனர். உமது சமூகமோ உமக்கு அபயம் அளித்து பாதுகாப்பு தந்தனர்' எனக் கூறினார்கள். அதற்கு அவர், 'அல்லாஹ்வின் தூதரே அப்படியல்ல, உங்களது சமூகம் நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்படவும், அவனது எதிரியுடன் போராடவுமே உங்களை ஊரில் இருந்து வெளியேற்றியது' எனக் கூறினார்.'' ஆதாரம்: தபகாத் இப்னு ஸஃத் (இந்த ஹதீஸை பலயீனமானது என கூறுவோரும் உளர்)

4. அபீஸீனிய மன்னராக இருந்த நஜ்ஜாஷி, ரஸுலுல்லாஹ்வின் காலத்தில் இஸ்லாத்தை தழுவிய போதும் தொடர்ந்தும் தாருல் குப்ராக இருந்த தனது நாட்டிலேயே வாழ்ந்து அங்கேயே மரணமானார். நபியவர்கள் அவரின் மரணச்செய்தியை கேள்விப்பட்ட போது அவருக்காக ஜனாஸா தொழுகையை நிறைவேற்றி விட்டு, 'இன்று ஒரு நல்ல (ஸாலிஹான) மனிதர் மரணமடைந்து விட்டார்' எனக் கூறினார்கள். (ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி)

5. புதைக் என்ற நபித்தோழர் நபியவரிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே ஹிஜ்ரத் செய்யாதவர் நாசமடைந்து விட்டார் என மக்கள் நினைக்கின்றார்களே?' என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர், 'புதைக்கே! தொழுகையை நிலைநாட்டுவீராக. ஸக்காத்தை கொடுத்து வருவீராக. பாவத்தை தவிர்ந்து வாழ்வீராக. உமது சமூகத்தின் ஊரில் நீர் விரும்பிய இடத்தில் குடியிருப்பீராக. அப்போது நீர் ஹிஜ்ரத் மேற்கொண்டவராவீர்' என்றார்கள். (ஆதாரம்: ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

6. புரைதா அல்அஸ்லமி (ரழி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்: ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஒரு படைக்கு ஒருவரை தளபதியாக நியமித்து அனுப்பும் வேளையில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறும் அவருடன் இருக்கும் முஸ்லிம்களை நலல முறையில் நடாத்துமாறும் உபதேசம் செய்துவிட்டு பின்வருமாறு சொல்வார்கள்: ''அல்லாஹ்வின் பெயரால் அல்லாஹ்வின் பாதையில் போராடச் செல்லுங்கள். அல்லாஹ்வை நிராகரித்தவரோடு யுத்தம் புரியுங்கள். நீங்கள் முஷ்ரிக்கான உங்களின் எதிரிகளை சந்தித்தால் மூன்றில் ஒன்றின் பால் அவர்களை அழையுங்கள். அதில் ஒன்றை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர்களை அங்கீகரித்து அவர்களை விட்டுவிடுங்கள். முதலில் அவர்களை அவர்களின் பூமியில் இருந்து முஹாஜிரீன்களின் பூமிக்கு வருமாறு அழையுங்கள். அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டால் முஹாஜிரீன்களுக்குரிய அனைத்து உரிமைகளும் அவர்களுக்கும் உண்டு எனக் கூறுங்கள். அவர்கள் அதனை ஏற்க மறுத்து தாம் தமது ஊரிலேயே வாழப்போவதாக கூறினால், அவர்கள் நாட்டுப்புற அஃராப் முஸ்லிம்கள் போல் கருதப்படுவர் என்றும் முஃமின்களுக்கான இறைச்சட்டமே அவர்கள் மீதும் அமுல்படுத்தப்படும் என்றும் கூறுங்கள். ஆயினும் 'பைஉ', 'கனீமத்' ஆகியவற்றில் அவர்களுக்கு எத்தகைய பங்கும் கிடைக்காது என்றும் கூறுங்கள்.'' (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம், ஸுனனுத்திர்மிதி, ஸுனனு அபீதாவூத்)

7.''ஊர்கள் அனைத்தும் அல்லாஹ்வின் ஊர்களாகும். அடியார்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடியார்களாவர். எனவே நீர் எங்கு நன்மையைக் கண்டீரோ அங்கு தங்கிவிடும்.'' இது ஒரு பலயீனமான ஹதீஸ் என்பர். (ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்)

8.முதலாவது ஹிஜ்ரத் அபீஸீனியாவிற்கு மேற்கொள்ளப்பட்டது. நபியவர்களின் கட்டளையின் படி ஆரம்ப முஸ்லிம்கள் அங்குப் போய் தங்கினர். ஆனால் அக்காலத்தில் அபீஸீனியா தாருல் இஸ்லாமாக இருக்கவில்லை.

9.இன்று தாருல் குப்ர் பற்றிய எண்ணக்கரு முன்னைய காலத்து நிலையில் இருந்து மாறுபட்டுள்ளது. இன்று முஸ்லிம் அல்லாத ஒரு நாட்டுக்கு புலம்பெயருபவர் அவரது மதம் பற்றி நோக்கப்படாமல் உள்நாட்டு குடிமகன் பெறும் சட்ட ரீதியான முழுப்பாதுகாப்பையும் பெறக்கூடியவராய் உள்ளார்.

10. இன்று உலக நாடுகள் பலவற்றில் இஸ்லாம் பரவுவதற்கு அந்நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களின் முயற்சியே பிரதான காரணமாகும். தாருல் குப்ரில் வாழ்வது கூடாது என தடைசெய்யப்படுகின்றபோது அடிப்படைக் கடமைகளில் ஒன்றான இஸ்லாமிய தஃவாப் பணி பாதிப்புக்குட்படும்.

