சிந்தனைகள் - ஹஜ் புகட்டும் படிப்பினைகள்

Article Index
சிந்தனைகள்
அல்குர்ஆன் மத்ரஸாகளும் குழந்தைகளின் எதிர்காலமும்
பண்பாடுகளின் எழுச்சியே இஸ்லாத்தின் எழுச்சி
ஹஜ் புகட்டும் படிப்பினைகள்
இஸ்லாமும் நவீன தொடர்பு சாதனங்களும்
இளைய தலைமுறையும், இஸ்லாத்தின் வழிகாட்டலும்.
தஃவாவும் சகோதர இனத்தவர்களும்
நவீன தொடர்பாடல் ஊடகங்களும் இஸ்லாமிய தஃவாவும்
All Pages
ஹஜ் புகட்டும் படிப்பினைகள்


புனித ஹஜ்ஜுடைய காலமிது. உலகின் எட்டுத் திக்குகளிலுமிருந்து இலட்சோப லட்சம் மக்கள் இன, நிற, மொழி, பிரதேச பேதங்களை மறந்து இஸ்லாத்தின் ஐந்தாம் பெருங் கடமையை நிறைவேற்ற ஓர் இடத்தில் ஒன்றுகூடும் சந்தர்ப்பம் இது. வருடா வருடம் சமுதாயத்தின் ஒற்றுமையை அழகாக வெளிக்காட்டும் இவ்வாறான ஒரு மாபெரும் சனக்கூட்டத்தை உலகில் வேறு எங்கும் காண்பதரிது.

முஸ்லிம்களாகிய நாம் ஹஜ்ஜின் போது எம்மத்தியிலுள்ள மத்ஹப் வேறுபாடுகளையோ, தரீக்கா, ஜமாஅத் முரண்பாடுகளையோ, பிற பேதங்களையோ பொருட்படுத்துவதில்லை. நாம் அனைவரும் முஸ்லிம்கள் என்ற உணர்வு ஓங்கி நிற்க அல்லாஹ்வின் அழைப்பையேற்று அவனது திருப்தியைப் பெற்றுக்கொள்ளும் ஒரே நோக்கில், லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் என்ற கோஷத்தை ஒருமித்து முழங்கியவர்களாக அனைத்து கிரியைகளிலும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக ஈடுபடுகின்றோம்.

ஹஜ்ஜில் நாம் காணும் இந்த ஒற்றுமையும் உடன்பாடும் ஹஜ்ஜுடன் மட்டும் மட்டுப்படுத்த முடியுமா? அவ்வாறாயின் அதன் மூலம் நாம் பெறும் பயிற்சிகள் படிப்பினைகள் அர்த்தமற்றவையாகி விடுமல்லவா?

மேலும் புனித ஹஜ்ஜுடைய காலம் நபி இப்றாஹிம் (அலை) அவர்களின் தன்னிகரற்ற தியாகங்களை எமது நினைவுக்குக் கொண்டுவருகின்றது. சத்தியத்தை உலகில் நிலைநாட்டுவதற்காகவும் இறை திருப்தியைப் பெற்றுக்கொள்வதற்காகவும் அன்னார் மேற்கொண்ட தியாகங்களை நாம் நினைத்துப் பார்க்கின்றோம்.

முஸ்லிம் உம்மத் சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டு மட்டங்களிலும் மிக மோசமான ஒரு காலகட்டத்தில் இன்று இருக்கின்றது. உலகில் முஸ்லிம்களின் இருப்புக்கே அச்சுறுத்தல் உருவாகியுள்ள ஒரு சூழ்நிலை நிலவுகின்றது. உலகின் எல்லா சக்திகளும் இஸ்லாத்திற்கு எதிராக தம்மத்தியில் வேறுபாடுகளை மறந்து கைகோர்த்து முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. இத்தகையதொரு நிலையில் எமது விடுதலைக்கும் வெற்றிக்கும் வழியமைக்கும் காரணிகள் இரண்டே இரண்டுதான்.
அவை:
(அ) ஒற்றுமை (ஆ) தியாகம்


ஹஜ் ஒன்றே எமக்கு இவ்விரு பாடங்களையும் கற்றுத்தரப் போதுமானது.

எனவே, எம்மத்தியில் ஒற்றுமை, ஐக்கியம், புரிந்துணர்வு, நல்லுறவு முதலான பண்புகளை வளர்ப்பதற்கு ஹஜ்ஜுடைய காலத்தைப் பயன்படுத்திக்கொள்ள நாம் முனைதல் வேண்டும். அர்ப்பணத்துடனும் தியாக சிந்தையுடனும் சன்மார்க்க, சமூக நலன்களுக்காக உழைக்கும் மனப்பாங்கை உருவாக்கவும் முயற்சி செய்தல் வேண்டும். உலமாக்கள், கதீப்மார்கள், தாஇகள் தமது எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் இக்காலத்தில் இவ்விடயங்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பது மிகவும் பயன்மிக்கதாக அமையும் என்பது எமது கருத்து.

ஆகவே, ஹஜ்ஜை, ஹஜ்ஜுடைய காலத்தை, தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை அர்த்தமுள்ளவையாக ஆக்கிக்கொள்ளத் திடசங்கற்பம் பூணுவோம், ஒற்றுமைப்படுவோம், அர்ப்பணத்துடன் செயற்படுவோம், வெற்றி நிச்சயம்.

''அறிந்துகொள்ளுங்கள்! அல்லாஹ்வின் உதவி மிக அண்மையில் இருக்கின்றது''
(ஸூரா அல் பகரா: 214)We have 16 guests online

Login hereContent on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player