11. முஸ்லிம்கள் ஒரு நாட்டில் சிறுபான்மையினராக வாழ்வது பற்றிய அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் சட்டத்தீர்ப்பு பின்வருமாறு:

''ஒரு சமய சார்பற்ற நாடாயினும் அல்லது இஸ்லாமல்லாத மற்றொரு மதத்தை சமயமாகக் கொண்ட நாடாயினும் அங்கு ஒரு முஸ்லிமுக்கு தனது மார்க்கத்திற்கான பாதுகாப்பும் மார்க்க கடமைகளை சுதந்திரமாக நிறைவேற்றும் சந்தர்ப்பமும் காணப்படின், அங்கு அவர் வாழலாம். ஆனால் அவரது மார்க்கத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ அல்லது பொருள், மானம் ஆகியனவற்றிற்கோ உரிய பாதுகாப்பு இல்லையெனக் காணும் நிலையில் பாதுகாப்பான ஒரு நாட்டுக்கு புலம்பெயர்வது கடமையாகும்.'' (ஆதாரம்: அல் அஸ்ஹர் சஞ்சிகை, ஆறாம் பாகம், டிசம்பர், ஜனவரி, 1991)

12. இமாம் அல்மாவர்தி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

''ஒருவருக்கு தாருல் குப்ரில் தனக்கென ஒரு குடும்பமும், குலமும் உருவாகி அங்கு தனது மார்க்கத்தைப் பின்பற்றி வாழக்கூடிய நிலையும் இருந்தால் அங்கிருந்து அவர் ஹிஜ்ரத் செய்வது கூடாது. ஏனெனில், அவர் இப்போது வாழும் இடமே அவரைப் பொறுத்தவரையில் அவருக்குரிய தாருல் இஸ்லாமாகும்.'' (பார்க்க: புஸ்தானுல் ஆரிபீன், இமாம் நவவி (ரஹ்))

தாருல் குப்ரில் வாழலாகாது என்பதற்கான ஆதாரங்கள்:

தாருல் குப்ரில் வாழலாகாது எனக் குறிப்பிடும் சில ஆரம்ப கால சட்டஅறிஞர்களுடைய (புகஹாக்களுடைய) வாதம் அக்கால நிலையை கருத்திற் கொண்டு முன்வைக்கப்பட்டதாகவே கொள்ள முடியும். அவர்கள் தம் வாதத்திற்கு முன்வைக்கின்ற கருத்துக்கள் இன்றைய உலக ஒழுங்குக்கு பொருத்தமற்றவையாகும். அவர்கள் தம் வாதத்தை நிறுவ முன்வைத்துள்ள குர்ஆன், ஸுன்னா வாக்கியங்களும் அவர்களது வாதத்தை நிறுவுவதற்கான தெளிவான சான்றாதாரங்களாக அமையவில்லை. உதாரணமாக பின்வரும் அல்குர்ஆன் வசனம் ஒருவர் தாருல் குப்ரில் வாழ்வதை தடைசெய்வதாக அவர்கள் கருதினர்.

''அல்லாஹ்வுடைய பாதையில் எவர் (தான் இருந்த இடத்தை விட்டு) வெளியேறி செல்கின்றாரோ அவர் பூமியில் வசதியான பல இடங்களையும் சௌகரியங்களையும் அடைவார்.'' (4:100)

இவ்வசனம் தாருல் குப்ரில் ஒரு முஸ்லிம் வாழ்வதை தடை செய்வதாக அமைகின்றது என அவர்கள் வாதிட்ட போதிலும் இது வெறுமனே ஹிஜ்ரத் மேற்கொள்வதற்கான ஒரு தூண்டுதலாக மட்டுமே அமைகின்றது என இமாம் இப்னு கஸீர் விளக்கம் அளிக்கின்றார்.

''நான் முஷ்ரிக்குகள் மத்தியில் வாழுகின்ற எந்த ஒரு முஸ்லிமிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் நீங்கியவனாவேன்'' ( ஆதாரம்: திர்மிதி)

''எவர் முஷ்ரிக்குடன் சேர்ந்து கூடி வாழ்கின்றாரோ அவர் அவரைப் போன்றவராவார்.'' (ஆதாரம்: அபூதாவூத்)

இவ்விரு ஹதீஸ்களும் காபிர்களுடன் சேர்ந்து வாழ்வதைத் தடைசெய்வதோடு, அவர்களை விட்டும் பிரிந்து ஹிஜ்ரத் மேற்கொள்வதை விதியாக்குவதாக குறித்த அறிஞர்கள் வாதிடுகின்றனர். ஆயினும், இவ்விரு ஹதீஸ்களும் தாருல் குப்ரில் தனது சன்மார்க்க கடமைகளை நிறைவேற்ற முடியாதவாறு அடக்கி ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் முஸ்லிமையும், முஷ்ரிக்குகளோடு வாழ்ந்து இஸ்லாத்திற்கு எதிராக செயற்பட அவர்களுக்கு துணைபோகின்ற முஸ்லிமையுமே குறிக்கும் என அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றனர். நபியவர்கள் தனக்கும் தனது தோழர்களுக்கும் பாதுகாப்பு இல்லை எனக் கண்ட போதே மக்காவில் இருந்து ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள். இந்நிலையில் தன்னோடு மதீனாவிற்கு வராமல் தொடர்ந்தும் மக்காவில் தங்கியிருந்த தோழர்களை குறித்தே தாம் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு பொறுப்பானவர் அல்ல என்ற கருத்திலேயே மேற்கூறிய முதலாம் ஹதீஸை குறிப்பிட்டார்கள் என்றும் விளக்கம் அளிக்கப்படுகின்றது.

எனவே இதுவரை கலந்துரையாடிய விடயங்களில் இருந்து உலகின் எப் பாகத்திலும் முஸ்லிம்கள் - தமது தனித்துவத்தை பாதுகாத்துக் கொள்வதற்கும் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதற்குமான சூழல் காணப்படும் நிலையில் சிறுதொகையினராகவோ, பெருந் தொகையினராகவோ வாழ்வதற்கான அனுமதியை ஷரீஅத் வழங்குகின்றது என்ற தெளிவு பெறப்படுகின்றது.

பிற சமூகங்களுடான உறவு பற்றிய ஷரீஆ கண்ணோட்டம்:

ஒரு சிறூபன்மை முஸ்லிம் சமூகம் எப்போதும் ஒரு பல்லின, பல்சமய சமூகத்திலேயே வாழ்ந்து வரும் என்ற வகையில் தம்மோடு வாழும் பிற சமூகத்தவரோடும், சமயத்தவரோடும் பேண வேண்டிய உறவுகள் பற்றிய ஷரீஆ கண்ணோட்டம் யாது என்பதை அறிவதும் முக்கியத்துவம் பெறும் ஒரு விடயமாகும். அந்த வகையில் இவ்வாய்வில் இறுதியாக இவ்வம்சம் ஆராயப்படுகின்றது.

முஸ்லிமல்லாதார் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. முஸ்லிம்களுடன் வாழும் முஸ்லிமல்லாதாரின் உரிமைகள், சலுகைகள் பற்றி இஸ்லாமிய சடட மூலாதாரங்கள் விரிவாகப் பேசுகின்றன. இவை வெறும் சித்தாந்தங்களாக வார்த்தையளவில் நின்று விடாமல், முஸ்லிம்களின் ஆட்சி உலகில் நிலவிய காலமெல்லாம் மிகச் சிறப்பாகச் செயற்படுத்தப்பட்டன என்பதற்கு வரலாறு சான்றாக விளங்குகின்றது.

பொதுவாக கி.பி. 1789 ஆம் ஆண்டு இடம் பெற்ற பிரான்சிய புரட்சியின் அடியாக வகுக்கப்பட்ட கொள்கையை தொடர்ந்தே மனித உரிமைகள் பற்றிய சிந்தனை முதல் தடவையாக உருப்பெற்றது என்றும், அதன் அடியாகவே 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உலக மனித உரிமைகள் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்டது எனவும் கூறுவர். ஆயினும் மனித உரிமைகள் பற்றிய கொள்கை வகுப்பதிலும் செயல்படுத்துவதிலும் இஸ்லாம் முன்னோடியாக அமைந்தது என்பதை வரலாற்றை காய்த்தல் உவத்தல் இன்றி நோக்குகின்ற எவரும் மறுக்க முடியாது. (பார்க்க: Rights of non Muslims, Hussain Hamid Hassan, P.2)

இஸ்லாத்தில் மதச்சகிப்புத் தன்மை போதிக்கப்படவில்லை. முஸ்லிமல்லாதவதாருக்கான குறைந்த பட்ச மனித உரிமைகளாயினும் இஸ்லாத்தினால் வழங்கப்படவில்லை. சமய ரீதியில் முரண்படுபவர்களுடன் மிகக் கடுமையான ஒரு போக்கையே முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் கடைபிடித்து வந்துள்ளனர் என்றெல்லாம் அறிந்தோ அறியாமலோ இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் பல் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்துள்ளன. உண்மையில் முஸ்லிம் அல்லாதாருக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் பற்றி இஸ்லாமிய மூலாதாரங்கள் குறிப்பிடும் விடயங்களையும் வரலாற்றில் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழ்ந்த அவர்கள் நடாத்தப்பட்ட பாங்கினையும் அறிந்து கொள்பவர்கள், குறித்த குற்றச்சாட்டுக்கள் எவ்வளவு தூரம் அபத்தமானவை என புரிந்துகொள்வர்.

முஹம்மத் நபியவர்கள் முழு மனித சமுதாயத்திற்கும் அருளாக வந்தவர்கள் என்ற வகையில் இன,மத,மொழி, பிரதேச வேறுபாடுகளையோ பாகுபாடுகளையோ பாராட்டாது எல்லோருக்கும் சமநீதியை வழங்க வேண்டுமென்பதில் விழிப்புடன் இருந்தார்கள். இதனால் எப்போதும் முஸ்லிம்களுடன், முஸ்லிமல்லாதாரின் பாதுகாப்பிற்கும் அன்னாரினால் பூரண உத்தரவாதம் அளிக்கப்பட்டது. பின்வரும் நபிமொழி இங்கு மேற்கோள் காட்டத்தக்கதாகும்.

''எவர் (முஸ்லிமல்லாத) உடன்படிக்கை செய்து கொண்டிருக்கின்ற ஒருவருக்கு அநீதியிழைக்கின்றாரோ அல்லது அவரின் உரிமையை குறைக்கின்றாரோ அலலது அவரது சக்திக்கு மேல் அவருக்கு பொறுப்புக்களை சுமத்துகின்றாரோ அல்லது அவரின் மனவிருப்பின்றி அவரிடம் இருந்து ஏதேனுமொன்றை பெறுகின்றாரோ அவருக்கு எதிராக மறுமையில் நான் வாதிடுபவனாக இருப்பேன்.'' (ஆதாரம்: அபூதாவூத்)

விலக்களை குறிக்கின்ற அதிவன்மையான வசன அமைப்பில் இந்நபிமொழி அமைந்திருக்கிறது. பிற மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அநீதியிழைத்தல் அல்லது அவரது சக்திக்கு மேல் ஒன்றைச் செய்யுமாறு அவரைப் பணித்தல் அல்லது அவரின் நியாயமானதோர் உரிமையை பறித்தல் முதலான அத்துமீறல்களில் ஈடுபடுபவர்களை இந்நபி மொழி எவ்வளவு தூரம் கடுமையாக எச்சரிக்கின்றது என்பதனை அவதானிக்கலாம். மற்றுமொரு நபிமொழி பின்வருமாறு:

''எவர் முஸ்லிமல்லாத சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை இம்சிக்கின்றாரோ நான் அவரது எதிரியாவேன். நான் எவரது எதிரியாக இருக்கின்றேனோ மறுமையில் அவருக்கெதிராக வாதிடுபவனாக இருப்பேன்.'' (தாரீகு பக்தாத் - அல்கதீபுல் பக்தாதி)

''எவர் உடன்படிக்கை செய்து வாழும் ஒரு முஸ்லிமல்லாத ஒருவரைக் கொலை செய்கிறாரோ அவர் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார். அவரைப் பொறுத்தவரையில் சுவனத்தின் வாடை நாற்பது ஆண்டு தொலைவில் இருக்கும்.'' (ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி)

இவ்வாறு முஸ்லிமல்லாதாரின் ஓர் உரிமையில் கூட கை வைப்பதனை அல்லது அவர்களுக்கு அநீதி இழைப்பதனை ஒரு பெரும் குற்றச் செயலாகவும் பெரும் பாவமாகவும் கருதுகின்ற தனித்துவமான மார்க்கமாக இஸ்லாம் விளங்குகின்றது.

இஸ்லாத்தில் பிறசமயத்தவரின் உரிமைகள் எவ்வளவு தூரம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கு கிறிஸ்தவர்களாக இருந்த நஜ்ரான் வாசிகளுடன் நபி (ஸல்) அவர்கள் செய்து கொண்ட உடன்படிக்கை மற்றுமொரு சான்றாகும். அவ்வுடன்படிக்கையின் உள்ளடக்கம் பின்வருமாறு:

''நஜ்ரான் வாசிகளும் அவர்களைச் சேர்ந்தோரும் அல்லாஹ்வின் பாதுகாப்பிலும் அவனது நபியும், ரஸுலுமான முஹம்மதுடைய பொறுப்பிலும் இருப்பர். அவர்களின் உயிர்,சமயம், நிலம், உடமைகள் உட்பட அவர்களில் (இங்கு) இருப்பவர்கள், இல்லாதவர்கள் அடங்கலாக அவர்களின் வணக்கஸ்தலங்கள், வழிபாடுகள் ஆகிய அனைத்திற்கும், அனைவருக்கும் இப்பாதுகாப்பும் பொறுப்புமுண்டு. மேலும் எந்த ஒரு மதகுருவும் அல்லது துறவியும் அவரது நிலையில் இருந்து நீக்கப்பட மாட்டார். அவ்வாறே எந்த ஒரு மதக்கடமையை நிறைவேற்றுபவரும் அக்கடமையை நிறைவேற்றுவதில் இருந்தும் தடுக்கப்பட மாட்டார். சட்ட பூர்வமாக அவர்களின் கைகளில் உள்ள சிறிய, பெரிய அனைத்தும் அவர்களுக்கே சொந்தமானவையாகும். அது வட்டியுடனும் ஜாஹிலிய்யாக்கால பழிக்குப்பழி வாங்கும் தண்டனையுடனும் தொடர்பற்றதாக இருத்தல் வேண்டும். ஒருவர் இவர்களிடம் இருந்து ஒர் உரிமையை கோரினால் இருத்தரப்பினருக்கும் எத்தகைய பாதிப்பும் ஏற்படாதவண்ணம் நீதியான முறையில் அது தீர்த்து வைக்கப்படும். இவ்வுடன்படிக்கைக்கு முன்னர் எவர் வட்டி சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டாரோ அவருக்கு நான் பொருப்பானவனல்ல. மேலும் ஒருவரின் குற்றத்திற்காக மற்றொருவர் தண்டிக்கப்பட மாட்டார். இவ்வுடன்படிக்கையின் படி நடப்பதற்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் - அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை - கடமைப்பட்டவர்களாவர். மேலும் அவர்கள் தங்களுக்கு மத்தியில் எத்தகைய அநீதியும் இழைத்துக்கொள்ளாமல் சீராக நடந்துகொள்ளும் வரைக்கும் இவ்வுடன்படிக்கை நடைமுறையில் இருக்கும்.'' (இப்னு ஸஃத், அத்தபகாதுல் குப்ரா)

இவ்வுடன்படிக்கையில் இடம்பெற்றுள்ள 'ஒருவர் செய்த குற்றத்திற்காக மற்றொருவர் தண்டிக்கப்பட மாட்டார்' என்ற கருத்து சிறுபான்மையினரில் ஒருவரோ அல்லது ஒரு சிலரோ இழைக்கின்ற குற்றங்களுக்காக முழு சமூகமுமே தண்டிக்கப்பட முடியாது என்ற தற்கால உலகத்திற்கு தேவையான பிரதானமானதொரு அடிப்படை முன்வைக்கப்படுகிறது.

காபிர்களைக் கொலை செய்யுமாறும் அவர்களை சிநேகிதர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிடும் சட்ட வசனங்களை வைத்து முஸ்லிம் சமூகத்தில் முஸ்லிமல்லாதாருக்கு எத்தகைய அங்கீகாரமும் இல்லை. அவர்களின் உயிர், உடமைகளின் பாதுகாப்பிற்குக் கூட எத்தகைய உத்தரவாதமும் இல்லை என்று பிழையாகக் கூறப்படுவதுண்டு. உண்மையில் காபிர்களுடன் முஸ்லிம்களின் குறித்த நிலைப்பாடு அவர்கள் 'முஹாரிப்;' என அழைக்கப்படும் இஸ்லாத்தினதும், முஸ்லிம்களினதும் எதிரிகளாக, அவர்களுடன் போராடுபவர்களாக இருக்கின்ற நிலையில் மாத்திரமே அமைந்திருப்பதாகும். (பார்க்க: அல் ஹலால் வல் ஹராம் பில் இஸ்லாம், யூஸுப் அல்கர்ளாவி, பக்கம்; 282) எனவே இந்நிலைப்பாடு விதிவிலக்கானதொன்றாகும். எல்லா சமயத்தவர்களுடனும், இனத்தவர்களுடனும் அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போதனையின் அடிப்படையில் சமாதானமாக, சுமுகமான உறவுகளை வளர்த்துக்கொண்டு வாழ வேண்டும் என்பதே இஸ்லாத்தின் எதிர்ப்பார்ப்பாகும்.

''எதிரிகள் சமாதானமாக வாழ விரும்பினால் நீரும் அதற்கு உடன்படுவீராக'' (8:61) என்பது அல்குர்ஆனின் மூலம் அல்லாஹ் நபியவர்களுக்கு இட்ட கட்டளையாகும். முஸ்லிம்களை இம்சிக்காத, அவர்களுடன் சமாதானமாக வாழ்கின்ற காபிர்களுடன் எவ்வாறு நல்லுறவு பாராட்ட வேண்டுமென்பதையும், முஸ்லிம்களை இம்சிக்கின்ற அவர்களுக்கெதிராக போராடுகின்ற காபிர்களுடனேயே உறவுகளை துண்டித்து, மோதலில் ஈடுபட வேண்டுமென்பதனையும் பின்வரும் அல்குர்ஆன் வசனம் தெளிவாக விளக்குகின்றது.

''உங்களுக்கு எதிராக மார்க்க விடயத்தில் போராடாத, உங்கள் இல்லங்களை விட்டும் உங்களை வெளியேற்றாதவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதனையும் அவர்களுக்கு நீதி வழங்குவதனையும் அல்லாஹ் தடைசெய்யவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துபவர்களை விரும்புகிறான். நிச்சயமாக எவர் உங்களுக்கெதிராக மார்க்க விடயத்தில் போராடி உங்கள் இல்லங்களை விட்டும் உங்களை வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களோ அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதனைத்தான் அல்லாஹ் தடுக்கின்றான்.'' (ஸூறா அல் மும்தஹினா: 8)

உண்மையில் இந்த வசனங்கள் முஸ்லிம், முஸ்லிமல்லாதார் உறவு பற்றி விளக்குகின்ற இஸ்லாமிய சாசனமாக கொள்ளத்தக்கதென்று அறிஞர் யூஸுப் அல் கர்ளாவி குறிப்பிடும் கருத்து நோக்தக்தக்கதாகும். மேற்குறித்த அல் குர்ஆன் வசனம் முஸ்லிம் அல்லாதாருக்கு நன்மை செய்ய வேண்டுமென்பதைக் குறிப்பதற்கு பெற்றோருக்கு நன்மை செய்தல் என்பதனை குறிக்கின்ற 'பிர்ருன்' என்ற சொல்லை பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். மேலும் நீதியாக நடத்தல் என்ற கருத்தை தரும் 'அத்ல்' என்ற சொல்லை பயன்படுத்தாது அதனை விட ஆழமான பொருளைத் தரும் 'கிஸ்த்' என்ற பதம் முஸ்லிம்மல்லாதாருடன் நீதமாக நடந்துகொள்ள வேண்டுமென்பதை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. (பார்க்க: அல்ஹலால் வல் ஹராம் பில் இஸ்லாம்,யூஸுப் அல்கர்ளாவி, பக்கம் : 279)

உண்மையில் எல்லா பிற மதத்தவர்களுமே முஸ்லிம்களின் எதிரிகள் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாக இருப்பின், வேதத்தையுடையவர்களின் பெண்களை முஸ்லிம்கள் திருமணம் முடிப்பதற்கு இஸ்லாம் அனுமதியை அளித்திருக்க மாட்டாதல்லவா?! திருமணம் என்பது பரஸ்பர அன்பு, விசுவாசம், நம்பிக்கை ஆகிய கடப்பாடுகளை வேண்டி நிற்பதாகும் என்பது தெரிந்ததே. பின்வருவன பற்றிய இஸ்லாத்தின் கோட்பாடுகளும் பிற சமயத்தவர்கள் பற்றிய இஸ்லாத்தின் உடன்பாடான நிலைப்பாட்டுக்கு மேலும் வலுவூட்டுவனவாக அமைந்துள்ளன.

1.இறைவன் பற்றிய கோட்பாடு

2.மனிதன் பற்றிய கோட்பாடு

3.சமூகம் பற்றிய கோட்பாடு

உலகில் உள்ள அனைவரும், அனைத்தும் அல்லாஹ்வின் படைப்புக்கள் என்பதும், அல்லாஹ்வே எல்லா ஜீவராசிகளினதும் படைப்பாளன் என்பதும் இஸ்லாத்தின் அடிப்படையானதொரு கோட்பாடாகும். இந்த வகையில் முஸ்லிம்கள், காபிர்கள் அனைவரும் அல்லாஹ்வின் குடும்பத்தவர்களாக இஸ்லாத்தின் பார்வையில் கொள்ளப்படுகின்றனர். 'அனைத்துப் படைப்பினங்களும் அல்லாஹ்வின் குடும்பமாகும்' (ஆதாரம்: முஸ்னதுல் பஸ்ஸார்) என்பது நபி (ஸல்) அவர்களின் ஹதீஸாகும். மேலும் மனிதர்கள் அனைவரும் பிறக்கின்ற போது 'பித்ரா' என்ற இஸ்லாத்தை ஏற்கும் தன்மையில் பிறந்தவர்கள் என்பது இஸ்லாத்தின் கருத்தாகும்.

சமூகம் பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டத்தின்படி ஜாதி, குல வேறுபாடுகள் பாராட்டப்படுவதில்லை. உயர்ஜாதி (Masterrace) பற்றிய எண்ணக்கருவும் இஸ்லாத்தினால் நிராகரிக்கப்பட்டதாகும். எல்லோரும் ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைக்கப்பட்டவர்கள் என்ற கருத்தை இஸ்லாம் முன்வைக்கின்றது. (பார்க்க: அல்குர்ஆன் 4:1, 49:13) இஸ்லாத்தின் இத்தகைய கண்ணோட்டங்களின் காரணமாக முஸ்லிம் சமூகத்தில் வாழுகின்ற முஸ்லிமல்லாத சிறுபான்மையினருக்கு எத்தகைய பாகுபாடும் காட்டமுடியாமல் போய்விடுகிறது.

''ஒரு சமூகத்தின் மீதுள்ள வெறுப்பானது அவர்களுடன் நீங்கள் நீதியாக நடந்து கொள்வதற்கு தடையாக அமையக்கூடாது. நீங்கள் நீதியாக நடந்து கொள்ளுங்கள். அது தக்வாவுக்கு மிக நெருங்கிய நிலையாகும்.'' (5:8)

''அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையைப் பயந்து கொள்ளுங்கள், அவன் ஒரு காபிராக இருப்பினும் சரியே. அதற்கும் அல்லாஹ்வுக்குமிடையே எத்தகைய திரையுமில்லை.'' (ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்)என்ற ஹதீஸும் பிற சமூகத்தவர்களுடன் எப்போதும் முஸ்லிம்கள் நீதியாக நடந்து கொள்வதற்கு தூண்டுகோலாக அமைகின்றன.

பிறசமயத்தவர் தொடர்பான இஸ்லாத்தின் மேற்குறித்த கருத்துக்கள் எந்தளவு தூரம் இஸ்லாமிய வரலாற்றில் செயல்படுத்தப்பட்டன என்பதும் நோக்கத்தக்கதாகும்.

     நபியவர்கள் தன் சமூகத்தில் வாழ்ந்த பிறசமயத்தவர்களுடன் சுமுகமான உறவுகளை வைத்திருந்தார்கள். ஹுனைன் யுத்தத்தின் போது இஸ்லாத்தை தழுவாத நிலையில் இருந்த ஸப்வான் இப்னு உமையாவின் உதவியை நபியவர்கள் பெற்றார்கள். (ஆதாரம் : ஸுனன் ஸஈத்)

     ஹிஜ்ரத்தின் போது அப்துல்லாஹ் இப்னு உரைக்கித் என்ற முஸ்லிமல்லாதவரையே தனக்கு வழிகாட்டியாக தெரிவு செய்தார்கள். (ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி)

     ஒரு யூதரிடம் நபியவர்கள் கடன் பெற்ற வரலாறு மிகவும் பிரபல்யமானது (ஆதாரம்- புகாரி)

     முஸ்லிமல்லாத மன்னர்கள் அன்னாருக்கு அனுப்பி வைத்த அன்பளிப்புகளை மனம் உவந்து ஏற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். (ஆதாரம்: முஸ்னத் அஹ்மத், ஸு னனுத்திர்மிதி)

     ஒரு சமயத்தில் ஒரு மரண ஊர்வலத்தை கண்ட நபியவர்கள் அதற்காக எழுந்து நின்றார்கள். அது ஒரு யூதனின் மரண ஊர்வலம் என்று அன்னாருக்கு சொல்லப்பட்டது. அதற்கு அன்னார் 'அவர் ஒரு மனித ஆன்மா இல்லையா?' என்று பதிலளித்தார்கள். (ஆதாரம்; : ஸஹீஹுல் புகாரி)

உமர் (ரழி) அவர்கள் தனது இறுதிக் காலப் பகுதியில் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்:

'திம்மிகளான பிறமதத்தவருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறும், அவர்களுடனான உடன்படிக்கையை நிறைவேற்றுமாறும், அவர்களுக்காக போராடுமாறும், அவர்களின் சக்திக்கு மேல் அவர்கள் மீது பொறுப்புக்களை சுமத்தாதிருக்குமாறும் என்னை அடுத்து வரும் கலீபாவிற்கு நான் உபதேசம் புரிகின்றேன்.' (அபூயூஸுப், கிதாபுல்கராஜ், பக்கம்: 136, அபூ உபைத், கிதாபுல் அம்வால், பக்கம்:127)

கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள், அதீ இப்னு அர்தஆ என்பவருக்கு அனுப்பிவைத்த ஒரு நிருபத்தில் ஜிஸ்யா வரியை செலுத்துவதற்கு சக்தியுள்ளவர்கள் மீதே அதனை விதிக்குமாறும் திம்மிகளில் வயது முதிர்ச்சியின் காரணமாக பலவீனமுற்று உழைப்பில் ஈடுபட முடியாதவர்கள் இருப்பின், அவர்களுக்கு பைத்துல் மாலில் இருந்து நிதியுதவி வழங்குமாறும் பணித்ததோடு தனது முடிவுக்கு ஆதாரமாக பின்வரும் சம்பவத்தையும் மேற்கோள் காட்டி எழுதினார்கள். ஒரு முறை உமர் (ரழி) அவர்கள் வீடு வீடாகச் சென்று யாசகம் கேட்டுக்கொண்டிருந்த ஒரு திம்மி வயோதிபரைக் கண்டார்கள். அவரைப் பார்த்து உமர் (ரழி) அவர்கள் 'உமக்கு நாம் நீதி செலுத்தவில்லை. உமது இளமைப்பருவத்தில் உம்மிடம் இருந்து ஜிஸ்யாவைப் பெற்றுக் கொண்ட நாம் உமது வயோதிப பருவத்திலோ உம்மை பராமரிக்காது வீணே விட்டு விட்டோம்' என்று கூறி விட்டு பைத்துல் மாலில் இருந்து அவருக்கு தேவைப்படும் நிதியுதவியை வழங்குமாறு பணித்தார்கள். (அபூ உபைத், அல்அம்வால், பக்கம்:48)

ஆரம்ப கால இஸ்லாமிய சமூகத்தில் வாழ்ந்த முஸ்லிமல்லாத சிறுபான்மையினர் அச்சமூகத்தில் எத்தகைய பாதுகாப்பையும் காப்புறுதியையும் பெற்றுக் கொண்டார்கள் என்பதற்கு மேற்குறிப்பிட்ட விடயம் ஓர் உயர்ந்த சான்றாகும். அன்றைய இஸ்லாமிய சமூகத்தில் வாழ்ந்த முஸ்லிமல்லாதாருக்கு வயோதிபம், வறுமை, நோய், பிற அனர்த்தங்கள், தொழிலின்மை போன்ற நிலைமைகளில் இஸ்லாமிய அரசினால் பூரண காப்புறுதி வழங்கப்பட்டமையை காண முடிகின்றது. காலித் இப்னுல் வலீத் (ரழி) அவர்கள் ஈராக்கின் ஒரு பிரதேசத்தை கைப்பற்றியதையடுத்து அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இடம்பெற்ற பின்வரும் விடயம் மேற்குறித்த கருத்துக்கு மற்றுமோர் ஆதாரமாகும்.

'ஒரு வயோதிபர் தொழில் செய்ய முடியாத நிலையை அடைந்துவிட்டால் அல்லது அவருக்கு வேறு ஏதேனும் அனர்த்தம் நிகழ்ந்து விட்டால் அல்லது செல்வந்தரராக இருந்தும் வறுமை வந்துவிட்டால், இந்நிலைகளில் ஏதேனும் ஏற்பட்டு அவரின் சமயத்தவர்கள் அவருக்கு தர்மம் வழங்குகின்ற நிலை உருவாகி இருந்தால் அவரிடமிருந்து ஜிஸ்யா வரி அறவிடப்படமாட்டாது. மாறாக, அவருக்கு பைதுல்மாலிருந்து நிதியுதவி வழங்கப்படும்.' (அபூயூஸுப், கிதாபுல் கராஜ், பக்கம்: 155,156)

பொதுவாக இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிமல்லாத சிறுபான்மையினர் மீது விதிக்கப்படுகின்ற இந்த ஜிஸ்யா வரியை வைத்து சிலர் இஸ்லாத்தை விமர்சிப்பதுண்டு. இதனை உதாரணமாகக் காட்டி இஸ்லாத்தில் சிறுபான்மையினருக்குரிய இடம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுவதுமுண்டு. எனவே ஜிஸ்யா வரியைப் பற்றிய உண்மையான பின்னணியை இங்கு சற்று நோக்குவது பயனுள்ளதாக அமையும்.

உண்மையில் திம்மிகளிலுள்ள உடலாரோக்கியமுடைய, உழைப்பிலீடுபட்டுள்ள ஆண்கள் மீது மாத்திரமே ஜிஸ்யா விதிக்கப்பட்டுள்ளது. மதகுருமார், சிறார்கள், பெண்கள், பலவீனமுற்ற வயோதிபர்கள், நிரந்தர நோயாளிகள், உழைப்பில் ஈடுபடமுடியாதவர்கள் போன்றோருக்கு ஜிஸ்யா விதியாவதில்லை. (அபூயூஸுப், கிதாபுல் கராஜ் பக்கம்: 131, 132) மேலும் ஜிஸ்யா வரிக்கான தொகை மிகவும் குறைந்ததாகும். சக்தியுள்ளவர்களே அதனைச் செலுத்த வேண்டுமென்றிருப்பதனால் அது எவருக்கும் சுமையாக இருக்கப்போவதில்லை. மேலும் சிறுபான்மையினர் இஸ்லாமிய அரசுக்கு செலுத்துகின்ற மிகக் குறைந்தபட்ச பங்களிப்பாகவே இது அமைகின்றது. இதேவேளையில் பெரும்பான்மையினரான முஸ்லிம்களோ இதனைவிட பல மடங்கு பங்களிப்புக்களைச் செய்ய கடமைப்பட்டிருக்கின்றார்கள். உதாரணமாக: இஸ்லாமிய ஆட்சியில் ஒரு முஸ்லிம் செல்வந்தனிடம் ஒரு மில்லியன் ரூபாய் இருந்தால் அவர் இருபத்து ஐயாயிரம் ரூபாயை ஸக்காத்தாக இஸ்லாமிய அரசுக்கு செலுத்த வேண்டி இருக்கும். அதே வேளையில் அவரின் பக்கத்து வீட்டில் ஒரு கிறிஸ்தவரிடம் ஒரு மில்லியன் ரூபாய் இருப்பின் அரசுக்கு ஜிஸ்யா வரியாக முழுவருடத்திற்குமான 48 ரூபாய்களையே அவர் செலுத்தக் கடமைப்பட்டவராயிருப்பார். அதாவது ஒரு முஸ்லிம் இஸ்லாமிய அரசிற்கு ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவரை விட சுமார் 500 மடங்கிற்கும் மேற்பட்ட தொகையை செலுத்த வேண்டியவராயுள்ளார். (பார்க்க: மேற்படி நூல் பக்கம்:132) இக்கருத்திற்கு பின்வரும் மேற்கோள் ஆதாரமாக விளங்குகின்றது.

''வசதியுடையவர் 48 திர்ஹங்களையும், மத்திமமானவர் 24 திர்ஹங்களையும், தேவையுடையவராக இருக்கின்ற கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர் 12 திர்ஹங்களையும் ஜிஸ்யாவாக வழங்க வேண்டும். இத்தொகை வருடாவருடம் பெறப்படும்'' (மேற்படி நூல், பக்கம்:132)

திம்மிகள், இஸ்லாமிய ஆட்சியில் இஸ்லாமிய பிரசாரத்தில் ஈடுபடுமாறோ, ஜிஹாதில் கலந்து கொள்ளுமாறோ இவற்றிற்காக பண உதவிகள் வழங்குமாறோ வேண்டப்படுவதில்லை. அவர்களின் மதச் சுதந்திரத்திற்கான உத்தரவாதமாக இது அமைகின்றது. இச்சலுகைகளுக்கு ஓரளவு பிரதியீடாகவும் ஜிஸ்யா வரி அமைக்கப்பட்டுள்ளது. முஸ்லிமுடைய உழைப்பு, உயிர், பொருள், தியாகம் முதலானவற்றிற்கு முன்னால் ஒரு திம்மி வழங்குகின்ற சில ரூபாய்கள் என்ன பெறுமதியுடையதாக இருக்க முடியும்?! மேலும் திம்மிகள் சுதந்திரமாக விவசாயத்திலும் பிற வர்த்தக வாணிப தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில், முஸ்லிம் முஜாஹித்களோ நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையில் உயிரை பணயம் வைத்து ஈடுபட்டிருப்பார்கள். அவர்களின் இத்தியாகத்தின் காரணமாகவே திம்மிகளது பொருளாதார நடவடிக்கைகள் இடைநிறுத் தப்படாமலும் இழப்புக்களைச் சந்திக்காமலும் இலாபகரமாக அமைவதற்கு வழியேற்படுகிறது. இத்தகைய பாதுகாப்பிற்காக ஆட்சியின் செலவுகளுக்காக ஒரு சிறு தொகையை பங்களிப்புச் செய்வது எல்லா வகையிலும் நியாயமானதே.

இஸ்லாத்தை விமர்சிக்கும் மற்றும் சிலர், ஜிஸ்யா செல்வத்திற்கான வரியாக அன்றி, தலைகளுக்கான வரியாக அமைந்துள்ளதோடு, திம்மி தனிநபர்கள் மாத்திரமே இதனை செலுத்த வேண்டியும் இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு இத்தகையதொரு வரி இல்லாமையினால் இவ்வமைப்பு சிறுபான்மையினருக்கு எதிராக இழைக்கப்படும் ஓர் அநீதி என்றும் கூறுகின்றனர். உண்மையில் இக்குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. ஏனெனில், இது போன்ற தலைகள் மீதான ஒரு வரி முஸ்லிம்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. அதுவே ஸகாதுல் பித்ர் ஆகும். இதனை முஸ்லிம் ஆண், பெண், சிறியோர், பெரியோர், சுதந்திரமானவர், அடிமைகள், ஆரோக்கியமுடையோர், நோயாளிகள், உழைப்பில் ஈடுபடும் சக்தியுள்ளோர், சக்தியற்றோர் அனைவரும் - பொறுப்பாளர் இதனை செலுத்தும் சக்தி பெற்றவராக இருக்கும் நிலையில் - நிறைவேற்றுவது கடமையாகும். ஆனால் ஜிஸ்யாவோ உழைக்கும் சக்தி பெற்ற வயது வந்த ஆண்களுக்கு மாத்திரமே விதியாக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் தனது நிழலில் வாழும் சிறுபான்மையினருக்கு மேற்குறிப்பிட்ட உரிமைகளுடன் அவர்களின் உணவு, உடை, உறையுள், வாகனம் முதலான தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் கடப்பாட்டையும் பொறுப்பேற்றிருக்கிறது. இத்தேவைகள் எவ்வாறு இஸ்லாமிய வரலாற்றில் நிறைவாக பூர்த்தி செய்யப்பட்டன என்பதற்கு மேற்குறிப்பிட்ட உதாரணங்களே போதுமான சான்றுகளாக அமையும்.

இஸ்லாமிய ஆட்சியில் சிறூபன்மையினருக்கு எந்தளவு தூரம் மதச் சுதந்திரம் வழங்கப்பட்டது என்பதும் இங்கே நோக்கத்தக்கதாகும். உமர் (ரழி) குத்ஸ் பிரதேச கிறிஸ்தவர்களுக்கு வழங்கிய சுதந்திரம் பற்றி இமாம் தபரி பின்வருமாறு விளக்குகின்றார்:

'அவர்களது தேவாலயங்களில் எவரும் குடியிருக்கலாகாது, அவை அழிக்கப்படக் கூடாது, அவற்றின் எப்பகுதியும் உடைக்கப்படலாகாது' என உமர் (ரழி) அவர்கள் சுற்றுநிருபம் ஒன்றை அனுப்பியதாக அவர் குறிப்பிடுகின்றார். (ஆதாரம்: அத்தபரி) மேலும் உமர் (ரழி) அவர்கள் குத்ஸ் பிரதேசத்திற்கு சென்றிருந்த வேளையில் அங்கிருந்த மிகப் பெரிய கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றார்கள். அவர்கள் அங்கிருக்கும் சந்தர்ப்பத்தில் அஸர் தொழுகையை நிறைவேற்ற வேண்டியேற்பட்ட போதிலும், அன்னார் அத்தேவாலயத்தில் தொழுகை நிறைவேற்ற மறுத்து விட்டார்கள். அவர்கள் தொழுததை காரணங்காட்டி பிற்கால முஸ்லிம்கள் அதனை ஒரு மஸ்ஜிதாக மாற்றி விடுவர் எனப் பயந்ததினால் தான் அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டார்கள்.

மேலும் இஸ்லாமிய ஆட்சியின் போது முஸ்லிமல்லாதோர் தேவாலயங்களை புதிதாக நிர்மாணிக்கவும் பெருநாட்களை கொண்டாடவும் பூரண அனுமதி வழங்கப்பட்டிருந்தது. திருநாட்களின் போது கிறிஸ்தவர்கள் சிலுவைகளையும், மெலுகுவர்த்திகளையும் சுமந்து கொண்டு இஸ்லாமிய நகரங்களின் வீதிகளில் ஊர்வலம் செல்வோராகவும் இருந்தனர்.

கிறிஸ்தவர்களாக இருந்த நஜ்ரான் தூதுக்குழு ஒன்று நபி (ஸல்) அவர்களை சந்திக்க வந்த போது அவர்களை பள்ளிவாயலில் வைத்தே நபியவர்கள் வரவேற்று உபசரித்ததோடு அவர்களின் வணக்கங்களை மஸ்ஜிதின் ஒரு பக்கத்தில் நிறைவேற்றவும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். (ஆதாரம்: ஸீரது இப்னு இஸ்ஹாக்) 'இஸ்லாமிய வரலாற்றில் மாத்திரமே மஸ்ஜிதுகளும், தேவாலயங்களும் அருகருகே இருந்தன' என்ற கலாநிதி முஸ்தபா ஸிபாஈயின் கருத்து இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

'சட்டத்தின் முன் யாவரும் சமமே' என்பது சட்டத்துறையில் இஸ்லாத்தின் கொள்கையாக மாத்திரமன்றி அது, அதிசயத்தக்க விதத்தில் அமுல்படுத்தப்பட்டமையையும் காண முடிகின்றது. ஷரீஆ சட்டமானது ஜாதி, மத பேதங்களையோ, சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையோ கவனத்தில் கொள்ளாதது. மேலும் சட்டத்தின் முன்னால் முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்கள் அனைவரும் சமமாகவே நடாத்தப்படுவார்கள். ஒரு யூதன் மீது திருட்டுக் குற்றச் சாட்டு சுமத்தப்பட்ட போது அவன் நிரபராதி என்பதனை விளக்கி அல்குர்ஆன் வசனங்களே இறக்கப்பட்டன. (பார்க்க: 4:105-109)

கலீபா அலி (ரழி) அவர்களின் கேடயத்தை திருடிய அந்நிய மதத்தவருக்கெதிரான குற்றச்சாட்டை போதிய சாட்சிகள் இல்லாததினால் நீதிபதி ஷுரைஹ் நிராகரித்து வழக்கை தள்ளுபடி செய்த வரலாற்றையும் இங்கு குறிப்பிட முடியும்.

மேலும் இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தின் படி பிற சமயத்தவர்கள் தமது தனிப்பட்ட விவகாரங்களை தங்களின் தனியார் சட்டங்களுக்கு ஏற்ப தீர்மானித்துக்கொள்ள பூரண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு விடயம் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டிருந்த போதிலும் அவர்களது சமயத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பின் அதனை செய்வதற்கு அவர்கள் உரிமை உடையவர்களாவர். நீதிமன்றம் அவர்களின் தனியார் சட்டத்தின் அடிப்படையில் அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும். நபி (ஸல்) அவர்களது காலம் உட்பட இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அனைவரது காலங்களிலும் இம்முறை கடைபிடிக்கப்பட்டதனை காணலாம்.


 

We have 16 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player